புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

மனுஷ்யபுத்திரனை என்ன செய்யலாம்..?
சமீப தினங்களில் மனுஷ்யபுத்திரனின் பெயர் மிக அதிகமாக இணையதளங்களின் எல்லாத் தெருக்களிலும் அடிபட்டுக்கொண்டிருக்கின்றது.மனுஷ்யபுத்திரனின் சமகாலத்தில் வாழ்கிற எல்லோரையும் ஒரு பொதுவெளியில் நிறுத்தி சில சேதிகளைச் சொல்லுகிற திருப்தியில் சிலபலரால் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிற அத்தனை பதிவுகளையும் படித்துக் கொண்டே இருக்கிறேன்.இது குறித்து மனுஷ்யபுத்திரன் நல்லவர் கெட்டவர் என்கிற இரண்டு சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றைத் தருகிறவர்களை விடவும் இந்தக் கணங்களை மெல்ல ஒரு சூட்சுமத்துடன் கடந்து செல்கிற கள்ளமௌனிகள் மீது தான் எரிச்சல் வருகிறது.போற்றலும் தூற்றலும் புரிதலுக்கு உட்பட்டவை.மிக நன்றாக அறிந்த ஒரு நபரை அதுவும் தன் செயல்பாடுகளால் நகர்ந்து நகர்ந்து இன்றைக்கு இலக்கியத்தின் சாத்தியங்களைத் தாண்டி முன் நகர முயலும் ஒருவரை இதைவிடக் கேவலமாக யாராலும் நடத்திவிடமுடியாது.உலகின் வேறெந்த நிலத்திலும் கருத்து முரண்கள் கொண்ட பலரையும் இந்த உலகம் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருக்கிறது.ஆனாலும் அங்கே எல்லாம் எதில் உடன்படுகிறோம் எதில் முரண்படுகிறோம் என்ற இரண்டு எதிரெதிர் சாலைகளும் அர்த்தப்பூர்வமான காரணிகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் என்பது நிதர்சனம்.இங்கே தான் ஒரு நபரின் அதுவரைக்குமான மொத்த வாழ்வையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தூக்கி எறிவதும் உணர்வுப்பரப்பில் அர்ச்சித்து அவனைக் காயடிக்கும் வேலைகளும் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.இன்றைக்கு மனுஷ்யபுத்திரன்.நேற்றுப் பலர்.நாளை யாரோ..?

முதலில் மனுஷ்யபுத்திரன் என்னும் ஒரு ஒற்றை நபரின் இலக்கிய செயல்பாடுகளை பதிப்பக செயல்பாடுகளை பத்திரிக்கை செயல்பாடுகளை விமர்சிக்கிற அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.இருளில் இருந்து கல்லெறிவது கோழைத்தனமல்லவா..?உங்களிடம் ஆத்திரம் தான் இருக்கின்றது.தவிர ஆதாரங்கள் இல்லை.அப்படி ஆதாரங்கள் இருந்திருந்தால் நீங்கள் செய்திருக்க வேண்டியது என்ன,,.?குற்றம் இழைக்கிற அனைவருக்கும் மாற்றாக விளங்கக் கூடியதும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரே கடைசிக் கடவுளாக விளங்கக் கூடியதுமாய் இருக்கிற நீதித்துறையின் கதவுகளைத் தட்டி இருக்க வேண்டாமா.?நீங்கள் யார்..?உங்கள் பெயர் என்ன..?மறைந்து நின்று உங்கள் சுய அடையாளங்களை மறைத்துக் கொண்டு நாட்டாண்மைத்தனம் செய்ய வருவது புரட்சியா..?புதுமையா..?இல்லை.அது வன்முறை.இன்றைக்கு புனைய முயலும் அனைத்துக் கதைகளின் பின்னேயும் தேவைப்படுகிற ஆதாரங்கள் இருக்கின்றனவா உங்களிடம்...?அப்படி இருந்தால் வாருங்கள்.கொண்டு வந்து தாருங்கள்,முகம் மறைத்துக் கொண்டு பொத்தாம் பொதுவாக உண்மை போலத் தொனிக்கிற எதுவும் உண்மை அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்.நெருப்பில்லாமல் புகையாது என்று பழையவாதம் பேசுகிற விஷம விரும்பிகளுக்கு ஒருவார்த்தை.உறைபனி கூடப் புகையும்.

பாதிக்கப்பட்டதாக வரிசையாகப் பட்டியலிட்டிருக்கும் அனைவரையும் பார்த்தால் கிட்டத்தட்ட பெரும்பாலானவர்கள் இன்னமும் உயிரோடு இருக்கின்றார்களே..அவர்களுக்கு இல்லாத அக்கறை இந்த இணையதள நற்செயல்வாதிகளுக்கு உண்டென்பதை நம்பவியலவில்லை.வெறும் பெயர்களையும் பயணக்குறிப்புக்களையும் வைத்துக் கொண்டு தரவிறக்கம் செய்யப்பட்ட தகவல்களோடு உங்கள் புனைவையும் சொந்த வக்ரத்தையும் கலந்து பிசைந்து புனைச்சுருட்டுக் கதைகளைப் புனைந்து விட்டு நியாயம் நீதி என்றெல்லாம் அவற்றிற்கு இடையில் சேர்த்துக்கொண்டால் அவற்றை ஏற்கமுடியுமா என்ன.?

மனுஷ்யபுத்திரனின் ஒழுக்கம் மனுஷ்யபுத்திரனின் தனிநபர் பழக்கங்கள் மனுஷ்யபுத்திரனின் நற்குணங்கள் தீயகுணங்கள் இவையெல்லாம் பொதுவெளிக்குச் சற்றும் சம்மந்தமில்லாதவை.பாதிக்கப்பட்டால் பாதிப்படைந்தவர் வழக்காடட்டும்.அது தான் எல்லோர்க்குமான பொது உரிமை.அதை விடுத்து மனுஷ்யபுத்திரன் என்பவரது செயல்பாடுகளின் திசைமாற்றங்களை எதிர்கொள்வதற்கான திராணியற்று எதையும் பேசலாம்.பெயரின்றி எதையும் எழுதலாம் என்று கிளம்புவது அறமா..?மனுஷ்யபுத்திரன் தவறுகள் செய்திருந்தால் தாராளமாக வழக்காடுங்கள்.முதலில் நீங்கள் வெளியே வாருங்கள்.உங்கள் வசம் இருக்கும் ஆதாரங்களை கோர்த்து முன்வைக்க முயலுங்கள்.அதையெலாம் விடுத்து தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனைத் தனியானவன் என்று கருதிக் கல்லெறியமுயலாதீர்கள்.அது ஆபத்து மட்டுமல்ல.அற்பத்தனமானது.

மேலும் மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து சில வருடங்களாக ஊடகங்களில் விவாதங்களில் பலரை எதிர்த்தும் பலரை ஆதரித்தும் பேசியபோதெல்லாம் அவரை கவனித்து வந்த பலருக்கும் அவரது சமீபத்திய நிலைப்பாடு என்பது கசக்கத் தான் செய்யும்.ஏன்..இந்தப் பதிவை எழுதுகிற எனக்கே அவர் தி.மு.க மேடையில் ஏறியது தொடங்கி கலைஞர் கருணாநிதியின் 90 கவிஞர் சந்திப்பில் கலந்துகொண்டது வரை அவர் மீது விமர்சனங்கள் இருக்கின்றன.அவற்றை அவரிடம் நான் வெளிப்படுத்தியும் இருக்கிறேன்.ஒரு மனிதனை ஒட்டுமொத்தமாக ஆதரிக்கவோ எதிர்க்கவோ தேவையில்லை என்பது ஒருபுறம்.அப்படி ஆதரிக்கவோ எதிர்க்கவோ நாமோ அவரோ ஒருவர்க்கொருவர் அடிமை வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கவில்லை என்பது தானே நிஜம்,..?மனுஷ்யபுத்திரன் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப்போட உரிமை இருக்கிறாற்போலவே யாரையும் எதற்காகவும் ஆதரிக்க அவருக்கான உரிமை அவருக்கு மட்டுமேயான சொத்தல்லவா.?அதனைப் பறிக்கமுயலும் ஆகம ஆண்டித்தனங்களை எவர் செய்தாலும் ஒத்துக்கொள்ளவே இயலாதென்பதை கற்றறிந்த சமூகம் அறியாதா..?

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை பகைவர்களும் இல்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்.பொதுவெளியிலும் அரசியலிலும் அதைத் தாண்டிய மனிதநேயம் இருக்க வேண்டிய ஒன்று என்பதை உணர்கிறீர்களா..?அதனை ஒத்துக்கொள்கிறீர்களா..?அப்படி உணர்ந்து ஒத்துக்கொள்ளும் யாரும் எவ்வளவு சதவீதம் கருத்துமுரண் கொண்ட ஒருவரை எதிரே சந்தித்தாலும் குறைந்தபட்சம் ஒரு புன்னகையுடன் கடந்து செல்ல முயல்வது என்பது ஒரு நாகரீகம் என்பதை அறியமாட்டீரா..?அல்லது அப்படிச் செய்பவனை அடித்துநொறுக்க முயல்வீரா..?
அது ஒரு குறைந்த பட்ச நேயமல்லவா..?எல்லோர்க்கும் இருக்கும் மாண்பல்லவா..?மற்ற எல்லா மாநில நாடுகளிலும் அப்படித்தானே முரண்பட்டவர்கள் திகழ்கிறார்கள்.நாம் மட்டும் ஏன் இப்படி..?சிந்திக்க வேண்டிய நேரமில்லையா இது.?

ஏமாற்றுக்காரன் என்கிறீர்கள்.அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதெல்லாம் செல்லாது.சட்டத்தின் உலகமய செயல்முறைகளில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி இப்படிக் கல்லெறிவது ஒருவழிச்சாலை அல்லவே..எதிர்த்திசையிலும் கற்கள் உண்டல்லவா..?இணையதள முதலாளிகளே...மனுஷ்யபுத்திரன் சீஸர் என்று நான் வாதிடவில்லை.அவர் சீஸர் இல்லை என்று முதலில் நிரூபியுங்கள்.ஒரு எழுத்துக்காரனை மேலும் மேலும் பலவீனப்படுத்துவதாய் எண்ணிக்கொண்டு கல்லெறியாதீர்கள்.சமூகம் இற்றுப் போகும்

என் பெயர் ஆத்மார்த்தி.இதற்குப் பதிலாய் என்னைப் பற்றி இணையதளங்களில் புறணியும் வதந்தியும் எழுதத் துவங்கும் எல்லோருக்கும் என் கண்ணீர் அஞ்சலி.

அன்போடு
ஆத்மார்த்தி