புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

வெளிச்சத்துக்கு எதிர்த்திசை


கோபிகிருஷ்ணனின் எழுத்துக்கள் முழுத்தொகையாக வருகின்றனவாம்.இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவில்,சம்பத்துக்கு எந்த ஆண்டு மீபிறப்போ  யார் கண்டார்..?ஆத்மாநாம் கொணர்ந்த ழ இதழ் தொகுப்பு யாரிடமேனும் இருந்தால் எனக்குத் தந்தால் என் வலது காதை வெட்டித் தருவேன்.சுந்தரராமசாமி எப்படி இறந்து இத்தனை ஆண்டுகளாகப் புதுபுது புத்தகங்களை எழுதுகிறார் என்பது தெரியவில்லை.
ஒவ்வோராண்டும் எனக்கு மிகவும் உயிர்ப்பான தினங்கள் என்றால் புத்தகக் கண்காட்சி நடைபெறும் சென்னை மற்றும் மதுரை புத்தக தினங்கள் தான்.எண்ணற்ற புத்தகங்கள் எண்ணற்ற மனநிலைகள் சொல்லில் தீர்ந்து விடாத அனுபவக் கணங்கள்.தன் மெலிந்த பர்ஸை எடுத்து இருக்கக் கூடிய சொற்பப் பணத்தினுள் அங்கே இருக்கிற எல்லா புத்தகத்தையும் வாங்கி விட ஆசைகொள்ளும் தனித்த முகங்களை எனக்குத் தெரியும்.புத்தகங்களின் மேல் ஒருவன் வைக்கிற நம்பிக்கை மெல்ல காதலாக உருவெடுக்கிறது.புத்தகங்கள் மீது ஒருவன் கொள்கிற காதல் மெல்ல மெல்ல அவனை வடிவமைக்கிறது.அவன் அதன் பின் வேறொருவனாக வெளிப்படுகிறான்.எல்லாப் புத்தகங்களையும் ஓரிடத்தில் அடுக்கிப் பார்க்கிறதற்கே நமக்கொரு வணிகமுயல்வு தான் சாத்தியமாகிறது.

சரி....இந்த வருடம் எந்தெந்தப் புத்தகங்கள் என்னோடு வரத்தயாராக இருக்கின்றன..?சென்ற ஆண்டு வாங்கிக் குவித்த (புத்தகத் திருவிழாவில்) 190 புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டேனா என்றால் இல்லை.அதிலே இன்னமும் பாக்கி இருக்கிறது.புத்தகங்களை வாங்கிக் கொண்டு திரும்புகிற முகங்கள் நமக்கு உணர்த்தும் பிரத்யேக சங்கதி ஒன்றுண்டு.அது என்னவெனில் "நான் சரியாக திருப்திகரமாக பயணிக்கிறேன்"என்ற உணர்வு தரும் திருப்தி.அது எந்த சதவீதம் நிசம் என்பதை விடவும் அது தரும் மாயை வரவேற்கத்தக்கது.

குழந்தைகளோடு வருகை தரும் பெற்றோர் அவர்கள் கேட்கிற புத்தகங்கள் அனைத்தையும் நிராகரித்துவிட்டு அந்த நிராகரிப்புத் திருவிழாவின் ஆறுதல் பரிசென ஒரே ஒரு கார்ட்டூன் அல்லது வேர்ட் பவர் அல்லது பஸில்ஸ் ஆகியவற்றில் ஏதோ ஒன்றைத் தாமே தீர்மானித்து அதை மட்டும் வழங்கி அதுவரை அந்தப் பிள்ளைகளுக்கு அனுமதித்துக்கொண்டிருந்த புத்தகங்களைப் பார்வையிடுதல் என்ற காட்சி இன்பத்தைக் கூட அவசர பிரேரணை ஒன்றின் மூலமாக ரத்து செய்துவிட்டு அந்தக் குழந்தையை அல்லது குழந்தைகளை வேகவேகமாக புத்தகத்திருவிழா அரங்கின் எதிர்த்திசையில் நடைபோடும் கணங்கள் பரிதாபத்துக்குரியவை.வெளிச்சத்தில் இருந்து பிடிவாதமாக சூன்யத்தை நோக்கி நடைபோடுவதற்கான காரணம் அறியாமை மட்டுமன்று.ஒரு பீசா ஒரு பர்கர் என வாங்கிக் கொடுத்து விட்டு ஆயிரம் ரூபாய்த் தாளை அனாயாசமாக இதே பெற்றவர் தான் இன்னொரு காட்சியில் செலவழித்துக் கொண்டிருப்பார்.என்றபோதும் இங்கே அவரைத் தடுப்பது என்ன..?புத்தகங்களைப் படிக்கக் கொடுத்தால் தன் பிள்ளை சுதந்திரமாக சிந்தித்துவிடும்.அது மற்ற பிள்ளைகளைப் போலல்லாது கெட்டுவிடும் என்ற மத்யம மன நடுக்கம் தான் அது.

புத்தகங்களுக்கு எதிர்த்திசையில் என்ன தான் மிச்சக்கலைகளை எல்லாம் கொட்டியூட்டி வளர்த்தாலும் அந்தப் பிள்ளை வெறும் கட்டமைக்கப்பட்ட ரிமோட் பொம்மையாய்த் தான் வருமே ஒழிய புத்தகங்கள் தருவனவற்றை கண்டிப்பாக இண்டெர்நெட் இலக்கிய அம்மனோ கூகுளாண்டவரோ அல்லாது போனால் வேறெந்த என்சைக்ளோபீடியாத் தனிமையோ தந்துவிடாது.ஒவ்வொரு பூவாய்ப் பூப்பித்துக் கோர்க்க வேண்டிய மாலை தான் புத்தகங்களின் வாயிலாக நாம் பெற்றடைவது.இந்த ஆண்டு நான் 20000 ரூபாய்க்கு புத்தகம் வாங்கப் போகிறேன் என்றோ 2000 ரூபாய்க்கு என்றோ ஒரு அறிவித்தலை செய்யுங்கள்.புத்தகங்களுக்குச் செலவிடப்படும் பணம் பலவகைகளில் பயனாய்த் திரும்பும்.அதை இலக்கங்களாய்க் கணக்கில் கொள்ளாமல் இலக்கியங்களாய்க் கொள்க.சமூகம் உருப்படும்.என்னைப் பொறுத்தளவில் எனக்குப் புத்தகங்களைப் பரிசளிக்கிற யாரையும் எவரையும் என் நண்னண்பராக வரித்துக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.வார இதழ்களை வெட்டி பைண்ட் செய்து வைக்காதீர்கள்.இரண்டாயிரம் ஆவது ஆண்டுக்குப் பிறகு அப்படிச் செய்தவர்களை நரகத்தில் பீம்கபம்கூ செய்கிறார்களாம்.

அன்போடு
ஆத்மார்த்தி