புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

காலத்தின் மேய்ப்பர்கள்

காலத்தின் மேய்ப்பர்கள்

யாரை மனதார வெறுக்கின்றோமோ அவரையே விரும்பத் தொடங்குவது பெரும்பாலும் தமிழ்த் திரையுலகில் நாயகனால் கடத்திச்செல்லப்படும் நாயகி அவனை வெறுத்துவெறுத்து ஒரு கட்டத்தில் அவனையே விரும்பத் தொடங்குவாள்.நிறையக் கண்டுகேட்ட உதாரணங்கள் தான்.எந்த ஒரு
மனிதனையுமே வாழ்நாளெலாம் விரும்புவோம் என்றோ வெறுப்போம் என்றோ முடிவு சொல்ல முடியாது.அந்த நதி பிறழ்கிற இடம் இன்னொரு ஆரம்பம்.அத்தனை அழகானதும் கூட.  பதின்ம வயதில் வீடு கசந்து வழியும்.அதே நேரம் வீதி இனித்து ருசிக்கும்.நான் பத்தாம் வகுப்பு வரை படித்த பள்ளியில் இருந்து கிட்டத்தட்ட துரத்தப்பட்டேன் என்பது தான் என்வரலாறு.பதினோராம் வகுப்பை திருநகரிலேயே தொடர நேர்ந்தது."முத்துத்தேவர் முக்குலத்தோர் பள்ளி" என்பது திருநகரின் நுழைவாயிலில் இருக்கும்.அதில் பதினோராம் வகுப்பு சேர்க்கப்பட்டேன்."எல்லோருக்கும் ஒரு சனி.எனக்கு மட்டும் ரெட்டை முனி" என்பது என் சாதகவிசேஷம்.அதென்ன எனக் கேட்டால் எனக்குப் பக்கத்து வீட்டுக்காரரே என் பள்ளியின்தலைமை ஆசிரியரும் கூட.

அவர் பேர் நடனகுருநாதன்.தன் பெயரைப் போலவே வித்யாசமானவர்.பள்ளியின்  உச்ச நட்சத்திரம்.உயரமான கரிய உருவம்.அந்தக் கருப்பு அவருக்கு கூடுதல் கம்பீரம்.கண்களில் தங்க சட்டகமிட்ட கண்ணாடி.எப்போதும் டக்-இன் செய்து வருவார்.மிக நாசூக்கான உடைகளைத் தேர்வெடுத்து அணிவார்.மிக அருமையான ஆங்கிலத்தை பேசவும் போதிக்கவும் தெரிந்தவர்.என்றபோதும் யாருக்குமே படிக்கிற காலத்தில் தன்னைப் பெற்றவர்களையும் ஆசிரியர்களையும் பிடிக்காது.அதற்குக் காரணம் படிப்பில் இருக்கிற பிணை.
பள்ளி துவங்கிய ஒரு வாரத்தில் மனம் வெறுத்துப் போனேன்.எப்போதும் படிப்பு படிப்பு என்று உயிரை வாங்கினால் வேறென்ன செய்வது..?எனக்குப் படித்தாலே பல்லெல்லாம் வலிக்கும்.செத்துப் போன தாத்தாக்களின் நினைவு வேறு சேர்ந்து அழுகையே வரும்.நடன குருநாதன் சாரின் ஸ்டைலே தனி.வருடத்தின் பெருமளவு நாட்கள் பள்ளி அதிகாலை ஆறு மணிக்குத் துவங்கும் ".ஸ்டடி" எனப் பெயர்.ஆறில் இருந்து எட்டரை வரை அமர்ந்து படித்து விட்டு வீட்டுக்குப் போய் குளித்து உண்டு கிளம்பி பள்ளிக்கு மீண்டும் ஒன்பதரைக்கு வரவேண்டும்.ஆயிற்றா பள்ளி மீண்டும் நாலு மணிக்கு விடும்.வீட்டுக்குப்போய் விட்டு மீண்டும் ஐந்தரைக்கு வந்தால் இரவு ஒன்பதரை வரை படித்துவிட்டுப் பிறகு தான் வீடு திரும்ப வேண்டும்,
கரும்புச்சக்கையாகப் பிழியப்பட்டேன் என்றால அது தான் உண்மை.நடனகுரு நாதன் சார் ஸ்டடி விஷயத்தில் வெகு கண்டிப்பு."நோ லீவ்.நோ லேட்".வராமல் இருக்கும் மாணவர்கள் எத்தனை பேரோ அத்தனை பேர் வீட்டுக்கும் ப்யூன் சகிதம் உடனே செல்வார்.அவரே செல்வார்..நேராக தலைமை ஆசிரியரே வீடு தேடி வந்தால்..?பெற்றோர் மெச்சுவார்கள்.மகனை மொத்துவார்கள்.பள்ளிக்கு செல்லுமாறு எத்துவார்கள்.இது ஒரு சாம்பிள் தான்.
இத்தனைக்கும் அது அரசு உதவி பெறும் மற்ற பள்ளிகளைப் போன்ற சாதாரணப் பள்ளிதான்.இந்த ஸ்டடிக்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு ஊதியமும் கிடையாது.மாணவர்களிடம் இருந்து கட்டணமும் வசூலிக்க இயலாது.நூறு சதவீதம் வணிகநோக்கமே இல்லாமல் எல்லா சிரமங்களையும் தாண்டித் தலைமை ஆசிரியர் எனும் ஒற்றை மனிதனின் விடாப்பிடிவாதத்தால் அந்த ஸ்டடி நடந்து வந்தது.
இன்றைக்கிருக்கின்றாற் போல் அப்போது டீவீ சேனல்கள் கிடையாது.நான் சொல்வது 93-94.தூர்தர்ஷனில் வெள்ளி வெள்ளிக்கிழமை ஒலியும் ஒளியும் எனப் போடுவார்கள்.அரைமணி நேரம் மட்டும்.அதுவும் எக்கச்சக்க விளம்பரங்களுக்கு மத்தியில் ஐந்து அல்லது ஆறு பாடல்கள் மட்டும்.அதைப் பார்ப்பதென்பது அன்றைய சிறுவர்களுக்கு தேனிச்சை.ஏதோ பறிகொடுத்தாற்போல வெள்ளிக்கிழமை மாலை முழுவதும் அழுதுவடிவோம்.என்ன செய்தால் ஒலியும் ஒளியும் தரிசிக்க முடியும் எனத் தெரியாமல் ஏங்குவோம்.
சில நல்முத்துக்கள் தேநீர் இடைவேளையின் போது பாத்ரூமில் இருக்கும் பல்பில் நாலணாக் காசை வைத்து ஸ்விட்சை போட மின் தடையானது.தொடர்ந்து பல நாட்கள் அப்படியானது.இருளில் இன்றைய தினம்போல ஜெனரேட்டரோ அல்லாது போனால் இன்வெர்ட்டரோ இல்லை.கரண்ட் போனால் போனது தான்.உடனே ஸ்டடி தடையாகி வீட்டுக்கு சென்றுவிடுவோம்.சும்மா இல்லை.கே என்று
கத்திக்கூப்பாடு போட்டபடி.ஹெட்மாஸ்டரை சகட்டு மேனிக்குத் திட்டிக்கொண்டே செல்வது இன்னுமொரு வழக்கம்.        ஒரு ஞாயிற்றுக்கிழமை கரண்ட்டை ஃப்யூஸ் அடித்துவிட்டுக் கும்மாளமாய்க் கிளம்பிச்சென்ற மாணவர்கள் அனைவரும் பள்ளி மத்தியில் இருந்த சிறு மைதானத்திற்கு அழைக்கப்பட்டோம்.சரித்தான் அடித்துக் கொல்லப் போகிறார்கள் என்று கிலியானோம்.,.        அங்கே நடுவில் ஒரு கொடிமரம் இருக்கும்..அந்தக் கொடிமரம் காலை பத்து மணிக்கு நல்ல வெய்யிலில் தகித்துக் கொண்டிருந்தது.அதன் கீழே சிமெண்ட் வட்டத்தில் அமர்ந்துகொண்டார் நடனகுருநாதன் சார்..யார் அழைத்தாலும் கேட்கவில்லை.மதியம் உணவையும் மறுத்தார்.நாங்களெல்லாரும் வகுப்புக்கு அனுப்பப் பட்டோம்.கரண்ட் கட் செய்வது யார் என செய்தவர்களே ஒத்துக்கொள்ளும் வரை தன் போராட்டம் தொடரும் என்பதை செயலில் காட்டினார்.அந்த தினத்தை என்னால் இன்றைக்கும் மறக்க இயலவே இல்லை.அந்த மனிதனை நான் மிகவும் வெறுத்தேன்.உடன் படித்த நிறையப் பேர் வெறுத்தார்கள் என்கிற கூட்டுசௌகரியமும் எனக்கு இருந்தது.அவரது கண்டிப்பின் பிணை என்னை அழுத்தியது.அவரை வெறுக்க அது போதுமானதாக இருந்தது.எங்கள் பள்ளியில் சகல அதிகாரங்களும் தன் கையில் இருந்தபோதும் குச்சிகளும் பிரம்புகளும் நொறுங்கும் வரை எங்கள் அனைவரையும் அடித்து நொறுக்கி யார் செய்தது எனக் கேட்டிருக்கலாம்.அவர் கண் அசைத்தால் எங்களை அடித்துப் பிய்க்க ஆசிரியர்கள் அனைவரும் வெறியோடு இருந்தார்கள்.ஆனால் அவர் செய்யவில்லை.

தன்னைத் தானே வருத்திக் கொண்டார்.காந்தியத்தையும் திருக்குறளையும் அகிம்சையையும் அறத்தையும் பாடத்திட்ட அளவுகளுக்கு ஏற்ப சொல்லித்தந்து விட்டு அவற்றில் எது எதை சாய்ஸில் விடலாம் என்றும் அறிவுறுத்தும் பள்ளிகளுக்கு மத்தியில் ஒரு தலைமுறையை முன்னேற்றிவிடும் ஆவலில் தன்னை வருத்திக் கொண்ட அந்த மனிதர் என் கண்களுக்கு ஆலமரமாய்த் தெரிந்தார்.எனக்கு வழங்கப் பட்ட 12 ஆண்டுக் கற்றல் வாய்ப்புக்களில் நான் மனம் கசிந்து உருகிக் கலைந்து வேறொருவனாக மாறியது அன்றைய தினம் தான்.எங்களை அடித்து நொறுக்கி இருந்தால் அதுவும் ஒரு நிகழ்வென்று
போயிருக்கும்.ஆனால் அவரது அஹிம்சை அவரை மட்டும் வருத்திக் கொண்ட விதம் எனக்குள் பல கசடுகளை அறுத்தது.        அதன் பின் வியர்வைத் தெப்பத்தில் வெகு நேரம் அமர்ந்திருந்த நடனகுருநாதன் சார் தவறை ஒத்துக்கொண்ட மூன்று மாணவர்களையும் கடுமையாக தண்டிக்காமல் மன்னித்து பள்ளியில் மீண்டும் அனுமதித்தார்.அதற்கு முன்னும் பின்னுமாக என்னை என் அகத்தை அவர் மாற்றியிருந்தது அவருக்குத் தெரியாது.நான் அவருக்குப் பெரியதொரு ரசிகனாக மாறி இருந்தேன்.அதன் பின்வந்த சொற்ப காலம் ஒழுங்காக ஸ்டடியில் கலந்துகொண்டேன்.பரீட்சையிலும் நல்ல மதிப்பெண் வாங்கித் தேறியதெல்லாம் வேறு.சொல்ல வேண்டிய இன்னொரு கதை இருக்கிறது.
எனக்கு ஒரே அக்கா உமா.மன்னர் கல்லூரியில் கணிதவியல் மூன்றாமாண்டு படித்துக்கொண்டிருந்தாள்.அன்றைக்கு செமஸ்டர் பரீட்சை.பேருந்துகள் எதோவொரு சாதிக்கலவர புண்ணியத்தில் திடீரென்று ஓடாமற் போயிருக்கிறது.பள்ளியில் ஸ்டடியில் இருக்கும் என்னை சந்தித்து என் சைக்கிளில் தன்னைக் கல்லூரிக்குக் கொண்டு விடச்சொல்லலாம் என நடந்தே பள்ளி வாசலில் வந்தவளை எதிரே பார்த்த நடனகுருநாதன் சார் தன் வண்டியில் ஏற்றிக் கொண்டு போய் கல்லூரியில் விட்டிருக்கிறார்.அதற்குள் தாமதமாகிவிட்டது.10.30க்குள் வந்தால் தான் அனுமதிக்க இயலும் என்று சொன்ன தேர்வுக் கண்காணிப்பாளரிடம் பேருந்துகள் ஓடாமல் திடீர் ஸ்ட்ரைக் ஆன விஷயத்தை புரியவைத்து என் அக்காவை மட்டுமின்றி .அன்றைக்கு எவ்வளவு தாமதமாக மாணவர்கள் வந்தாலும் தேர்வெழுத அனுமதிக்க சொல்லி வேண்டிவிட்டு அதன் பின் பள்ளிக்கு திரும்பியிருக்கிறார்.
இதையெல்லாம் அன்றிரவு என்னிடம் உமா சொல்லக் கேட்ட நான் நெகிழ்ந்தேன்.மறு நாள் நடனகுருநாதன் சாரிடம் ":ரொம்ப ரொம்ப நன்றி
சார்..."என்றேன்.  என்னிடம் சிரித்துக்கொண்டே.."அதுவும் என் மக தானேடே.....?பாவம் முளிச்சிட்டு நிக்குது...சும்மா விட்ற முடியுமாடே...?அதும் தவிர...உன்னைய அவ கூட அனுப்பிச்சா உன் ஸ்டடி ஒருமணி நேரம் பாளாகுமில்ல...?விடுவேனா..நானு...?"என்று கண்சிமிட்டினார்.நான் கல்லூரி முடித்து தொழில் தொடங்கிய பின்னர் திடீர் முடிவாக மாலை நேரக் கல்லூரியில் சட்டம் படிக்க சேர்ந்தார் நடனகுருநாதன் சார் .அதற்காக இரவு நேரங்களில் அதிகாலைகளில் தன் வீட்டு வாசலில் விஸ்வாசமாகப் படித்துக் கொண்டிருப்பார்.அந்தவழியைக் கடந்து செல்லுகையில் டூவீலரை நிறுத்தி "ஒழுங்கா படிங்க ஸ்டூடண்ட் சார்.,..ஸ்டடி வெச்சுருவமா.,.?"என்பேன்.
தன் பெரிய கண்களால் முறைத்துக்கொண்டே "சேட்டையாடே....."என்பவர்....உடனே சிரிப்பார்.பிறிதொரு காலத்தில் அதே பள்ளியைச் சேர்ந்த மாணவன் மாநிலத்தில் முதலாவதாக வந்ததை அறிந்த போது நானே வந்தாற்போல மகிழ்ந்துகொண்டேன்.                          ஆசிரியப்பணி உயர்ந்தது ஆசிரியர்கள் புனிதர்கள் என்று இவ்வுலகில் பலரும் பலமுறை எழுதியது தான் எனினும் ஆசிரியன் தன் பணிக்காலம் முழுவதும் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அத்தனை பேரின் மனங்களை ஆற்றுப்படுத்துகிறான்.ஆயத்த காலத்தின் மேய்ப்பர்களாகக் கிடைக்கிற ஆசிரியர்களைப் பொறுத்தே ஒருவனின் வாழ்வுயரங்கள் இருக்கின்றன.நல்லாசிரியர்களால் ஆனது இவ்வுலகு..இதை இல்லை என மறுக்கிறவர்கள் கல்லாததன் பேர் தான் கல்வி.