• image_01
  • image_02
புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

மரியான்

ரியான் படம் இன்றைக்குக் காலைக் காட்சிக்குச் சென்று பார்த்தேன்.சமீப காலமாகவே தமிழ்ப்பரப்பில் கடல் மீது கவனம் கொண்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.ஒரு திடீர் வரிசையாக நீர்ப்பறவை கடல் இப்போது மரியான் எனச்சொல்ல முடியும்.முதல் இரண்டு படங்களை விட மரியான் தெளிவான தொய்வற்ற படமாக வந்திருப்பது ஆறுதல்

கடல் என்பது தேசவரைபடங்களில் இணைந்தே இருந்தாலும் கூட கடலும் நிலமும் ஒட்டியாடுகிற பகுதிகளில் ஒன்றாகவும் நாட்டுப் பகுதியில் வேறாகவும் இந்திய வாழ்க்கை இருப்பதை விளக்கிக் கொண்டிருக்கத் தேவையில்லை.கடல் புற மக்களின் வாழ்வியல் என்பது கடலளவு தான்.அவற்றில் இலக்கியங்கள் அணுகிய அளவுக்குச்சற்றும் தொடர்பின்றி வெகு குறைவான அளவே நமது சினிமா கடல் வாழ்வியலைப் பேசியுள்ளது வியப்பான முரணே.கடல் என்று சொன்னாலே செயற்கையாக தேவைக்கேற்ப வளைக்கப்பட்ட கதையாடலும் சமரசம் செய்துகொள்ளப்பட்ட மாந்தர்களும் இடம்பெற்ற  எத்தனையோ படங்கள் வந்திருக்கின்றன.என்றபோதும் இயல்பாக கடல்மாந்தர்களைக் கதையாட குறைந்தபட்ச சமரசங்களோடு வந்திருக்கும் படம் என்ற வகையில் மரியான் முக்கியத்துவம் பெறுகிறது.

அடுத்ததாக முழுமையாக நாயகத்துவம் ஏதுமில்லாத நடிகராக தனுஷ் உருவாகி இருப்பது தெளிவாய்த் தெரிகிறது  மரியானில்.மிக மிக இயல்பாக நடித்திருக்கும் தனுஷ் தமிழுக்குக் கிடைத்திருக்கும் ஒரு கொடை என்று சொல்வேன்.இரண்டாம் பகுதியில் தனுஷ் அனாயாசமாக ஸ்கோர் செய்கிறார்.இதற்கு முன்பே தன் வணிக வரைபடத்தில் ஏறுமுகம் தந்த அவரது படங்கள் பலவற்றில் தனுஷ் மிகக் கடுமையான தனது பங்களிப்புக்களை நேர்த்திவருபவர் தான் என்றாலும் கூட என்னைப் பொறுத்தவரையில் தனுஷின் மிக முக்கியமான படம் என மரியானைச்சொல்லலாம்.

தனுஷின் காதல் கொண்டேன் துவங்கி அதன் பின் புதுப்பேட்டை பொல்லாதவன் ஆடுகளம் அதன் பின் மரியான் ஆகிய படங்களில் முதல் மூன்றில் கூட அவரது பாத்திரப்படைப்பில் சமரசங்களும் போலச்செய்தல்களும் காணப்பட்டன.வணிக முகத்தை முன்வைத்து நகரும் இந்தியசினிமாவில் ஒரு இளம் நடிகரால் இத்தகைய சமரசங்களை மெதுமெதுவாய்த் தான் தாண்ட இயலும் என்பது நிசம்.அந்த வகையில் தனுஷின் மரியான் பாத்திரமும் அவரது வெளிப்பாடும் முன் பழைய படங்களின் குறைபாடுகள் ஏதுமில்லாமல் கச்சிதமாக அமைந்திருப்பது குறிப்பிடத் தக்கது.

எளிமையான ஒரு கதை.நாலு வரியில் சொல்லி விடலாம் தான்.முழுக்க முழுக்க அனுபவப் படுத்துவதில் இருக்கிறது மரியானின் சூட்சுமம்.வேண்டாம் என ஒரு காதலை மறுக்கிற மரியான் சரி என சம்மதிக்கிறான்.அந்தக் காதலியை மணமுடிக்க வேண்டுமானால் காதல் பெண்ணின் தந்தை பட்ட கடனை அடைக்க வேண்டும்.அந்தப் பணத்திற்காக தான் வாழ்ந்துவரும் கடல் வாழ்வைக் கைவிட்டு விட்டு கானல் பிரதேசமான சூடான் பாலை நாட்டில் இரண்டு வருடம் வேலை பார்த்துவரச் செல்கிறான்  மரியான்.சூடானில் இருந்து திரும்புகிற தருணத்தில் அவனை அந்த நாட்டின் தீவிரவாதிகள் கடத்துகின்றனர்.பல நாட்கள் அவர்கள் பிடியில் அடைபட்டு எப்படி மீண்டு வந்து தன் காதலியைச் சேர்கிறான் என்பதே கதை.

படத்தின் கதை மிக நேர்கோட்டில் பயணிக்கிறது.அதிர்ச்சிகரமான திருப்பங்களோ அல்லது அவிழ்க்கச் சிரமமான
முடிச்சுக்களோ இல்லாமல் வெகு நேரடியான கதைசொல்லலில் இப்படி ஒரு படம் பார்த்து நாளாயிற்று.என்ன நடக்கிறது என்ன நடக்கப் போகிறது என்பது தெரிந்தே இருக்கும் இக்கதையில் பார்வையாளனுக்குத் தரும் காட்சி அனுபவத்தை மட்டுமே வித்யாசப்படுத்தி இருப்பது இதமான மாற்றம் எனலாம்.சின்னச்சின்ன படிமங்களால் நிரம்பி வழிகிறது படம்.பல காட்சிகள் அழகாகவும் இயல்பாகவும் மனதின் ஆழத்தில் ஒட்டிக்கொள்கின்றன.


உதாரணமாக மரியானின் நண்பன் சக்கரை (அப்புக்குட்டி) இறந்து அவரது உடல் கரையில் ஒதுங்கும் காட்சி.வழமையாக
இது போன்ற காட்சிகளில் முதலில் சக்கரை கதாபாத்திரத்தின் உடல் தான் ஒதுங்கும்.அதீதமான இசையும் முன்னாலேயே மறுவினை
நேர்த்தத் துவங்கிவிடும் பாத்திரங்களும் என இதுவரை தமிழ் சினிமா பார்க்கச்சொல்லிக் கொடுத்திருக்கும் ஒரு முறைமையை முழுவதுமாக இந்தக் காட்சியில் மீறி இருப்பார் இயக்குனர்.வெகு இயல்பாக நம் கண்ணுக்கு முன்னால் இரண்டு உடல்கள் கரை ஒதுங்கினால் நாம் என்ன பார்த்து உணருவோமோ அதை கனகச்சிதமாக படமாக்கி இருப்பது சிறப்பு.

சக்கரையின் மரணத்தை அடுத்து அவனது உடல் புதைக்கப் பட்ட இடத்தில் குடித்து விட்டுக் கண் கலங்கி அமர்ந்திருக்கும்
மரியான்.அவனிடம் வந்து தன் வீட்டில் திருமணப் பேச்சு நிகழப் போகிறதென்று சொல்லும் பனிமலர்.உடனே கோபப் பட்டு அவளை அறையும்  மரியான்.அவனிடம் விலகியும் நெருங்கியும் பெண்ணாகத் தான் படும் வதையைப் புரியவைக்கப் போராடும் பனிமலர். மீண்டும் அவள் மேல் கல்லை எறிந்து துரத்தும் மரியான் அந்தக் காட்சியில் இருந்து விலகிச்செல்லுகையில் போகிறபோக்கில் ஒரு குரலாய்ச் செல்வாள் பனிமலர் "போடா"என்று.இந்தக் காட்சியில் ததும்பும் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான அத்யந்தம் சினிமாவில் எப்போதாவது நிகழும் அபூர்வம்,

நல்ல மற்றும் கெட்ட என்ற வித்யாசத்தை மட்டும் ஏற்படுத்தி விட்டு.வில்லனை வில்லனாய்க் காட்டுகிற எந்த விதமான கொனஷ்டைக் காட்சிகளும் இல்லாமல் இருப்பது இந்தப் படத்தின் அடுத்த ஆறுதல்.வில்லன் இந்தக் கதை கோருகிற இடங்களில்
மட்டுந்தான் தென்படுவார்.மற்றபடிக்கு அவரும் சமர்த்தாய் இருப்பார்.இயல்புவாழ்வின் மனிதர்கள் அப்படித்தாமே..?

ஆதாமிண்டே மகன் அபு படத்தின் சலீம் இந்தப் படத்தில் பனிமலரின் அப்பாவாக நடித்திருக்கிறார்.இமான் அண்ணாச்சி நண்பர்களில் ஒருவராக வருகிறார்.எல்லாரையும் அப்புக்குட்டி தூக்கிச்சாப்பிடுகிறார்.வழக்கமாக நாயகனின் உடன் வருகிற கதாபாத்திரர்கள் சபிக்கப் பட்டவர்களாகவே இருப்பார்கள்.அது எழுதாவிதி.இந்தப் படத்தில் அப்புக்குட்டியின் கதாபாத்திர கனம் இதுவரையிலான தமிழ் சினிமாவின் விழலாய் மரித்த உபநடிகர்கள் அத்தனை பேரின் ஆன்மாவுக்கும் அமைதி நல்கும் வகையில் மிக அற்புதமான ஒன்று.அதை அவர் நிறைவேற்றி இருப்பது இன்னும் அழகு.எழுதியே வைத்துக்கொள்ளலாம்.அப்புக்குட்டி சினிமாவில் இன்னும் முக்கியமானதொரு நடிகராக வருவார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இந்தப் படத்தின் பின்னுயிர்க்கேற்றாற்போல இயைந்து இருப்பது ரசம்.கடல்ராசா பாடல் துள்ளல்..மற்ற பாடல்கள் எதுவும் உறுத்தவில்லை.ஒளிப்பதிவாளர் பேர் என் வாயில் நுழையவில்லை.அவரது ஒளிப்பதிவு மனதில் நுழைந்துவிட்டது. வெகு நாட்களுக்கு நிற்கும் கடலழகுப் பதிவு. இரண்டாம் பகுதியில் படம் கடல் புறத்தில் இருந்து பாலை நிலத்துக்கு நகர்கிறது. திட்டமிடாத ஒரு பயணத்தின் இடரேற்பு தரும் ஆனந்தம் போன்றது அது.

ஈரம் சொட்டச்சொட்ட இருக்கும் காணனுபவம் அடுத்து என்ன நடக்குமென்றே தெரியாத முடிவற்ற பாலையில் பணயக் கைதியாகும்  மரியானோடு தானும் வறண்ட நிலத்துக்குப் பார்வையாளனை மாற்றுகிறது.படம் யூ டர்ன் அடிக்கும் சாலைவாகனம் போலாகின்றது.அதன் பின் படம் முடிவதற்குப் பத்து நிமிடம் முன்பு வரைக்கும் சூடான் நாட்டின் பாலைகளில் பார்வையாளனும் திக்குத் தெரியாமல் அலைகிறான்.நகரத்தை நோக்கி ஓடுகிற மரியான் மெல்லச்சோர்கிறான்.அவனது வாழ்க்கை பனிமலர்.அவனை இயக்குவது பனிமலர் மீதான காதல்.அவனோடு சேர்த்துப் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட சிலரும் ஒவ்வொருவராகக் கொல்லப்படுகிறார்கள்.மரியானுக்கு \முன்னால் இப்படத்தின் இரண்டாம் பகுதி முழுக்க முன்னறிவிப்பில்லாத மாயவேலிகளாய் நீள்கின்றன.அத்தனை வேலிகளையும் ஒவ்வொன்றாய்த் தாண்டி வருகிறான்.காதல் நினைவின் ஈரம் அவனை வறந்து உயிரை இழந்துவிடாமல் பார்த்துக் கொள்கிறது.கசங்கி மடங்கிக் கிட்டத்தட்ட உயிரை இழக்கிற தருணம் வந்து விடுகையில் அந்த நீள் நெடிய பாலையின் முடிவில் அவனை வரவேற்கின்றது கடல்.

பாலையும் கடலும் சேர்கிற இடத்தை எங்கே பிடித்தார்களோ தெரியவில்லை.கடல் அங்கே ஒரு கதாபாத்திரமாகின்றது. உயிருக்கு உயிரான நண்பர்கள் நாலுபேர் தன் ஆபத்துகாலத்தில் திடீரென்று எதிர்ப்பட்டால் என்ன மகிழ்வை ஏற்படுத்துவரோ அதே மகிழ்வு நேர்கிறது.கடல் அங்கே ஒரு அழகான குறியீடாகின்றது.பாலையும் கடலும் இணைகிற நிலவமைப்பைக் கற்பனை என்று ஒதுக்கி விட முடியாது.அதுவொரு அழகான காட்சிப் படிமம்.மழை எதிலிருந்து எதுவரை பெய்வது என்னும் நிலக்குறிப்பை ஒவ்வொரு முறையும் தானே தீர்மானித்துக் கொள்வதில்லையா..?அது போல மழை பொழிகிற சாலையாய்க் கடலும் மழையற்ற பாலையாய் நிலமும் அந்தக் காட்சியில் அழகுறக் கலக்கின்றன.

பார்வதி நடிக்கிறார்.எல்லா நடிகைகளுமா நடிக்கிறார்கள்..?அல்லது நடிக்க அனுமதிக்கப் படுகிறார்கள்..?அழகான காதலி என்ற பதத்தை இனி யார் சொன்னாலும் பார்வதியின் நினைவு வரும் போல இருக்கின்றது.மரியானின் இரண்டாவது பகுதி வசனங்கள் குறைவாக காட்சிகளாலேயே கதை நகர்த்த்திச் செல்வது முக்கியமான அம்சம்.வதைக்கூடத்தில் ஜெகனும் மரியானும் பாவனையில் சோறு உண்ணுவதும் சுருட்டு பிடிப்பதுமாக அந்தக் காட்சி நிஜத்துக்கு அதி அருகாமையில் அனுபவத்தை நிறுத்துகின்றது. நிராகரிக்க  முடியாத அழகான திரைப்படங்கள் எப்போதாவது தான் வரும்.மரியான்.மனசுக்குள் நிரந்தரிக்கிறான்.

தவற விடக் கூடாத படம்.

 
தொடரலாம்
© 2011 All Rights Reserved by aathmaarthi