புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

மனுஷ்யபுத்திரன்

 

மனுஷ்யபுத்திரனை ஒரு கவிஞராக எனக்குத் தெரிந்தது அவரது இரண்டாவது தொகுப்பான என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் என்னும் புத்தக்த்தைப் படித்த போது.அவரது எண்ணை எனக்குத் தருமாறு அன்புநண்பர் முத்துக்கிருஷ்ணனிடம் கேட்டுப்பெற்றேன்.முதல் முதலில் அவரது உயிர்மை தலையங்கம் ஒன்றைப் பற்றி அவரோடு தொலைபேசியில் பேசியது இன்னமும் நினைவில் இருக்கின்றது.மிகக் கூச்சமான ஒரு குரலில் தனக்கும் எதிர்கொள்கிற வார்த்தைகளுக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை என்கிறாற்போல் பாராட்டுக்களை அவர் அணுகியது வித்யாசமாக இருந்தது.அப்போதெல்லாம் நான் ரவிஷங்கராக மதுரையில் செல்ஃபோன் கடைகளை நடத்தி வந்தவன்.ஃபோனில் பேசிய பிறகு நேரில் சென்று பார்த்தது 2007 அல்லது 2008 புத்தகத் திருவிழாவின் போது.உயிர்மை அரங்கத்தில் சாரு நிவேதிதாவுடன் பேசிக்கொண்டிருந்தவரிடம் என்னை அறிமுகம் செய்துகொண்டேன்.வரவேற்றவர் மிக அன்பாக என்னோடு உரையாடினார்.அவரது மணலின் கதை புத்தகத்தில் நான் ஆட்டோகிராஃப் வாங்கிக்கொண்டேன்.கையெழுத்திடும் போது அந்தக் காகிதத்தின் வெற்றுப்பரப்பையே ஒருகணம் உற்று நோக்கியவர் நண்பர் ரவிக்கு என்று கையொப்பமிட்டார்.அதன் பிறகு நான் ஆத்மார்த்தியாகி எழுத ஆரம்பித்த பிறகு உயிர்மைக்கு சில கவிதைகளை அனுப்பிவிட்டு அதே பழைய எண்ணில் அவரைத் தொடர்பு கொண்டேன்.கொஞ்ச நேரம் பேசிய பின் என்னை நினைவிருக்கிறதா..?நான் உங்களின் வாசகன்.நாம் சந்தித்திருக்கிறோம் என்றதும் படாரென்று "வாசகனாயிருப்பது கடினமாகி விட்டதா?" எனக் கேட்டார்.அப்போது எனக்கு அந்தக் கேள்வியின் விஸ்வரூபம் புரியவில்லை.அதன் பின் பல சிற்றிதழுலகத்து அரசியல் ஏற்ற இறக்கங்கள் வார்த்தை வெடிகளை சந்திக்கையிலெல்லாமும் வாசகனாயிருப்பது கடினமாகி விட்டிருக்க வேண்டாமே எனத் தோன்றும்.அவரிடமும் இதனைக் குறிப்பிட்டு இருக்கிறேன்.அடுத்து வந்த மதுரை புத்தகத் திருவிழாவின் போது நிறைய சமயங்கள் அவரோடே இருந்தேன்.எனக்கும் அவருக்கும் இடையே பலர் வந்தும் சென்றும் இருக்கிறார்கள்.மனுஷ்யபுத்திரனைப் பலமுறை சந்தித்தும் உரையாடியும் இருக்கிறேன்.எனக்கு என்றைக்குமே முதன்முதலில் பார்த்த அந்த அதே ஒரே தோற்றத்தில் அதே சூழலையும் இணக்கத்தையும் ஏற்படுத்தி விடுவார்.அத்தனை நையாண்டியும் நக்கலும் மிகுந்த ஆனால் அமைதியான குரலில் அவர் பேசக் கேட்டு ரசிப்பேன்.உயிர்மை அலுவலகம் எனக்கு எப்போதும் பிடித்த ஒரு இடம்.அதுவும் மனுஷ்யபுத்திரனின் மேசை அவரது அத்தனை பரபரப்புக்கிடையில் அவர் அந்தக் காலகட்டத்தில் வாசித்து முடித்த அல்லது வாசித்துக் கொண்டிருக்கிற புத்தகங்களைக் கொண்டிருக்கும்.அவை அதிகம் பேசாத குழந்தைகளைப் போல ஒளிந்துகொண்டிருக்கும்.அவரது வீட்டில் வளருகிற பூனைக்குட்டிகளில் இருந்து அவரோடே வாழ்ந்து கொண்டிருக்கிற எல்லோருக்கும் மத்தியில் வேறோரு இயல்பான மனிதனாகவும் உறவுக்காரனாகவும் அவரைப் பார்க்கையில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.அம்முவும் சூர்யாவும் ஷமீரும் ரவியும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் அவரது ட்ரைவர்களுமென்று உயிர்மை அலுவலகம் எனக்கு என்னை ரீசார்ஜ் செய்துகொள்கிற தளமாக மாறும்.


சில காலங்களில் அவர் உயிர்மை இதழின் பதினாறு பக்கங்களைத் தன் கவிதைகளால் நிறைப்பார்.இனிப்பை இதற்கு மேல் உண்ணமுடியாது வாய்பிதுங்கும் குழந்தைபோல விழிப்பேன்.இப்போது கடந்த ஆறுமாதங்களாக ஒற்றைக் கவிதை கூட எழுதாமல் இருக்கிறார்.இதுவும் அதுவும் ஒரே அவர்தான் என்றாலும் இதையும் என்னால் தாளவியலாது.எப்போதும் என் புத்தக அலமாரியில் எடுக்கிறவசத்தில் மனுஷ்யபுத்திரனின் ஏதாவதொரு கவிதை நூல் இருந்தே தீரும்.அவரது கவிதைகளின் ரசிகன் நான்.பல வார்த்தைகளை பல வாக்கியங்களை அவர் உபயோக்கிற அழகு என்னை எப்போதும் வசீகரிக்கும்.அவரது கவிதைகளில் காணப்படுகிற அகமனம் ஒரு தோல்வியுற்ற சைகையாகப் புரிந்துகொள்ளப் படுகையிலெல்லாம் நான் அவர்களிடம் இருந்து முரண்படுவேன்.அப்படி அல்ல.மனுஷ்யபுத்திரனின் கவிதைகளில் பெரும்பாலானவற்றில் வெளிப்படுகிற அகமனம் சூழ்நிலைகளின் கைதி மட்டுமே.மேலும் நிர்பந்தங்களின் கூட்டு இயலாமையாக அவற்றைக் கொள்ளவேண்டும் என்பது என் முடிவு.அவரது பல கவிதைகள் என்னை எழுதவிடாமல் நிறுத்தி இருக்கின்றன.அவர் அளவிற்கு எழுதிக் குவித்த இன்னொரு கவி ஆளுமை உலகத்திலேயே கிடையாது என்பேன்.அவரது கவிதைகள் பிரசங்கங்கள் அல்ல.அவரது கவிதைகள் ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு மனந்தாங்கி ஏற்படுத்துகிற வெற்றிடம் மிக உண்மையானது.அந்த மனந்தாங்கியிடம் ஒப்புக்கொடுக்க நெருங்குகிற ஒரு அல்லது சிலருக்கு மட்டுமான கவிதை தான் அது.மற்றேல்லார்க்கும் அந்த வெற்றிடம் புரிவதில்லை.மற்றவர்களுக்கு அவை வெறும் எண்ணிக்கைக் கவிதைகளாக இருந்துவிடக் கூடும்.


மனுஷ்யபுத்திரன் மீது எனக்கு எந்த விமர்சனமும் இல்லை.இதனை நான் அறிவிப்பாகவே செய்ய விழைகிறேன்.என்னை எத்தனை பேர் எத்தனை சபித்தாலும் சரி.நான் எனக்குள் அப்படியே தக்கவைத்துக் கொள்கிற சில மாறாப்பொருட்களில் மனுஷ்யபுத்திரன் மீதான என்னுடைய புரிதலை நிறுவ விழைகிறேன்.என் புரிதல் அர்த்தமற்றது அல்ல.என்னால் இதுகுறித்து மௌனிக்கவும் வாதிடவும் ஒருங்கே முடியும் என்றபோதும் மௌனிக்கிறேன்.மனுஷ்யபுத்திரன் என் ஆசான்..நம்மைக் கடக்கிற அல்லது நாம் கடக்கிற லட்சோபலட்சங்களிலிருந்து தான் நம்மால் சிலரைக் குரு என்று கைக்கொள்ள முடியும்.எல்லோரையும் எல்லா நேரங்களிலும் சொல்லிவிடமுடியாது மேலும் அது அர்த்தமற்றதும் கூட.


நான் எழுதவந்தபிறகு எனக்கும் மனுஷ்யபுத்திரனுக்குமான உறவு இன்னும் பலப்பட்டது.என்ன கிடைத்ததோ அது போதும் என்ற நிறைவு எனக்கு எல்லோரிடத்திலும் ஏற்படாது.மேலும் நானொரு சுயநலமி.ஆனால் மனுஷ்யபுத்திரனைப் பொறுத்தவரையில் நான் ஒரு பக்கத்து வானப் பறவையாகவே அவரைத் தொடர்ந்து சிறகு அசைப்பதில் எனக்கு எல்லாமும் கிடைத்துவிடுகிறது.,மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் எனக்குக் கொடுத்தவற்றை அவற்றிடம் இருந்து நான் படித்தவற்றை கலாப்ரியாவும் ஆத்மாநாமும் சுஜாதாவும் தேவனும் மாலனும் பாலகுமாரனும் இறையன்புவும் விக்ரமாதித்யனும் ஆன தனித்த பட்டியல் எனக்குள் நிரப்பியவற்றை என்னால் வேறெந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது.


மனுஷ்யபுத்திரனின் சமீபத்திய சமூக வாஞ்சை அவரது உயிர்மை என்னும் தளத்தைத் தாண்டி மக்களை டெலிமீடியா மூலமாக சந்தித்து தினமும் ஒருமுனை உரையாடல்களை நிகழ்த்துவதன் மூலம் மக்களுக்கும் தான் வாழ்கிற காலத்துக்கும் ஒரு எழுத்தாளனின் அக்கறையும் பங்களிப்பும் என்னை பிரமிக்கச் செய்கிறது.எழுத்தாளன் ஒருவனைச் சகல விதங்களிலும் புறக்கணிக்கத் துடிக்கும் ஒரு நிலத்தில் மனுஷ்யபுத்திரன் ஒற்றை நிகழ்வாக ஒருமுறை பிறப்பாகத் தன்னை ஒரு முன் மாதிரியாக கட்டமைத்துக் கொண்டிருப்பது உண்மையிலேயே இதுவரை வேறெந்த எழுத்தாளரும் இவ்வளவு முனையாத புதிய தவம்.


தமிழ்ச்சமூகம் பெற்றிருக்கும் மாயக்கொடை என்றே அவரை நான் வர்ணிக்க விரும்புகிறேன்.இது போற்றி எழுதப்பட்ட புகழ்மாலை அல்ல.எதையும் வேண்டிப் புரிகின்ற தவச்செயலும் அல்ல. மனுஷ்யபுத்திரன் ஒரு பன்முக ஆளுமை.அவரைத் தள்ளி நின்று ரசிக்கிற பல்லாயிரம் பேர்களில் நான் ஒருவன்.இதை ஏன் இன்றைக்கு எழுதவேண்டும் என்ற கேள்விக்கு என்னிடம் எந்த பதிலுமில்லை.ஆனால் நான் எழுதியிருப்பதும் அதிலிருக்கிற நானும் மனுஷ்யபுத்திரனும் மூன்று உண்மைகள்.இது புனைவல்ல.நிஜம்.

Last Updated (Wednesday, 24 April 2013 16:29)