புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

வாழ்தல் இனிது (II) 3

வாக்குமூலம்

தனிமை என்பது ஒரு அரக்கன் என்று துவங்கும் இந்த வாக்கியம் பாசாங்கானது.தனிமையை விடவும் அரக்கன் என்று சொல்வதில் பாசாங்கு ததும்பி வழிகிறது.ஒரு வாக்கியத்தைக் கூட உண்மையாக எழுதமுடியாதவனின் இயலாமையை எள்ளி எள்ளி நகைக்கிறது காலம்.முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு இனி ஒரு உறவுமில்லை எனப் புறப்பட்டுப் போயிருந்தது மொழி.இது இப்படியாகக் கடந்து போகிறது இக்கணம்,வாழ்தல் இனிது (II) 3 "சினிமா சட்டை; கல்யாணமூர்த்தி"கல்யாணமூர்த்தி என்பது எத்தனை வித்யாசமான பெயரோ அத்தனை வித்யாசமானவன் தான் அவனும்.எனக்கு மூன்று அல்லது நாலு வயது மூத்தவனாக இருப்பான்.எனக்கும் மூர்த்திக்குமான அறிமுகம் யதேச்சையாக ஒரு சலூனில் நடந்தது.விதி என்பதை நம்பாத எனக்கு அவனை
யும் என்னையும் இணைத்துவைத்த காரணியை வியக்காமல் இருக்க முடியவில்லை.நான் படித்த செயிண்ட்மேரீஸ் பள்ளி அப்படி சொல்லக் கூடாது,படிப்பதற்காக என்னை சேர்த்திருந்த அந்தப் பள்ளியும் அதனை ஒட்டிய மகாமெகா சர்ச்சும் மதுரையின் அடையாளங்களில் சேர்க்கத் தக்கவை.கடற்கரைச் சூழலை நினைவுபடுத்தும் நீண்ட மணல் வெளிக்குமத்தியில் மரியே வாழ்க என்று அமைதியாக வீற்றிருக்கும் மாதா கோயில்,மதுரை தெற்கு,கிழக்கு வாசல்ஸ்டாப்புகளுக்கு மத்தியப் ப்ரதேசத்தில் அமைந்திருக்கிற பிரம்மாண்டம்.

நான் புதூரிலிருந்து ஆறு மற்றும் ஏழு வகுப்புக்களை கழித்த பிறகு எட்டாவது வகுப்பின் போதிருந்து திருநகருக்கு மாற்றப்பட்டேன்.டவுண் வாழ்க்கை முழுவதுமாக இளமையில் பறித்துக்கொள்ளப் பட்டதென்பது மிகக் க்ரூரம்.அதனாலேயும் நான் ஒழுங்காகப் பள்ளிக்குப் போக மாட்டேன்.தினமும் ஏதாவது பொய் சொல்லிவிட்டு மட்டம் அடித்துவிடுவேன்.ஒவ்வொரு வருடமும் 200 வேலை தினங்களில்
எப்படியும் 120 நாள் லீவு விட்டுக்கொள்வேன்.பள்ளிப் படிப்பில் மகா அற்பன் நான்.பிறகு மந்திரமா மார்க்களிக்கும்..?அப்படியே வருடா வருடம் முழுப்பரீட்சைக்கு மட்டும் மகோன்னத முக்குகள் முக்கி பாஸ் மட்டும்ஆகி எப்படியோ தேக்கி 10ஆவது வந்துவிட்விட்டேன் திருநகரில்
இருந்து கிளம்பி வந்து பெரியார் பஸ்ஸ்டாண்டில் வண்டி மாறுவதற்கு பதிலாக அங்கே இருந்தே 'எஸ்கேப்பிஸ்ட்' ஆக மாற்றிக்கொள்வேன் என்னை. முகமூடி கணக்காக பையில் சுருட்டி வைத்து ஒரு கலர் சட்டை எப்போதும் இருக்கும்.அதற்குப் பேரே "சினிமா சட்டை" தான். சினிமாவுக்குப் போவதைத் தவிர வேறு ஒளிந்துகொள்வதற்கு எந்த செவ்விந்தியப் ப்ரதேசமும் இல்லாதபடியால் தினமும் காலையில் பெரியார் நிலையம் வந்ததும் யார் கண்ணுக்கும் படாமல் கட்டணக் கழிப்பறைக்கு சென்று வெள்ளுடையில் இருந்து கலருடை தரித்து ஜம்மென்று
கிளம்பி சுற்றுப்பட்டு பதினெட்டு ஸ்டாப்பிலும் இருக்கிற தியேட்டர்களில் காலைக்காட்சிகள் ஓடுகிறவற்றில் போய் அமரும் வரை மன நடுக்கம்,மனப் பிறழ்வு,பயம்,படிப்பின் மீதான இயலாமை இன்னபிறஎல்லாமும் தொடங்கி நடனமாடி அடங்குகிற வேளை எது தெரியுமா.? வெண்திரையில் எழுத்துக்கள் மின்னத் தொடங்குகிற நேரம்.


ஒரே படத்தைப் பதினெண் கீழ்க்கணக்கு போல எல்லாம் பார்த்திருக்கிறேன்.மாநகரக் காவல் என்ற கேப்டன்(அப்போதுஅவர் வெறும் ப்ளேயர் மட்டுமே...பின்னாளில் தான் முன்னேறி கேப்டனானார்.) படத்தை மட்டும் 23 காலைக் காட்சிகள் பார்த்த காளை நான்.செண்டிரல் அமிர்தம் ந்யூசினிமா(இப்போது இல்லை) சிட்டிசினிமா(இப்போது இல்லை) சக்தி சிவம்(இப்போது இல்லை) கல்பனா(இப்போதைய அண்ணமலை) பத்மா (இப்போது இல்லை)ஜெகதா (இப்போது இல்லை) மேலும் இந்தியாவின் மாபெரும் என்ற அடைமொழிக்கு உகந்த தங்கம் தியேட்டர் அதுவும் கூட இப்போது இல்லை.இவைகளில் காலைக் காட்சி முடியும் வரை ஒரு பிரச்சினையும் இல்லை.முடிந்த பிறகுமூன்றரை மணி வரையில் என்ன செய்வது..?அது தான் பிரச்சினை.பெரியார் பேருந்து நிலையத்துக்குள் இருந்த சலூன் ஒன்று எனக்குப் பழக்கமானது.அதை நான் பழகிக் கொண்டதே

வேறு வழியற்ற அகதித்துவத்தின் விளைவு தான்.எங்கேயும் போக முடியாது.எவனா(ரா)வது பார்த்துவிட்டு என் அப்பனி(ரி)டம் பற்ற வைத்தால்
என்ன ஆவேன் நான்.மனிதர் எம்ஜியார் படத்து நம்பியாராக மாறிவிடமாட்டாரா..?என் அம்மா வேறு நியமன எம்.பீ போல என்னை எகிறி அடிக்க மாட்டாளா..?இவர்களுக்கெல்லாம் பயந்து திரிந்த எனக்கு கிடைத்த சொர்க்கம் தான் பாலு சலூன். பாலு சலூன் பஸ்டாண்டின் கிழக்கு மேற்கு சந்துபொந்துகளில் ஒன்றில் புகுந்து இன்னொன்றில் வந்தால் செருகி இருக்கும்மழைமறைவுக் கடை.அப்படி ஒரு கடை இருப்பது அதன் ஓனருக்கே தெரியாது.அப்போது எனக்கு சினிமா தவிர லீவ் எடுப்பது தவிர வேறெந்த கெட்ட பயக்கங்களும் இல்லை என்கிற கூடுதல் தகுதி இருந்தாலும் கூட பார் ஒன்றின் இருட்டு டேபிள் போலத் தான் அந்தக் கடை இருக்கும்.அதை நடத்தி வந்த பாலு எதற்குமே சிரித்த முகத்தோடு இருந்த ஒரு சிரிப்பரசர்.எந்த அளவுக்குச் சிரிப்பார் என்றால் பக்கத்துக்கடை அலீஃப் பாய் அடிக்கடி சொல்வார்."பாலு செத்துட்டாக் கூட சிரிச்சிட்டே தான் இருப்பான்.அவன் பல்லு அப்படி"என்று.


பாலு கடை தான் என் உள்ளிட்ட பல மாணவ மணிகளுக்கு வேடந்தாங்கல்.அங்கே தான் பள்ளியை கட் அடிக்கிற தினங்கள் எல்லாம் மதிய உணவை உண்ணுவதும் பிறகு ஒரு குட்டித் தூக்கம் போடுவதும் நடக்கும்.நான் மட்டுமல்ல,மார்லன்,அந்தோணி குட்டி என மூணு நாலு ரெகுலர் இஷ்டமர்கள் அங்கே தான் இருப்போம்.சாயங்காலம் பள்ளி முடிந்ததும் 'டாண்' எனக் கிளம்பி வீட்டுக்கு சென்றுவிடுவோம்.அப்படி இருந்த 'சமவயது சைத்தான்'களுக்கு மத்தியில் வந்து சேர்ந்தவன் தான் கல்யாணமூர்த்தி.நாங்கள் 10ஆவது படிக்கும் போது கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்தவன் கல்யாணமூர்த்தி.அவன் பேர் தொடங்கி எல்லாமே வித்யாசம் தான்.முதலில் அவனைப் பார்த்த அன்றைக்கு நானும் மார்லனும் பாலு தன் கடைக்கு புதிதாக ஆளெடுத்திருக்கிறார் எனத் தான் நினைத்தோம்.மார்லன் என்னை விட சற்று குண்டாக இருப்பான் அப்போது.அதன் பின் மிகமிக இளைக்கவும் செய்தான்.தன்னை விட 10 வயது மூத்த ஆளைக் கூட 'என்னடா..?" எனத் தான் கேட்பான்.அவ்வளவு மரியாதையான பய்யன்.எல்லா சண்டைகளையும் தான் தான் துவக்கி வைக்க வேண்டும் என்று ஒருவன் பிறவி எடுத்திருக்கிறான்...வேறு யாரால் என்ன செய்ய முடியும்..?வாத்தியார் மீது கல்லெறியும் போது தனக்குப் பிடிக்காத மாணவனைத் தன்னோடு அழைத்துப் போவான்."அவன் சொல்லிக்கொடுத்து விட்டால்..?"எனக் கேட்டால் "அவனுக்குன்னு ஒரு கல்லு கிடக்காதோ ரோட்டில..?"என்பான்.வாத்தியாரை கல்லெறிந்து திரும்பி வருகையில் உடன்வந்தவன் மார்லனுக்கு அடியாளாகவே மாறிவிடும் அதிசயமும் நடக்கும்.

அப்படிப் பட்ட நற்ஜாதகன்,கல்யாண மூர்த்தியை வேலை பார்ப்பவன் என நினைத்து,"டீ வாங்கியா.."என்றான்.அவனும்  தூக்குவாளியை எடுத்துக் கொண்டு செல்ல,பாலு மார்லனைக் கடிந்தார்.."அவனும் உங்களை மாதிரி கடைக்கு வந்துருக்கிறவன் தாண்டா..அதும் காலேஜெல்லாம் படிக்கிறான்..ஒருத்தனை விட மாட்டீங்களே.?"என்றதும் எனக்கு பரிதாபமாகப் போய்விட்டது.மார்லன் ஈழத்தில் இருந்து தாயகம் பெயர்ந்த தமிழன்.ஆனாலும் அவன் கைக்குழந்தையாக இங்கே வந்துவிட்ட படியால் சங்கத்தமிழ் பேசுவான்.பேச்சை வைத்து ஈழவாசனை கண்டறியவியலாது.டீயைக் கொணர்ந்தவன் தம்ளர்களில் ஊற்றி விநியோகிக்கவும் செய்தான்.நான் கேட்டேன்.."ஏன் பிரதர்..?எந்தக் காலேஜு.?"என்றேன்.அவன் சினேகமாய்ச் சிரித்தபடி "யுனிவர்சிட்டி"என்றான்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது.தன்னை விட வயதில் சிறிய,மீசை கூட சரியாக முளைக்காத இரண்டு பேரிடம் கல்லூரிப் படிப்பின் மத்திமத்தில் இருக்கிற ஒருவன் மடங்கிச் செல்வதற்கு என்ன காரணம் இருக்கக் கூடும்..?வறுமை காரணமாக இதனை செய்கிறானா என்றால் அதுவும் இல்லை. தன் காசில் தானே தூக்குவாளியைத் தூக்கிக் கொண்டு போய் டீ வாங்கி வருகிறவனை என்ன என வகைப்படுத்த என்றே தெரிய வில்லை.அதன் பின் மெல்ல கல்யாணமூர்த்தி எங்களுடன் நெருக்கமானான்.அவன் கல்லூரிமாணவன் என்பதால் எங்களை விட அதிகம் லீவ் எடுக்கிறவனாய் இருந்தான்.எங்களுக்காகக் காத்திருப்பான்.மார்லனும் நானும் பஸ்டாண்ட் சென்று இறங்குகிற இடத்தில் ஏதோ "ஏர்போர்ட் அர்ரைவல்" வாசலில் காத்திருக்கிற வெள்ளுடுப்பு ட்ரைவர் ரேஞ்சுக்கு வரவேற்றுச் சென்று பாலு கடைக்குள் அவசரமாக நுழைந்து சட்டை மாற்றியதும் தன் சைக்கிளில் முன்னால் மார்லனையும் பின்னால் என்னையும் வைத்துக் கொண்டு போலீஸ் மற்றும் திருடன் என யார் கண்ணிலுமே படாத சந்துகளின் வழியே பயணித்து எல்லாத் தியேட்டரையும் தொட்டுவிடுவான்.சமர்த்தன்.

மார்லன் அவனை இஷ்டத்துக்கு ஏசுவான்."வாடா போடா அவனே இவனே" என்றெல்லாம்.எனக்கு பாவமாக இருக்கும்.சொன்னாலும் கேட்க மாட்டான் மார்லன்.ஆனால் அவனது எல்லா செய்கைகளையும் சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொண்டவனாகத் தான் தெரிந்தான் கல்யாணமூர்த்தி. மேலும் அவன் செய்கிற ஒரு செய்கை எனக்கு மிகவும் வித்யாசமாகப் பட்டது.அதாகப்பட்டது.சலூன் நாற்காலியில் மார்லனை அமரவைத்து நாற்காலியை ஷேவிங்க் செய்கிற வாகுக்கு நெகிழ்த்தி மார்லனின் தலை முதுகு என மசாஜ் செய்வான்.மார்லனுக்கு மட்டுந்தான் செய்வான். ஆரம்பத்தில் சாதாரணமாக எடுத்துக்கொண்ட எனக்கு லேசாகக் கடுப்பு வந்தது.அதென்ன ஒருத்தன் இன்னொருத்தனை இந்த அளவிற்கு தலையில் வைத்து கொண்டாடுவது..?மார்லனுக்கு நான் தான் ஸ்பான்சர் என்பதால் என் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தினேன்.. "மாலு...ஒண்ணு நான் இருக்கணும்..இல்ல அவன் இருக்கணும்..என்ன சொல்றே..?"என்றேன்.அவனும் என் நட்பை வேண்டும் என்று சொல்லி "இனி என் கூட சேராதே "ரேஞ்சுக்கு பேசி மூர்த்தியை விரட்டி விட்டான்.அதன் பின் மூர்த்தி பாலு கடைக்குள் நானும் மார்லனும் இருந்தால் அங்கே வருவதை நிறுத்தினான்.

இவ்வளவுக்கும் அப்பால் ஒரு நாள் பிரம்மா என்னும் படத்தை பார்த்து விட்டு நானும் மார்லனும் சினிப்ரியா காம்ப்ளெக்சில் இருந்து நடந்தே பெரியார் பஸ்டாண்ட் செல்வதற்காக (அங்கே இருந்து தான் திருநகருக்கு பஸ் பாஸ் இருக்கும் என்பதால்) கோரிப்பாளையம் மேம்பாலத்தில் பிளாட்பார்மில் நடந்து கொண்டிருந்தோம்.நடு மதிய வெய்யில் நடு மண்டையையே குறிவைத்துப் பிளந்தது.மார்லன் பிரம்மா படத்தில் வருகிற கவுண்டமணி பளயபாளயம் சின்னச்சாமி ஜோக்கை மீண்டும் மீண்டும் சொல்லி சிரித்தபடி வந்தான்.எங்களைக் கடந்து சைக்கிளில் சென்ற மூர்த்தி லேசாகத் தயங்கி நிறுத்தினான்.விரதத்தை கைவிட்டு விட்டு ஏறிக்கொண்டோம்.மீண்டும் நட்பு துளிர்த்தது.

இவையெல்லாம் நடந்து ஆறேழு மாதங்கள் கழித்து ஒரு நாள் மார்லனும் மூர்த்தியும் மட்டும் சைக்கிளில் வந்து இறங்கினர்.பாலு கடையில் காத்திருந்த என்னோடு திரு நகர் கிளம்பி வந்த மார்லன் வீட்டுக்கு நடக்கும் வழியில் சொன்னான்."டே ரவீ..இன்னிக்கு மூர்த்தி வீட்டுக்கு கூட்டிட்டு போனாண்டா..அங்கே..."என்று நிறுத்தினான்.நான் ஆர்வமாகப் பார்த்தேன்.

"மூர்த்தியோட தம்பி ஒருத்தன் செத்துட்டாண்டா..அவன் ஃபோட்டோவைக் காட்டுனாண்டா..அவன் பேரு என்னமோ சாரதியாம்.அவன்  அசப்புல என்னைய மாதிரியே இருக்காண்டா.."


நான் ஏதும் பேசாமல் நடந்தேன்.அதன் பின் நானும் மார்லனும் கல்யாணமூர்த்தியை "அண்ணன்" என்று அழைக்கத் தொடங்கினோம்.

தொடர்வேன்
அன்போடு
ஆத்மார்த்தி