புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

சுஜாதா


சுஜாதாவோடு நேரில் பழகியதில்லை நான்.இருமுறை சற்றுத் தள்ளி வைத்துப் பார்த்திருக்கிறேன்.அவ்வளவு தான்.எனக்கு அவரை நெருங்கிப் பேசவேண்டும் என்ற ஆவல் கூட எழுந்ததில்லை.என் குடும்பத்தில் ஒருவராக  ஞானம் புகட்டிய நல்லாசானாக ஒரு குருநாதருக்குண்டான இடைவெளியில் அவரை தள்ளி தரிசித்ததே போதுமாயிருந்தது எனக்கு.சுஜாதாவை எப்போது ஆரம்பித்தேன் என்பது சுவையான சங்கதி. வழக்கமாக நான் திரியும் மதுரை ந்யூ சினிமா பகுதி பழைய புத்தகக் கடைகளில் அதற்கு முன்னால் என் ஆதர்ச எழுத்தாளர் என்றால் பைண்டு புத்தகங்களில் கலந்துகட்டியாக நிறைய்ய பேரை வாசித்திருந்தாலும் கூட பட்டுக்கோட்டை பிரபாகரின் ஆரம்ப கால எழுத்துக்கள் தான் என்னை ஈர்த்திருந்தன.நான் பிறந்தது 1977.சரியாக 1989ஆமாண்டு.மேமாத அலசலில் முதல் புத்தகமாக மேகத்தைத் துரத்தினவன் சாவி நடத்திய மோனா மாத இதழில் வெளியாகி இருந்தது.அந்த நாவல் என்னை முன்னும் பின்னுமாக ரெண்டாய் வகுத்தது என்றே சொல்லலாம்.அதில் வரக்கூடிய அன்பழகன் என்னும் கன்னு மாணிக்கம் தியாகராஜன் என ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கேரக்டரின் அலைதலாக இருக்கும்.பின்னாளில் என் பல இரவுத் தூக்கங்களை தீர்மானித்த நாவல் அது.பலகீனமான சின்னூண்டு நாவல் தான் என்றாலும் மதம் மாறியவனைப் போல சுஜாதா என்னும் ஒரு எழுத்தாளர் என்னுள் புகுந்து கொண்டார் என்றே சொல்லவேண்டும்.

பிறகு வைரம் பிறகு நில்லுங்கள் ராஜாவே.பிறகு சிவந்தகைகள் அதன் அடுத்த பாகமான கலைந்த பொய்கள்.இப்படி 1989 முடிவதற்குள் அவரது பிசினஸ் ரைட்-அப்ஸ் நிறைய்ய கடந்தேன்.கணேஷ் வசந்த் இணை எனக்குள் இன்னொரு உலகத்தை செலுத்தியது இன்னொரு கதை.இன்றைக்கு என்னால் திமிர்கலந்த தீர்மானமாக சொல்லிக்கொள்ள முடியும்.நான் சுஜாதாவின் மாணவன்.அவர் என்ன எழுதினாரோ என்னென்ன எழுதினாரோ எதிலெல்லாம் எழுதினாரோ எல்லாவற்றையும் ஒரு முறை அல்ல பலமுறை வாசித்த கர்வமே என்னளவில் கிரீடமாய்க் கருதுகிறேன்.

சுஜாதாவின் மன உலகம் விசித்திரமானது.அவர் யாராக இருந்தாரோ அல்லது என்னென்ன குணங்களை எல்லாம் கொண்டிருந்தாரோ அவற்றின் கலவையாக அவர் படைத்த பாத்திரம் தான் கணேஷ்.தமிழில் என்றில்லை எந்த மொழியிலும் ஒரு துப்பறியும் கதாபாத்திரம் இந்த அளவு விரும்பப் பட்டு கொண்டாடப் பட்டிருக்குமா என்பது சந்தேகமே..அந்த அளவுக்கு சுஜாதாவுக்கு நிகராக கணேஷையும் வசந்தையும் கொண்டா டினார்கள்.கல்யாண வீடுகளில் பொது இடங்களில் அவரிடம் கணேஷ் வசந்த் குறித்தெல்லாம் விசாரிக்கிற அளவுக்கு அதன் கற்பனைத் தன்மையை உதறத் தயாராக இருந்தது ஒரு அ-உண்மைக்கு கிடைத்த மகாவரம்.

சுஜாதா யாராக எல்லாம் இல்லையோ அதாவது என்னென்ன குணாம்சங்களை எல்லாம் மற்றவர்களிடம் ரசித்து அவை தன்னிடம் இல்லாத போதும் அவற்றை விரும்பினாரோ அவற்றின் ஒரு கலவைச்சித்திரமாக அவர் படைத்த பாத்திரம் தான் வஸந்த்.அவனுக்கு வானமே எல்லை.அவர்கள் இருவரையும் பற்றிக்கொண்டு சுஜாதா பலமுறை சந்தர்ப்ப நாகங்களைத் தீண்டியிருக்கிறார்.பல நாகங்கள் அவர்க ளிருவரையும் மரணவிளிம்புவரை துரத்தியிருக்கின்றன.என்றபோதும் அவர் அவர்களைக் கடைசிவரை உற்சாகமாகவும் இளமையாகவும் வைத்திருந்ததில் வெற்றி கண்டவர்.சிறுகதைகளைப் பொறுத்தவரை சுஜாதாவின் பல சிறுகதைகள் துவக்கமும் முடிவும் எதிர்பாராத் தன்மை ஒன்றை ஒரு அதிர்ச்சியை ஒரு மேதமையை வெளிப்படுத்துகிற அவஸ்தையில் வெற்றிகண்டவை.நூற்றுக்கணக்கான சிறுகதைகள் எழுதி இருந்தாலும் பல விதக் கதைகளை எழுதி இருந்தாலும் கூட அவரது சிறந்த கதைகள் எனப் பட்டியலிட்டால் அவர் இந்த முகாந்திரத்திற்கு எதிராக எழுதிய கதைகளையே சொல்ல முடிகிறது.இது இன்னும் விசித்திரம்.ஏன் எனில் பெருமளவு விரும்பப் பட்ட கொண்டாடப் பட்ட சுஜாதா பாணிக்கதைகளை விடவும் அவரது மாற்றுப்பாணிக் கதைகள் எண்ணிக்கையில் பார்த்தால் சொற்பமே.ஆனாலும் அவை இன்னும் விரும்பப் பட்டன.அது வேறுவகை விருப்பம்.

பாலம் சசி காத்திருக்கிறாள் வந்தவன் நகரம் லூயிஸ் குப்பத்தில் ஒரு புரட்சி எய்தவன் திமிலா எல்டொராடோ என பல கதைகள் விறுவிறு தன்மை கொண்டவை.யாகம் என்ற கதை எத்தனை பேருக்கு நினைவில் இருக்கும் எனத் தெரியவில்லை.என் அல்டிமேட் சாய்ஸ் அவர் எழுதிய மகாபலி.சுஜாதாவின் வணிக எழுத்துக்கள் தவிர அவர் சீரிய இலக்கியத்தின் மேல் பெருங்காதல் கொண்ட தன்னைத் தானே நியமித்துக் கொண்ட அல்லது வரவழைத்துக் கொண்ட ஒரு துறைத்தலைவர் போலத் திகழ்ந்தார்.அவ்விதத்தில் அவர் தன்னை ஒரு பெரும்வாசகராகவே தக்க வைத்துக் கொண்டதில் வெற்றியும் கண்டார்.அவருக்கு வாயிலில் நின்றபடியும் உள்ளே சுழன்றபடியும் ஒரு பெருங்கூட்டத்தை அமைதியாய் நேர்மையாய் நெறிப்படுத்துவதில் இருந்த ஆர்வம் கடைசிவரை அந்த மேடையில் தனக்கென்ன இடம் என்று அவர் யோசிக்கவே இல்லை.அதில் முரண்பட்ட பலருக்கும் அவர் பலமூஞ்சி மிருகமாகத் தெரிந்ததும் அவர்கள் யாராலும் அவரைத் தனியாகவும் கூட்டமாகவும் வெல்லமுடியாமற்போனதும் வேறுகதை.

சுஜாதா தன் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்த ஒருவர் என அவர் எழுத்துக்களின் வாயிலாகவே சொல்ல முடியும்."அவன் வாங்கிய புத்தகங்கள் அவன் மூளையின் கதம்பத்தைப் பிரதிபலித்தன."என்று சிவராஜ் என்னும் புனைவு நாயகன் பற்றி நிர்வாண நகரத்தில் அவர் எழுதி இருந்த வாசகம் அவர் பற்றியது தான்.அவர் ஒரே நேரத்தில் புத்தகங்களை நோக்கியும் அவற்றிலிருந்து விடுபட்டும் ஓடிய வித்யாசர்.ஏதும் போதா மனநிலையும் உயர்ந்ததாயிருக்கும் எதையும் கொண்டாடிவிடும் வாசகமனசும் அவரது ரசங்கள்.அவர் எத்தனையோ நபர்களை படைப்புக்களை நபர் மற்றும் படைப்புக்களை ஒருங்கே இருளில் இருந்து வெளிச்சத்திற்கு எடுத்தெறிந்த மாயாவிநோதன்.மனுஷ்யபுத்திரன் துவங்கி நா.முத்துக்குமார் வரை அவர் ஒரு காலகட்டத்தின் அத்தாரிட்டியாக இருந்ததும் அதை மெய்ப்பித்துக் காட்டியதும் மறுக்கமுடியாதவை. சுஜாதாவுக்கு விருதுகள் மீதெல்லாம் பெரிய்ய மரியாதை எதுவும் இருந்ததில்லை என்பது அவர் அளித்த பேட்டிகளில் தெரிகிறது.என்னளவில் அவருக்கு அகாதமி விருது வழங்கப்படாததில் பெரிய்ய வருத்தமில்லை.ஆனால் நிறமற்ற வானவில் சுஜாதா எழுதியதில் எந்த விருதுக்கும் சர்வதகுதிகள் கொண்ட ஒரு நாவல்.இன்னொன்று சொல்ல வேண்டுமானால் நகரம் சிறுகதைக்குக் கொடுத்திருக்க வேண்டும்..

சுஜாதா அளவிற்கு உற்சாகமாய்த் தமிழை உபயோகித்த இன்னொருவரைக் கூறுவது கடினம்.அவருக்கு மரபு சார்ந்த நல்ல பரிச்சயமும் மொழியின் ஆகமங்கள் குறித்த தேர்ச்சியும் இருந்தபோதிலும் தமிழ் எழுத்து என்பதை எப்போதும் பரிசோதித்துக் கொண்டே இருந்தவர் சுஜாதா.அவர் எல்லா உரிமைகளையும் தனக்குத் தானே வழங்கிக் கொண்டார்.அவற்றில் பெருவெற்றி காணவும் செய்தார்.சிற்றிலக்கியப் பூசாரிகள் பலர் பல விஷயங்களுக்காக சுஜாதாவை திட்டித் தீர்த்தார்கள்.அவர்கள் வீட்டு அலமாரிகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பல புத்தகங்கள் சுஜாதாவினுடையது.அப்படி வைரிகளையும் காதலிக்கச் செய்த எழுத்து சுஜாதாவினுடையது.அவர் தனக்குக் கிடைக்காத எதைக் குறித்தும் குறை சொல்லிவிடக் கூடாது என்பதில் ஒரு ஆசிரியமனோபாவத்தை நீதிமன்ற மனசை எப்போதும் கொண்டிருந்தது வியப்பே.
.சுஜாதாவை சாதி மற்றும் மதம் இனம் மொழி என பல குடுவைகளுக்குள் அடக்கிப் பார்க்க பலமுயல்வுகள் நிகழ்ந்த போதும் அவர் அதையெல்லாம் அனாயாசமாக எதிர்த்தார்.எளிதாக வென்றார்.வாசகர்களின் சக்கரவர்த்தியாய்த் திகழ்ந்த போதும் சுஜாதா தான் ஈடுபட்ட எல்லாத் துறைகளிலும் கவிதை மேல் அவர்க்கு ஈர்ப்பிருந்தாலும் அவர் அதை சற்று உள்விலக்கம் செய்திருந்தது நிஜம்.கட்டுரை அறிவியல் கேள்விபதில் சினிமாகதை தொடர்கதை விஞ்ஞானம் மருத்துவம் என அவர் கைவைக்காத எதுவும் இல்லை.

இருந்தாலும் அவரது ஆத்ம திருப்தியை அவர் நாடகங்களில் கண்டதாகவே உணர்கிறேன்.சுஜாதாவின் நாடகங்கள் அவர் தமிழுக்குச் செய்து சென்ற இன்னொரு கொடை.வந்தவன் கடவுள் வந்திருந்தார் தேவன் வருகை டாக்டர் நரேந்திரனின் விநோதவழக்கு என அவரது நாடகங்களில் அவர் வேறு சுஜாதா.தமிழில் நாடகம் என்னும் வடிவத்தை உணர்ந்து எழுதப்பட்ட சர்வதேசத் தரம் சுஜாதாவின் நாடகங்களில் இருந்தன. எவ்வெவற்றில் இல்லை என்பது வேறு கதை.சுஜாதா வாழ்ந்த காலத்திலேயே தன் சாகாவரத்தை நன்றாக உணர்ந்துவைத்திருந்தவர் என்பதற்கு அவர் கடைசி பதினைந்து வருடங்கள் இன்னமும் வெறிகொண்டு எழுதிக் குவித்த பன்முக வெளியே சாட்சியம்.வெறும் நாவல்காரனாகத் தான் கருதப்பட்டுவிடக் கூடாது என்பதால் தன் எழுத்துக்களை இரட்டித்தார் என்றே சொல்ல முடியும்.சுஜாதா எல்லா நாளும் நினைக்கப் படுகிறார். எல்லா நாளும் வாசிக்கப் படுகிறார்.இன்றைக்கு அவர் உடலிழந்த தினம் என்பது அவர் பாணியில் சொல்லவேண்டுமானால் JUST ஒரு சின்ன தகவல்.அவ்வளவே.