புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

செல்லுலாய்ட்

செல்லுலாய்ட்

ஜேசி டேனியல் செய்த ஒரே குற்றம் என்ன தெரியுமா..?தான் வாழ்ந்த நிலத்தில் மற்றெல்லாரையும் முந்திக்கொண்டு ஒரு கனவைத் துரத்தினபடி ஓடியது தான்.சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில் லூமியர் சகோதரர்கள் கண்டுபிடித்த சலனப்படத்தை மதராச பட்டினத்திலும் பம்பாயிலுமாக எடுக்கத் தொடங்கிவிட்டிருந்த அந்த நேரத்தில் தன் மலையாள நிலத்தில் நேஷனல் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்தை நிறுவி அதன் மூலமாய் முதன் முதலாய் ஒரு படத்தை தயாரித்து வெளியிட்டுவிடக் கனவு காண்கிறார் டேனியல்.
அன்பான குடும்பம் அவரது கனவு புரிந்தும் புரியாமலும் உடன் நிற்கிறது.ஏற்கனவே மரவியாபாரத்தில் தன் பரம்பரை சொத்தின் ஒரு பகுதியை இழந்து விட்ட பின் இரண்டாம் முயல்வாக சினிமா எனச்சொன்னால் இந்த 2013இலேயே யாரும் அனுமதிக்க மாட்டார்கள்.இந்த லட்சணத்தில் இந்தப் படத்தின் ஆரம்பம் 1928.சார்லி சாப்ளினும் மைக்கேல் பஸ்டனும் தாதா சாகேப் பால்கேயும் என நாலைந்து பேர்களே அங்கும் இங்குமாய் முயன்று கொண்டிருந்த காலம்.
ஆனாலும் ஜேனட் டேனியலின் அன்பு மனையாள் உடன் நிற்கிறாள்.தன் கணவனின் கனவைப் பங்கு போட்டு நிறைவேற்ற வந்த சகியவள்.அவள் தரும் ஊக்கத்தில் தனக்குத் தெரிந்த சினிமா பற்றிய வாசிப்பனுபவத்தை மட்டும் வைத்துக்கொண்டு சினிமா எடுத்துவிடலாம் எனக் கிளம்புகிறார் டேனியல்.பால்கேயை சந்திக்கிறார்.தன் புதிய படத்தின் தயாரிப்பில் மும்முரமாய் இருக்கும் பால்கேயால் அவருக்கு சிறிதளவு தான் உதவ முடிகிறது.என்றாலும் டானியல் ஃபிலிம் எங்கே கிடைக்கும் கேமிரா எங்கே வாங்கலாம் என்ற விவரங்களை சேகரித்து அவற்றை வாங்கிக் கொண்டு திருவனந்தபுரம் திரும்புகிறார்.
தன் படம் மலையாளத்தின் முதல் படமாகப் போவதை பெருமிதக் கனவாகவே காணத்தொடங்குகிறார் டானியல்.புராணங்களே படமாக்கப்பட்டு வருவதைத் தகர்த்து தன் படம் சமூகப் படமாக வரவேண்டும் என்று விரும்புகிறார்.தன் படத்தின் பெயரை விகதகுமாரன் (தொலைந்த மகன்) என வைத்து எளிமையான ஒரு கதையில் காதல் செண்டிமெண்ட் என அனைத்தையும் குழைத்து படைக்கிறார்.அதன் நாயகனாகத் தாமே நடிக்க முடிவெடுக்கையில் நாயகிக்கான அலைதல் ஆரம்பிக்கின்றது.
வரவழைக்கப்பட்ட நாயகி நிற்பதற்கும் நடப்பதற்கும் ஆயிரம் கட்டுப்பாடுகளை விதிக்க அவரது தொல்லைச்சூடு தாங்கவியலாமல் அவரைத் திரும்பி அனுப்புகிறார்.உள்ளூரின் கூத்து நாடகம் ஒன்றில் நடித்த ரோசம்மா நாயகியாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறாள்.கதைப்படி அவள் ஒரு நாயர் என்னும் உயர்சாதிப்பெண்.ஆனால் உண்மையில் அவள் மீன்பிடிக்கிற,அன்றைய காலத்தில் தாழ்ந்த சாதி என ஒதுக்கித் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவள்
ரோசம்மா ரோசியாக மாறி அற்புதமாய் பரிமளிக்கிறாள்.படம் முடிகிறது.விகதகுமாரன் மலையாள நாட்டின் முதல் திரைப்படமாகிறது.ஆனால் அங்கே தொடங்குகிறது சாதிக்ரூரம்.ஒரு தாழ்த்தப்பட்ட பெண் நாயராக நடித்ததற்காக திரையரங்கு அடித்து நொறுக்கப்படுகிறது.படம் அதன் பின்னால் ஓடவிடப்படவில்லை.உயர்சாதி இந்துக்கள் டேனியலை எச்சரித்துவிட்டு ரோசம்மா வீட்டைக் கொளுத்துகின்றனர்.அவள் ஊரை விட்டே தப்பி ஓடுகிறாள்.
1966ஆம் ஆண்டு அந்த ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த படமாக தேசியவிருதை தகழியின் செம்மீன் வெல்லும் செய்தியை வானொலியில் அறிவிக்கையில் ஒரு தேநீர்க்கடையில் பத்திரிக்கையாளர் ஸ்ரீனிவாசன் தேநீர் குடிக்கிறார்.அவரைத் தாண்டிக்கொண்டு  ஒரு ரிக்ஷாவில் ஏறிச்செல்லும் முதிய மனிதனைக் காண்பிக்கும் கடைக்காரர் அவர் தான் மலையாளத்தின் முதல் டைரக்டர் என சொல்ல யார் அது ஜே.சி டானியலா..?என அதிர்கிறார் ஸ்ரீனிவாசன்.

படம் இடைவேளையாகின்றது.

இடைவேளைக்குப் பின் 1966இல் டானியலை சந்திக்க பெரும் முயல்வெடுக்கும் ஸ்ரீனிவாசன் அவரது விகதகுமாரன் ரிலீசுக்குப் பின் என்னவாயிற்று என்பதை அறிய முயல்கிறார்.அறிந்துகொள்கிறார்.டானியலின் விகதகுமாரன் தான் மலையாளத்தின் முதல் படம் என அரசின் அங்கீகாரத்தை பெற முயலுகிறார்.அந்தப் படத்தின் பிரதியோ மூலமோ இல்லாமல் அது சாத்தியமில்லை என மறுக்கிறார் அமைச்சர்.அமைச்சரின் உள் எண்ணம் மலையாளத்தின் முதல் படம் என்னும் பெருமையை டி.ஆர்.சுந்தரம் என்னும் தமிழனின் பாலன் என்னும் படம் தான் பெற்றிருக்கிறது.ஒரு மலையாளிக்கு அந்த்ப் பெருமை சேரவேண்டியதில்லையா எனக் கேட்கும் ஸ்ரீனிவாசன் அமைச்சரின் பார்ப்பணப் பாசம் அதைத் தடுப்பதாக குற்றம் சாட்டுகிறார்.
மீண்டும் டானியலை சந்திக்கும் ஸ்ரீனிவாசன் அதற்கடுத்து டானியலின் வாழ்க்கை சிதைந்ததற்கான காரணங்களை அறிகிறார். டானியல் 1975ஆமாண்டு எந்த வித அங்கீகாரமும் இன்றி மரணிக்கிறார்.முதல் மலையாள நாயகியான ரோஸி ஊர்விட்டு ஊர் வந்து தன் பெயர் அடையாளங்களை மாற்றிக்கொண்டு தமிழகத்தில் வாழ வந்தது வரை தான் தகவல் இருக்கிறது.அதன் பின் அவரது இருப்புக் குறித்த எந்த சேதியுமில்லை.
எல்லாம் முடிந்த பிறகு 2000ஆமாண்டு விகதகுமாரன் தான் மலையாளத்தின் முதல் திரைப்படம் என்ற பெருமையை அரசு வழங்குகிறது.டானியலின் ஐந்தாவது குழந்தை ரோஹன் டானியல் வந்து தன் தந்தையின் அற்புதமான அந்த விகதகுமாரன் படச்சுருளை தான் ஐந்து வயது சிறுவனாக இருக்கும் போது தான் தான் கொளுத்தி விளையாடியதாகவும் அதன் அற்புதம் தனக்குத் தெரியாது என்றும் சொல்லித் தன் தந்தையிடமும் எல்லோரிடமும் மானசீக மன்னிப்பை வேண்டுகிறார்.டானியல் மலையாளத் திரையுலகின் தந்தை என்று போற்றப்படுவதுடன் படம் முடிகிறது.
சாதியின் க்ரூரங்களை மிக எளிமையாக அதே நேரத்தில் நெஞ்சில் செருகிய கத்தி போல இப்படம் விளக்குவது சிறப்பு.,மேலும் சினிமா என்னும் அதிகலை சாதியை வேரறுக்க ஒரு மேலான ஆயுதம் என்பதை சாதியின் தீவிர காலத்தில் ஒரு மானுடன் உணர்ந்துகொண்டது வெளிப்படும் இடம் அற்புதம்.ரோசம்மாவின் திரைப்படம் திரையிடப்படுகிற காட்சியைக் காண அந்தத் திரை அரங்கத்தின் உள்ளே அவளே அனுமதிக்கப்படாமல் வாயிலில் நிற்கும் இடம் கண்ணீர் ததும்புகிறது.சாதிவெறியர்கள் அவளை அங்கே இருந்தும் விரட்டுகையில் ரத்தம் கொதிக்கிறது.
கனவு கண்ட ஒருவனை அந்தக் கனவே மெல்ல மெல்ல உருக்குலையச்செய்யும் கதை செல்லுலாய்ட்.ஆனால் இறவாப் புகழை அந்த
மனிதன் ஜே.சி.டேனியல் பெற்றதென்பது மண்ணில் புகுந்த நீர் மழையாவதைப் போன்ற அற்புதம்.இந்த உலகம் வாழும் காலத்தில் மேதைகளைப்
புறந்தள்ளி விட்டு அவர்களின் காலம் முடிந்த பிறகு காவடி தூக்குவதைச் செவ்வனே செய்யும் என்பதற்கு ஏற்கனவே நூறு உதாரணங்கள்.டானியல் நூற்றியொருவர்.கோடியில் தனியர்.வாழ்க டானியல் புகழ்.