புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

வாழ்தல் இனிது 5

வாக்குமூலம்:-

யாரும் யாருடனும் இல்லை.ஒவ்வொருவரும் தனித்தனிப் பிராணிகள்.தன்னை மேட்டில் வைத்து யோசிக்கிற மனிதன் தன்னைக் குழுவென்றும் குடும்பமென்றும் சாதியென்றும் மதமென்றும் சங்கமென்றும் மன்றமென்றும் கட்சியென்றும்நிறுவிக்கொள்கிறான்.ஒருவன் பல வெவ்வேறுகளில் குழுமுகிறான்.வெவ்வேறுகள் எல்லாவற்றிலும் இருக்கிற எல்லாருக்குமே தன்குழுமம் தான் சிறந்ததென்றும் பிறவெலாம் தம் குழுமத்தை விட மலிந்ததென்றும் போலி நம்பகத்தை உருவகித்துக் கொண்டுஅதையே நம்பவும் இயலுகிறது.இவை அனைத்திற்கும் மாற்றாக ஒருவன் எத்தனை குழுமங்களில் பங்கேற்றாலும் அவனது அகம்மிகத் தனியானது.அவன் தனியானவன் அல்ல என்னும் நம்பகத்தை ஏற்படுத்திக் கொடுக்கிற ஒரு குழுமமும் கூட வாய்க்கிறதற்கில்லைஎன்னும் துர் அதிருஷ்டத்தை வெல்லவியலாது அவன் வீழ்கிறான்.சாத்தியமாக உள்ள ஒரே குழுமத்தின் பெயர் ஒழுங்கற்ற கூட்டம் என்பது.MOB அங்கே அவன் தனக்குள் இருக்கிற மிருகத்தனத்தைக் கட்டவிழ்க்கிறான்.ஒவ்வொரு ஒழுங்கற்ற கூட்டத்திலும் உறுப்பினர்களாகத் தம்மைஉணர்கிற ஒவ்வொருவனுமே தம்மை வேறொன்றின் முகமற்ற பிரதியாக அறிவித்து விட எத்தனிக்கிறான்.அது சாத்தியமுமாகிறது.


வாழ்தல் இனிது 5
கடவுளின் காரியத்தனம்

என் அப்பா தினமும் குடிப்பார்.அவர் என்னென்ன சரக்குவகைகளை விரும்பிக் குடித்தார்என்பதை அவர் காலமான பின்னாட்களில் அவரது நண்பர்களிடத்தில் கேட்டு அறிவதில் ரொம்பப் பிரியமெனக்கு.நான் குடித்தவரலாறு மிகக் குறுகிற கால களப்பிரர் இயல் தான் என்பதால் அது இன்னொரு சமயத்தில்.முன்னும் பின்னும் எனக்குமதுவகைகளின் மீது தேட்டம் இருந்ததில்லை என்பதே மெய்.அது ஏனோ எனக்கு அவைகளைப் பிடிக்கிறதுக்கு பதில் வேறுவிஷயங்களில் என் நாட்டம் இருந்தது.என் நண்பர்கள் பலருடமும் பல மதுக்கூடங்களுக்கு நான் சென்றிருக்கிறேன்.அதென்னவோகுடிக்காமல் அந்த சூழலில் அமர்ந்திருப்பது மிகவும் பிடிக்கும் எனக்கு.

ஏற்படுத்தப் பட்ட இருளில் நிறையப் பேர் இருந்தாலும்கூட யாருமே இல்லாத மாதிரி ஒரு உணர்வை ஏற்படுத்தும் குறைந்த ஒளி முதல் சிலாக்கியம்.மதுக்கூடங்களில் வேலை பார்க்கிறவர்கள் பெரும்பாலும் பரமபொறுமையாளர்கள்.அவர்களின் முகத்தில் ஒரு கடவுளின் காரியத்தனம் தெரியும்.வந்து அமர்கிற அனைவரையும் முதலிலேயே புன்னகைத்துவிடுவது அவர்களின் வழக்கப் பழக்கம்.அது ஏன் என யோசித்தால் பின்னால் அதுபோலப் புன்னகைக்கிற வாய்ப்பு வராமற் போகக்கூடும் என்ற எச்சரிக்கையாக இருக்கக் கூடும்.

பெரிய ஹோட்டல்களில் வேலைபார்க்கிற பார் அட்டெண்டர்களின் உலகம் எப்போதும் மதுசூழ்த்தீவில்மிதந்தபடியே வாழும் மனிதமீன்கள் அவர்கள் என்பதைப் புரியவைக்கும்.ஒரு டேபிளில் வந்தமர்கிற இரண்டு அல்லது மூன்று பேர்மிக மென்மையாக ஆரம்பிக்கிற அமர்ந்தாடும் நடனம் மெல்ல அவர்களை வேறு சிலராக்குகிறது.சட்டையில் பட்டன்கள் கழற்றிவிடப் படுகின்றன.சிலர் டைகளைக் கழற்றி விட்டுப் பெருமூச்சு விடுகிறார்கள்.மெதுவாகவும் சப்தமாகவும் பேசிக்கொண்டிருக்கிறவர்கள்மாறுகிறார்கள் மதுவின் பின் குரலுக்கு.இவை எல்லாமும் அவர்களின் திரவவேட்கையின் பாதிப் பொழுதுகளில் நடக்கின்றன.சப்தமாக சிரிக்கிறவர்களும் பெருங்குரலில் விவாதிக்கிறவர்களும் மதுக்கூடத்தின் மீது விஸ்வாசம் அற்றவர்களாகவே கருதப் படுகிறார்கள்.


அங்கே ஒரு மேதமையும் ஒரு மேட்டிமையும் முன்  நோக்கப்படுகிறது.பெரு நகரங்களின் பார்கள் ட்ரெஸ் கோட் எனப்படுகிற ஆடைவரையறை ஏற்படுத்தி வைத்திருக்கிறது.ஒரு மனிதனை அவன் அணிகிற ஆடையினின்றும் எவ்வாறு சலிக்க முடியும் என்பது வியப்பினை வரவழைக்கும் வினா.அதைவிட ஜல்லி விஷயம் எதுவெனில் கைலி பெரும்பாலான இடங்களில் மறுக்கப் படுவது தான்.கோயில்களில் அது முஸ்லிம் ஆடை. நான் பிறந்ததில் இருந்து என சொல்ல முடியாது.நான் ஏழுவயதில் இருந்து மைனர் கைலி பிறகு பெரிய கைலி என இன்றைக்கு வரை கைலி தான் உடுத்துவேன்.ஆனால் அது கோயில்களிலும் பெருநகர முதல்தர பார்களிலும் மறுக்கப் படுவது முரண்சுவை.

பெர்முடா எனப்படுகிற டிராயர் ஒத்துக்கொள்ளப் படுவதும்,வேஷ்டிகள் ஒத்துக்கொள்ளப் படுவதை விடவும் கைலி என்பது உன்னதமான மற்றும் சௌகரியமான ஆடை தான் என்னைப் பொறுத்தவரையில்.சரி..அது அவர்கள் சட்டதிட்டம்.பெரிய ஹோட்டல்காரர்கள் கனவுகளில் நாய்கள் குரைக்கட்டும்.இன்னும் சில ரவுண்டுகள் சென்றதற்குப் பிறகு மது ஒவ்வொருவனின் உள்ளுக்குள் தன் விதைகளை விதைத்து உடனே வளர்த்து சிலுசிலுக்க வைக்கிறது.தன் தாய் உள்ளிட்ட யார் மீதும் பாசம் காட்டாத ஒருவன் கூட பெருங்கருணையாளனாக,இலகுவான மனம் கொண்ட மனிதனாக தன்னை உணர்கிறான்.நண்பர்கள் முத்தமிட்டுக் கொள்வதும்,என் செல்லம் என் வெல்லம் என்றெல்லாம் கொஞ்சிக் கொள்வதும் எல்லாமும் நாடகத்தின் ப்ரவசனங்கள் தானே அன்றி வேறில்லை.

என்னளவில் மதுக்கூடம் காலையில் இருந்து இரவு மூடப்படுகிற வரை உயர் ரக பார்களும் மத்யம பார்களும் கடை நிலை பார்களும்               ஒப்பீட்டளவில் இந்தியனின் வாழ்க்கையை உணர்ந்துகொள்வதற்கான உன்னதமான மன ஆய்வு மையங்கள் என்பேன்.பாரில் வேலை பார்க்கிறவர்களில் பலர் குடிக்கிற பழக்கத்தை வெறுப்பவர்கள் என்பதை முதல்முறை அறிந்த போது வியப்பாக இருந்தது.இடை-கடை
நிலை பார்களிலும் கூட இது பொருந்தும்.அவர்களுக்கு மது ஒரு புழங்கிச் சலித்த பண்டமாக மாறிவிடுவது சின்ன ஆறுதல்.

அடுத்த தலைமுறை மதுவை வீட்டின் வரவேற்பறைக்குக் கொண்டு வந்துவிடும் என்பதை அறிந்தே தான் இதனை எழுதுகிறேன்.மது குடிப்பதென்பது பாவமோ புண்ணியமோ அல்ல.என்னைப் பொறுத்தவரை மதுகுடித்த பின் ஒரு மனிதன் பண்பட்டு நடந்து கொண்டால
அவனை நான் ரசிப்பேன்.என் நட்பு வட்டாரம் மிகமிகப் பெரியது.அதிலொரு நல்லவன் மது உள்ளே சென்ற பிறகு அவனது அட்டகாசங்கள்
எந்த மொழியிலும் எழுதமுடியாதவை.எத்தனையோ துக்க சம்பவங்களையெல்லாமும் தாண்டி வந்த எனக்கு அவன் செய்த அலம்பல்கள்
ஒரு முறை அல்ல இரண்டு முறை என்னைக் கொலைகாரனாகவும் தற்கொலைக்கு முயலுகிறவனாகவும் ஆக்க இருந்தது.நல்ல வேளை
என் இருநூற்றைம்பதாவது காதலி செய்த பூர்வ ஜென்மப் புண்ணியம் அப்படி எல்லாம் நடக்கவில்லை.


மிஸ்டர் எக்ஸ் என்றொருவர் என் அக்காவோடு படித்த மிஸ் ஒய் என்பவளின் தந்தை.அரசு போக்குவரத்துக் கழகத்தில் என் அப்பாவைப்
போலவே வேலைபார்த்தவர்.குடி மற்றும் அதன் தொடர்ச்சியான விடுப்புக்களால் வேலையை இழந்தவர்.அவர் ஒரு மீனைப் போல வாழ்வதை சிலாகித்தவர்.எப்போதும் நீரின்றி அமையாது இவ்வுலகு என்பதைத் தன் வாழ்க்கையாக ஆக்கிக் கொண்டவர்.எங்கே வேலைக்கு சேர்ந்தாலும் குடித்து குடித்து வேலை போனதில் கடைசியாக அவர் வேலைபார்த்தது திருநகர் அருகே இருந்த ஒரு பாரில்.

அவரை சாமி என்று தான் அழைப்பார்கள்.ஏன் எனத் தெரியாது.அவர் வேலைக்குப் போனதுமே தன் அன்றைய சம்பளத்தை ஒரு கட்டிங் வாங்கி
அருந்தி விட்டு மதுபானக் கடவுளை வணங்கி விட்டு பிறகு சுறுசுறுப்பாக வேலை பார்ப்பார்.எப்படி இருந்த மனுஷன் என்றெல்லாம் OVER LAPஇல் கேட்கிற வசனங்களைப் பொருட்படுத்தவே மாட்டார்.மதியம் டு சாயங்காலம் நன்றாகத் தூங்குவார்.மதியம் மட்டும் கொஞ்சம் உணவு. சாயங்காலம் எழுந்ததும் ஒரு கட்டிங்.மீண்டும் தேனீ போலத் திரிவார்.இரவு வேலை முடிந்ததும் பெரும்பாலும் அங்கேயே கவிழ்ந்தடித்து உறங்குவார்.


அவருக்கு கந்தர்வக் குரல்.டி.எம்.எஸ் பாடிய பல பாடல்களை கணீர் என்று தன் குரலில் பாடுவார்.முக்கால்வாசி ஸ்ருதி தப்பாமல் பாடுவார்.
நேயர் விருப்பம் போல இந்தப் பாடல் முடிந்ததும் அடுத்த பாடல் என்று நிறையப் பாடுவார்.பாட்டுப் பிடித்து ரசிகநெஞ்சங்கள் கொடுக்கிற சில்லறைகளை வாங்கிக் கொள்வார்.எத்தனையோ முறை அங்கே பாரில் சந்தித்து இருக்கிறார்.என்றபோதும் அத்தனை போதையிலும்
என்னைத் தெரிந்தாற் போலக் காட்டிக் கொள்ளமாட்டார்.என் நண்பர்கள் உடன் சென்றமரும் சில ஆரம்பத் தருணங்களில் நான் அவரைக் கண்டதும் சங்கடத்தில் நெளிவேன்.என்னிடம் பேச மாட்டார்.நான் குடிக்கவில்லை என்பதை ஓரக்கண்ணால் கண்டு அவர் திருப்தியுறு
வதையும் கண்டிருக்கிறேன்.

என் டேபிளுக்கு வந்தால் என்னை சுத்தமாகத் தெரியாதவர் போல மற்றவர்களிடம் மட்டும் பேசி விட்டு சென்றுவிடுவார்.அவரை என்
நண்பர்களோ அல்லது மற்றவர்கள் யாருமோ கேலி செய்தால் என் மனம் புழுங்கும்.ஒரு நாள் அவரிடம் என் உடனமர்ந்திருந்த பாலா "சாமி...தூங்காத கண்ணென்று ஒன்று"பாடுங்க சாமி என்று சொல்ல அவர் கண்களில் நீர் சுரந்த படியே பாடினார்.அந்தப் பாடலை அவரளவிற்கு அற்புதமாக டி.எம்.எஸ் கூடப் பாடியிருப்பாரா என சொல்லும் அளவிற்கு என் மனதினுள் முன் பின் பிம்பங்களாக அவர் பல சித்திரங்களைப் பெயர்த்தபடி இருந்தார்.எனக்கு அழுகை வந்தது.நாலைந்து டேபிள் தாண்டி அமர்ந்திருந்த ஒருவர் அவரை அழைத்து ஏதோ ஒரு பணத்தைக் கொடுத்தார்.கண்டிப்பாக அது சில நூறுரூபாய்த் தாட்கள்.அதை அவர் வாங்கி அலட்சியமாகத் தன் அண்டிராயரில் திணித்தார்.

பிறகொரு நாள் இறந்தும் போனார்.

நட்சத்திர விடுதிகளில் அரையிருளில் மின்னிமறையும் விளக்குகளையும் அங்கே குடிப்பவர்களையும் பற்றி இதில் என்ன எழுதுவது
என்று தெரியவில்லை.சுஜாதா தன் நிர்வாண நகரம் நாவலில் (1978இல் எழுதப் பட்டது.):-

சிவராஜ் தன் கையிரண்டையும் பிணைத்துத் துப்பாக்கி போலாக்கினான்.முதலில் அந்தப் பெரியவர்.பிறகு எதிர் டேபிளில் இருந்தவன்.ஆடிக்கொண்டிருந்த ரீட்டாவோ என்னவோ என வரிசையாகச் சுட்டான்.ரட்ட்ட்டட்டட்டட்டட்டட்ட்ட்ட்ட்ட்...தொடர்வோம்
அன்போடு
ஆத்மார்த்தி