புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

ஒரு மர்ம நாவலின் முடிச்சவிழும் இடம்


ஒரு மர்ம நாவலின்
முடிச்சவிழும் இடம் மிக உன்னதமானது.
ஒரு உண்மையான உண்மை
தோன்றுவது மட்டுமல்லாமல்
சந்தேகத்தின் கருமை படர்ந்த
ஒரு முகத்தின் மீது
அவசரமழை பொழிகிறது.
பலபக்கங்களுக்கு முன் இறந்துகிடந்தவனின்
உறைந்த குருதியை முகர்ந்த
மோப்பநாய் அங்கே மண்டியிட்டு
நகரமறுத்துவிடுகிறது.
நிகழ்ந்துவிட்ட கொலை
ஒரு சிலந்தியென்று படர்ந்திருந்த
அத்தனை பாத்திரங்களும்
தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஏலுகிறது.
கைதுசெய்து அழைத்துச் செல்லப்படுபவனை
அதுகாறும் ஊகிக்க முடியாத
அவனது
முகபாவங்களும் சத்தியவாசகங்களும்
வந்துவந்து செல்கின்றன
'தன்னை எழுதியவன் தான் முதல்குற்றவாளி' என
ஒருவரும் நம்பப்போவதில்லை என்னும்
பேரதிர்ச்சியை
தன் முகத்தில் தாங்கியபடி
சிறை சென்றுகொண்டிருக்கிறான்
ஒரு வவ்வாலைப் போல
"முற்றும்" என்ற ஒரு வார்த்தைக்குள்
தானினித் தொங்கிக் கொண்டேயிருக்கப் போவதை
எண்ணி விசும்பி அழுகிறான்.
எதாவதொரு நாவலின்
ஏதோவொரு பாத்திரம்
"அந்த எழுத்தாளனைக் கொன்றுபோடட்டும்!"
எனச் சபிக்கவும் செய்கிறான்.