புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

கனகதுர்கா:- மெல்லிய நீர்த்திரை

கனகதுர்கா:-
மெல்லிய நீர்த்திரை
ஆத்மார்த்தி

பாஸ்கர் சக்தியின் கனகதுர்கா சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து.

வம்சி வெளியீடு
19,டி.எம்.சாரோன் திருவண்ணாமலை
விலை ரூ 250


புனைவின் சதவீதம் என்பது,யாருக்கும் ஒப்புவிக்கத் தேவையற்ற கணிதம் தான்,என்றபோதும் கதாபாத்திரங்களைக் குழுமச்செய்து கதைக்களனை விவரித்து அதனுள்வெளித்தெரியாமல் தன் கற்பனையைக் கலந்து அவர்களின் வாழ்விலின் ஒரு பகுதியை
காட்சிப்படுத்துகிறவனே ஒரு நல்ல சிறுகதை ஆசிரியனாகிறான்.இழுத்துக்கொண்டிருக்கக் கூடிய உயிரைத் தாங்கி மரணத்தை ஒத்திப்போடும் வல்லமைஎல்லா மனிதர்களுக்குள்ளும் ததும்பும் வாழ்வாசைக்கு உண்டு.அந்த நேரத்தில் மூப்பு வியாதிஎன சில பல நியாயங்களைத் தம் உதடுகளால் உச்சரித்துக் கொண்டு எப்போது நேரும்? எனநெருங்கிய உறவினரின் மரணத்துக்காகக் காத்து நிற்கும் மனிதர்களின் கதை " பழுப்புநிறப் புகைப்படம்".உணர்வுகளின் உள்ளே வெளியே ஆட்டங்களை இந்தக் கதை நெடுகஏற்படுத்துகிறார் கதாசிரியர்.

பூர்வீக நிலத்தை விற்றுவிட முடிவுசெய்கிறவன் கண் முன் அவன்பால்யத்தில் இருந்தே நினைவுகளிலும் நிஜத்திலும் தொடர்ந்து கொண்டே இருக்கிற"வேலப்பர் மலை" நிழலாடுகிறது.மனசைப் பிடுங்குகிறது.எதிர்பார்த்த முடிவை நோக்கித் தான் இட்டுச்சென்றாலும் கதை நெடுக நுண் உணர்வுகளின் பின்னல்கள் தனிக்கச் செய்கிறது"சாதனம்" என்ற கதையில் ஒரு முழு தினத்தை டீவீ பார்க்க செலவழித்து விட்டு வீடு திரும்புகிற கணவனை ஆச்சர்யத்தோடு பார்க்கிற மனைவி என்பதோடு அந்தக்கதை முடிந்தாலும் அதன் வாசக நீட்சி சுவாரஸ்யமான நிகழ்தகவுகளுக்குள் இட்டுச் செல்லத்தவறவில்லை.இக்கதை இந்தியாடுடேஇலக்கியமலரில் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.   

காதல் கடிமணத்துக்கு எது முதற்காரணமாக அமைகிறதோ அதிலிருந்துதான் விரிசலுக்கான முதல் வாக்கியம் உருவப்படுகிறது."காளான்" என்ற கதை விசித்திரமானமன நிலை விளிம்புகளை அழகாகப் பெயர்க்கிறது.தன்னை நம்பி வாழ்க்கையைப் பகிர்ந்துகொண்ட காமுத்தாயை "ஒரு பிடி காளானுக்காக எனக்கு முந்திவிரிச்சவதானேடீ நீ..?"எனகேட்கிற வெள்ளைச்சாமி.இவ்விரு பாத்திரத்தையும் நல்ல அல்லது கெட்ட என்ற வழமைக்குள்அடக்கி விடாமல் கதாசிரியர் மிகக் கவனமாக கதையை முடித்து வைக்கிறார்.

கட்சிக்காரன் என்ற கதை முக்கியமான ஒன்று.கடை நிலைத்தொண்டன் ஒருவன் தன் ஊர்க்கு வருகை தருகிற தலைவரைப் பார்க்கிறதற்காக தொடர்மது உற்சாகத்துடன் காத்திருக்கிறதில் தொடங்குகிற கதை முடியும் இடம் அலாதியானது.ஐம்பது ரூபாய்க்கு அடகு வைத்த ரேஷன் கார்டை மீட்டு வரச்சொல்லும் மனைவி.அந்தக்கார்டை பொதுக்கூட்ட மைதானத்தில் எங்கேயோ தொலைத்து விடுகிற முத்துச்சாமி. வார்த்தைகள் அற்ற தருணம் ஒன்றில் இக்கதை முடிகிறது.

வீராச்சாமி பீகாம் என்ற கதை வேறுவிதமானது.கதை முழுவதும் வீராச்சாமிஎன்கிற முதல் தலைமுறை பட்டதாரி ஒருவனின் சுயதம்பட்டத்தை மையமாய்க் கொண்டது.அதே காரணத்தால் வாழ்வின் மெய்ம்மையை அவதானிக்கத் தவறி வீழ்கிற வீராச்சாமி
அந்த நேரத்தில் தன் சுயபெருமையின் தொனியை மாற்றிக்கொண்டானேயன்றி அதனைக்கைவிடவில்லை.ஒரு நேர்கோட்டில் பயணிக்கிற அனுபவப் பெயர்ச்சி இக்கதை.

தலைப்புக்கதையான "கனகதுர்கா"வில் கதை நெடுக வாசகனுக்குள் கதைசொல்லியின் இயலாமையையும் தவிப்பையும் அப்படியே இடமாற்றுவதில் பாஸ்கர்சக்தி வென்று காட்டுகிறார். மொத்தம் 31 கதைகள்.தன்னனுபவ விவரணையாக பாஸ்கர் சக்தி முயன்றிருக்கிற
எல்லாக் கதைகளுமே யதார்த்தத்தை மீறாமல் வினைபுரிவது இத்தொகுப்பை மிகவும் கவனிக்கத் தக்கதாக்குகின்றது.பாஸ்கர் சக்தி,ஒரு சிறுகதை எழுத்தாளனாக தன்னை நகர்த்துகிற காலத்தை உன்னிப்பாக பதிவு செய்வதில் உறுதியாக இருப்பது இக்கதைகளுக்கான
பெரிய பலம்.அவரது கதைமாந்தர்கள் எளிமையானவர்கள்,நாமெல்லாரும் எளிதில் இனம்கண்டு கொள்ளத்தக்க வகையில் மத்யம மற்றும் விளிம்பு நிலை மனிதர்களின்வாழ்க்கையிலிருந்து பற்றற்ற செய்தியாளன் ஒருவனைப் போல சேகரம் செய்த வாழ்க்கை கணங்களை மாலை கோர்க்கிறாற் போல கதை நேர்த்தியுடன் விரித்து வைக்கிறார்.'சில வசைச்சொல்லாடல்களைத் தவிர்த்திருக்கலாம்' என்று தோன்றுகிற அதே நேரம்வாசகனுக்கும் கதாவுலக மாந்தர்களுக்கும் இடையே மெல்லிய நீர்த்திரை போன்றுதன்னை இருத்திக் கொள்ளுகிற பாஸ்கர் சக்தி இரண்டு தரப்புக்கும் நேர்மையானவராகஎஞ்சி நிற்பது விசித்திரமல்ல,.

Last Updated (Thursday, 06 December 2012 06:33)