புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

மகாயுகம்

ஒரு பாடலின் இடையிசையாய் கழிந்துகொண்டிருக்கிறது காலம்.
.
முப்பத்து ஐந்தாவது வரி துவக்கத்தில்என் மடியில் தலைசாய்த்து மரித்துப்போனாள் வயலட் கலரிங் கூந்தல்காரி.
பாடலின் இரண்டாவது வரியிலேயே கள்ளப்பகிர்வுக்குப் பின் திரும்பிவந்தவள் ஏறெடுக்காமல் குளியலறைக்குப் போகிறாள்.
எட்டாவது வரியின் இரட்டிக்கிற வார்த்தைகளின் வழியாக கழுத்தைத் திருகிக் கொலை செய்த பாவத்தின் வீச்சம் வழிகிறது.
இருபத்து இரண்டாம் வரி ஒலித்து முடிக்கையில் உன் மரணம் நிகழ்ந்துகொண்டிருக்கும்.
முதல் பல்லவி முடிந்து மீண்டும் முதல்வரி ஒலிக்கையில் உலகத்தின் ஒட்டுமொத்த வாதைக்குமான மருந்திடல் துவங்குகிறது.

சரணத்தின் மூன்றாம் வரியின் ஆறாவது வார்த்தை எல்லாக் கோரிக்கைகளுக்கும் செவிசாய்ப்பதாயிருக்கிறது.
சூன்யங்களின் பீடிக்கிற கரங்களனைத்தையும் வெட்டியெறிவதற்கான சூட்சுமம் எழுபதாவது வரியினுள் இருக்கிறது.
ஒப்புக்கொடுக்கிற தேவன்களின் மறைவிடங்களின் மீது ஒளி பாய்ச்சுவதாக எண்பத்தாறாம் வரி திகழ்கிறது.
எலும்புகளைப் பொசுக்கிக் கிடைக்கிற புகையெண்ணையின் மணத்தை தொண்ணூறாவது வரி கமழ்கிறது.

இரண்டாவது சரணத்தின் துவக்க வரியினுள் தேடல்களனைத்தும் முடித்துவைக்கப்படுகின்றன.
அதற்கடுத்த ஆயிரத்துப் பன்னிரண்டாவது வரியில் பூப்படைந்த பின்னரே உயிர்த்தல் நிகழ்கிறது.
சாவதற்குத் தயாரான கிழட்டுபொம்மைகளைக் கொன்றுவிளையாடும் பிள்ளையினங்களின் பேரொலி எட்டாயிரமாவது வரியில் வருகிறது.
பாக்கெட்டுக்களில் எல்லாவற்றையுமே காய்க்கிற ஒற்றை மரத்தில் அன்பின் பொட்டலங்களைச்சீந்துவாரில்லை என்ற குறிப்பு பதின்மூன்றாம்வரியில் தொனிக்கிறது.

மூன்றாவது சரணத்தின் ஒன்பதாவது வரியில் கடுக்கைக் கண்ணியனைத் தன் சடைபிரியொன்றில் தூக்கிலிட்டு நடனமாடுகிற குண்டலி எள்ளுகிறாள்.
நாப்பத்துமூன்றாயிரத்துப் பதினாறாவது வரியில் மீன்கள் எல்லாம் செத்து மிதக்கின்றன நீர்தளத்தில்.
பத்தொன்பதாவது வரியின் கடைசிக்கு முந்தைய சொல்லில் அணைந்துகொண்டிருக்கிறது வானம்.

பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிற எண்களை விடு.
பூச்சியம் தவிர வேறொன்றுமில்லை.