புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

சம்பத்து.....

சம்பத்து.....

சிறுகதை  ஆத்மார்த்தி

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.என் அம்மாவுடன் சிறுவயதுகளில்  எப்பொழுதெல்லாம் நன்னிலத்தில் உள்ள என் மாமா வீட்டுக்கு போகிறேனோ அப்பொழுதெல்லாம் அவர்களின் எதிர் வீட்டின் திண்ணையையே பார்த்து கொண்டிருப்பேன்.திடீர் என ஒரு ஓலம் கிளம்பும்.அந்த வீட்டின் கதவு திறக்கப்படும்.அங்கிருந்து ஒரு நாற்பத்ததைந்து வயது மதிக்க தக்க அம்மாளை ஒரு உருவம் தன் ஒற்றை கையினால் அவள் ஓடி விடாமல் அவளது தலைமுடியை கெட்டியாக பிடித்துக்கொண்டு மறு கையில் இருக்கும் மரக்கிளை அல்லது குச்சியால் அவளை அடித்து இழுத்து வாசலில் தள்ளும் காட்சி...அடிப்பது யார் என்றால் சம்பத்து.!!

ஒரு முறை நாலு வீடு தள்ளி இருக்கும் குழந்தசாமி வாத்தியார்,சிறு வயதில் அவனுக்கு பாடம் எடுத்தவர்,மனசு கேட்காமல் அவனருகில் போய் ரெண்டு சாத்து சாத்தி  "அம்மாவை..?பெத்த அம்மாவை..அடிப்பியாடா..?ராஸ்கல்....?அடிச்சே...கொன்னுடுவேன் படவா.."என்று அதட்ட...பயந்து போனவனாய் சம்பத்து.."புத்தி சார் புத்தி....இனி செய்யலை.." என சொல்லி விட்டு எச்சில் ஒழுக கிளம்பி வேகமாய்ஊர் கடை வீதி பக்கம் போய்ப் படுத்து கொண்டானாம்.ரெண்டு நாளாகியும் வரவில்லை என அவன் அம்மா அலமேலு தேடி கொண்டு போய் பார்க்க...அங்கே கலங்கிய விழிகளுடன் படுத்து கிடந்தவனை கிளப்பி கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாள்.அவனும் அதற்கு பிறகு ஒரு வாரம்..இல்லை பத்து நாளைக்கு ரொம்ப சரியாகவேநடந்து இருக்கிறான்.யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை.

"அன்னிக்கு குழந்த சாமி சார் அடிச்சது,என்னமோ..அதுலருந்து ஒழுங்கா தான் இருக்கான்..அம்மா...காமேச்வரி....இவன் இப்படியே ஒரு உருப்படியா இருந்துட்டான்னா....போறும்..நான் ஆயுசை தள்ளிடுவேண்டி அம்மா..."என வேண்டிக்கொள்ளும் அளவுக்கு.அதற்கு மறு நாள் ஆற்றில்
குளித்து கொண்டிருந்த குழந்த சாமி சாரை தன் கையில் உள்ள கொம்பால் அடித்து விளாசியபடியே மூணு தெரு தள்ளி இருக்கும் அவர் வீட்டு வாசல் வரை விரட்டியே வந்து இருக்கிறான்,சம்பத்து.

அதன் பின் அவனை அந்த ஊரில், யாரும் எதிர்த்து கேள்வி கேட்பதில்லை.பாவம் குழந்த சாமி சார் தான்...அவர் அவன் அடித்ததிலிருந்து கூட மீண்டு வந்து விட்டார்.ஆனால் அவரை அவன் 3 தெருக்களுக்கு விரட்டியே வந்தது அவரை மிகவும் பாதித்து...அவர் தூக்கத்திலெல்லாம் உடம்பு தூக்கி வாரி போடுவதாக சொல்லி பயந்து சின்னகுழந்தையாகவே மாறி அழவே அழுதார்,தன்னை சீக்கு விசாரிக்க வந்த தெருக்காரர்களிடம் என்பது வரை..சம்பத்து..என் பால்ய காலத்தில் என்னை பயமுறுத்தி வசீகரித்த ஒரு எதிர்மறை நாயகன்.இப்பொழுது யோசித்தால்,சம்பத்து ஒரு பெயர் தெரியாத மன நோயின் பிடியில் இருந்த ஒரு நோயாளி என்பதும் அவன் செய்கைகள் எல்லாமும் அவனுக்குள் இருக்கும் ப்ரச்சினையான
மன் நிலையின் விளைவுகள் எனபதெல்லாம் எனக்கு சற்றும் புரியாத வயது எனக்கு.

என் அம்மா என்னை எப்பொழுதுமே மாமா வீட்டுக்கு செல்லும் தருணங்களில் எல்லாம் என்னை உள்ளேயே வைத்திருக்க விரும்புவதும்,அதனாலேயே நான் சம்பத்து என்ன செய்கிறான் என பார்க்க விழைவதும்,சம நேர நிகழ்வுகளாயின.ஒரு முறை அம்மாவிடம் கேட்டேன்."ஏம்மா..?இந்த சம்பத்து யாருக்குமே பயப்படமாட்டானா..? அம்மா அங்கலாய்ப்பான குரலில் சொன்னாள் ""எங்க..?பன்னண்டு வயசு வரைக்கும் சாதாரணமா இருந்தவன் அப்புறம் கொஞ்சம்  கொஞ்சமா இப்படி ஆயிட்டான்.அவன் யாருக்கும் பயப்பட  மாட்டான்னாலும் அவனுக்கு அடுத்த தம்பி சுந்தரம்,இப்போ தஞ்சாவூர் ல படிக்கிறான்.அவனுக்கு மட்டும் அடங்குவான்.சுந்தரம் இவனை அடிச்சுறுவான்..அதுமில்லாம சம்பத்தும் அவன் தம்பி இருந்தாலே ரொம்ப சாந்தமா நடந்துப்பான்."

அவனை பற்றிய எதாவது ஒரு வினோத சம்பவம்,அதனால்,அவனால் பாதிக்க பட்டவர் அடைந்த துயர்,செவி வழி செய்தியாக அவ்வப்பொழுது எங்கள் வீடு வரை வராமல் இருப்பதில்லை.எங்கள் வீட்டுக்கு மாமாவோ அல்லது மாமியோ வரும் பொழுதுகளில் சற்று விவரித்த
நிகழ்வுகளும் கிடைக்கும்.என் அப்பாவாவது அல்லது அம்மாவாவது சொந்த விஷயங்களை பேசி,ஒரு சின்ன மௌனம் நீடிக்கும் இடைவேளைகளைக் கையாள சம்பத்து பற்றிய பேச்சை எடுப்பார்கள் மாமாவும் மாமியும் காத்திருந்தாற் போல,சம்பத்தின் சமீபத்திய சாதனைகளை சொல்லி சிரிப்பர்.

சம்பத்து மேலத்தெரு சண்முகம் பிள்ளை வீட்டுக்கு பெண் பார்க்க வந்தவர்களை ஊர் எல்லையில் நிறுத்தி அதில் இருந்த ஒரு ஒல்லி மனிதரின் காதை பிடித்து நாலைந்து முறை திருகிவிட்டான் என ஒரு முறையும்,பள்ளிக்கூடத்துக்கு சென்றுவிட்டு பெண்டுபிள்ளைகள் சாமியப்பன்
தோப்பு வழியாக வரும் போது சம்பத்து புளிய மரத்தின் வாகான கிளையொன்றில் இருந்து 'தொப்' என அவர்களின் முகத்துக்கு முன்பாக தரையில் குதித்ததில் கோடித் தெரு கணேசய்யர் பெண் அகல்யா மயக்கமடைந்ததாகவும்,அதற்கு நியாயம் கேட்க போய் சப்தம் போட்ட கணேசய்யரின் சைக்கிளை தொடர்ந்து பத்து நாளைக்கு காற்றிறக்கம் செய்து பழி தீர்த்தான் எனவும் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே மாமா சொல்லுவார்

"அதற்கப்புறம் இன்னிக்கு வரைக்கும் காத்தடிக்க பம்ப் எடுத்துக்காம அவர் வெளில போறதே இல்லை.":
நான் அப்பாவியாக.."யார் மாமா..?சம்பத்தா..?"
அட்டகாசமாக சிரித்த படி மாமா சொல்வார்"கணேசய்யர் டா..".
ஒரு நாள் நானும் என் அக்கா கோமூ என்ற கோமதியும் என் அப்பா வெளியில் சென்று இருந்த நேரம் வீட்டு காரியங்களை முடித்து விட்டு அம்மா வந்து ரேழியில் சாய்ந்த பொழுது கேட்டோம்."அம்மா,இந்த சம்பத்து ஏம்மா இப்படி ஆனான்..?ஏதோ சாபம்னு அன்னிக்கு மாமி சொன்னாள்ல..?"
அம்மா சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.பிறகு சொன்னாள்.

வைதீக காரியங்களை எடுத்து செய்வதில் பெயர் போனவரும்,வேத வ்யாக்யானங்களில் பெரும் பண்டிதருமான சாம்ப மூர்த்தி அய்யரின் வாரிசுகளில் தங்கிப் பிழைத்த ஒரே மகன் சீனுவாசன்,சுதந்திரத்துக்கு உடனடி பிற்காலத்தில் சிங்கப்பூர் சென்றுவிட்டார் திரவியம் தேட.
அவர் வெளி நாட்டில் தொடர்சியாக தங்கியிருந்த காலத்தில் அவரது மூன்று மகன்களில் மூத்தவரான சிற்சபேசன்,அதாவது சம்பத்து மற்றும் சுந்தரத்தின் பெரியப்பா,அவருக்கு மட்டும் லலிதாவுடன் திருமணம் ஆகியிருந்ததாம்.அந்த லலிதா பார்ப்பதற்க்கு மங்களகரமாக இருந்தாலும்,கொடுசூலியாம்.

அளவுக்கு அதிகமாய் சீனுவாசன் சம்பாதித்து அனுப்ப கால் மீது கால் போட்டு அவரது மகன்கள் சீட்டு கச்சேரி,ட்ராமா,டான்ஸ் என போகத்தில் திளைக்க,அவர்களை கேட்பாரில்லையாம்.தனது மூப்புக்காலத்தில் இருந்த சாம்பமூர்த்தி அய்யரை பலவிதங்களிலும் உதாசீனம் செய்தும்,கவனியாது விட்டும்,கடைசியில் தவித்த வாய்க்கு தண்ணீர் தர கூட செல்லாமல் அவர் உயிர் பிரியும் வரை கொடுமை செய்தாளாம் லலிதா.ஆளுக்கொரு வேலையில் மும்முரமாக இருந்த பேரன்களும் அவரை சென்று பார்க்க கூட இல்லையாம்.

அதில் இருந்து,சீனுவாசன் திரும்பி வந்ததும்,அவர் கண் எதிரேயே பாகப்பிரிவினையில் தொடங்கி,சாம்ப மூர்த்தி அய்யரின் வாரிசுகள் ஒவ்வொருவர் வீட்டிலும் மனநல பாதிப்பு என்பது வழிவழியாக தொடர்கிறதாம்.

அதற்கு பிறகு ரெண்டு வருடம் கழித்து ஒரு முறை வீட்டுக்கு வந்த மாமாவும் மாமியும் பேச்சு  வாக்கில் சொன்னார்கள்.அரசாங்கத்தில் உத்யோகம் கிடைத்த சம்பத்துவின் தம்பி சுந்தரத்துக்கு கல்யாணத்துக்கு பார்க்கிறார்கள் எனவும்,எந்த ஜாதகமும் அமையவில்லை எனவும் சொல்லினர்.அத்துடன் இணைப்பாக,தற்பொழுது சம்பத்து கோவிலுக்கு தவறாமல் சென்று விடுகிறான் எனவும்,அவனால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை எனவும்,சும்மா வே உட்கார்ந்து கொண்டு ப்ரகாரங்களில்  ஸ்லோகங்களை முணுமுணுப்பதோடு சரி எனவும் சொல்லி என் அக்காவை அவனுக்கு பார்க்கலாமா எனக் கேட்டதற்க்கு "அந்த கிறுக்குபய குடும்பத்துக்கா...?"என என் அப்பா மாமாவுடன் சண்டைக்கே போய் விட்டார்.

அதற்கு பிறகு நான் கல்லூரி படிப்புக்காக வெளியேறி,பிறகு அமெரிக்கா சென்று,ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் பத்து நாள் விடுமுறையில் வந்து அவசரமாக மும்பை சென்று பெண்பார்த்து, திருமணம் செய்து,இரண்டு நாள் தேனிலவுக்காக கொடைக்கானல் சென்று வந்து,கிளம்பியும் கிளம்பி ஃபிலடெல்ஃபியாவில் வந்து குதித்து,நல்லது..கல்யாணவாழ்வில் திளைத்து கொண்டிருந்தேன்.

ஒரு அமெரிக்க முன்மாலையில்,அதாவது நம்மூரின் அதிகாலையில்,இண்டெர்னெட் காலில் வெகு  நாளைக்கு அப்புறம் வெகு நேரமாய் என் அம்மாவுடன் பேசிக்கொண்டு இருந்த  பொழுது கேட்டேன்..

"அம்மா...மாமா மாமி யாரும் வந்தாளா..?சம்பத்து எப்ப்டிம்மா இருக்கான்..?கேட்டியா..?
"உனக்கு தெரியாதில்லியா ரகு..?சம்பத்து இப்போ நல்லா ஆயிட்டாண்டா.....அவன் அம்மவோட கும்மோணம் போய்ட்டான்.இப்போ ஒரு ரைஸ் மில்லுல வேலை பாக்கறாண்டா.."

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.மகிழ்ச்சியாகவும்தான்.என் சின்ன வயதிலிருந்து தொடர்ந்து நான் ஏன் கவனித்தேன் என தெரியாமலேயே சம்பத்துவை தொடர்ந்து வந்ததற்கு,இந்த சுபமான க்ளைமாக்ஸ் எனாக்கு திருப்தியே.

"..சரி உனக்கெதுக்கு இதெல்லாம்...காசிக்கு போனாலும் கர்மம் விடாதும்பா..நீ தான் அமெரிக்கா வரைக்கும்
போயிருக்கியே..?"சம்பத்து பத்தியே எப்ப பாத்தாலும் பேசிண்டு.."

அப்பொழுதைக்கு அம்மா சொன்னது எனக்கு சரியாகவே பட்டது....ஆமாம்..எனக்கென்ன..?


ஒரு ஒற்றை மனிதனை..சம்பத்து என்ற பெயர்  அறிமுகமான கணத்திலிருந்து இன்றைக்கு வரை கிட்டத்த்தட்ட பதினைந்து வருடங்கள் தொடர்கதை படிப்பது போல .அவ்வப்பொழுது அவன் தகவல்களை புதுப்பித்து இருக்கிறேன்.இனி சம்பத்து வை பற்றிய அக்கறை எனக்கு குறைந்து போகலாம்.ஆனால்.. இதை சாம்ப மூர்த்தி அய்யரின் சாபம் என சொல்லும் என் அம்மா போன்றவர்களின் பழமைவாத கட்சியையும் நான் ஆதரிக்கவில்லை.பரம்பரை தொடர் வியாதி என சொல்லும் என் மருத்துவ நண்பர்களையும் என் மனம் ஒத்துக் கொள்ள வில்லை.?ஒன்று மட்டும் நிச்சயம்.ஒரு வேளை சம்பத்து இந்த பரச்சினை இல்லாமல் இருந்து இருந்தால்,என் அக்கா கோமு வுக்கு சுந்தரம் கணவனாயிருப்பார்.நல்ல அழகன்.அராசாங்க உத்யோகம்.நல்ல ரசனை.எனக்கு இப்பொழுது வாய்த்திருக்கும் அத்திம்பேர் ஒரு முசுடு.அவருக்கு
பதிலாக சுந்தரம் நல்ல பொருத்தமான தேர்வாகியிருப்பார்.இது தான் கடவுளின் ட்விஸ்ட்.

ஆனால்,இந்த கதையில் யாருக்கும்,என் அம்மா உள்பட யாருக்குமே தெரியாத ஒரு நிஜமான ட்விஸ்ட்..எனக்கு ஃபிலடெல்ஃபியாவில்,நானும் என் மனைவியும் அவரவர் பழைய புகைப்படங்களை எங்கள் லேப் டாப்பில் உள்ளீடு செய்து கொண்டிருந்த பொழுது நடந்தது..


ஜானு,என் ஆசை மனைவி..மும்பையில் பிறந்து வளர்ந்த என் செல்ல மனைவி..வரிசையாக புகைப்படங்களை
உள்ளீடு செய்து கொண்டிருந்ததில் ஒன்றில் என் பார்வை நிலைகுத்தி நின்றது.ஸ்கூல் படிக்கும் பொழுது இருக்கலாம்.யூனிஃபார்மில் அவள் நிற்க அவளது தோளை அணைத்த படி ஒருத்தன்...இவன் யார்..?நான் பார்க்காதவன்..?ஆனால். இவனை எங்கேயோ பார்த்து பழகின ஜாடை.இவன் எதற்கு ?ஜானுவை கட்டிக் கொண்டு...?.
சம்பத்துவின் வேறொரு வெர்ஷன் போல இருந்தான்.ஆடை உள்பட சொற்ப வித்யாசங்களே..எனக்குத் தெரியாதா என் பர்மனண்ட் பூச்சாண்டி நாயகனான சம்பத்தை..?

ஜானு சாக்கலேட் திரவங்களில் ஒன்றை எனக்கு நீட்டினாள். அமைதியாக வாங்கிச் சப்பிய படியே கேட்டேன்."ஜானு...இது யாரு..உன் கூட உன்னை கட்டிண்டு..?"
அவள் நாக்கைக் கடித்துக் கொண்டு எதும் நடக்காத மாதிரி.."பாச்சா.."என்றாள்.
நான் கேட்டேன் "பாச்சான்னா யாரு..? ஏன் நம்ம கல்யாணத்தப்ப நான் பாக்கலை..? பழய லவ்வா..?" என்றேன்
சீரியசான குரலில்.அவள் சிரித்தது செயற்கையாக இருந்தது.
"என்ன நீங்க..?ஹீ இஸ் மை எல்டெர் ப்ரதர்.பார்த்தசாரதி"நான் அமைதியானேன்.அவள் சொன்னாள்
"அவனுக்கு மன நலம் சரியில்லை..நல்லா இருந்தவன்.திடீர்னு இப்படி ஆனதால நவ் ஹீ இஸ் இன் அசைலம்.
உங்க அப்பாவோட சொந்த ஊர் எது..?
"சவுத் சைட் தான்..நன்னிலம்.ஏன் கேட்கறீங்க...?"
நான் எழுந்து மெல்ல நடந்தேன்.மீண்டும் வந்து கேட்டேன்."அங்க யாரும் சொந்த காரா இல்லையா.?""இருக்காளே...எங்க அப்பாவோட பொறந்த சித்தப்பா,அவா அங்க தான் இருக்கா...பட் ரெண்டு ஃபேமிலிக்கும் டச் இல்லை..ரொம்ப நாளைக்கு முன்னாலயே சண்டை.ஏன் கேட்கறேள்..?"
"ஒண்ணும் இல்லை..சுந்தரம்,உன் பெரியப்பா பிள்ளை தானே..?"
"ஆமாம்..உங்களுக்கு தெரியுமா..?நான் பார்த்ததேய்ல்லை..."
நான் அமைதியாக சொன்னேன்."எனக்கு தெரியும்.நான் பார்த்துருக்கேன்".