புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

கோவை இலக்கிய சந்திப்பு 25 நவம்பர் 2012கோவை இலக்கிய சந்திப்பு 25 நவம்பர் 2012

கோவை இலக்கிய சந்திப்புக்கான அழைப்பை அன்பு நண்பர் இளஞ்சேரல் ஒரு மாதம் முன்பே விடுத்திருந்தார்.உடனே வருகிறேன் என்று மானசீகமா நாட்காட்டியில் 25 ஆம் தேதி வரையிலான தாட்களைக் கிழித்தெறிந்துவிட்டுக் காத்திருந்தேன்.மூன்று தினங்களுக்கு முன்பு வரை கோவை செல்வது இடையிலேற்பட்ட வேறொரு சுமை காரணமாக ரத்து செய்யப்படலாம் என்ற நிலை இருந்தது. இருந்தாலும் கோவை கூட்டத்திற்கு எப்படியேனும் சென்று கலந்து கொண்டே ஆவது என என் தமிழ் வாத்தியார் தலை மீது ஓ...ங்கி அடித்து சத்தியம் செய்திருந்தேன் மனசுக்குள்.ப.தியாகு தான் எப்போதும் லைனில் இருப்பவன்.அன்பின் நண்பன்.முகப்புத்தகம் எனக்கு அருள்புரிந்த கொடைகளில் ஒருவன்.என்னை என் குறைகளோடே பொறுத்துக் கொள்ளும் பொருளாளன்.(ஜல்லி அடிக்கிதோ..?இருங்க சரி செய்வோம்) பொறுத்துக் கொள்ளும் அருளாளன்.(இப்ப சரி) அவனிடம் மதுரையில் இருந்து எத்தனை மணிக்குக் கிளம்புவது என்ற கேள்வியில் தொடங்கி எத்தனை கேள்விகள் கேட்டிருப்பேன் என கணக்கே இல்லை. அவனும் பொறுப்பாக எல்லா கேள்விகளுக்கும் தன் வழக்கப் புன்னகையோடு பதில் சொல்லி என்னை சமாளித்தான் என்று தான் சொல்லவேண்டும். நிகழ்வுக்கு முந்தைய நாள் நறுமுகைதேவிக்கு செல்பேசியில் தொடர்புகொண்டு  "உங்கள் ஊருக்கு நான் ஒரு இலக்கிய நிகழ்வுக்கு வருகிறேன்.அந்த நிகழ்வுக்கு நீங்களும் அவசியம் வருகை தரவேண்டும் என்றேன்,. மறுமுனையில் சற்றே முறைத்த தேவி.."எங்க ஊருக்கு நீங்க வர்றீங்க..என்னை நீங்க இன்வைட் செய்யணுமா..?இருந்தாலும் பரவாயில்லை. நாளை கண்டிப்பாக வருகிறேன் நிகழ்வுக்கு" என்றார். கோவையில் எனக்கு இருக்கக் கூடிய தோழ தோழியர் அனைவருக்கும் இந்த நிகழ்ச்சி குறித்த தகவலை தெரிவித்தேன். (மொத்தம் 10 பேர் கூட இல்லை..இந்த பில்ட் அப் உனக்குத் தேவையாடா ஆத்மா...?)அப்புறம் என்னோடு உடன் பயணிக்க அதீதன் என்ற பேரில் எழுதத் துவங்கி இருக்கும் மதுரையை சேர்ந்த சகோதரன் சுரேனை அழைத்தேன்.உடனே ஆர்வனாக வருகிறேன் என்றார்.

எக்கச்சக்க கலர் கனவுகளோடு அன்றைய இரவு உறங்காமலே கழிந்தது.அதன் நடுவே எழுந்து குளித்து உடுத்தி கிளம்பி நகர்ந்து கோவை செல்லும் பேருந்தில் ஏறுகையில் மணி 3.30.ஐந்தரை மணி வரை நானும் சுரேனும் பேசிக்கொண்டே சென்றதில் நேரம் கழிந்ததே தெரியவில்லை. ஆங்காங்கே நிறுத்தி ஆளேற்றி சென்றது சுவாரஸ்யமாகத் தான் இருந்தது.வெளிச்சமும் இருளும் ஒரே பயணத்தை இருவேறு பயணங்களாக ஆக்கிவிடுகின்றன.பிறகு ஆறே முக்கால் வாக்கில் மீண்டும் உறங்கலானேன். எழுந்திருக்கையில் கோவை மாவட்டத்துக்குள் ஊர்ந்துகொண்டிருந்தது பேருந்து.முதலில் ஓரிடத்தில் இறங்கி பிறகு வேறொரு இடத்துக்கு வந்தோம்.அங்கே கோவையின் பெருமை என்ற அடைமொழியோடு கௌரிஷங்கர் அன்னபூர்ணா எனும் ஹோட்டலில் நுழைந்தோம்.ஒரு வாகான டேபிளில் மையங் கொண்டோம்.எங்களுக்கு எதிர் டேபிளில் நாலு பேர் மலையாள ஸ்டைல் புடவை கட்டி அமர்ந்திருந்தனர். அதில் வலது ஓரத்தில் அமர்ந்து இருந்த பெண் பார்ப்பதற்கு...(ஆத்மா...கடங்காரா...உன் டேபிள் பத்தி மட்டும் சொல் போதும்..)

கோவை பொங்கல் செம்மையாக இருந்தது.பொதுவாக அதனை இருவரும் ஆளுக்கொன்றாய் ஹதம் செய்தோம்.அதன் பின் சுரேன் "சேவை" வாங்கிக்கொள்ள நான் பூரிக்கு என்னைக் கொடுத்தேன்.சட்னி தருவதற்கு கோவையில் ஏதேனும் ஒரு எம் எல் ஏ வந்து சொல்லவேண்டும் அப்போதான் தருவோம் என்ற நினைப்பில் இருந்த அந்த ஹோட்டல் சப்ளையரை அருகே அழைத்து ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன்.மிக அன்பாக நான் கேட்காமலே சட்னி மற்ற இன்னபிற எல்லாம் வந்தது அதன் பின்.(அது என்ன அந்த கோல்டன் கொஸ்ச்சன் என கடைசியில் சொல்கிறேன்) பிறகு அங்கே இருந்து ஒரு ஆட்டோவில் ஆட்டாமல் கூட்டம் நடக்கிற எஸ்.பி.நரசிம்மலு நாயுடு உயர்நிலைப் பள்ளிக்கு வந்தோம்.ஞாயிற்றுக்கிழமை என்பதால் அந்த பள்ளியின் இணைப்பான மைதானத்தில் பலரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.மெல்ல முதலில் தியாகு வந்தான்.உடனே கோவையில் ஒரு கல்லூரியில் பணிபுரியும் நண்பர் அன்புசிவா வந்தார்.இளவேனில் வராமல் அவரோடு பணிபுரியும் இன்னொருவரிடம் ஒரு பார்சலை கொடுத்தனுப்பினார்.அதைப் பெற்றுக் கொண்ட தியாகு பார்க்கும் போதே நான் அவரிடம் சொன்னேன்.."இளவேனில் வந்தே தீரணும்..."அப்டின்னு மிரட்டல் தொனியில் சொன்னேன்.அவர் சிரித்துக் கொண்டே கண்டிப்பா சொல்றேங்க..என்றார்.
இளஞ்சேரல் வந்தார்.வரும் பொழுதே அவர் முகத்தில் அயர்ச்சியைக் கவனித்தேன்.இந்த நிகழ்ச்சியை இத்தனை மாதங்களாக தொடர்ந்து நடத்தி வருகிற இளஞ்சேரல் மிகவும் பாராட்டுக்குரியவர்.அது அப்புறம். அவர் என்னை வரவேற்றுக்கொண்டே அடுத்தடுத்த செயல்களை தியாகுவிடம் உரையாடலானார். நானும் அன்புசிவாவும் சுரேனும் தேநீர் அருந்த சென்றோம்.அங்கே தேனீர் அருந்திக்கொண்டே பேச்சு சுவாரஸ்யமாக செல்லலாயிற்று.

திரும்பி வந்தால் சுப்ரபாரதி மணியன் தமிழ்மகன் ஞானி அய்யா ஆகியோர் எல்லாம் அமர்வின் அரங்கில் குழுமிவிட்டிருந்தனர். நண்பர் சோழநிலா கருந்துளை என்ற இதழை நிகழ்வில் வைத்து அறிமுகம் செய்யுமாறு கேட்டுக்கொள்ள அமர்வின் முதலாவது நிகழ்வாக சுரேன் அந்த இதழைப் பற்றிய தனது பேச்சை வழங்கினார்.மிக எளிமையாக அதே நேரம் நேர்த்தியாக பேசிவிட்டு அமர்ந்தார். அடுத்ததாக நிகழ்வின் முதல் நூலாக எனது சேராக் காதலில் சேரவந்தவன் நூலைப் பற்றிய தனது விமர்சன உரையை தியாகு வழங்குமாறு இளஞ்சேரல் அழைத்தார்.திட்டப்படி தமிழ்மகனின் நூல்கள் மூன்றிற்கான விமர்சனம் மொத்தமும் முடிந்த பிற்பாடு அமர்வின் இறுதிப் பகுதியாக தான் எனது நூல்கள் இரண்டும் இடம்பெறுவதாக இருந்தது.என்ன காரணத்தாலோ தமிழ்மகனின் நூல்களை அப்புறம் வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து என் நூல்கள் முதலாவதாக இடம்பெற்றன. அப்போது அரங்கத்தில் பார்வையாளர்கள் மொத்தம் 20 பேர் தான் இருந்தனர். தியாகு தன் உரையை ஏற்கனவே கட்டுரையாக்கி கையில் கொணர்ந்திருந்தார்.அதனை தியாகு வாசித்து முடிக்க அடுத்த பகுதியாக திரு பூபாலன் எனது 108 காதல் கவிதைகள் நூலை விமர்சிக்க வந்தார்.அப்போது தான் அரங்கினுள் தோழி நறுமுகைதேவி கார்த்திகா சிதம்பரம் அப்புறம் இன்னொரு பெண் (அவர் பேர் எனக்குத் தெரியவில்லை அப்போது.அப்புறம் தான் தெரிந்தது அவர் சென்னையில் இருந்து வந்திருக்கிறார் என்று அவர் வந்த போது கிட்டத் தட்ட அரங்கத்தில் மொத்தம் 50 பேருக்கு மேல் குழுமி இருந்தனர்.ஆனால் அப்போது என் இரண்டு புத்தக விமர்சனம் என் ஏற்புரை எல்லாமும் முடிந்திருந்தது.) பூபாலன் ஏதோ தேர்வுக்கு செல்லவிருப்பதால் அவரது குறிப்புக்களை பார்த்தபடி 108 காதல் கவிதைகள் நூலைப் பற்றிய தன் விமர்சனத்தை வைத்தார்.இளஞ்சேரல் என்னை பேசுமாறு அழைத்தார்.நான் என் உரையை நிகழ்த்தினேன்.

/////////////////////"சிறுகதைகள் பற்றி முதலில் பகிர்கிறேன்.இவை இரண்டுமே மிக சமீபத்தில் வெளிவந்திருப்பதால் படிப்பதற்கான வாய்ப்பு எல்லோருக்கும் இதற்குள் ஏற்பட்டிருக்கும் எனக் கருதமுடியாது என்றபோதும் நூலையும் அதனை எழுதியவனையும் ஒருங்கே அறிமுகம் செய்து கொள்கிறதற்கான வாய்ப்பாக இதனைக் கருதுகிறேன்.
என் சிறுகதைகள் என்ன இஸம்,,..?எனக்குத் தெரியாது.குழந்தைகளாக இருக்கையில் நாமெல்லாருமே கதை கேட்பவர் களாகவும் கதை சொல்லிகளாகவும் ஒருங்கே திகழ்ந்தோம்.அப்போது நாம் கனவுக்கென்று தான் கண்களை அதிகம் புழங்கினோம்.பின் மெல்ல பெரியவர்களாகி அதனையெல்லாமும் இழந்தோம்.என் கதைகள் குழந்தைகளின் கதாவுலகத்தின் நீட்சியென்றே துவங்குகிறேன்.குழந்தைகளின் கதைகளில் காதலை காமத்தை வஞ்சகத்தை துரோகத்தை கலவியை தண்டனையை குற்றத்தை கடவுளை சைத்தானை என்னை மற்றும் உங்களை எல்லாரையும் புகுத்திப் பார்க்கிறேன்.இதுவரை சொல்லப் படாத கதைகளை சொல்ல வந்தவனாகவே என்னைக் கருதுகிறேன்.என் கதைகள் இன்றைக்கு மட்டுமானதன்று.நான் கதைகளில் புழக்கத்தில் கைக்கொண்டுள்ள வார்த்தைகள்,புனைவுகள் இனி வரும் காலத்தில் எதாவதொன்று ஒருவேளை சொல்லப்பட்ட அதே ஒழுங்கொடு புழக்கத்தில்  வருமானால் நான் வெறும் கதைசொல்லியாக மட்டுமல்ல,ஒரு அறிவியல் விஞ்ஞானியாகவும் பிற்காலத்தில் மதிக்கப்படலாம்.புனைவின் சுதந்திரம் எனக்கு நானே வழங்கிக் கொள்ளும் சுயமரியாதை.என் கதைகளுக்கு நான்குமால்கள் இல்லை.என் எந்த ஒரு கதையையாவது குறைந்த செலவில் திரைப்படமாக்க முயன்றால் கூட பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவாகும்.அந்த வகையில் அவதார் படம் கூட என் கண்களின் நடனம் அல்லது சேராக் காதலில் சேரவந்தவன் என்ற இரண்டு கதைகளின் முன்னே குறைந்தசெலவில் எடுக்கப் பட்ட படம் தான்.காகிதத்தில் நான் குபேரச்செலவுகளை தாண்டிய கதைகளை எழுதுகிறேன்.என்னை விமர்சிக்கிற எவரையும் என் கதைகளின் மேல் வைக்கப்படுகிற எந்த எதிர்ச்சொல்லாடலையும் நான் அறவே நிராகரிக்கிறேன்.இன்னும் எழுதுவேன்./////////////////

/////////////////////இப்போது 108 காதல் கவிதைகளுக்கு வரலாம்.என் முதல் தொகுப்பாகவோ முதல் புத்தகமாகவோ இதனைக் கொண்டு வரவே விரும்பினேன்.என்றபோதும் இது என் இரண்டாவது தொகுப்பாய் வந்திருக்கிறது.இவை கடந்த பதினெட்டு ஆண்டுகளாக நான் காதலித்து எழுதியவை.காதலுக்கு இலக்கியவாதிகள் கொடுக்கிற இடம் மீது எனக்கு விமர்சனம் இருக்கிறது.அந்நியாயமாக காதல் இலக்கியவாதிகளின் பாராமுகம் காரணமாக வஞ்சிக்கப் படுகிறது.காதல் இலக்கியம் அல்ல என்று சொல்கிற எல்லாரையும் சபிக்கிறதற்காகவே நான் இந்த தொகுப்பை எழுதினேன்.அவர்கள் நாசமாய்ப் போவார்களாக.காதல் நம் முன் இருக்கிற கடைசி நம்பிக்கை.காதல் நமக்கு எஞ்சி இருக்கிற கடைசி ஆயுதம்.காதல் நாமறியாமல் கற்றுக்கொண்டு விடுகிற உன்னதமான பண்பாடு.காதல் நாம் எப்போதும் காத்திரமாக கைப்பிடிக்க வேண்டிய கலாச்சாரம்.காதல் நாம் நம்ப வேண்டிய தேவன்.காதல் சாதியை வெல்லவல்லது.மதங்களை கடக்க வல்லது.அன்பை நிறுவ வல்லது.காதல் எல்லா பிரச்சினைகளுக்கும் மறைமுகத் தீர்வை நல்கவல்லது.,காதலிக்கிற அனைவருக்கும் என் அன்பு என்றும் உண்டு.காதலிகாதவர்களை நாய்கள் பிடுங்கட்டும். இதற்கடுத்த தொகுப்பை காதல் கவிதைகளால் நான் நிரப்புவேனோ அறியேன்.என் அடுத்த தொகுப்பு மற்ற கவிதைகளைக்
கொண்டிருக்கக் கூடும்.

இதனைப் பார்த்துவிட்டு இன்னும் சில கவிஞர்கள் காதல் கவிதைகளை எழுதுவார்களே ஆனால்..இன்னும் சில தொகுப்புக்கள் இதே போன்ற தொகுப்புக்களாக வருமே ஆனால் அதுவே இந்த கவிதைகளின் வெற்றி,என் கவிதைகள் வெற்று வாக்கியங்களல்ல..இவை காதல் கவிதைகளா..?இல்லை.தருணங்களின் கவிதைகள்.கட்டிடவேலை செய்கிற ஒருவன் வார விடுமுறை நாளில் தன் மனையாளை வண்டியில் இருத்திக் கொண்டு சினிமாவுக்கு செல்கிறானே...அவர்கள் தான் காதலர்கள். அவர்கள் தான் என் கவிமாந்தர்கள்.காதல் என்றாலே...நீ தான் அழகி.உன் கன்னம் இட்டிலி.உன் மூக்குத் தான் இந்த உலகின் அழகிய மூக்கு.நீ அழகாய் இருப்பதால் தான் இன்னமும் இந்தியாவில் மழைபெய்கிறது என அதீதக் குப்பைகளாக எழுதிக் குவிக்கப் படுகிற கவிதைகளுக்கு மத்தியில்,காதலிக்கிற எல்லோருமே காதலின் நாயக நாயகியர் தான் என்று சொல்ல வந்த கவிதைகள் தான் என் 108 காதல் கவிதைகள்.அதனை சரியாகச் சொல்லி இருப்பதாகவே நம்புகிறேன்.காதல் அழகு குறித்தானதல்ல.இரண்டு பேருக்கு மட்டுமே வாய்க்கக் கூடிய தனித்த தருணங்கள் குறித்து வெளியே பகிர வந்த கவிதைகள் என் கவிதைகள்.தருணமயமான காதல் கவிதைகள் கோவை நகரம் என்னை அழைத்து இப்படி ஒரு வாய்ப்பைக் கொடுத்ததற்கு அய்யா ஞானி உள்ளிட்ட இங்கே இருக்கிற அனைவருக்கும் என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.நன்றி வணக்கம்////////////////////////

நான் அமரப் போக ஞானி அய்யா ஒரு கேள்வியை என்னிடம் கேட்டார். அதற்குப் அப்படியே பதில் சொல்லிவிட்டு அமர்ந்தேன்.எனக்கு நினைவுப் பரிசை வழங்கினர்.நான் பெற்றுக்கொண்டேன்.பிறகு தமிழ்மகனின் செஷன் ஆரம்பமாயிற்று. முதலில் வெட்டுப்புலி குறித்து பேசினர்.பிறகு ஆண்பால் பெண்பால் குறித்து சுப்ரபாரதிமணியன் பேசினார்.அதன் பிறகு அய்யா ஞானி அவர்கள் தமிழ்மகனின் சிறுகதைகள் குறித்து பேசினார்.அனைவருமே சிறப்பாகப் பேசினர்.ஆண்பால் பெண்பால் குறித்து பேசிக்கொண்டிருக்கும் போது தோழி மீனாசிவம் வந்தார்.அவர் வரப்போவதில்லை என  நினைத்திருந்தேன்.ஆனால் எப்படியோ வந்து சேர்ந்தார்.ஞானி அய்யா முடித்ததும் தமிழ்மகன் பேசினார்.நிகழ்ச்சி இனிதே முடிந்தது.தோழி மீனா மற்றும் நறுமுகைதேவி தியாகு கார்த்திகா ஆகியோருடன் புகைப்படமெடுத்துக் கொண்டோம்.வெளியே நின்று பலரும் கூட்டம் கூட்டமாக பேசிக் கொண்டிருந்தோம்.பொன் இளவேனில் வந்துவிட்டு அவருக்கு அன்றைக்கும் பணி நாள் என்பதால் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து  கிளம்பி சென்றுவிட்டார். இளவேனிலையும் இளஞ்சேரலையும் முதன்முறையாக தேரி கூட்டத்தில் சந்தித்தது என் நினைவில் ஆடியது. அவை நாயகன் ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் உள்ளிட்ட பலரை முதன்முறையாக சந்தித்தது மனம் மகிழ்ச்சியாக இருந்தது.

ஞானி அய்யா என்னை அழைத்து கொஞ்ச நேரம் பேசினார்.அங்கே வந்த ஒருவரிடம் என்னை பற்றி ஞானி அய்யா அறிமுகப் படுத்த அவர் என்னைப் பார்த்தவாறே "ரொம்பப் பேசுறாரு இவரு"என்று கடந்து சென்றார்.அவர் யார் எனக் கேட்டேன்.பேர் அறிவன்.பெரிய்ய கவிஞர் என்றார்கள்.சரித்தான்....ரொம்ப பேசுவது என்றால் என்ன என அவரிடம் கேட்கலாம் என்று நினைத்தேன்.மனிதர் அதற்குள் காணாமற் போய்விட்டார்.பேசுகிறவனிடம் பேசாமல் செல்வது என்பது என்ன மாதிரியான சித்தாந்தம் என்று தெரிய வில்லை.சரி அவர் அறிவன் என்று பெயர் இருப்பதால் ஒருவேளை அவர் அறிவர் என்று விட்டு விட்டேன்.அருமையான பகலுணவை தோழர் இளஞ்சேரல் தியாகு யாழி தமிழ்மகன் சுப்ரபாரதி மணியன் என்று நாங்கள் ஒரு பத்துப் பேர் ஹோட்டலில் அருந்தினோம்.அங்கே இருந்தே நான் ஆட்டோவில் சிங்காநல்லூர்க்கு கிளம்பினேன் சுரேனுடன்.ஆட்டோ கம்பியைப் பிடித்தவாறே இளஞ்சேரல் என்னிடம் "HAPPY?"என்றார்...நான் அவரிடம் "I AM HONOURED" என்றேன்.சிங்காநல்லூரில் இருந்து சரியாக 3 மணிக்குக் கிளம்பிய அரசுப் பேருந்து என் மனசை கோவையின் ஏதோ ஒரு வீதியில் தொலைத்ததை கொஞ்சமும் அறியாது விரைந்தது மதுரை நோக்கி.


/////சரி இப்போது அந்த பேரரிடம் கேட்ட ஒற்றை கோல்டன் கொஸ்ச்சன் என்ன தெரியுமா.?
"நீங்க சாப்டீங்களா அண்ணே..?"//////
Last Updated (Monday, 26 November 2012 21:53)