• image_01
  • image_02
புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

கோவை சரளா

கோவை சரளா...கொண்டாடப்பட வேண்டிய தாரகை

கோவை சரளாவைப் பற்றி இந்தக் கட்டுரை.சமகாலத்தில் நம்மை சிரிக்கவைத்த பகவான்கள் பலருக்கு மத்தியில் ஒரே பகவதி,கோவை சரளா.புன்னகை தேவதை தனது தொடக்க நாள் முதல் நேற்றும் இன்றும் வரை தென்னக மொழிகளில் கோவை சரளாவின் திரைப்பங்களிப்பு அலாதியானது.தனி ஆவர்த்தனமாக அவர் தடையிலா தொடர் ஓட்டமொன்றை ஓடிக்கொண்டிருப்பவர்.தமிழ் மட்டுமின்றி தென் இந்திய மொழிகளில் எந்த மாநிலத்தில் நுழைந்தாலும் கோவை சரளா அறிமுகமானவர் தான்.மனங்களை வென்றெடுத்தவரும் கூட. கே.பாக்யராஜின் முந்தானை முடிச்சு படத்தையும் அந்தப் படத்தின் வெற்றியையும் நினைவுபடுத்துவதற்கு எக்கச்சக்கமான துணுக்குச்செய்திகள் இருக்கக் கூடும்.ஆனால் அந்தப் படத்தில் தனது கணக்கை சாதாரணமாய்த் துவங்கினார் சரளாகுமாரி என்கிற இயற்பெயரைக் கொண்ட கோவைசரளா. "கோவாலு...கோவாலு..."என அவர் குரலைக் கேட்டுச் சிரிக்காதவர் இல்லை.அவரும் அவர் குரலும் பிரபலமாயின.

வைதேகி காத்திருந்தாள்,ஜப்பானில் கல்யாணராமன்(கவுண்டமணி உடன்)சின்னவீடு(அதே பாக்யராஜ்) உதயகீதம், போன்ற தனது ஆரம்பப் படங்களில் கவுண்டமணி இருக்க செந்திலை விரும்புபவராகவும் பின் கவுண்டமணியிடம் மாட்டி விழிப்பவராகவும் நடித்தார் சரளா.உதய கீதத்தில் சிறைப்பறவையான கவுண்டமணி,சாமியார் ஆகவும் பக்தை மற்றும் காதலியாக சரளாவும் அவரது தந்தை போலீஸ் காரராகவும் வருகையில் அரங்கங்கள் வெடித்தன சிரிப்பால் என்றால் அது மிகையல்ல. அந்த வரிசைப் படங்களில் முத்தாய்ப்பான ஒரு வேடத்தை கரகாட்டக்காரன் படத்தில் ஏற்றிருப்பார் சரளா."என்னை உசிலம்பட்டி பார்ட்டில கூப்டாக ஆண்டிப்பட்டி பார்டில கூப்டாக...ஏன் அந்த வத்தலகுண்டு பார்டீல கூட கூப்டாக..அதயெல்லாம் விட்டுபுட்டு என் கெரகம்..இந்த கரக கும்பல்ல வந்து மாட்டிக்கிட்யேன்" என்பார்..பதிலுக்கு கவுண்டமணி சொல்லும்"ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக..அமெரிகாவுல மைக்கேல் ஜாக்சன் கூப்டாக..."என்பது வயிற்றைப் புண்ணாக்கிற்று.அணில் போலன்றி வலுவாகவே தன் பாத்திரத்தால் மூன்று பாடல்களுக்கு ஆட்டமும் ஆடி நடித்து உதவி இருப்பார் கரகாட்டக்காரன் படத்திற்கு.ஓரு வருடம் ஓடியது அப்படம்.


தன் பின் அனைவரும் விரும்பும் நட்சத்திரமானார்.இன்றைக்கு வரை சரளா என்னும் குதிரை ஓடிக்கொண்டே இருக்கிறது.அவரின் ராஜபாதையில் சில மறக்க முடியாத படங்களை இதன் மூலம் அலசலாம்.கொங்கு நாட்டு பாஷை பேசி அறிமுகமான சரளாவுக்குத் தெரிந்தே இருந்தது அந்த பாஷை அவருக்கு வெகு நாட்களுக்கு உதவி புரியாது என்று..அதற்கேற்ப அவரும் கிடைக்கிற சின்ன அதே நேரத்தில் மனதை நெகிழச்செய்யக் கூடிய வாய்ப்புக்களை தவறவிடவே இல்லை. ஆனால் ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருக்கும் கொக்கு தான் அவர்.எந்த வேடம் கொடுத்தாலும் அதற்குத் தன்னை ஒப்புவிக்கக் கூடிய மாபெரிய நடிகை சரளா.மேலும் அவர் ஒரு டைரக்டர்களின் நடிகை ஆக இருந்ததும்,உடன் நடிக்கிற நடிகர்கள் எவராக இருப்பினும் திரையுலக அரசியல்களுக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளாமல் இருந்ததுவுமே காரணம். கவுண்டமணி செந்தில் இருவருடன் நடித்துக் கொண்டிருக்கையிலேயே அவர் மற்ற காமெடி நடிகர்களுடனும் நடித்தார்.பெரும்பாலும் நாயகர்கள் நகைச்சுவைப் படமாக ஒப்புக்கொள்கையில் அந்த வாய்ப்புக்களை தனக்குக் கிடைத்த சவாலாகவே மாற்றிக்கொண்டு அவற்றில் மிளிர்ந்தார் சரளா.அப்படங்கள் வெல்கையிலெல்லாம் கரவொலிகள் தனியாக ஒலித்தன சரளாவுக்காக.

பிரபு,சத்யராஜ்,கார்த்திக் என முன் அணி நடிகர்களுடன் நடித்தபோதெல்லாம் அவர் சிக்சர்களை அடித்தார் என்றே சொல்லலாம். இவற்றுக்கெல்லாம் சிகரம் வைக்கிறாற்போல வந்தது கமல்ஹாசன் நடித்து பாலு மகேந்திரா இயக்கிய சதி லீலாவதி.சரளா அவையடக்கமாக பலமுறை கமலுடன் நடித்தது தனது பாக்கியம் என்றார்.ஆனால் மக்களும் ரசிகர்களும் கமலை பாக்கியவான் என்றார்கள்.அந்தப் படத்தில் தன் நடிப்பின் உச்சியிலேறி நின்றார் சரளா மாறுகோ மாருகோ மாறுகயி என்னும் பாடலை கமலுடன் நடித்த சரளா பார்க்கிறவர்களை மிரள வைத்தார் என்பதே உண்மை. மிடில்க்ளாஸ் மாதவன் படத்தில் மணிவண்ணனுடன் நடித்தார் சரளா.பொறுப்பற்ற அக்காளாக ப்ரபுவுடன் நடித்த அப்படம் ஒரு முக்கியமான படம் என்றால் சத்யராஜுடன் வரிசையாக நொறுக்கித் தள்ளினார் வேடங்களை.மிக முக்கியமாக கோவை பிரதர்ஸ் அதில் சத்தியராஜை ஒரு தலையாக காதலிக்கும் வேடம் அவருக்கு.அசினை பார்த்து பிசின்னு வெச்சுக்கிட்டேன்.நயந்தாராவை பார்த்து டெந்தாரான்னு வெச்சிக்கிட்டேன் என சமகால நாயகிகளைக் காலி செய்தார்.அதில் முத்தாய்ப்பாக சத்தியராஜும் சரளாவும் ஜோடியாக பெரும் பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்ட அரங்கங்களில் நியூ படத்தின் தொட்டால் பூ மலரும் பாடலை கேலி செய்து ஆடியபோது அரங்கங்கள் அதிர்ந்து குலுங்கின.

பாட்டாளி படத்தில் செந்தில் என்னும் பெயருக்காகவே தன் முறைமாமனை விரும்பும் சரளா,ஜமீன் பங்களாவில் வேலைக்கு வந்த பெண் வேடமிட்ட வடிவேலுவை சத்தாய்ப்பதும் பிறகு வடிவேலு பெண்ணல்ல ஆண் எனத் தெரியும் இடத்தில் வடிவேலுவை மிஞ்சி இருப்பார் நடிப்பில்.அந்தப் படமும் சரளாவின் முக்கிய வேடங்களில் ஒன்று.என்னம்மா கண்ணு படத்தில் இரண்டு வேடங்களில் நடித்த வடிவேலுவின் ஒரு வேடம் எஸ்.பி சவுத்ரி.அவரின் மனைவி சிம்ரனாக வருவார் சரளா.சத்யராஜ்-சரளா இணைந்து தோன்றும் இடங்கள் அதிர்வெடிகளாய் வெடிக்கும் இப்படத்தில் கவுண்ட மணி செந்தில் உடன் இணை நாயகியாக ஓரமாய் பங்கேற்ற சரளா,தனித்து வந்த வடிவேலுவைப் புரட்டி எடுத்தார்.ஆரம்பித்து வைத்தவர் வீ.சேகர்.அவரது காலம் மாறி போச்சு,வரவு எட்டணா செலவு பத்தணா,போன்ற படங்கள் பரவலாக சரளாவின் நடிப்போடு அவர் வடிவேலுவை தூக்கி போட்டு அடிப்பதை ரசிக்கச் செய்தன என்றால் அவ்வித வேடங்களை பயன் படுத்திக் கொண்டனர் இரண்டு பேருமே.அந்த வரிசையில் மாயி,வடிவேலு வஞ்சகமாக திருமணம் செய்து கொள்வார் சரளாவை ஆனால் அவரை பிடிக்காத சரளா,வடிவேலு சிலம்புகிற பொழுதெல்லாம் அவ்வவ்விடங்களுக்கு திடீர் என காட்சி தந்து அவரை பிய்த்தெடுப்பார்.மக்கள் ரசித்தனர்.சிரித்தனர்.

விவேக் உடன் ஷாஜகான் படத்தில் நடித்தார் சரளா.அதுவும் மறக்க முடியாத படமாயிற்று.பிச்சைக்காரியாகவும் கவுன்சிலராகவும்  பரிமளித்து நிறைவாய் செய்திருப்பார் சரளா.பல படங்களில் விவேக் உடனும் நடித்து இருக்கிறார் சரளா.ராம நாராயணனின் பெரும்பாலான நகைச்சுவைப்  படங்களில் இடம்பெற்று இருக்கிறார் சரளா.மிக முக்கியமான படம் விஸ்வனாதன் ராமமூர்த்தி.இந்தப் ப்டத்தில் விவேக் ஏற்கனவே விந்தியாவுடன் திருமணமானவர் இருந்தபோதிலும் அவர் வீட்டுக்கு வரும் வெ.ஆ.மூர்த்தி மகளான சரளா தன் கனவில் கண்ட பெருமாள் விவேக் தான் என நம்பி அவரை "பெருமாளூ..பெருமாளூ"என அழைத்தபடி காதல் சித்ரவதை செய்வார்.எந்த மொழியிலும் எந்த நடிகையும் சரளாவுக்கு ஈடு இணை இல்லை என இந்தபடம் உள்ளிட்ட பல படங்களில் மெய்ப்பித்துமிருக்கிறார் சரளா.

மீண்டும் கமலுடன் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் அவரது அக்காவாக நடித்து இருப்பார் சரளா.இந்தப் படத்தில் இவருக்கு வில்லி போன்றதொரு வேடம்.அதையும் விலகாமல் நடித்து பேர்வாங்கியிருப்பார் சரளா.பஞ்ச தந்திரம் படத்தில் சந்தான பாரதியும் சரளாவும் மொத்தப் படத்தில் பத்து நிமிடங்கள் மட்டுமே வருவர்.ஆனாலும் அது ஒரு மைல் கல் நகைச்சுவை.பின்னி இருப்பார் சரளா. அதிகமாகப் பேட்டிகள் கொடுத்ததில்லை சரளா.அதிர்ந்து பேசினார் என்றோ,கருத்து சொல்லி கலவரம் புரிந்தார் என்றோ அவர் பற்றி எந்தக் கிசுகிசுவும் இல்லை திரை உலகத்தில்.தமிழ் நிலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் சரளாவின் ரசிகர்கள் இருக்கின்றனர்.

தெலுங்கு,மலையாளம்,கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடித்திருக்கிறார் 525 படங்களுக்கு மேல்.தவிர்க்க முடியாத தேவதை,சிரிக்க வைத்த நாயகி சரளா.நட்சத்திரர்களையும் நாயகிகளையும் கொண்டாடியே பழக்கப்பட்டு விட்ட சூழலில்,நாயக நாயகிகளை விடவும் செல்வாக்கு மிக்கவர்கள் நகைச்சுவை நட்சத்திரங்களே..அதிலும் மனோரமாவிற்குப் பிறகு ஏகநட்சத்திரம் சரளா.கொண்டாடப்படவேண்டிய தாரகை. நானும் அவர் ரசிகன் தான்.நீங்கள் கூட.

சரளாவின் முக்கிய படங்கள்:

தமிழ்:
கரகாட்டக்காரன்-மாயி-பாட்டாளி-மிஸ்டர் பாரத்-சின்ன வீடு-காலம் மாறிப் போச்சு-பூவெல்லாம் கேட்டுப்பார்-பூவெல்லாம் உன் வாசம்-முந்தானை முடிச்சு-கோவை ப்ரதர்ஸ்-மிடில் க்ளாஸ் மாதவன்-என் கணவர்-எல்லாமே என் பொண்டாட்டி தான்-எங்களுக்கும் காலம் வரும்-எங்க ஊரு காவக்காரன்-எங்க ஊரு மாப்பிள்ளை-ஜப்பானில் கல்யாணராமன்-சித்திரைப்பூக்கள்-சின்னவர்-அவள் வருவாளா-ஆஞ்சனேயா-ஆயுசு நூறு-பட்ஜெட் பத்மநாபன்-ஓடங்கள்-எங்க ஊரு பாட்டுக்காரன்-டபுள்ஸ்-பரிகாரம்-பட்ஜெட் பத்மனாபன்-மும்பை எக்ஸ்பிரஸ்-சதி லீலாவதி-ஷாஜஹான்-மகளிர்க்காக-மை டியர் மார்த்தாண்டன்-பஞ்சதந்திரம்-என்னம்மா கண்ணு-நைனா-முனி-ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்-பெரிய மனுஷன்-பேர் சொல்லும் பிள்ளை-பிரியாத வரம் வேண்டும்-ராஜா சின்ன ரோஜா மற்றும் பல...

தெலுங்கு:
ஆதிவாரம் ஆடவாரிகி செலவு-தொங்கலா பண்டி-பம்பர் ஆஃபர்-அக்கட அப்பாயி இக்கட அம்மாயி-எந்த பாகுந்தோ-கொமரம் புலி-ஹனுமன் ஜங்க்ஷன்-ஃபூல்ஸ்-K.S.D அப்பளராஜூ மா அல்லுடு வெரி குட்-நுவ்வே காவாலி-அல்லாடிஸ்தா-செடுகுடு-தேசமுதுரு-எவரைனா எப்புடைனா-ஹனுமந்து-ஹீரோ-ஒட்டேசி செப்புத்துன்னா-பகலே வெண்ணிலா- பஞ்சாட்ச்சரம்-போலீஸ் ப்ரதர்ஸ்-ப்ராணம் மற்றும் பல

மலையாளம்:
கேரளா ஹவுஸ் உடன் வில்பனக்கு--மோனலிசா-நிலவு போலே-நிறம்-ப்ரணாயாமி-மற்றும் பல

 
தொடரலாம்
© 2011 All Rights Reserved by aathmaarthi