புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

ஊடுபயிர்கள்

பார்வதியம்மாவிடமிருந்து எஸ்.எம்.எஸ். வந்திருந்தது அதிகாலையில்.அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் நித்யா முன்னிரவில் தாமதித்து தான் உறங்கச் சென்றிருந்தாள்.அவளது செல்ஃபோனில் குறுந்தகவல்களுக்கென்று வைத்திருந்த "சின்னஞ்சிறுகிளியே....கண்ணம்மா" என்னும் பாடல் அந்தக்காலை வேளையில் அவளை ரம்யமாக எழுப்பியது.எடுத்துப்பார்த்தாள்.பார்வதியம்மா."ஓய்வாக இருந்தால் சந்திக்க வருமாறு" அழைத்திருந்தாள்.கட்டளைத் தொனி கொஞ்சமும் இல்லாமல் தன் முழு வாழ்க்கை முழுக்கவே இதமான உரையாடல்களால் அமைத்துக்கொள்ள வெகுசிலரால் தான் முடியும்.பார்வதியம்மா சிலரில் ஒருத்தி.

நித்யா அவசியம் வருவதாக பதில் அனுப்பிவிட்டு அப்படியே கண்கள்மூடி படுத்திருந்தாள்.அதன் பின் உறங்க மனமில்லாமல் எழுந்துகொண்டவள் காலைத்துவக்கங்களைச் செய்துவிட்டு பாலைக் காய்ச்சினாள்.தீபன் தூங்கிக் கொண்டிருந்தான்.ஒன்பது வயதாகியும் இந்த
விரல் சப்புவதை விட மாட்டேன் என்கிறவனை என்ன செய்வது..?பார்வதியம்மாளிடம் சொன்னதற்குச் சிரித்தபடியே சொன்னாள்."விடு...அவனா
அதிலேருந்து வெளில வந்திருவான்.அதட்டினா ரகசியமா சப்புவான்.அதுக்கப்புறம் உனக்கு கஷ்டமாயிடும்ல..?"

நித்யாவின் கணவன் ரமேஷின் சித்தி தான் பார்வதியம்மா.ரமேஷ் வேலைபார்ப்பது துபாயில்.இங்கே அடுக்ககக் குடியிருப்பில் நித்யா
ஒரே  செல்லம் தீபன் மற்றும் தன் அம்மா சாந்தாவோடு இருக்கிறாள்.ட்ரெஷரியில் அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பார்வதி
யம்மாவுக்கு கார்த்திக் ஒரே மகன்.அவன் மனைவி வாணிக்கும் பார்வதியம்மாவுக்கும் ஒத்து வரவில்லை.கல்யாணமாகி ஆறுமாதங்
களுக்குள் அடிக்கடி பிரச்சினை வர ஒரு நல்ல நாள் பார்த்து தானும் தன் பென்ஷனுமாய்த் தனிக்குடித்தனம் கிளம்பிய பார்வதியம்மாவைத் தடுக்க நினைக்க வில்லை கார்த்திக் .தடுத்தாலும் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ள அம்மாவும் தயாரில்லை.ரமேஷ் தான் நெக்குருகிப்போனான்.

"சித்தி நம்ம வீட்டுல இருக்கலாம்ல..?எதுக்கு தனியா இல்லத்துல போய் கஷ்டப்படணும்..?"எனக்கேட்க,ஒற்றைப்புன்னகையை மட்டுமே
பதிலாக்கிவிட்டு சென்றுவிட்டாள் பார்வதி.

அதற்குமேல் கட்டாயப்படுத்தவில்லை ரமேஷ்.நித்யாவை பார்வதிக்கு ரொம்பப் பிடிக்கும்.இருவருமே பரஸ்பரம் தத்தமது
அன்னியோன்னியத்தை காட்டிக்கொள்ளத் தவறுவதில்லை.மாதத்திற்கொரு முறை பார்வதி நித்யா வீட்டுக்கு வந்து இரு தினங்கள் இருப்பாள்.
நித்யாவும் அடிக்கடி சென்றுவருவாள் இல்லத்துக்கு.சேர்ந்த இடத்தில் கார்டியன் என்று ரமேஷ் மற்றும் நித்யா இருவரின் பெயரைத் தான்
குறிப்பிட்டு இருந்தாள் பார்வதி என்பது கூடுதல் தகவல்.

அதை இல்லம் என்று சொல்வது பிழை.வாங்குகிற சில ஆயிரங்களுக்கு அந்த அறக்கட்டளையினர் வஞ்சகமின்றி பராமரித்தனர்.
பணம் கொடுத்து தங்கும் விடுதிகளுக்குக் கொஞ்சமும் குறைவின்றி மிளிர்ந்தது அந்த இல்லம்.சென்னை நகரத்துக்கு சற்று தள்ளி "வாசஸ்தலம்"
என்ற பெயரில் ஏகாந்தமாக விரிந்திருந்தது இல்லம்.ஒவ்வொருவருக்கும் தனியறை.உள்ளேயே அட்டாச் பாத்ரூம்.டீவீ மற்றும் இண்டர்காம் வசதி.நகரத்துக்குள் சென்றுவர சலுகைக் கட்டணத்தில் ஆட்டோ வசதி,உடல் கோணா உணவு மனம் கோணா மரியாதை என சகலவிதத்திலும் சிறந்தே இருந்தது பார்வதிக்கு.

போதாக்குறைக்கு எது கேட்டாலும் உடனே செய்வதற்கு நித்யா.தன் ஓரகத்தியின் மருமகள்.என்றபோதும் தன்னை வாய்நிறைய அம்மா அம்மா என அழைப்பதிலாகட்டும்,வந்து நிற்பதிலாகட்டும் நித்யா நிதமும் தன் அன்பைப் பொழியவே செய்தாள்.பார்வதியின் இயல்பே சற்று விலகி நிற்பது தான் என்கிற படியால் தள்ளியே நின்றாள்.பண்டிகை காலங்களில் தான் நித்யா வீட்டுக்கு செல்வதற்கு கொஞ்சம் ஆர்வம் காட்டுவாள்.,மற்றபடிக்கு எந்தவிதத்திலும் நித்யாவின் வேலையையோ ரமேஷின் பணத்தையோ தொந்தரவே செய்வதில்லை பார்வதி.
பாலைக்காய்ச்சிய நித்யா அப்படியே சப்பாத்திகளை செய்து ஹாட்பேக்கில் அடுக்கிவிட்டு மணியைப் பார்த்தாள்.எட்டாகி யிருந்தது.தீபன் பல் தேய்த்துக் கொண்டிருக்க சாந்தா மெதுவாக நடந்து வந்து சேர்ந்தாள் சமையலறைக்கு.வாசலில் நின்றபடியே கேட்டாள் "வெளில போறியா நீத்து..?சீக்கிரமே எழுந்திட்டே..?"சப்பாத்திகளை ஹாட்பேக்கில் அடுக்கியவள் சிரித்தாள்."பார்வதியம்மாவை பார்க்க போறேன்மா.தீபன் இங்கேயே இருக்கட்டும்.நான் மதியானம் தான் வருவேன்.என்ன..?"
மௌனமாக இருந்த சாந்தாவிடம் தொடர்ந்து "அம்மா...சப்பாத்திக்கு சப்ஜி செஞ்சிருக்கேன்.ஆனியனும் இருக்கு.தீபனுக்கு சாக்லேட் எதும் குடுக்காதே.ஹோம்வொர்க்கை செஞ்சுமுடிச்சதுக்கு அப்புறமா டீவீ பார்க்க விடு.கார்ட்டூன் போட்டுக்கட்டும்.நான் வந்துர்றேன்."
அங்கலாய்க்கும் குரலில் ஆரம்பித்தாள் சாந்தா."நீ சொல்லிட்டு போம்மா உன் பையன் கிட்டே.நான் சொன்னா அவன் கேக்கவா போறான்.ரெண்டுவாரத்துக்கு முந்தி நீ இதே மாதிரி ஒரு ஞாயிறு காலைல கெளம்பிப்போனே...அவன் ஹோமொர்க்கும் செய்யாம
சினிமா பாட்டு பார்க்கறென்னு பார்த்துட்டு இருந்தான்.எவ்வளவோ சொல்லியும் கேக்கலை.உனக்கு ஃபோன் பண்ணா நீ அணைச்சு
வெச்சிருந்தே"என்றாள்.

எப்போதெல்லாம் நித்யா பார்வதியம்மாளைப் பார்க்க கிளம்புகிறாளோ அப்போதெல்லாம் இதே மாதிரி கிளறுவாள் சாந்தா.
இதென்ன வகைப் பொறாமை என்று தெரியவில்லை.,வார நாட்களிலெல்லாம் இனிக்கிற பேரன் அதெப்படி ஞாயிற்றுக்கிழமைகளில் கசக்க முடியும்.தெரியவில்லை.அதே மாதிரி,ஃபோன் ஆன் செய்து வைத்திருந்தால் எதையாவது சண்டையாக்கி தீபன் அழுது,சாந்தா ஃபோன்
செய்வாள்.எடுத்த எடுப்பிலேயே..."நானும் எதாவது அனாதை ஆஸ்ரமத்துக்கு போய்த் தொலையுறேன்.உன் மகனை என்னால மேய்க்க
முடியாதும்மா.சொன்னதை கேக்கவே மாட்டேன்னு அடம் பிடிக்கிறான்.நீ உடனே வா."என்பாள்.

நித்யா அதனாலேயே அணைத்து வைக்க ஆரம்பித்தாள் தனது செல்ஃபோனை.சக்களத்தி சண்டைகள் தெரியும்.மாமியார் மருமகள்
சண்டைகள் கூட சகஜம் தான்.ஆனால் தனது கணவனின் சித்தி மீது அன்பாயும் ஸ்னேகமாயும் இருக்கிற தன் சொந்த மகளிடம் அனல் கக்கும்
அம்மாவாக சாந்தா இருந்தாள்.வேறெப்போதும் அவளுக்கும் நித்யாவுக்கும் அல்லது அவளுக்கும் தீபனுக்கும் பிரச்சினைகளே வந்ததில்லை.
ஆனால் சரியாக எப்பொழுதெல்லாம் பார்வதியைப் பார்க்க கிளம்பிச்செல்கிறாளோ அப்போது மட்டும் தீபன் அஸ்திரமாவான்.நித்யா
இலக்காவாள்.ரௌத்ரம் காட்டுவாள் சாந்தா.

இந்த முறை நித்யா வெறுமனே ஒரு புன்னகையோடு கிளம்பினாள்.அதைப் பார்க்க பார்க்க சாந்தாவுக்கு பொத்துக்கொண்டு வந்தது
கோபம். தவிர ஆசையாய் சப்பாத்திகளை ஒரு டிஃபன் செட்டில் அடுக்கிக்கொண்டு சப்ஜியையும் ஆனியன் ரைத்தாவையும் பக்குவமாக
பொட்டலம் கட்டிக் கிளம்புகிற நித்யாவைப் பார்க்கும் போது சாந்தாவுக்கு ஏதோ தனக்குரிய ஒன்று பிறர்வசமாகிறாற்போல் இருந்தது போலும்.
லேசாய்க் கண்கள் கசிந்தாள் சாந்தா.கவனியாமல் அதையும் கவனித்துவிட்டு கிளம்பினாள் நித்யா.

இதே சாந்தா தங்கள் வீடு தேடி பார்வதியம்மா வருகையிலெல்லாமும் வேறுமுகம் காட்டுவாள்.ஓடியோடிச் செய்வாள்.சம்மந்தி
அம்மாளுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டாள்.அன்புமழை பொழியவைத்து அதில் வலுக்கட்டாயமாக நனையச்செய்து அதை ரசிப்பாள்.
சாந்தாவின் பிரச்சினையெல்லாம் ஒன்றே ஒன்று தான்."இங்கே வா.நான் செய்கிறென்.நித்யா சும்மா இருக்கட்டும்.உன்னை நித்யா தேடி
வருவது தான் என் பிரச்சினையே என்று சொல்லாமல் சொல்லுவாள்.அதைச் சட்டை பண்ணமாட்டாள் நித்யா.இன்றைக்கும் அதேபோல்
தான் தனது சிகப்பு ஸ்விஃப்ட் காரில் சீறினபடி போரூர் நோக்கி விரைந்தாள்.
******                                             ********                                         *******
பார்வதியம்மா வாசஸ்தலத்தின் வாசலில் தயாராய்க் காத்திருந்தாள்.அரக்கு நிறத்தில் தனக்கு பிடித்தமான பருத்திப் புடவையில் பார்வதியைப் பார்க்கையில் மனசெல்லாம் நெகிழ்ந்தது நித்யாவுக்கு.,எதுவுமே பேசிக்கொள்ளாமல் காரை ஓட்டிக்கொண்டிருக்க, சீடீ ப்ளெயரில் சிந்துபைரவி திரைப்படத்திற்காக சித்ராவின் பாடறியேன் படிப்பறியேன் ஒலிக்க ஆரம்பித்தது.

"ரொம்ப இதமா இருக்கு நித்யா இந்தப் பாட்டு.முன்னாடி இதை எங்கே கேட்டாலும் நின்னு கவனிப்பேன்.ரமேஷும் கார்த்திக்கும் இந்தப்
படம் வந்தப்போ ஏழெட்டு வயசுப் பசங்க.அவரும் நானும் கூட்டிட்டு போயிருந்தோம் தியேட்டருக்கு.ரமேஷ் என்ன படமா இருந்தாலும் பார்ப்பான்,
புரியலைன்னா தூங்கிடுவான்.ஸ்கூட்டர் தான் வெச்சிருந்தார் கணேஷோட அப்பா.அதுல தான் போயிருந்தோம்.கார்த்திக் அழுகைன்னா
அழுகை நிறுத்தாம அழறான்.ரொம்ப சங்கடமா போயி பாதிப்படத்துலயே கிளம்பி வந்துட்டோம்.அப்புறம் ரெண்டு மாசத்துக்கப்புறம் திரும்ப
நானும் அவரும் மட்டும் போயிப்பார்த்தோம்.நல்ல படம்...ஹும்ம்..."

கண்களை மூடிக்கொண்டவள் அதன் பின் எதுவுமே பேசவில்லை.அடுத்தடுத்து வந்த பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருந்த நித்யா
சிவன் பார்க்கின் வாசலில் வாகன நிறுத்தத்தில் காரைப் பார்க் செய்து விட்டு கவனித்த போது பார்வதியம்மா தூங்கிவிட்டதாக உணர்ந்தாள்.
டேப்பை நிறுத்திய அடுத்த கணம் கண்விழித்தவள் சிரிக்க தானும் அச்சிரிப்பில் கலந்து கொண்டாள் நித்யா.

காரிலேயே அமர்ந்து கொண்டு சப்பாத்திளை ப்ளேட்டில் அடுக்கி சப்ஜியையும் ஆனியனையும் அளவாய் எடுத்து கொடுத்த நித்யா தண்ணீர் பாட்டிலை அருகாமையில் வைத்தபடி தானும் சாப்பிட துவங்கினாள்.எதையெதையோ பேசியபடி சாப்பிட்டு முடித்தனர்.பார்வதி கையைக் கழுவிக்கொள்ள துண்டை நீட்டினாள் நித்யா.நளினமாக தன் உதடுகளை ஒற்றிக்கொண்டபடி எழுந்து கொண்டாள் பார்வதியம்மா.

இரண்டு பேரும் மிக மெல்ல நடக்கலாயினர் பூங்காவில்.அப்போது நடைப்பயிற்சிக்காக நடக்கிறவர்கள் குறைந்து போயிருக்க தங்களுக்கு
வசதியான ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டதும் தன் ஹேண்ட்பேகிலிருந்த புத்தகங்களை எடுத்து நீட்டினாள் நித்யா.ஒவ்வொன்றாய்ப்
பார்த்த பார்வதியின் முகம் மலர்ந்தது.

"நித்யா,சீ.ஐ.டி சந்துரு ரொம்ப அருமையான கதை.எங்கம்மா எனக்கு சின்ன வயசா இருக்கும் போது படிச்சிட்டு தன் மொழியில சொல்லுவாங்க.
அருமையா இருக்கும்.இதென்ன, அரக்கு மாளிகை கிடைச்சிருச்சா..?நான் ஃபோன் பண்ணி கேட்டேன் பிரிண்ட் இல்லைன்னு சொல்லிட்டாங்க ரெண்டு கடைல.ரொம்ப தேங்க்ஸ் நித்யா."என்றாள்.

"எனக்கெதுக்கும்மா தேங்க்ஸ் எல்லாம்..?"

"நித்யா....பீவீஆர் கதைகள் இப்போல்லாம் பப்ளிஷ் ஆவுறதில்லைன்னு நினைக்கிறென்.ஆரம்ப கால மாலைமதில நெறைய்ய எழுதுவார்.பிவி.ராமக்ருஷ்ணன்.அருமையான எழுத்து நடை அவரோடது.அவர் புஸ்தகம் எதுவா இருந்தாலும் பழைய கடைகள்ல கேட்டுப்பார்த்து வாங்கித்தரியாம்மா..?"
"நிச்சயமாம்மா..."

இளையராஜாவின் இசை,சுஜாதாவின் கணேஷ் வசந்த்,பட்டுக்கோட்டை ப்ரபாகரின் கனவுகள் இலவசம்,ராஜ் சீதாராம் பாடிய அருமையான
பாடல்கள்,தனக்கு ஏன் ஜெயச்சந்திரன் வாணிஜெயராம் காம்பினேஷனை மிகவும் பிடிக்கும்,ஃபேஸ் புக் எனப்படுகிற முகப்புத்தகத்தை பயன்படுத்துவது எப்படி..?பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவுடன் சாக்லேட் தான் வேண்டும் என தினமும் அடம்பிடிக்கிற தீபனை எப்படி வழிக்கு கொண்டு வருவது.
தயிர்ப்பச்சிடி செய்ததை ஒரு டிஃபன் பாக்சில் சாந்தா வைத்துவிட்டதை மறந்து போய் வேலைக்கு செல்லும் அவசரத்தில் மதிய உணவுக்குப்
பதிலாக அதைக்கொண்டு போய் அலுவலகத்தில் விழித்தது என இரண்டு பேரும் மாற்றி மாற்றி பேசிச் சிரித்துக் கொண்டே இருக்க,நேரம் போனதே தெரியவில்லை.மணி ஒன்றரை ஆகியிருந்தது.சென்னையின் அவஸ்தை அதிசயங்களில் ஒன்றான மழை திடீரென பூப்பூவாய்த்தூற இருவரும் ஓட்ட நடையோடு காரை நெருங்கினர். .காரை ஓட்டத்தொடங்கிய நித்யா

"ஏம்மா..ஒண்ணு கேக்கணும்...உங்க கிட்டே...வாணிக்கும் உங்களுக்கும் பிடிக்கலைன்னா...நீங்க எங்க வீட்டுக்கு வந்து இருக்கலாமே...என் கூட..?
இந்த இல்லத்துல தனியா இருந்து கஷ்டப்படணுமா..?"

சில விநாடிகள் பேசாமல் இருந்த பார்வதியம்மா மெல்லிய குரலில் சொன்னாள்.

"நித்யா...அது சரியா இருக்காது...இந்த கேள்வியை ரொம்ப ஆரம்பத்துலயே உன் கிட்டே இருந்து எதிர்பார்த்தேன்.நீ கேக்கலைன்னதும் இந்த கேள்வி இனி வராதுன்னு நெனைச்சேன்.இன்னிக்கு திடீர்னு கேட்பேன்னு எதிர்பார்க்கலை."
நித்யா ஆர்வமாக கவனித்துக்கொண்டிருந்தாள்.
"நித்யா..என் வயசுக்கும் உன் வயசுக்கும் சம்மந்தமே இல்லை.நமக்குள்ளே இருக்குற ஒற்றுமைகள் வேற.நீ என்னை மதிக்கிறே,அது நல்லது தான். ஆனால் கார்த்திக் என்னோட மகன்.அவனுக்கு நீ மனைவியா வாய்ச்சிருந்தால் கூட ஒருவேளை நான் இந்த முடிவை எடுத்திருப்பேனோ
தெரியலை.ஆனா நிச்சயமா எடுத்திருக்கவே மாட்டேன் அப்டின்னு சொல்ல முடியாது.நீயும் நானும் இப்போ தோழிகள்.உறவுங்குறது வேறம்மா....
அது எதிர்பார்க்கும்.உனக்கும் எனக்கும் இடையில எந்த எதிர்பார்ப்புக்களுமே இல்ல.பரஸ்பரம் அன்பு மட்டும் தான் இருக்கறதால உன்னோட நான்
இருக்கணும்னு நீ நினைக்கிறே.ஆனா அது சரியானதில்லை.இருக்குற எடத்திலேயே நாம ரெண்டு பேரும் இருந்தா தான் இதுவும் சீரா ட்ராவலாகும். புரியுதா..?"

அமைதியாக இருந்தாள் நித்யா.அவள் பார்வதியம்மாளின் மறுப்பை எதிர்ப்பார்த்திருந்த போதிலும் அதை கேட்கையில் வலித்தது.
"நித்யா,என்னை தப்பா எடுத்துக்காதே.உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கணும்..சரியா புரிஞ்சுக்கிறப்போ வலிக்கத்தான் செய்யும்.இப்படி
இணக்கமா நெருக்கமா அடிக்கடி சந்திக்க எனக்குன்னு நீ மட்டும் தான் இருக்கே.அது புரியுது.ஆனால் ஒருவேளை உங்கூட நான் வந்து இருந்தா
என்னோட குணமும் எதிர்ப்பார்ப்புக்களும் மாறலாம்.நெருங்கி ஒரு விஷயத்தை இழக்கிறதை விட,இது தான் புத்திசாலித்தனம்.உங்கம்மாவோட
பாயிண்ட் ஆஃப் வ்யூல பார்.அவங்க கடமைகளை சரியா செய்திருக்காங்க.இப்போ தன் மகளோட பேரனோட அவங்க இருக்கும்போது நான் என்ன
பெயர் சொல்லிக்கிட்டு உன் வீட்டுல இருக்க முடியும்..?நான் எந்த ஓரத்துல உட்கார்ந்தாலும் அது அவங்களுக்கானது.."

"ஏம்மா...ரமேஷ் உங்களுக்குப் பிள்ளைதானே...?" சிரித்தாள் பார்வதியம்மா..
"ஆமாம்மா...ரமேஷும் என் பிள்ளைதான்.ஆனால் நான் அவனோட வந்தா கார்த்திக் அவனை வெறுப்பான்.இல்லியா..?இங்கே பார் நித்யா..
இந்த உலகத்துல எந்த உறவையுமே இன்னொண்ணை வெச்சி ஃபில் அப் பண்ண முடியாது.நாளைக்கே நானோ கார்த்திக்கோ மனசு மாறலாம்
.உங்க வீட்டுக்கு நான் வந்தா அது நடக்காமலே போயிடலாம் இல்லியா..?என்னோட கார்டியன் என்று நான் உங்க ரெண்டு பேர் பேரைத் தான் போட்டுருக்கேன்.இருந்தாலும் கார்த்திக் ஆதரைஸ் ஆனவன் இல்லையா எனக்கு..?" அமைதியாக இருந்தாள் நித்யா.எதுவுமே பேசத் தோன்றவில்லை.காரை இயந்திரத்தனமாக தான் செலுத்திக் கொண்டிருந்தாள்.மனசெல்லாம் பார்வதியம்மாளின் மென்மையான குரலில் ஒலித்த உறுதியான வார்த்தைகளைக் குறித்துக்கொண்டிருந்தது."நித்யா...ஊடு பயிர்னு விவசாயத்துல உண்டு...இன்னின்னதுக்கு இது இது தான் ஊடுபயிரா இருக்க முடியும்.அது விதிக்கப்பட்டது.மீறக் கூடாதது.ஸோ...நான் அதே போல தான்.எங்கே வாழமுடியும்னு ஒரு கணக்கு இருக்கு.நான் சந்தோஷமா இருக்கேன்.தனியா இருக்கேன்.இந்த ரெண்டுமே நிஜம்.புரிஞ்சுப்பேன்னு நினைக்கிறென்.இந்த டாபிக்கை இனி மேற்கொண்டு ஆராய வேண்டாம்."

இப்போது கார் மெல்ல போரூரின் சாலைகளில் நீந்தி "வாசஸ்தலம்"இல்லத்துக்குள் நுழைந்தது.
"அடுத்த ஞாயிறு வர்றச்சே மறக்காமே எம்.எஸ் சுப்புலக்ஷ்மி பாடின தமிழ்ப்பாடல்கள் சீடீ கொண்டுவர்றியா..?"என்றாள் பார்வதியம்மா.
"கண்டிப்பா கொண்டு வர்றேம்மா..."என்று கிளம்பினாள் நித்யா.
தன் செல்ஃபோனை எடுத்து ஆன் செய்தவள் நூறடி தூரம் போயிருக்க மாட்டாள்.உடனே அது ஒலித்தது.எடுத்தால் சாந்தா.
"ஏம்மா,நீத்து...உன் பிள்ளையை கொஞ்சம் என்னன்னு கேளு...வேட்டைக்காரன் படம் பாக்கணும்னான்.தேடி எடுத்துப்போட்டா விஜய் நடிச்ச
வேட்டைக்காரன் தான் வேணும்னான்.எனக்கு என்ன தெரியும்..?இப்போஓங்கி எறிஞ்சு ரிமோட்டை உடைச்சிட்டான்.ஃபோனை அவங்கிட்டே தரவா..?"என்றாள்.
"அம்மா...இரும்மா...நான் வந்துர்றேன்.சாயங்காலம் உன் கண் டெஸ்ட் பண்ண ஆஸ்பிடலுக்கு போய்ட்டு வந்துருவோம்.வர்ற வழில வெளியிலயே சாப்டுக்கலாம்..?ஃபோனை தீபு கிட்டே குடு நான் சத்தம் போடுறேன்"
இதை கொஞ்சமும் எதிர்ப்பார்க்காதவளாய் சாந்தா.."விடுறி...அவன் சின்னக்குழந்தை அவன் செய்றதை உங்கிட்டே  சொன்னதே தப்பு.நீ
அவனை திட்டினா அழுவான்..அப்புறம் யார்கிட்டே போகும் குழந்தை..?ஒழுங்கா காரை ஓட்டிட்டு வாம்மா.."என்றபடி வைத்துவிட்டாள்.

இப்போது யேசுதாஸ் பாடிக்கொண்டிருந்தார்.."ஒரு கதை இங்கு முடியலாம்..முடிவிலும் ஒன்று தொடரலாம்...இனியெல்லாம்.....சுகமே...!"

Last Updated (Saturday, 27 April 2013 04:51)