புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

வாழ்தல் இனிது 7

வாக்குமூலம்:-

வெற்றுத்தாளில் ரகசியமை கொண்டு எழுதப்பட்ட சங்கேதமொழி வாக்கியங்களைப் படித்தபின் நனவிலி நிலைக்குச்சென்றவனின் கனவில் எதிர்ப்பட்டவன் காண்பித்துச் சென்ற சமிஞைகளைக் கேலி செய்கிறாள் கனவில் மெத்தப்படித்த கன்னியாஸ்திரியாகத் தோற்றமளிக்கும் நிஜத்தில் பூங்கொத்துகளை நீட்டி வழிப்போக்கர்களிடம் விற்பனை செய்யும் கடைப்பணிப்பெண் ஒருத்தி.அவளது தலைமுடிச்சுருள்கள் ஒவ்வொன்றுமாக விரிந்தலை கின்றன நோய்மையின் மேகங்கள் இருள்வானெங்கும்.ஒரே இசையை மகுடியில் இசைத்தால் இனித் தம்மால்
பெட்டியிலிருந்து எட்டிப்பார்க்க இயலாதென்று அங்கலாய்த்துக்கொள்கிற சர்ப்பம் போல் நீண்டுகொண்டிருக்கிறது இரவு.

வாழ்தல் இனிது 7.மனசு வாசனை


ஆழ்மனம் என்பதை என்னவென விவரிப்பது..?உள்ளே இருந்து சில குரல்கள் என்னும் நாவல் கோபிகிருஷ்ணன் எழுதியது.அந்த நாவல் ஆடிட்டரி ஹாலூசினேஷன் எனப்படுகிற தனித்த மனப்பிரச்சினை குறித்தது.இதே பிரச்சினையை கருவாய்க்கொண்டு சுஜாதா எழுதிய "ஆ" நாவல் பலரும் படித்திருக்கக் கூடும்.மனித மனம் என்பது எண்ணிலடங்காத ஆச்சரியங்களைத் தன்னகத்தே கொண்டது.மனம் என்பதைப் புரிந்துகொள்வதற்கு ஒரு ஆரம்ப எண்ணம் தேவைப்படுகிறது.குறைந்தபட்ச துவக்கமாகமுன்னர் நிகழ்ந்த எதனோடும் ஒப்பிடமுடியாத ஒரு நிகழ்வு அது சந்தோஷமாகவும் இருக்கக்கூடும்.பெரும்பாலும் அது பெரியதொரு அதிர்வாக முதல் பிளவாக இருந்துவிடுவது வழக்கம்.

மனசு என்பது என்ன மாதிரியான ஒருவஸ்து என்பது பேராச்சரியம்.அவரவர் அகம் என்பது அவரவர் குணநலன்களுக்கு எதிராடல்களை நிகழ்த்திக்கொண்டே இருப்பதாக அமைவது இன்னொரு ரசம்.உள்ளே ஒரு குரல் எனச்சொல்ல இயலாவிட்டாலும் "வேணாம்டா பாண்டி....சுவர் ஏறிக்குதிச்சு ரத்னா வீட்டுக்குள்ளே போகப்போறியா..?மாட்னே...மவனே நீ சட்னிதான்.."என்று அன்பதட்டலுடன் எச்சரிக்கிற குறுஞ்செய்தியை ஒலிக்கச்செய்வது மனசு.ஆனாலும் அது பெரியசைஸ் அடக்கிவைக்கப்பட்ட பழங்கால பார்யாள் போல் அதன் எச்சரிக்கையை மீறி நடக்கையில் புடவைத்தலைப்பை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூண் பின்னே மறைந்து விடுவதும் நிகழ்கிறது.

உனக்கெல்லாம் மனசே இல்லையா..?மனசுல கொஞ்சமாச்சும் ஈரம் இருக்கணும்.மனசாட்சி கோர்டுக்கு வராதுங்குறதைரியம்தான்..இது போலவெல்லாம் சொலவடைகள் காலகாலம் தாண்டி நிற்பவை.மொத்தத்தில் மனசு என்பது தான் நானா அல்லது நான் என்பதன் அடக்கி வைக்கப்பட்ட சித்திரம் தான் மனசா..?இந்தக் கேள்வி பின்னால் வரும்.முன்னால் மனசு என்ற ஒன்று முதல் பிளவில் விழித்துக்கொள்ளும்.அதன் பின் ஒருபோதும் மனசு காலாவதி ஆவதோ காணாமற் போவதோ இல்லை.காட்சியாகக் கடந்து விட வேண்டிய ஆனால் அவ்வாறு கடந்து செல்ல இயலாத பிணைப்புடைய எந்த ஒரு சம்பவமும் மனசில் ஒரு துயரவரைபடமாகத் தங்கிவிடுகின்றது.அதன் பின்புலமும்அதன் கதைச்சுருக்கமும் வசனங்களும் பாத்திரர்களும் என ஒவ்வொன்றாய்க் காலமாற்றத்துக்கேற்பக் கழன்றுகொள்ளக் கடைசிவரை ஒரு கோணல் சித்திரமாக ஒரு மங்கல்ஞாபகமாக ஒரு குறை உயிரியாக அடியாழத்தில் தங்கிக்கொள்கிறது.

அப்படித் தங்குவது சும்மா  இருக்கும் என்றாலும் சும்மாவேவா இருக்கும் எனக் கேட்டால் இல்லை என்ற பதில் மிக ஆச்சரியமானது.தொடர்ச்சியாகச் சிறுவயதில் மீண்டும் மீண்டும் பார்த்த காட்சிகள் உதாரணத்துக்கு சொல்லப் போனால் ஐந்தில் இருந்து பத்து வயது வரை குடியிருந்த பகுதியில் நுழைவாயிலில் ஒரு தேநீர்க்கடை.அது எப்போதும் சிலபலர் குழுமுவதும் விலகுவதுமாகப் பரபர என இருக்கும்.அதன் அருகாமையிலேயே சாக்கடை ஓடும்.நல்ல உயரத்தில் தான் அந்தக் கடை இருக்கும் என்றாலும் அங்கே குறிப்பிட்ட கால இடைவெளியில் தேநீர் அருந்திக்கொண்டிருக்கையில் குப்பென்று கெட்ட நாற்றம் கமழும்.டெல்லியில் ஒருமுறை உத்தம் நகர் பகுதியில் தமிழ்முகத்திற்குச் சற்றும் சம்மந்தமே இல்லாத ஒரு தேநீர்க்கடையில்

தேநீர் அருந்துகையில் அந்தக் கடையை ஒட்டி அதே மதுரை புதூர் பகுதிக் கடையை நினைவுறுத்துகிற சாக்கடை ஒன்று ஓடுவதை எதிர்பார்த்தேன்.அப்படி ஒரு சாக்கடை அங்கே இல்லை.ஆனால் அதே குப்பென்ற நாற்றம் எழுந்தது.அந்த நாற்றம் நிஜமா அல்லது என் கற்பனையா..?கற்பனைக்குள்இருக்கிற நிஜம் எப்படி அதனை முழுக்கற்பனை என்று ஒதுக்க முடியும்..?இதென்ன சாக்கடை ஆராய்ச்சி என்று கேட்கலாம்.மரியாதையாக அங்கே இருந்து கப்பலூர் பக்கம் நகர்ந்தால் பிரித்தானியா பிஸ்கட்டின் தயாரிப்பு நிறுவனம் இருக்கும்.நெடுஞ்சாலையில்(முன் சமீப காலத்தின் சாலை.இப்போது இருப்பது ஆறுவழி அரக்கன்)பயணிக்கையில் எல்லாமும் அடிவயிறுவரை பிஸ்கட்டின் கலந்துகட்டி வாசனை தாக்கும்.எத்தனையோ முறை கண்மூடி பேருந்தின் இருக்கையில் அமர்ந்து திருமங்கலம் சென்றிருக்கிறேன்.சரியாகக் கப்பலூர் தாண்டுகையில் பிரித்தானியா மணம் என்னை எழுப்பி விடும்.

என்ன பேசிக்கொண்டிருந்தோம்..?ஆம்...மனசு....அது இருக்கட்டும் ஒருபக்கம்...முதலில் வாசனை...அப்புறம் மனசு.நாமெல்லாரையும் மற்ற காரணிகளைப் போலவே வாசனையும் பிரித்துப்போடுகிறது என்பது சுவை.ஒவ்வொருவருக்கு ஒரு வாசனை பிடிக்கத் தான் செய்கிறது.பலசமயங்களில் மிகவும் பிடித்த வாசனை நறுமணமாக இருக்க வேண்டிய நிர்பந்தம் கூட இல்லை.என்னவென்றே அறியாது நறுமணமா துர்மணமா என்பதைக் கூடக் கவனியாது தனித்த ஒரு வாசனைக்கு நாமெல்லாம் அடிமைகள் தான் என்பதை நம்மில் பலரும் உணர்ந்திருக்கக் கூட மாட்டோம்.என்ன வேலையாகச் சென்றாலும் கூட நடுவே ஒரு கணம் நம்மை திசைமாற்றி உலுக்கிவிட பழகிய வாசனைக்குத் திறன் உண்டு.


பெட்ரோல் பங்க் களில் வேலைபார்க்கிற சிலபலர் மெல்ல மெல்ல அந்த பெட்ரோல் மணத்துக்கு அடிமையாகிவிடுவது தாராளமாக நடக்கிறது.எந்த வாசத்தில் இருந்து நியாயமாக விலகி ஓடவேண்டுமோ அதை விடுத்து அதையே ஒரு போதையாக மனதிற்குள் அமைத்துக்கொண்டு அங்கேயே புழங்குவதும் அது இல்லாமல் இருக்கமுடியாத நிலைக்கு வருவதும் ஸ்வாசக் கோளாறுகள் நரம்பு மண்டல பாதிப்பு எனப் பல சாத்தான்கள் சுற்றித் திரியும் இடம் தான் பெட்ரோல் பங்க்குகள்.நாமெல்லாரும் அவர்களைப் புன்னகையுடன் அல்லது உம்மணாமூஞ்சிகளுடன்  பெட்ரோல் விலை எப்போது முழுசாக 100 ரூபாய்க்கு வரும் என்று மனமோகனம் செய்துகொண்டு கடந்துவிடுகிறோம்.

தின்னர் எனப்படுகிற மட்டித்திரவம் இன்னொரு சாத்தான்.சின்னஞ்சிறுவர்கள் தின்னரை ஒரு போதைவஸ்துவாக பயன் படுத்துவதை அறிந்தபோது கவலைப்படுவதைத் தவிர வேறென்ன செய்வதென்று தெரியவில்லை.சிந்தித்தால் மதுவை உடல் நலத்துக்குக் கேடு என்றும் சிகரட்டை உயிர்கொல்லும் என்றும் இப்போது தான் விளம்பரப்படுத்துவதில் மும்முரமாய்த் திரியும் ராம அன்பு தாச மணிகள் மற்றும் அரசாங்கத்தார் யாரும் குழந்தைத் தொழிலாளிகள் எனப்படும் தடுக்கப் பட வேண்டிய வகைமைக்குள் இருக்கிற கண்ணுக்குத் தெரியாத குழந்தை நோயாளிகள் குழந்தை போதை அடிமைகள் என்பவர்களைப் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் படுவதாகத் தெரியவில்லை.

பெட்ரோல் தின்னர் என்பன தவிரவும் ஆயிரம் வஸ்துக்கள் ஆயிரக் கணக்கான குழந்தைகளின் எதிர்காலத்தை மிகமிக சின்னதாகச் சுருக்கிக் கொண்டிருக்கின்றன.இவற்றில் பல பொருட்கள் சாதாரண மற்றும் அத்தியாவசியப் பயன்பாடுகளுக்குச் சொந்தமானவை.வெளியே பார்த்தால் அவற்றிற்குள் அவ்வளவு உயிர் குடிக்கும் எமன்கள் இருப்பது யாரையும் பெரிதாக உறுத்தாது.ஆக அந்தப் பொருட்களைப் பயன் நிமித்தம் நாம் அனுமதித்தே ஆகவேண்டியிருக்கிறது,செய்ய வேண்டியது என்னவெனில் பதின்பருவத்தினர்களைக் கவனித்து கவனம் ஈர்த்து கவனம் காத்து அவர்களுக்கு உளவியல் அத்யந்தத்தை ஏற்படுத்துவதும் இது போன்ற வெளித்தெரியாத துன்பத்தொழிற்சாலைகளில் இருந்து தொழில்சுழற்சி
முறை அல்லது படிநிலை உயர்வு என இயன்ற அளவு அவர்களைத் தப்புவிப்பதும் தான்.

வாசனை உயிரைக்கொல்லும் என்பது சத்தியமாக எனக்கும் தெரியாது.,பரிச்சயமான ஒரு மனிதனின் இளவயது மரணத்தின் மூலமாக எனக்கது தெரிவிக்கப்பட்டது.மனசு இருந்தால் மார்க்கம் உண்டோ இல்லையோ,மனசு இருக்க வேண்டும்.மார்க்கங்களைத் தாண்ட மனிதன் நிலைக்க வேண்டும்.சாக்கடை,பிரித்தானியா பிஸ்கட் பெட்ரோல் தின்னர் ஆகியன வார்த்தைகள்.வெறும் வாசனைகள் அல்ல.


தொடர்வோம்
அன்போடு
ஆத்மார்த்தி

Last Updated (Thursday, 07 February 2013 13:54)