புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

கோடுகளும் வார்த்தைகளும்


கவிஞன் என்கிற கித்தாய்ப்பு பிடிக்கும் கிளார்க்காய் இருக்கிறேன் வயிற்றின் அபத்தம் என்ற ரமேஷ் வைத்யாவின் உயரங்களின் ரசிகன் நான் என்ற கவிதையின் ஈற்று வரிகள் மிகப் பொருத்தமாக இருக்கும் இந்த கட்டுரையைத் துவங்குவதற்கு.அடையாளங்களை அழித்துவிட்டு அடையாளங்களை  ஏற்படுத்திக் கொள்வது கொடியதும் இனியதும் கலந்த ஒன்று.கலை என்பதன் நிமித்தம் காலம் நிகழ்த்தும் தொடர் மனிதச் செரிமானத்தில் காலாவதிகளுக்கு மத்தியில் கரையேற்றமே.ஒரு காலகட்டத்தின் சமூக பொருளாதார அரசியல் பண்பாடு கல்வி நம்பிக்கைகள் அறம் இன்னபிற யாவும் கலையின் வாயிலாக அடுத்த காலகட்டத்துக்கு முன் நகர்த்தப் படுகின்றன.கலை இல்லாத வாழ்வு கொடியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

கைவிடப் பட்ட கலைகள் பலகீன தெய்வங்கள் போன்றவை.வீட்டு வாசலில் சின்னதாய் இருள் சிறையில் ஒரு கடவுளின் பொம்மையைக் கடுங்காவலில் வைத்துவிட்டு அதே கடவுளின் இன்னுமோர் சிலையைப் பல கல் தூரங்கள் பிரயாணித்துப் பார்த்துவருவது கவனிக்கத்தக்கது.ஆய கலைக'ள் அறுபத்து நான்கு என்பது மறுபரிசீலனைக்கு உரியது..மூடிய கைக்குள் என்ன இருக்கிறது என்று வினவுவதும் அதனை கண்டுபிடிப்பதும் ஒரு கலை..அதனை இன்றைய நவ யுகத்தில் குழந்தைகளும் கூடப் புறக்கணித்து விட்டன.

நிரந்தரித்துக் கொண்ட கலைகளின் பட்டியல் தனித்தது.எல்லா நிலங்களிலும் மொழியானது கலைகளின் உடல் மீது உள்ளே வெளியே ஆடிக்கொண்டிருக்கிறது..இசையிலும் நடனத்திலும் மொழியின் பங்கு உள்ளுறைகின்றது.பண்ணிலும் பாட்டிலும் மொழி வெளிப்படையானது.மொழியைப் புறக்கணித்து விட்டோ அல்லால் மொழியை உதாசீனப் படுத்தி விட்டோ கலைகள் வளர்ந்திருக்க முடியாது..மிக முக்கியமானதொரு கலை வடிவம் மொழிக்குச் சமமான செம்மை வாய்ந்ததாக ஆதிப்பழையதாக முன் முன்னர்த் தோன்றியதாக இருந்துவிட முடியுமா..?அங்கனம் முடியுமென்றால் அது ஒன்றன்றி வேறில்லை.ஓவியக்கலை.

எந்த மொழியிலும் எழுத்துக்கள் பிறந்ததன் பிற்பாடே அவையும் வளர்ந்து அதன் நிலம் சார்ந்த மானுடவாழ்தலை முன்னேற்றி தானும் வளர்ந்துகொண்டது என்பது நிசம்.வெறும் ஒலியில் வாழ்ந்து பன்னெடுங்காலம் தப்பிப் பிழைத்துவிட்ட சௌராஷ்ட்ரா போன்ற மொழிகளின் தேக்கத்தையும் செம்மொழியான தமிழ் மொழியின் பெருக்கத்தையும் நாமெல்லாருமே அறிந்து இருக்கிறோம்.மொழி எழுத்துக்களின் கைபிடித்து வளர்ந்தது,ஒவ்வொரு எழுத்தும் ஒரு மனிதனுக்கு சித்திரமாகத் தான் உள் நுழைகின்றது
ஓவியம் என்ற கலையின் மீது ஈர்ப்பில்லாதவர்கள் சொற்ப அளவில் இருக்கக் கூடும்.சித்திரம் கைப்பழக்கம் என்றாலும் கூட எல்லாரும் தம்கை சித்திரங்களை வெளிக்கொணர்ந்துவிட முடிவதில்லை.ஓவியத்துக்கு முதல் தேவை பொறுமை.இரண்டாவது தேவை மெய்ம்மை.மூன்றாவது தேவை அசாத்தியம்.நான்காவது தேவை கரைதல்.இன்னும் இந்தப் பட்டியல் நீள்பெரியது.ஓவியம் என்ற சொல்லே வசீகரமானது.

ஓவியம் என்பதனை நிதானித்தல் என்ற சொல்லாகப் புரிந்து கொள்ளலாம்.நிதானம்  என்பது ஒரு கற்பனித்த பிண்டத்தை உயிர்வார்த்து எடுப்பதே அன்றி வேறில்லை.சமான மன நிலைகள் வாய்க்கப் பெற்ற மனித இனத்தில் எல்லோருக்கும் சித்திரம் வசப்படும் எனச்சொல்ல வியலாது.அதற்காக ஓவியம் என்பது மேட்டில் நிற்பவர் கலை என்று நிறுவிவிடும் அபத்தத்தை அல்ல இக்கட்டுரை நிறுவ விழைவது.நிதானத்தை கைக்கொள்ளுதல் என்பது ஓவியத்திறனை வளர்த்துக் கொள்வதற்கு முன் முதற்பணி என்று கூறலாம்.

கவிதை என்ற சொல் இன்னுமொரு வசீகரம்.ஒரு கவிதையின் உடல் படிமம் தொன்மம் குறியீடு உருவகம் போன்ற பாகங்களால் ஆனது.இருந்துவிட்டுப் போகட்டும்.இசங்களுக்குள் புகுந்து வருவது சுய தெளிதலுக்கு உதவும்.போலவே படிமம் என்றால் என்ன..?தொன்மம் என்றால் என்ன..?குறியீடு என்றால் என்ன போன்ற வினாக்களுக்கான விடையறிதல் என்பது நிசமான ஞானம் மட்டுமல்ல.அவ்வவை எல்லாம் கவிதைக்கு மட்டுமன்று ஓவியத்துக்கும் பொருந்தும்.அவ்வாறு இருக்கையில் ஒரு கவிதை என்பது வெறும் வார்த்தைகளால் மட்டும் கட்டப்படுகின்றதா..?எந்த மொழிக்கவிதைக்கும் கீழே பொழிப்புரை எழுதி விளக்கம் சொல்லி வகைமைப் படுத்தி அதற்கெல்லாம் பின்னர் அந்தக் கவிதை புரிவிக்கப் பட்டே ஆகவேண்டும் என்று தீர்மானித்தல் என்பது வன்முறை.எந்த ஒரு கவிஞனும் அவனது கவிதைக்கு விளக்கம் கூற நேர்வதை சாபமாகத் தான் கருதுவான்...மொழியின் உச்ச பட்ச சாத்தியம் கவிதையாகத் தான் இருக்க முடியும்.இங்கே ஒரு நிறுத்தம்.மொழியின் உச்சபட்ச சாத்தியம் கவிதை என்றால் மௌனத்தின் பொதுமையின் உச்சபட்ச சாத்தியமாக ஓவியத்தை கருதவியலும்

மொழியின் உச்சபட்ச சாத்தியமானது கவிதை.ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு உடலும் உயிரும் இருக்கின்றது.எல்லாக் கவிதைகளும் நேரடித் தன்மை கொண்டிருப்பதில்லை.கவிதை வாசகனைக் கிளர்த்துகிறது.அவனோடு வினை புரிந்து கொண்டே இருக்கக் கூடிய முடிவிலி ஒன்றின் துவக்கமாகத் தான் அக்கவிதையின் வாசக கணம் அவனுக்குள் நிகழ்கின்றது.கவிதை என்பது நீட்சிக்கு வாய்ப்புள்ளது.எல்லாக் கவிதைகளும் முடிவுறு கவிதைகள் அல்ல.சில கவிதைகள் மௌனமாக வாசகனைப் பெயர்த்து வேறொருவனாக மாற்றிவிடும் மாயம் செய்யவல்லவையாக இருக்கின்றன.எந்த ஒரு கவிதையுமே திட்டவட்டமானவை என்று சொல்லிவிட முடியாது.கவிதை என்ற ஒன்றின் நீட்சியாக வாசகன் முடிவற்ற வெளியில் தன்னைப் புகுத்துகிற சாவியாக கவிதையை உணர்கின்றான்.புணர்வனுபவம் போல பிரசவ வேதனை இல்லை.பிரசவ வேதனை போன்றதல்ல கொடு நோய்மையில் இருந்து விடுபடுதல்.அப்படி விடுபடுதலும் தற்கொலை முயற்சியில் வெல்லும் கணமும் ஒன்றல்ல,வெவ்வேறு வேறுகள்,அடர்கானக மழையும் நகரசாலையில் பொழிகிற மழையும் ஒரே மழையின் வெவ்வேறு மழைகளாய்த் தான் இருக்க முடியும்.நம் முன்னோர் பார்த்த நதி அல்ல நாம் பார்ப்பது.மரணம் என்பது பயமாக ஒன்றாகவும் நிகழ்வாக வேறாகவும் இருந்துவிடுவதற்கான சாத்தியங்கள் நம் எல்லாருக்குமே உண்டு.இப்படி நமக்கு வாய்த்தவைகளுக்கு வாய்க்கிற நாம் என்ற பொதுமைக்குள் சமமற்ற வாழ்தல் அலைகின்றது.நிகழும் வாழ்தலில் கணங்கள் கடந்துகொண்டே செல்கின்றன.அவற்றினைப் பத்திரம் செய்துகொள்ள,மீபார்வை பார்க்கிற சுயநலத்தின் விழைதல் "கலை" என்றாகின்றது.கலையின் முயல்வுகள் இசை, நடனம் ஓவியம், நாடகம், கவிதை என பல்வேறு பாத்திரங்களில் வாழ்வின் தருணங்களைப் பத்திரம் செய்துகொள்கிறது.அத்தருணங்கள் நிறமற்ற நீர்மமாகின்றது.

இந்த உலகம் நிறங்களால் ஆனது.எண்களால் சபிக்கப் பட்ட மனித மனம் சர்வம் தசம மயம் என்று கேவுகின்ற அதே நேரங்களில் நிறங்களால் தம் வாழ்வை அலங்கரித்துக் கொள்கின்றது.எண்கள் இல்லாத வாழ்தலுக்கு வாய்ப்பற்ற மனிதன் நிறங்களின் வசீகரத்தில் இன்புறுகிறான்.தப்புதல் என்பது நிறங்களாலேயே நிகழும் என்பதில் அவன் தீர்க்கமாக நம்புகிறான்.அறியாமைக்கும் அறிதலுக்கும் மேதமைக்கும் பேதமைக்குமான இடைவெளிகள் சுக்குநூறாகின்றன நிறங்களின் பாய்தலில்.நிறங்கள் மனித வாழ்க்கையை அர்த்தப் படுத்துகின்றன.அல்லாது போனால் நிறங்களின் மூலமாகவே தப்புதல் நிகழும் என்ற அவனது நம்பிக்கையின் வேர்மண்ணாக நிறங்கள் கலைந்தும் சேர்ந்தும் அவன் வாழ்வெங்கும் நிரம்பித் ததும்புகின்றன.

ஓவியக்கலை என்பது உணர்தலின் நீட்சி.ஒருபோதும் உணர்விலாப் பெயர்ச்சி  மெய்மையோடிருப்பதில்லை.தன்னைத் தானே புணர்ந்து கொள்ளுதல் சுயவழிபாடு,இரக்கமற்ற தனிமையின் ஓலம்,கருணையற்ற வக்ரம்,தெய்வீகம் ஆகிய சொற்களின் அர்த்தங்கள் நம்மை நேரடியாக அயற்சியுறச் செய்யும் அதே நேரத்தில் இவ்விவை எல்லாமும் ஓவியங்களாக வரையப்படுகையில் மனித மனம் ஆழ்ந்த அமைதி ஒன்றில், சிக்கலற்ற தனித்துவமான தேடல் பூர்த்தி ஒன்றில், நெகிழ்வதை உணரலாம் அது ஓவியத்தில் மட்டுமே சாத்தியம்,.அல்லால் ஓவியத்தினளவு வேறெதிலும் சாத்தியமல்ல .

ஓவியமோ கவிதையோ இரண்டுமோ அல்லாது போனால் எந்தக் கலைவடிவமோ யாரால் யாருக்காக என்ற கேள்வி ஒன்றை எழுப்புவது நல்லது.ஆண்டாண்டு காலமாக கலை மேட்டிமை சாதியினரின் அந்தப்புற நடவடிக்கையாக இருந்தது.அது ஒரு மாபெரிய துரோகத்தின் வலியின் ஒரு சுவர்.அந்த துரோகத்திற்குப் பல சுவர்கள் உண்டு.கலை என்பது எல்லோருக்குமானது அல்ல என்ற வஞ்சகத்தில் தப்பிப் பிழைத்த கலைஞர்கள் எல்லாமும் சில குறிப்பிட்ட சாதியினரின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தாகவேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.ஒடுக்கப் பட்ட இனங்களைச் சேர்ந்த மக்கள் காலம் காலமாக கலை இலக்கியம் ரசனை இவற்றுக்கெல்லாம் அனுமதிக்கப் படாமல் இருந்ததை நாமெல்லாரும் அறிவோம் என்றாலும் சொல்ல வந்த சேதி வேறு.எத்தனைக் கெத்தனை ஆதிக்கமும் அடக்குமுறையும் இருந்தாலும் கூட கலையின் சகல பரிமாணங்களும் ஒடுக்கப் பட்ட மக்களின் வாழ்வியலுக்குள் நீக்கமற நிறைந்தே இருந்தது.அது அவர்களின் விடுதலைக்கான குரலாக இருந்தது.இனி அது விடுதலைக்கான கொண்டாட்டமாக இருக்கப் போகின்றது.

ஓவியங்களின் வகைகளும் முறைகளும் நம்பிக்கைகளும் விடுபடுதல்களும் காலமாற்றத்துக்கேற்ப உருவானவை.சர்ரியலிசமும் தாதாயிசமும் க்யூபிசமும் மேஜிக்கல் ரியலிசமும் இன்னபிற இசங்களும் சகல நிலங்களிலும் இருந்த நம்பிக்கைகளைத் தகர்த்து இன்னொன்றை நிறுவுதலை அனாயாசமாக செய்தன.கட்டுடைத்தல் என்ற வார்த்தை வேதமொழியானது.என்னளவில் அடுத்து வரப்போகும் புதிய கடவுளை எண்ணிப் பழைய கடவுள்கள் கடும் மன உளைச்சலில் இருக்கக் கூடும்.இன்னுமொரு அல்லது இன்னும் சில பல இசங்கள் தோன்றக் கூடும்.

கனவுகளை வெளிச் சொல்வதில்,பொய்மையின் நேர்மையை நம்மால் உணர முடியும்.எந்தக் கனவும் உணர்கையில் பிறந்து உடனே பறக்கும் பறவைக்கொப்பான வளர்சிதை மாற்றத்தை வெளி\ச் சொல்வதில் அடைகின்றது.அது கனவு காண்பதில் இருக்கின்ற அலாதி வசதி..கனவு என்ற சொல் போன்றே புனைவு என்ற சொல்லும் மிக இன்றியமையாதது.புனைவு செயல்பாட்டாளனுக்கு அதிகளவு சுதந்திரத்தை நல்குகின்றது.விளைவுக்கு நிகழும் விமர்சனங்கள் மறுமொழிகள் புனைவில் ஈடுபடுகின்ற கலைஞனுக்கு அசாத்திய பொறுப்புணர்வையோ அல்லாது போனால் அசாத்திய பொறுப்பின்மையையோ அல்லது இவை இரண்டின் இணைகலவையினையோ ஏற்படுத்தி விடுகின்றன.எல்லாக் கலைகளுக்குமான முதல் வேலியாக ஓவியத்துக்கும் நுகர்வாளன் தேவைப்படுகின்றான்.அவன் ரசிகனாக உருவெடுக்கின்றான்.ஓவியம் புரிதலுக்கான வெளியை ரசிகனுக்கான மனோ நிலைக்குள் வினைபுரிந்தபடி வாரி வாரி வழங்குகின்றது.ஒரு ஓவியம் ஒற்றைப் பார்வையையோ அல்லாது போனால் ஒற்றை அர்த்தத்தையோ சார்ந்து இருந்துவிடுவதில்லை.பன்முகவெளியில் ரசிகனின் கரம்பற்றி ஒரே நேரத்தில் பல திசைகளிலும் அவனை செலுத்திவிடுவதற்கான சாத்தியங்களை அதே ரசிகனின் ரசனை சார்ந்து முயற்சிக்கின்றது.

மன நிலை என்பது அடுத்த காரணியாகின்றது.மனம் நிலையற்றது.அந்த மனம் நிலைபெறும் எல்லா நிலைகளும் அல்லது நிலையின்றி அலையும் எல்லா நிலைகளும் அவனுக்குள் குதூகலிக்கிறது.அவனை நவ ரசங்களையும் உணரச்செய்கின்றது.அப்படியான மனதின் அமைதி நடுக்கம் நிலையாமை பயம் கோபம் வக்கிரம் சாந்தம் சந்தோஷம் சிருங்காரம் என எல்லாமும் எல்லாமும் ஓவியனின் தூரிகை முனையில் பவ்வியமாக கைகட்டுகின்றன.அவையே ஓவியத்தின் நாற்சதுரத்தின் அனுமதிக்கப் பட்ட கோடுகளுக்கும் வெண்மைக்குமான நிரம்புதல்களிலும் வெறுமைகளிலும் வழிந்து நிலைபெறுகின்றன.

சிற்பம் ஓவியம் டெரகோட்டா,மண்சிற்பம்,சாக்பீசில் குடைந்தெடுக்கப் படுகிற சிற்பங்கள்,அரிசியில் படம்வரைதல்,பூவேலை,தையல்,கோலம் ரங்கோலி,கண்ணாடியில் படம் வரைதல்,ம்யூரல் எனப்படுகிற நவகாலத்தின் கலந்துகட்டி சிற்போவியம்,மரச்சிற்பங்கள்,எனக் காலம் காலமாக இருந்துவரும் கலைவடிவங்களும் இன்றும் நேற்றும் புதிதாக இணைந்து கொண்டவைகளுமாக வாழ்தலின் கொண்டாட்டமாக இருக்கிற பலவகைமைகளின் பொது ஆரம்பம் ஓவியம்.இன்றைக்கு ஓவியம் என்பது தனி நபர்த்திறன் மட்டுமாக இல்லாது கலை சார் நடவடிக்கையாக மட்டும் இல்லாது அதுவே ஒரு மனிதனுக்கான வேலையாகவும் மாறிவிட்டது.கண்கண்ட சைத்தானான கணிணி ஓவியத்திலும் தன் சாஃப்ட்வேர் உப பூதங்களைப் பழக்கி அனுப்புகின்றது.உலகமயமாக்கலுக்கு முன்னும் பின்னுமாக இரண்டாகப் பிளந்திருக்கின்றன காலமும் நிலமும்.முன் பழைய காலத்தில் கலை என்பது அபூர்வம்.ஒரு ஓவியத்தின் ஒருமைப் பிரதி அன்றைய காற்றில் மிதந்து வரும்.இன்றைக்கு இயந்திரப் போலிகள் நம் எல்லாருடைய வீடுகளின் சகல அறைகளிலும் சகல கலை வடிவங்களின் போலிப்பிரதிகளை நிறுவி மகிழ்கின்றன.

என்றாலும் கூட இன்றைக்கும் ஓவியம் என்னும் கலை தன்னை மீட்டுக்கொண்டே முன்பயணிக்கிற வித்தையாகத் தொடர்ந்து வருகின்றது.அற்பமானதொரு காலம் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்கும் மனித வாழ்தலை நிரந்தரமாக்க சாகாவரத்தை அள்ளி அள்ளி வழங்குகின்றன சுருட்டி வைக்கப் படுகிற ஓவியங்களின் கீழே சின்ன லிபியில் இடப்படுகின்ற கையெழுத்துக்கள்.