புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

நதிபுதைதல்

நதி 1

பீக் அவரில்
எல்லோரும் விரைகிற
மேம்பாலத்தில்
வாகனத்தை நிறுத்திவிட்டு
நதியின் பிரேதத்தை
உற்றுப் பார்க்கிற மனசு
நள்ளிரவு மீள்கையில்
யாருமற்ற பாலத்தில்
வேகவேகமாய்க் கடந்தோடுகிறது.


நதி 2

ஏதோவொருதினம்
வெள்ளம் கரைபுரண்டதை
இன்றைக்கும்
கீழ்ப்பாலத்தில் நின்று
மூத்திரம் பெய்தபடி
நினைவுகூர்கிற எவர்முகத்தையும்
பார்க்கத் த்ராணியின்றி
முதுமையெய்திய ஆட்டக்காரி
போலக்
கடந்துகொண்டிருக்கிறது நதி..

நதி 3

தெருப்பிள்ளைகள்
தன் இடுப்பில்
கட்டிய கயிற்றின்
மறுமுனையோடு
பிணைத்திருக்கிற
தகர டப்பா
பெருஞ்சப்தத்துடன் துரத்துகிறதைச்
"சர்ப்பமோ சிங்கமோ யானையோ "
எதுவோவென்றறியாது
ஓடுகிற பைத்தியக்காரனைப் போல
ஓடித் தலைதெறிக்கிறது
இந்த நதி.


நதி 4

நினைக்கையிலெல்லாம்
ஞாபகத்தில் முண்டுகிறது
ஆயிரம் நதி.
"ஆழப்புதைய"
என்கையில் மட்டும்
ஒன்றையுங் காணோம்.