புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

வாழ்தல் இனிது 8

வாழ்தல் இனிது  8
மௌனத்தின் செல்லமொழி


மௌனம் பேசுமா..?பேசினால் அது மௌனமா..?மௌனம் என்பது எத்துணை அழகானது.?பிறக்கையில் எந்த மொழியின் பிடிமானத்திலும் இல்லாமல் எக்கச்சக்கமான மௌனத்தை ஆசீர்வதிக்கப் பட்டுப் பிறக்கிறோம்.?மௌனம் என்ற சொல்லாடல் எழுகையிலேயே மொழி என்ற ஒன்றும் உடன் வந்து விடுகிறது.ஒரு குழந்தையின் பிறப்புசமயம் அதற்கும் மொழிக்கும் இடையில் இருக்கிற உன்னதமான வெற்றிடம்.இந்த உலகின் ஆரம்பகணங்களை அப்படியே தக்கவைத்துக்கொண்டிருப்பதை உணர்த்தவல்லது.தாய் தன் குழந்தைக்கு மொழியைத் தன் முலைப்பாலோடு சேர்த்து ஊட்டுகிறாள்.கர்ப்பகாலத்துக் காத்திருத்தலில் துவங்கி பிறந்து இரண்டு இரண்டரை வயது வரை மகா நேர்த்தியாக ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் முதன் மொழி தாய்மொழியாக உட்புகுத்தப்படுகிறது.அந்தக் குழந்தை உள்ளும் புறமுமாக கற்றுக்கொண்டு
எழுந்து நடக்கிறது.மொழிக்கு முந்தைய மௌனம் குழந்தமையில் கிட்டிய வரம்.


ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் பேசாதிரு என்னும் மந்திரத்தைக் குழந்தைகளின் மீது திணித்துக் கொண்டே இருக்கிறது இவ்வுலகம். உண்மையில் குழந்தைகளிடம் உரையாடுவது என்பது மாபெரிய வித்தை அல்ல.அதற்குத் தேவை சின்னதாய் ஒரு கவனம்.ஒரு குழந்தையின் உடை மற்றும் உணவு மேலும் அதன் உறைதல் ஆகியனவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்துப் பண்ணிவைக்கிற பெற்றோர் கூட \அவர்களோடு
ஒழுங்காக உரையாடுகிறார்களா எனக் கேட்டால் இல்லை என்பதே வருத்தபதில்.குழந்தைகளைப் பேசவிடுவதும் குழந்தைகளிடம் பேசுவதும் சரியாகச் செய்தாலே போதும்.பின் நாட்களின் பல பிரச்சினைக்கவலைகள் தவிடுபொடியாகும்.மௌனம் என்பது குழந்தைப் பருவம் தாண்டிய பதின்பருவத்தில் வருத்தத்தின்குறியீடாகிறது.நண்பர்களுடன் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் உடன்பிறந்தவர்களுடன் ஏன் பெற்றோருடன் ஆசிரியருடன் என கோபத்தின் வருத்தத்தின் ஒரே மாற்றாக ஒரே பதிலியாக நேர்கிறது மௌனம் மட்டுந்தான்.மௌனம் கோபித்தலின் அடையாளம்.சமாதானத்திற்கான எச்சரிக்கை.உன்னோடு பேசமாட்டேன் என்று சொல்லியும் சொல்லாமலும் சற்று அமைதியான ஆரம்ப
கணங்கள் வெகு அழகானவை.பழைய பழகிய மழை மாதிரி ஞாபகநாடெங்கும் மறு பொழிவுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.
மனசு ஒரு சிரபுஞ்சி.


மௌனம் என்பது வார்த்தைகளுக்கான வாக்கியங்களுக்கு இடையிலான இடைவேளை அல்ல.உறங்கும் போது கூட உளறல் நேர்த்துகிறான் மானுடன்.மௌனத்தை ஒரு விரதாகமமாக அவன் கைக்கொள்கிறது ஏன் என்றால் நவ வாழ்க்கை அவனை துரத்துகையில் சட்டென்று ஒரு இடத்தில் குனிந்து குத்திட்டமர்ந்து தன் தலைக்குமேல் இரு கைகளையும் உயர்த்திச் சரணடைகிற கோபாவேசத்தின் இயலாமை மௌனம் தான்.யோகாசனம் ஜாகிங் நடைப்பயிற்சி நீச்சல் கார் ஓட்டுவது என அவ்வப்பொழுது மௌன தேவதைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துக் கொண்டே தாற்காலிக விடுபடுதல்களை முயலுகிறான்.இக்கரைக்குப் பச்சையாகவே தென்படுகிற அக்கரை வார்த்தைகளின் மகா யாகமாக அவனை மீண்டும் மீண்டும் நிர்பந்திக்கிறது.மௌனத்திற்கும் சொற்களுக்குமான ஊடுநூலாகிறது வாழ்க்கை.மௌனவிரதங்கள் அமைதியான அதே நேரத்தில் உன்னதமான வாழ்கணங்கள்.எத்தனை பேர் அனுபவித்திருப்பார்கள் என்பது தெரியாது.எனக்கு மௌனம் விரதம் அல்ல.அது தவம்.மௌனித்தல் என்பதைத் தவறாகக் கைக்கொள்கிறவர்கள் அனேகர்.காலை ஆறு மணியில் இருந்து மாலை ஆறு வரைக்கும் எதுவும் பேசாதிருத்தல் அல்ல மௌனவிரதம்.அந்தப் பெயரில் சதா சர்வகாலம் டீவீ பார்ப்பதும் ரேடியோவில் கமெண்ட் கேட்பதும் இரண்டு சினிமாக் களுக்குச் சென்றுவருவதும் புத்தகம் படிப்பதும் இசை கேட்பதும் இவை எதுவும் மௌனித்தல் அல்ல.பேசாதிருத்தல் வேறு,மௌனம்  வேறு.இதெதையும் செய்யாவிட்டால்..?கண்மூடிப் படுத்திருப்பதற்கும் உறங்குவதற்குமான வித்யாசம் உண்டல்லவா..?மௌனம் என்பது
மாபெரிய அவஸ்தை.அணுகும் வரை.பழகும் வரை அது பல்வெறி மிருகம்.அதன் மீது அசூயை கொள்ளாது பக்கம் சென்று கிட்டப் பழகினால் மௌனம் மிகச்சிறந்த நண்பன்.நல்லாசிரியன்.


இன்றைக்கு இன்னொரு கெட்ட வஸ்து என்னவெனில் வாழ்வை மெல்ல உறிஞ்சும் முகப்புத்தகம் மற்றும் செல்பேசி இரண்டையும் சொல்லலாம்.மௌனவிரதர்களுக்கு இவ்விரண்டிலும் வேலையில்லை.வீடியோ கேம் விளையாடுவது போங்காட்டம்.எதுவும் செய்யாமல் இருப்பது முதல் கட்டளை.அதன் பின் மௌனம் ஒரு ஏற்பாடு.அது ஓடிச்சென்று அடையும் மைல்கல்லே அன்றி எல்லோர்க்கும் இல்லை அது.முதலில் ஒரு மணி நேரம் பெரிய்ய கொடுமையாய்த் துவங்கும்.பிறகு அந்த நேரத்தை நீட்டிக்க முடியும்.என்னைப் பொறுத்தவரை மாதத்திற்கு ஒரு முழு நாள் நான் மௌனத்திற்கு என்னை ஒப்புக்கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.மழை நேரத்து ஐஸ்கிரீம் மாதிரி சொல்லால் புரிவிக்க முடியாத பேருவகையைச் சொல்ல விழைகிறேன்.மனசைச் சுத்திகரிக்கும் இயந்திரம் மௌனம் என்பேன்.

செல்பேசியில் குறுஞ்செய்திகளிலும் முகப்புத்தகம் உள்ளிட்ட சமூகத் தளங்களில் ச்சேட்டிங் எனப்படுகிற தனி உரையாடல் பெட்டிகளில்
SMILEY  எனப்படுகிற படக்குறிகள் என்னை மிகவும் ஈர்க்கின்றன.எல்லா மொழிகளுக்கும் இடைமேடையாக ஒரு இணைப்புப் பாலமாக
அவற்றை வளர்த்தெடுக்க முடியும்.சிரிப்புக்கு ஒன்று அழுகைக்கு இன்னொன்று முத்தமிடுதலுக்கு ஒன்று.வெற்றிகரம் என்பதற்கு ஒன்று கண்ணாடி அணிந்த மூஞ்சி தலைசுற்றுகிற முகம் ஒன்று என யார் அவற்றை வரைந்து உருவாக்கிய உதவிக்கடவுள் என்றெனக்குத் தெரியாது.என்றபோதும் அவன் போற்றுதலுக்குரியவனே
.

கலை நயமும் குறும்பும் செல்லமும் ஸ்மைலிக்களில் ததும்புகின்றன.காதலை அன்பை நட்பை வேதனையை இன்னபிறவற்றை ஒரு திரையிலிருந்து இன்னொன்றுக்கு நொடிப்பொழுதில் இடம்மாற்றி விடுகின்றன.பாதியில் தொடர்பறுந்த சம்பாஷணை களை மறுதினம் தொடரசொல்லி இரவெல்லாம் பகலெல்லாம் ஒரு ஸ்மைலி காத்துக்கொண்டிருக்கிறது எத்துணை கவித்துவமான நிகழ்வு.?ஸ்மைலிகள் காதலின் இறுக்கத்தை நட்பின் பெருக்கத்தை கண்ணீரின் வரத்தை காத்திருத்தலின் கனத்தை என பலப்பல சங்கதிகளை மௌனத்தின் செல்லமொழியென நேர்த்திக் கொண்டிருக்கின்றன.வெற்று பொம்மைகளல்ல.அவற்றினுள் பேசவியலாப் பெருமௌனங்களும் அதன் பின்னதான சொல்லவியலாத ஏக்கங்களும் நிராசைகளும் வழிந்து நதியாகின்றன.இந்த நிலையில் மௌனத்திற்கும் வார்த்தைகளுக்குமான காலகாலப் பெருவெளியில் சின்னதாய் உதயமாகி இருக்கிற ஸ்மைலிக்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள இயலாது. மொழி என்பது எழுத்துக்களாலானது.எந்தவொரு மொழியும் சித்திரமாய் உள்நுழைந்து எழுத்தாக மனனமும் பழக்கமும் ஆவது நிஜம்.

சீன மொழி வெளிப்படையான சித்திர மொழி எனில் எல்லா மொழியின் எல்லா எழுத்துக்களும் அடிப்படையில் சித்திரங்களே.ஆக ஸ்மைலி எனப்படுகிற நகைசித்திரங்கள் ஒரு தனித்த அதே நேரத்தில் ஒரு பொதுவான மொழியே.வருங்காலத்தில் உலகின் ஒரே மொழியாக அல்லது பொது ஊடக மொழியாக இந்த ஸ்மைலி மொழி உருவாகும் சாத்தியமிருக்கிறது.நிலத்தால் மொழியால் வேறுபட்டுக்கிடக்கிற அத்துணை மாந்தருக்கும் பொதுவான குழந்தைக்கடவுளர்களாக இன்றைக்கு 30 ஸ்மைலிக்களாக எண்ணிக்கையில் குறைந்து காணப்பட்டாலும் கூட
இந்தப் புள்ளி மிக முக்கியமானது.ஸ்மைலிக்கள் ஒரு நாள் மொழிகளின் தலைமேல் ஏறி அமரும்.உலகத்தை அன்றைய தினம் புன்னகை
ஒரு வலையால் கட்டி ஆளத்துவங்கும்.


தொடர்வேன்
அன்போடு
ஆத்மார்த்தி