புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

வாழ்தல் இனிது 6

 

 

வாக்குமூலம்:-

ஒரு பெயரில் இருந்து விடுபடுவதென்பது ஆகச்சிரமமான காரியம்.அதிலும் எந்தப் பெயரையாவது  விரும்பித் தொலைத்திருப்போமே
யானால் வேறு வினையே வேண்டாம்.ஒரு பெயர் போதும் ஒரு மனிதனை மெல்ல மெல்லக் கொன்று கொல்ல.மறந்துவிட்டாயிற்றா என்று சோதித்தறியும் ஒவ்வொரு முயல்விலும் மீண்டும் சர்வ அலங்காரமாய் வந்தமர்ந்து கொள்ளும் அந்தப் பெயர்.மொத்தத்தில் மெல்லவும் சொல்லவும் வழி யின்றித் திரியும் திரிசங்கு மனசு.பேருந்தில் தாவியேற முயலுகிறவன் கைவியர்வையில் மெல்ல நழுவுகிற கம்பிப்பிடிமானமாய்க் கெக்கலிக்கிறது வாழ்வு.பெயர் என்பது ஞாபகவிஷம்.


வாழ்தல் இனிது 6 மலையத்திப் பெண்

உலசினிமாக்களை எல்லாம் விரும்பிப் பார்க்கிறவர்கள் யாருக்கெல்லாம் மலையத்திப் பெண் திரைப்படத்தைப் பார்க்கிற வாய்ப்புக் கிடைத்திருக்கும் என்று தெரியவில்லை.என் பால்யமும் வாலிபமும் பிணைத்துக்கொண்ட காலத்தில் நான் பார்த்த உன்னதமான
சினிமாக்களில் ஒன்று மலையத்திப்பெண்.மலைசார்ந்த பெண் எனத் தமிழில் பொருள் கொள்ளலாம்.மலையாள மூலம் நான் பார்த்த
போது எனக்கு வயது பதினான்கு. அதில் லீட் ரோல் எனப்படுகிற முக்கியபாத்திரத்தில் நடித்த நடிகையின் பெயர் சுகந்தி.அவருக்கு அப்போது உண்மையில் முப்பது வயது இருக்கக் கூடும்.இன்றைக்கு தன் ஐம்பத்தி வயதுகளில் இருக்கக் கூடும்.மலையாளத்தில் மம்முட்டியும் மோகன்லாலும் அடூரும் பரதனும் பத்மராஜனும் ஃபாசிலும் சிபிமலயிலும் இன்னபிறரும் கலங்கடித்துக் கோலோச்சிக்கொண்டிருந்த தொண்ணூறுகளின் ஆரம்பம். அதே மலையாள தேசம் இன்னொரு வஸ்துவிற்குப் பெயர்போனதாயிருந்தது.ஒவ்வொரு நகரத்தினுள்ளும் இருளான ஒரு வீதியும் சில விலாசங்களும் இருப்பது போன்றே மலையாளத் திரைப் படங்கள் இரண்டாய்ப் பிளந்திருந்தன.முதல் தர நல்ல படங்கள் தமிழகத்தில் சென்னை தவிர மதுரையில் எப்போதாவது தான் வரும்.ஆனால் இரண்டாவது ரக மூன்றாம் தரப் படங்கள் தொடர்ந்து தமிழகமெங்கும் வெளியாகிக் கொண்டே இருக்கும்.

சீன் படம் அல்லது சாமிபடம் எக்ஸ் என்றெல்லாம் பின்னாளில் அழைக்கப்பட்ட படங்கள்.பாலியல் சார்ந்த கதைகளைத் தன்னகத்தே கொண்டவை.குறைந்த பட்ஜட் ஒளி மற்றும் துணி ஆகியவற்றைக் கொண்டு எடுக்கப் பட்ட படங்கள்.இவற்றில் நடிப்பவர் தொடங்கி எடுப்பவர் தயாரிப்பவர் தொட்டு இவை வெளியாகும் திரை அரங்கங்கள் வரைக்கும் திரையுலகின் இன்னொரு பிரதேசமாகவே இவை இருந்து வந்தது குறிப்பிடத் தக்கது.இவை பெரும்பாலும் இவற்றில் நடிக்கிற நாயகியர்(அப்படியா சொல்வது..?)நடிகைகளை முன்னிறுத்தியே எடுக்கப்
பட்டன.  முதலில் கறுப்பு வெள்ளை காலகட்டத்திலேயே இவற்றுக்கெனத் தனி ஆகமங்கள் வரையறுக்கப் பட்டுவிட்டன என்றாலும் கூட எண்பதுகளின் பின் பகுதியில் தொடங்கி உலகமயமாக்கல் வரைக்கும் தொண்ணூறுகளின் பினபகுதி வரைக்கும் இப்படிப்பட்ட படங்கள் அடுத்தடுத்து வந்தன,இவை பெரும்பாலும் ஊருக்கு வெளியே இருந்த சுமாரான தியேட்டர்களில் வெளியிடப் பட்டன.கதை பெரும்பாலும் பாலியல் கல்வி சொல்லும் பாவனையில் இருக்கும் அல்லது வழக்கப் பழைய சில கதைகள் மட்டுந்தான் மீண்டும் மீண்டும் எடுக்கப் படும்.
ஒரு பெண் கணவனால் புறக்கணிக்கப் படுவாள் அல்லது விதவையாக இருப்பாள் அல்லாது போனால் சிலபலரால் ஏமாற்றப் பட்டு விபச்சாரத் தொழிலுக்குள் தள்ளப்பட்டிருப்பாள்.அனேகமாக இப்படங்களில் நாயகன் பாத்திரம் அவளைக் காதலிக்கும் அல்லது நண்பனாக இருக்கும். மேலோட்டமாக ஒரு அறிவுரை இருக்குமாறு பார்த்துக் கொள்ளப்படும்.கடைசியில் சம்மந்தமே இல்லாது ஒரு புள்ளியில் முடிந்துபோகும். திரும்பத் திரும்ப இதே தான்.சில படங்கள் வனம் சார்ந்து காட்டுவாசிகளைக் கதை மாந்தர்களாகக் கொண்டு எடுக்கப்படும்.அவற்றின்
கதையில் ஒரு அல்லது சிலர் நவ வாழ்வில் இருந்து காட்டிற்கு சுற்றுலா செல்கையில் ஏற்படுகிற சம்பவங்களைக் கொண்ட கதை இருக்கும்.


பாலியல் உந்துதல்களும் அரைகுறை ஆடைகளும் பார்ப்பவர் மனங்களைக் கிளர்த்துகிற காட்சிகளும் இவற்றின் மாறாத சூத்திரங்களாகக் கொண்ட படங்கள் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான படங்கள் தயாரிக்கப்பட்டு வெளிவந்தன.சுகந்தி அது போன்ற நாயகி
களில் ஒருவர்.கார்த்திக் ஜோடியாக இரட்டைக்குழல் துப்பாக்கி படத்தில் அறிமுகமானவர்.மிக நளினமான ஒரு யுவதி.ஆனால் வாய்ப்பிழந்து வேறுகரைக்கு ஒதுங்கியவர் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் இது போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார்.பிறகு காணாமல் போனார்.
இன்னொருவர் அபிலாஷா.இவரும் பெருவணிகப் படங்களில் ஆங்காங்கே தலைகாட்டியவர்.ஐட்டம் சாங் எனப்ப்டுகிற கிளப் டான்ஸ்
அல்லது குத்துப்பாடல்களில் தொடர்ந்து விரும்பப் பட்ட சில்க் சுமிதா,அபிலாஷா,அனுராதா,டிஸ்கோ ஷாந்தி,குயிலி என மொழி பேதமற்று பலரும் பல படங்களில் நாயகிகளாக வலம் வந்தனர்.

ஒரு குளியல் காட்சி,சில படுக்கைக் காட்சிகள் என தொடர்ந்து தமிழக வாலிபர்களின் உளவியலில் தீவிரமாக வெடிப்புக்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நிகழ்த்தியவர்களில் மேற்சொன்ன அனைத்து நங்கைகளுக்கும் தொடர்பங்குண்டு.இன்றைக்கு இணையமும் இன்னபிற வசதி
களும் பாலியல் இச்சைகளைப் பலவாறும் தெரிவெடுக்க வசதியான இன்னொன்றாக மாற்றிவிட்ட நிலையில் காமமும் முழு நீள நீலப் படங்களும் எளிதில் கிட்டுகிற பண்டங்களாக இணையமெங்கிலும் இன்னபிற வட்டுக்களிலும் வழிந்தாலும் கூட அன்றைக்கு இவற்றுக்கென பெரும் மெனக் கெடல் இருந்தது என்பதே உண்மை. இவை வெளியாகும் தியேட்டர்களாக அன்றைய மதுரையில் சிட்டிசினிமா,கோவலன்
நகர் ராஜா பழனிமுருகன்,மது,போன்ற தனித்த அரங்கங்கள் இருந்தன.இவற்றிற்கென தனித்த பார்வையாளர்கள் இருந்தனர்.அவர்களில் மிக
இளம் வயது சிறார்கள் பதின் பருவத்தினர் ஆர்வமிகுதியால் வருகிற குழுமம்.மற்றவர்கள் மிகத் தனித்தவகைமையினர்.திருமண வாழ்வில் நாட்டமில்லாதோர்,பெண்களுடன் உறவுகொள்வதில்ம் ஆர்வமற்றோர்,ஓரினச்சேர்க்கையாளர்கள்,கஞ்சா போன்றவற்றுக்கு அடிமை யானவர்கள்,என பாலியல் இச்சைகளுக்கு எதிர்திசைப் பயணிகள் பெருமளவில் இதுபோன்ற படங்களுக்கான தொடர்பார்வையாளர்களாக இருந்தது சுவைமுரண்.இவை திரையிடப் படுகிற தியேட்டர்கள் பெரும்பாலும் சுத்தம் சுகாதாரம் இவையெல்லாம் இல்லாத பழைய அழுக்கு அரங்கங்கள்,பெரும்பான்மையினரால் கைவிடப் பட்ட குற்றமணமும் இருளும் நிரம்பிய அரங்கங்கள்.புறக்கணிக்கப்பட்டவர்களின் ரகசியக் கூட்டம் போன்றதொரு நிகழ்வாக இப்படங்கள் திரையிடப்படும்.இவைகளைக் காண வருகிறவர்களில் பலரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களாக இருந்தாலும் கூட அரங்கத்தின் உள்ளே கண்டும் காணாமல் சிதைந்து செல்வதை பலமுறை கண்டிருக்கிறேன். இப்படங்களுக்கான வருகை எப்போதுமே  ஒரு பாவத்திற்கான குற்ற உணர்வையும் குறுகுறுப்பையும் தன்னகத்தே கொண்டிருந்தது ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும்.சில சகோதரர்கள் கூட யாரோ போல வருகை தந்து திரும்பச்செல்வதும் உண்டு.நுட்பமாகப் பார்த்தால் இதுபோன்ற படங்கள் தொடர்ந்து ஒரு இச்சையை தவறாக கையாண்டு வந்திருப்பதை உணர முடியும்.இன்றைக்கு லட்சலட்சம் வட்டுக்களில் எண்ணிலடங்காத காமப்படங்கள் சகலநிலங்களிலும் நதிபோலப் பாய்கிறது.இதற்கு முந்தைய காலத்தில் காமம் ஆட்ட நடிகையின் உடலெங்கும் கண்ணுக்குத் தெரியாமல் அணிந்திருந்த உடல்வண்ண ஆடையைக் கண்டறியாத மாயமோகத்தில் திளைத்திருந்தது.


நான் இது போன்ற படங்களுக்கு என் பதின்மூன்றில் இருந்து பதினாறு வயது வரைக்குமான காலகட்டங்களில் மிகத்தீவிரமான
ரசிகனாக இருந்தேன்.அவற்றுள் சுகந்தியை எனக்கு மிகவும் பிடித்தது.நாயகிகளுக்குச் சமதேவதையாகவே அவரையும் சேர்த்து வணங்கி விரும்பியிருக்கிறேன் என்பது சொல்லவேண்டிய ரகசியம்.இன்னொரு நன்னாயகி அபிலாஷா.சூரியன் வெற்றிவிழா போன்ற வெகுஜனப் படங்களில் துண்டுவேஷங்களில் தலைகாட்டிய அபிலாஷா இன்னொரு வகைமைப் படங்களில் நிறைய நடித்த நாயகி.அவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.இவையெல்லாவற்றையும் தாண்டி கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்னும் மலையாள இயக்குநர்.(இதே பெயரில்
தமிழில் நற்படங்களை எடுத்த ஒரு உத்தமோத்தமர் இருக்கிறார்.இவர் வேறு.மலையாள இயக்குநர்.)இது போன்ற படங்களை நூற்றுக்
கணக்கில் இயக்கியவர்.ஒரே ஒருமுறை எதோவொரு பத்திரிக்கையில் மனிதர் சீரியஸ் ஆகப் பேட்டி கொடுத்திருக்கிறார்.அவர் எடுத்த படங்களில் மலையத்திப் பெண் என்னும் படம் மட்டும் நினைவில் ஆணியடித்து நிற்பதற்கு என்ன காரணம் என்று சத்தியமாகப் புரிய
வில்லை.என் பால்யகாலத்தில் என் மனதிலும் உடலிலும் மற்றதெதையும் விட காமத்தை தூண்டிய பெருநதி என்றே இப்படத்தைச்
சொல்வேன்.ஒரு வாய்ப்புக் கிடைத்தால் ஒரு பொது இடத்தில் அந்த நடிகை சுகந்தியுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள இன்றைக்கும் ஆர்வமாக இருக்கிறேன்..வெந்து தணிந்த என் பழையவனத்தின் ஞாபகமாக.

அன்போடு
ஆத்மார்த்தி