• image_01
  • image_02
புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

வாழ்தல் இனிது 8

வாழ்தல் இனிது 8

இடதுபுறம் திரும்பவும்பேரெழுதும் ஓரிடமும்
யார்க்குமில்லை போபோ


ஆத்மார்த்தி

வாழ்வாங்கு என்னும் பாடலின் ஈற்று வரிகள்


முப்பது வருடங்களுக்கு முன்னால் கணிப்பொறி குறித்து என்ன விதமான அவதானம் இருந்தது? இந்தியாவில் கணிப் பொறியை ஆரம்பகாலத்தில் கற்றறிந்தவர்களில் ஒருவர் எழுத்தாளர் சுஜாதா.அதை விட கணிப்பொறி பற்றிய விழிப்புணர்வையும் முதற்சொற்களையும் எழுதியேற்படுத்தியவர் சுஜாதா. அவரது கட்டுரைகள் தவிர்த்துக் கதைகளிலும் கூட கணிப்பொறியைப் பற்றி அதிகம் எழுதினார்.விக்ரம் என்னும் படம் கமல் நடித்து ராஜசேகர் இயக்கியது.அதற்கான திரைக்கதை வசனம் சுஜாதா.அந்தக் கதையில் கணிப்பொறி பற்றி அழகாக சிலாகித்திருப்பார்.என் இனிய இயந்திரா என்னும்
எதிர்காலக் கற்பனை நாவலும் சுஜாதாவின் கணிப்பொறி குறித்த கொடை எனலாம்.அப்போது முப்பதாண்டுகளுக்குப் பிற்பாடு எங்கும் சர்வம் கணிணி மயம் என்று சொல்லியிருந்தால் யாராவது நம்பி இருப்போமா..?பெத்த பெரிய கணிப்பொறிகளில் தொடங்கி இப்போது மாத்திரைக்கணிணிகள் வந்துவிட்டன.இனி உள்ளங்கையொன்றில் அடங்கிச் சமர்த்தான பட்சியாய் மாறும் காலம் சீக்கிரம்.


நான் கல்லூரி முதல் வருடம் படிக்கும் போது என் அண்டை வீட்டுப் பய்யன் ப்ரதீபனுக்கு வெளிநாட்டில் இருந்து அன்றைக்கு 90000 ரூ விலையில் ஒரு கணிப்பொறி வாங்கித் தந்தார்கள்.ஒரு பத்து நாளைக்கு வினோதமான மிருகத்தைப் பார்க்கிறாற் போல எங்கள் தெருப்பய்யன்கள் அனைவரும் ப்ரதீபன் வீட்டுக்குச் சென்று அந்தக் கணிப்பொறியை வேடிக்கை பார்த்து வந்தது சுகானுபாவலு. எங்கள் மருத்துவமனைக்குப் பக்கத்தில் ஒரு பழைய பேப்பர் குடோவ்ன் உண்டு.பல சில்லறைக் கடைகளிலிருந்து சரக்கு வந்து அங்கேயிருந்து பல ஊர்களுக்கு அனுப்பப் பெறும் மொத்த வர்த்தக குடோவ்ன் அது.அந்தப் பக்கமாக இருசக்கரவாகனத்தில் வந்து கொண்டிருந்த போது எங்கே இருந்தோ லோட் இறங்கிக் கொண்டிருந்தது. பழைய பேப்பர் கட்டுக்களும் அட்டை இத்யாதிகளும் இரும்பும் மற்றவைகளுமாய் அவ்வவற்றுக்கு உண்டான இடங்களில் ஒதுக்கப்பட எல்லாவற்றோடும் கொத்துக் கொத்தாய் கைவிடப் பட்ட கணிப்பொறி மானிட்டர்களும் கீபோர்டுகளும் ஒரு ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டன.அவற்றுக்கு நடுவே எனக்கு ஆதிப் பரிச்சயமான என் பக்கத்து வீட்டு ப்ரதீபன் முதன் முதலில் 90ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய மாடலும் தேமேவென்று இருந்தது.அடி மாடுகளை கறிக்காக லாரிகளில் ஏற்றிச் செல்லும் காட்சி கண்முன் ஆடியது.

கணிப்பொறிக்கே இந்தக் கதி என்றால்..?நாமெல்லாருமே உலகமயமாக்கலுக்குப் பலி கொடுக்கப் பட்ட ஒன்றின் பல பிரதிகள் தான் என்பது வியப்பல்ல.நகர்ந்து கொண்டே இருக்கும் நம்மை உள்வாங்கிச் செரிமானம் செய்து வேறொன்றாகத் துப்பிக் கொண்டே இருக்கும் காலமிருகத்தின் கொடுவாய்க்குத் தப்ப யாரால் முடியும்..? இன்றைக்கு மதுரையின் பழம்பொருள் சந்தைக்கு அருகாமையில் உபரிசாவி செய்கிற ஒருசில கடைகள் இருக்கும்.மொத்தக் கடையுமே ஒரு சூட்கேஸில் எடுத்து வைத்துக் கொண்டு போகத் தக்கது தான்.அதற்குச் செல்லும் வழியில் பழைய செல்ஃபோன்கள் குவியல் குவியலாக வைத்திருப்பதைப் பார்த்துக் கொண்டே சென்றேன். இதெல்லாம் இங்கே கிடைக்கும் என்பது சரி..முந்தைய காலத்தில் கோலோச்சிய இவற்றையெல்லாம் இன்றைக்கு யார் வாடிக்கையாளர்கள்..?இவற்றையெல்
லாம் வாங்க வருபவர்கள் யார்..?எல்லா மாடல் டேப்ரிகார்டர்களுமே கைவிடப்பெற்ற ஒரு காலத்தில் ஐபாடும் ப்ளூடூத்தும் ஆள்கின்ற காலத்தில் கிராமஃபோன் என்பதுஅரும்பொருள்.டேப்ரிகார்டர் என்பது குப்பை.அடுத்து வரும் காலத்தில் டேப் ரிகார்டரும் அரும்பொருளாய் மாறும்.

ஆங்கிலப் படங்களில் பார்த்திருப்போம்.மேலை நாடுகளில் உபயோகித்த கார்களை விற்பதற்கும் வழியில்லாமல் வாங்குவதற்கோர் ஆளில்லாமல் ஊரெல்லையில் வைத்து சப்பளித்து தகரமாக்குவதை.அதே கார்களை இறக்குமதி செய்வதற்காகக் கப்பல்களில் ஏற்றுவதற்காக துறைமுகங்களில் குவித்து வைக்கப் பட்டிருப்பதையும். இன்றைக்கு ஏழு பேர் பயணிக்கிற வாகனங்களில் ஒருவர் தான் பயணிக்கிறார்கள் பெரும்பாலும்.சென்னை போன்ற நகரங்களில் ஒருபுறம் கடும் வாகன நெரிசலில் ஊரே சிக்னலுக்கு நாலு பக்கமும் காத்துக்கிடக்கையில் அங்கே வீற்றிருக்கக் கூடிய ஒவ்வொரு வாகனமாய்ப் பார்த்தோமே ஆனால் பெரும்பாலானவற்றில் ஒருவர் தான் அமர்ந்திருக்கிறார். ஒரு ஓட்டுனர் கடனே என்று ஓட்டிச் செல்கிறார்.இதனை வாழ்முறை அதாவது லைஃப்ஸ்டைல் என்று சொல்வது சரிதானா..? டூவீலர்களும் கார்களும் பெருகிக் கொண்டே செல்கின்றன.சாலைகள் நிரம்பி வழிகின்றன.டோல்கேட்டில் ஒரு சீட்டைப் பெற்றுக்கொண்டு அகலுவதற்கு அரைமணி நேரம் வரைக்கும் ஆகிறது.எல்லாக் க்யூ வரிசைகளும் ததும்புகின்றன. இருக்காதா பின்னே..?கல்விக் கடனுக்கு காலமுடிவு வரை காத்திருக்க நேருகிற இதே இந்தியத் திரு நாட்டில் தான் ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தால் ஒரு டூவீலரையோ அல்லது காரையோ நாம் மாதாந்திரத் தவணை முறையில் வீட்டுக்கு ஓட்டிவந்து விடலாம்.இவையெல்லாமும் முடிகிற இடம் தான் நெரிசல்.கடலோரக் காத்திருப்புத் தகரங்கள். தொழில்கள் அழிவதும் காலமாற்றமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை தானே..?நன்றாக உற்றுப்பார்த்தால் நாம் வாழும் காலம் பூர்த்தியாகையில் நம்மை நிராகரிக்கும் புதிய காலம் உருவாகியிருக்கும் தானே..? விந்தையின் சந்தைப் பொருள் தான் நாம் வாழும் காலம் என்று சொல்லலாம் தானே..?எனக்கு ஏனோ ஜோதிராமனின் ஞாபகம் வந்தது.ஜோதிராமனை நான் சந்தித்தது துல்லியமாய்ச் செப்ப வேண்டுமானால்  98 ஆமாண்டு.என் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு கணிணி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன்.திரு நகரில் இருந்து பத்து கிலோ மீட்டர் நகருள் பயணித்துக் கணிணி கற்றோம் என்று பேர் பண்ணினோம்.என்னோடு அஷோக் சீனி கார்த்தி என்று நாலைந்து பேராய் வருவோம் போவோம்.

திடீரென்று ஒரு கோர்ஸ் முடிந்ததும் என்னோடு வந்த யாருமே வரவில்லை.நான் மட்டும்  தனியனானேன்.உடனாளியில்லாத் தனிமை என்பது இளமையில் பெருங்கொடுமை.ஒரு நாள் மதிய உணவுக்காக  அருகே இருந்த புரோட்டாக் கடைக்குச் சென்றேன்.அங்கே சாப்பாட்டுக்குப் பதிலாக புரோட்டா தான் இருந்தது. அத்தனை சுவையாயிருந்தது.நான் ஒரு ரசிகனல்லவா..?மாஸ்டரை அழைத்து வாயாரப் பாராட்டினேன்.அதன்  பின் அடிக்கடி அங்கே செல்வேன். ஒரு நாள் சக்தி தியேட்டரில் காலைக் காட்சியாக ஏதோ புதிய படத்திற்குச் சென்றபோது யதேச்சையாக என் பக்கத்து  சீட்டில் ஜோதிராமன்.அவருக்கு நாற்பது வயது இருக்கும்.ஆனால் என்னை அண்ணே என்றழைப்பார்.வேண்டாமென்று
எத்தனை எடுத்துச் சொன்னாலும் சரியண்ணே.இன்னிமே கூப்டலைண்ணே.என்று ரெண்டு தரம் சேர்த்துச் சொல்வார்.
நானும் பொறுமையிழந்து அவருக்கு அண்ணனானேன்.எதையாவது சீரியஸ் முகத்தை வைத்துக் கொண்டு படாரென்று
சொல்லிவிடுவார்.கூட இருக்கும் யாராலும் சிரிப்பை அடக்கமுடியாது.சப்தமாய் சிரித்து வைப்போம்.ஓரிரண்டு முறையல்ல.
பலதரம் இப்படிப் பல்லை வெளிக்காட்ட வைப்பார் ஜோதி.எதை எடுத்தாலும் சிரிப்பு தான்.


அன்றைக்கும் அப்படித்தான் படம் முடிந்ததும் உடனே அவரை வெட்டிவிட்டுக் கிளம்ப மனமில்லை. என் ஸ்கூட்டியில் அவரைப் பின்னால் ஏற்றிக்கொண்டேன்.மதிய நேரம்.இருவருக்கும் நல்ல பசி.ஜோதியிடம் கேட்டேன் எங்கே போகலாம் என்று.இரண்டொரு கடைகளை அலசிவிட்டு ஒரு வீட்டில் நடந்துகொண்டிருந்த மெஸ்ஸூக்கு  என்னை அழைத்துச் சென்றார். அந்த மெஸ்ஸில் அசைவ உணவுவகைகள் அத்தனையும் பிரமாதமாக இருந்தது.சொல்லில் தீராச் சுவையமுதம் என்றால் தகும்.நாங்கள் பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு கணவன் தன் மனைவியுடனும் ஒரு பெண் குழந்தையுடனும் வந்து எதிர்ப்புற டேபிளை ஆக்ரமித்தார்கள்.அதுவரை சகஜமாக இருந்த ஜோதியின் முகம் ஏனோ இறுக்கமானது.எதுவும் பேசாமல் தலைகுனிந்து சாப்பிடலானார். சாப்பிட்டு விட்டு வாசல் பக்கம் இருந்த பெட்டிக்கடைக்கு வந்தோம்.அது மதுரையின் ஆகப்பரபரப்பான சாலை., அப்படி ஒரு மெஸ் இருப்பதே வெளியே தெரியாத தோற்றம். ஆளுக்கொரு சிகரட்டைப் பற்றவைத்துக் கொண்டோம்.

என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ஜோதி என்னைப் பார்த்து சிரித்தார்.எதையோ என்னிடம் பகிர்ந்துகொள்ள
விரும்பினாற்போலத் தோன்றியது.எதிர்த்தாற் போல இருந்த ட்ரான்ச்ஃபார்மரின் பக்கவாட்டில் இருந்த ஒரு மரக்கிளையில்
நாலைந்து காகங்கள் கரைந்துகொண்டிருந்தன.எட்டி வானத்தைப் பார்த்த ஜோதி "கடும் வெயிலு"என்றார். இதற்குள் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்தக் கணவனும் மனைவியும் தங்கள் குழந்தையோடு பைக்கில் ஏறிப் பயணித்தார்கள்.அந்தப் பெண் தூரத்தே கடக்கும் போது திரும்பி ஒரு தரம் எங்களைப் பார்த்தாற் போலிருந்தது.ஜோதியின் தலை குனிந்திருந்தது.
ஒரு சிகரட்டை சுண்டி எறிந்து விட்டு அடுத்ததைப் பற்ற வைத்தார் ஜோதி.அவர் அப்படி தொடர் புகையாளி அல்ல.என்றாலும் அவர் ததும்புக் கண்களும் துடிக்கும் உதடுகளும் என்னவோ சொல்ல வருகிறாற்போலவே தொனிக்கும் தோற்றமும் என்னை நிதானிக்கச் செய்தது.அவர் பேசட்டும் எனக் காத்திருந்தேன்.


"ரவீ...இப்பப் போனாளே ஒரு பொண்ணு..தன் புருசனோடவும் பிள்ளையோடவும்...அவ பேரு ராணி.எங்க ஊரு தான். நாலு தெருத் தள்ளி வீடு.தூரத்துச் சொந்தம்னு வைங்களேன்.எனக்கும் அந்தப் பிள்ளைக்கும் நிச்சயமாச்சி.கல்யாணத்துக்கு
ரெண்டு மாசம் இருந்திச்சி.அவ வீட்டுல அவ ரொம்ப செல்லம்.என்னைப் பாக்கணும்னு சொன்னா அவங்க அண்ணனே வந்து
என்னைக் கூட்டிப் போவான்.வீட்டு முன் அறையில உட்கார்ந்து மணிக்கணக்குல பேசிருக்கோம்.அவ வர்றதுக்கு மின்னாடியே எங்க வீட்டுல ஃபோன் கனெக்சன் வாங்கச்சொன்னா.அதுல ராப்பூராம் பேசிட்டே இருப்போம்.என்னை அவளுக்கு ரொம்பப் பிடிச்சிருந்திச்சி.அவங்க ரொம்ப வசதி.நாங்க நடுத்தரம்.மில்லுல வேலை பார்த்தேன் அப்போ.."

தன் கதை என்றாலும் எதைச்சொல்லி எதை விட்டுத் தொடங்க வேண்டும் என்ற கோர்வை ஏதுமின்றி தட்டுப்பட்ட தகவல்களனைத்தையும் தோரணமாக்கிக் கொண்டே இருந்த ஜோதி நிறுத்தித் தொடர்ந்தார்.ஒரு கட்டத்துல அவளோட அன்பே எனக்குக் கொடுமையாத் தெரிய ஆரம்பிச்சிச்சு.நான் என் ஃப்ரெண்ட்ஸ் கூடப் பேசினாக் கூட சண்டை.என்ன சமாதானம் செய்தாலும் கேள்வி.அளவுக்கு மேல போயிடிச்சி.ஒரு நாள் ஏதோ ஆத்திரத்துல திட்டிப்புட்டேன்.என் தங்கச்சிக்கு உடனே கல்யாணம் செய்துறணும்னு சொன்னா.அந்தப் பிள்ளைக்கு அப்பத் தான் பதினாறு வயசு.எப்படி முடியும்..? இதை யெல்லாம் ரொம்ப அலச வேணாம்னு சொன்னவன் ஒரு வார்த்தையை விட்டிட்டேன்."

"இன்னும் வரவே இல்லை அதுக்குள்ளே இம்புட்டு ராங்கித்தனமான்னு"அவ என் மேல அன்பாத் தான் இருந்தா.
அவளோட அன்பு அதிகமாகி அதீதமாகி என்னை எரிச்சிடிச்சி.உன் பொண்டாட்டியாத் தானேய்யா என் மனசுக்குள்ளெ
நினைச்சேன்னு அழுதா.அதுக்கப்புறம் என் கிட்டே பேசவே இல்லை.எத்தனை முறை முயற்சி செய்ஞ்சாலும் என்னை
சந்திக்கவே விடலை.ரெண்டு தரப்பு ஆட்களும் ஒருரெண்டு தரம் பேசிப்பார்த்தும் பயனில்லை.கலியாணத்துக்கு ஆறு
நாள் இருக்கச்சே...."

தன் கல்யாணம் நின்று போன கதையை அதற்கு மேல் ஜோதியால் சொல்ல முடியவில்லை.கண்கள் கலங்கி இருந்தன . எனக்கும் கூட லேசாய் நீரரும்பியது.

"ஹூம்...ஏன் வந்தான்னும் தெரியலை.ஏன் போனான்னும் தெரியலை.மனசைக் கல்லாக்கிட்டு இன்னொருத்தனை
கட்டிக்கிட்டா.எப்படி அவளால மாற முடிஞ்சிச்சின்னு யோசிச்சா ஒரே ஒரு விடை தான் கிடைச்சிச்சி..அவளை...
நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது.ஆனாலும் தனக்கு என்ன தேவைன்னே தெரியாத அளவுக்குக் கண்மூடித் தனமான
அன்புக்குப் பேர் ஒண்ணே ஒண்ணு தான்.அது வெறி.வேறேதுமில்ல." என முடித்தார்.
நான் எதாவது கேட்கவேண்டுமே என்ற ஆர்வத்தில் "அதுக்கப்புறம் இன்னைக்கு தான் பார்க்குறீங்களா..?"என்றேன்.
சோகையாய்ச் சிரித்தபடி "இல்லை ரவி...எங்கூரு குல சாமி கோயிலுக்கு போகும் போதெல்லாம் அவளைப் பார்ப்பேன்.
நாலு மாசத்துக்கு மின்னாடி ஒரு தரம் சன்னதியில கண்மூடி நிற்கும் போது பக்கத்துல யதேச்சையா இவ நிக்கிறா.
பகீர்னு ஆயிட்டுது.பேசுற தைரியம் வர்லை.பேசிருந்தா எப்டி இருக்கேன்னு கேட்டிருக்கலாம்.கேட்கத் தோணலை.உள் மனசுல ஒரு நிமிசம் வலது பக்கம் திரும்பின என் வாழ்க்கை இடது பக்கம் திரும்பியிருந்தா அவளும் நானும் தம்பதியா நின்னுருப்போம்னு தோணுச்சி." என்றவர்
சரி வாங்க கெளம்பலாம்.என்று லேசாய் இருமி விட்டு

"எனக்கென்ன வயித்தெரிச்சல்னா...எனக்கும் அவளுக்கும் கலியாணம் நிச்சயத்துக்கு அப்பறம் தனக்குன்னு
வீட்டார் சேர்த்து வெச்ச எல்லாப் பாத்திரத்துலயும் பேர் வெட்டுறவரைக் கூப்பிட்டு ஜோதிராணி ஜோதிராணின்னு
பேர் அடிச்சி வெச்சிட்டா.கல்யாணம் நின்னாச்சின்னு ஆனதுக்கப்புறம் அத்தனை சாமானையும் கடையில
வித்துப்புட்டு வேற புதுசா வாங்குனாங்கன்னு கேள்விப்பட்டேன்.பாத்திரத்தை மாத்திப்புடலாம்.மனசை..?என்றார்.


வெகு நேரம் எனக்குள் அந்த வாக்கியம் ஒலித்துக் கொண்டே இருந்தது.

Last Updated (Friday, 24 June 2016 13:06)

 
தொடரலாம்
© 2011 All Rights Reserved by aathmaarthi