புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

ஆத்மாநாம் – நினைவுகளை விதைத்தவன்

எனது பதின் பருவத்தில் நண்பர் ராஜசேகர் நாராயணசாமியும் நானும் காதலர்களுக்கு ஒப்பாக கடிதங்களில் திளைத்துக் கொண்டிருந்த நேரம். அவர் என்னிடம் முளைவிட்டிருந்த கவி ஆர்வத்தை பன்மடங்கு பெருக்கி நிறைய்யவே என் எழுத்துக்களை சிலாகித்தவராயிருந்தார். இன்னமும் முற்றிலுமாக கவிஞன் என்று என்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இருக்கிற எனக்கு அன்றைக்கு அவரது ஊட்டங்கள் நிரம்பவும் தேவையானதாயிருந்தன.

ஒவ்வொரு கடிதத்திலும் நான் என் கவி முயற்சிகளை எழுதி அனுப்புவேன். அவர் பதிலுக்கு பெயர் குறிப்பிடாமல் ஒரு கவிஞரின் கவிதைகளை தொடர்ச்சியாக எழுதி அனுப்புவார். பெயர் தெரியாது ஒரு கவிஞனின் எழுத்துக்களை தொடர்ந்து வாசிக்கிற அனுபவம் எனக்கு கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது.

யாரையாவது காட்டி “இவர் தான்” அந்தக் கவிதைகளை எழுதியது என்று சொல்லி அறிமுகப்படுத்தி இருந்தால் நான் என் வாழ்நாளெல்லாமும் அந்த நபரை விரும்பத் தயாராக இருந்த நேரம், ஒரு நாள் அந்தக் கவிஞர் ஒரு பெயராக முதன் முதலில்  என் வாழ்வில்  நுழைந்தார்.

ஆத்மாநாம்….

தன் பின்னர் சுஜாதா எழுதிய ஏறக்குறைய சொர்க்கம் நாவலின் தொடக்கத்தில் ஒரு கவிதை இடம்பெறும். அதே கவிதை அந்தக் கதையின் இறுதியில் முழுவதுமாக இடம்பெறும். அந்த கவிதை என்னை மிக மிகப் பாதித்தது.

அமரர் ஆத்மாநாம் சொற்ப காலங்களே இந்தப் பூமியில் வசித்து தன் வாழ்வையும் மரணத்தையும் தானே தீர்மானித்தவர். இன்றைக்கு சற்றேறக் குறைய முப்பதுவருட காலங்களுக்கு பிறகும் ஆத்மாநாம் நினைவுகளில் தக்கவைக்கப் படுவதற்கும், மறக்கவியலா மௌனத்தை தனது கவிதைகளின் மூலமாக ஏற்படுத்திச் சென்றிருப்பதுவும், தான் எழுதிய எழுத்துக்களின் அமரத்துவம் அவர் அவதானித்த ஒன்றாக இருந்திருப்பதுவும் காரணங்கள் என்றால் மிகையில்லை.

ஆத்மாநாம்… என்பது ஒற்றைப் பெயரா, ஒரு மனிதனின் சொற்பவாழ்வா என எனக்குள்ளே அதிசயித்துக்கொண்டே இருந்திருக்கிறேன். சந்திக்க முடியாத ஒரு மனிதனின் கவிதைகளாக எனக்குள் நுழைந்த ஆத்மாநாமின் கவிதைகள் என்ன செய்தாலும் மறக்கவோ கடக்கவோ இயலவில்லை. வாழ்தலின் ஆசீர்வாதங்களோடு இன்றைக்கும் எழுதிக்கொண்டிருக்க கூடிய பல கவிஞர்கள் எனக்கு ஆதர்சமானவர்களாகவும், அவர்களது எழுத்துக்கள் என் மனதுக்கு நெருக்கமானவைகளாகவும் இன்றளவும் உள்ளன. ஆனாலும் அந்த விருப்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு தனித்த நிலத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன ஆத்மாநாமின் கவிதைகள்.

இன்றைக்கு பரவலாக்கப்பட்ட எழுத்துக்களும், உலகமயத்தின் இலக்கிய முகங்களும், கிடைக்கப்பெற்றலின் சுகவாசமும், தகவல் தொடர்பு இணையம் ஆகியனவற்றின் கரநீட்சியும் எழுத முன்வருகிற சமகால கவிஞர்களுக்குப் பலவிதங்களில் உதவிகரமாயிருக்கின்றன  என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஆத்மாநாமின் வாழ்க்கை காலத்தில் அவர் தன்னை எந்த அளவிற்கு பரந்துபட்ட வாசிப்புக்குட்படுத்தி இருந்தார் என்பதுவும், சகலவிதங்களிலும் தன்னை update செய்துமிருந்ததையும் கவனத்திற்கொள்ள வேண்டும். மேதமைக்கும் பரந்து பட்ட வாசிப்புக்கும்  எத்தொடர்புமில்லை, எல்லாத் தொடர்புமுள்ளன என்றவிரண்டுமே உண்மைகள். ஆத்மாநாம் சகலகலா ரசிகர். மேதை.

திரு பிரம்மராஜன் அவர்களின் பன்னெடுங்கால முயற்சியில் வெளிவந்த ஆத்மாநாம் கவிதைகள் தொகுப்பு இன்றைக்கும் கிடைக்கப் பெறுகிறது. ஆனால் அதைத் தொகுப்பதற்கும் வெளிக்கொண்டு வருவதற்கும் பிரம்மராஜனின் சிரமங்கள் சொற்களுக்குள் அடங்காதவை. அந்த தொகுப்பிலிருந்து ஆத்மாநாமின் சில கவிதைகளை ஒரு சிறிய அறிமுகம் செய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகிறது.. அவரை/அவர் எழுத்தை அறிந்தவர்கள் மற்றொரு முறை நினைவில் கொள்ளவும், அறியாத புதியவர்களுக்கு அவரை அவரது எழுத்தின் வாயிலாக அறிமுகம் செய்வதுவுமே போதுமானது. பல்கிப்பெருகி தன்னை நேசிக்கச் செய்யும் மாயவித்தை ஆத்மாநாமின் எழுத்துக்களுடையது. சாகாவரம் அவருக்கு ஆத்மாநாம் விட்டுச்சென்ற கவிதைகள் வாயிலாக நேர்வது.

ஆத்மாநாம்:கவிதைகள்:

1.முத்தம்

முத்தம் கொடுங்கள்/பரபரத்து/நீங்கள்/முன்னேறிக்கொண்டிருக்கையில்/உங்கள் நண்பி வந்தால்/எந்தத் தயக்கமும் இன்றி/இறுகக் கட்டித் தழுவி/இதமாகத் / தொடர்ந்து/நீண்டதாக/ முத்தம் கொடுங்கள்……………./ விடுதலையின் சின்னம் முத்தம்………………../ இருக்கும் சில நொடிகளில் உங்கள் இருப்பை நிரூபிக்க/……………………. ஆபாச உடலசைவுகளை ஒழித்து.சுத்தமாக/முத்தம்/முத்தத்தோடு முத்தம்/ என்று முத்த சகாப்தத்தை/துவங்குங்கள்.

ஆத்மாநாமின் கவிதைகள் பெரும்பாலும் கட்டளைத் தொனியில் அமைந்திருப்பது அவரது ஆளுமையைப் பறைசாற்றுகிறது. மேடையில் நிற்பவனின் குரலாக அவர் ஒலிப்பதையே விரும்புகிறார். மேற்கண்ட முத்தம் கவிதையில் முத்தமிடுவதை ஒரு தேர்வாக அவர் குறிப்பிடவில்லை மாறாக வேறு தேர்வற்ற ஒற்றையாகவே முத்தத்தை முன்வைக்கிறார்.

2.சுதந்திரம்:

எனது சுதந்திரம்/அரசாலோ தனி நபராலோ/பறிக்கப்படுமெனில்/அது என் சுதந்திரம் இல்லை/அவர்களின் சுதந்திரம் தான். உனக்கொரு அறை/ உனக்கொரு கட்டிலுண்டு/ உனக்கொரு மேஜையுண்டு/ உனக்குள்ள ஒரே உரிமை/ சிந்திப்பது மட்டும்தான்/ மாற்றானைத் தூண்டும் உன் எழுத்து/ எப்படிச் சமூகம் அனுமதிக்கும்……………………. எவ்வளவு இல்லை நீ பார்க்க..?…………………………….. சாப்பிடு தூங்கு மலங்கழி/ வேலைக்குப் போ/உன் மீது ஆசை இருந்தால்/குறுக்கிடாதே.

தீர்க்கமாகச் சொல்லும் அதே வேளையில் மேதமையின் எள்ளலும் கலந்து உரைக்கிறார் ஆத்மாநாம்.

3.நான்:

இருபத்தி இரண்டு ஆண்டுகள்/படிப்பு வேலை தொழில்/எல்லாம் பார்த்தாகிவிட்டது./ சந்தித்த முகங்கள்/ மறக்கத் துவங்கியாயிற்று/ ……………………………………./ இருந்தும்/ இன்னும் ஒரு முறை கூட/ அண்டை வீட்டானுடன் பேசியதில்லை.

இந்தக் கவிதையில் இருபத்தி இரண்டாண்டுகள் வாழ்க்கையை, காலநகர்வைக் கொண்டும் பொது நிகழ்வுகளைக் கொண்டும் நகர்த்தி செல்கிறார் ஆத்மாநாம். மாற்றம் முன்னேற்றம் என்பனவெல்லாம் முன் நகர்தல் என்ற பதத்தில் சரியானவையாய்த் தோன்றினாலும் கூட தனி மனித வாழ்க்கை அடையக் கூடிய மாற்றமென்பது சிதிலமாகவே இருக்கிறது என்பதை இக்கவிதையின் முற்று வரிகள் அழகாய் விரிக்கின்றன.

4.நான்கு கவிதைகள் (அதில் நாலாவது)

ஒரு தலைப்பிடாத கவிதையாய்
வாழ்க்கை
ஒரு நாள் இரண்டு நாள் என
தொடர்ந்த நாட்களை எண்ணினேன்
காலையைத் தொடர்ந்து மாலை
இரவாகும் காலப் புணர்ச்சியில்
பிரமித்து நின்றேன்

கடற்கரையில்.

5.மனத்தின் கவிதைகள்:

கழிவறையின் விட்டத்தைப் பார்த்தான்/ தூக்கில் அவன் தொங்கப் போவதில்லை/ எனினும் பார்த்தான்.
இந்த வரிகள் நினைத்துப் பார்த்தலுக்குள் நிகழ்ந்து மீளும் தற்கொலை என்கிறதை அதிரவைக்கிறார் ஆத்மாநாம் தனது பதிவால்.

6.களைதல்:

என்னைக் களைந்தேன்/என் உடல் இருந்தது/என் உடலைக் களைந்தேன்/ நான் இருந்தது/நானைக் களைந்தேன்/ வெற்றிடத்துச்/ சூனிய வெளி இருந்தது/ சூனிய வெளியைக் களைந்தேன்/ ஒன்றுமே இல்லை.

தத்துவ விசாரணைகளை அவற்றிற்குள்ளிருக்கும் அபத்தங்களை பகடி செய்வதன் மூலமாய் பதில் தேவையற்ற தனது கூற்றுக்களை சொல்லிச் செல்கிற  கவிதைகளை அனேகமாக எழுதி இருக்கிறார் ஆத்மாநாம். மேற்சொன்ன கவிதை அவற்றுள் ஒன்று.

7.பதில்:  

குற்றுகர முற்றுகரச் சந்திகளை
சீர்சீர் ஆய்ப் பிரித்து
தளை தளையாய் அடித்து
ஒரு ஒற்றை வைத்து
சுற்றிச் சுற்றி வந்து
எங்கும் மை நிரப்பி
எழுத்துக்களை உருவாக்கி
பொருளைச் சேர்த்து
வார்த்தைகள் ஆய்ச் சேர்த்து
ஒவ்வொரு வாக்கியத்திற்கும்
கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்து
ஏதாவது சொல்லியாக வேண்டும்
நமக்கேன் வம்பு

மொழியின் நிபந்தனைகளைத் தாண்டத் துடிக்கும் கலகக்காரன் ஆத்மாநாம். பொதுவாக தன் கவிதைகளெல்லாவற்றிலுமே “பெரிய”, மற்றும் “அமைப்பு” ஆகியவற்றைச் சாடுவதை மறைநுட்பமாகவே கையாள்வதை தன் வழக்கமாகக் கொள்கிறார் ஆத்மாநாம்.

8.எதாவது செய்
எதாவது செய் எதாவது செய்
உன் சகோதரன் பைத்தியமாக்கப்படுகிறான்
உன் சகோதரி நடுத்தெருவில் கற்பிழக்கிறாள்.
சக்தியற்று
வேடிக்கை பார்க்கிறாய் நீ
ஏதாவது செய் ஏதாவது செய்
கண்டிக்க வேண்டாமா
அடி உதை விரட்டிச் செல்
ஊர்வலம் போ பேரணி நடத்து
ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள் கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்றுச் செய்யத் தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது
சரித்திரம் இக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும் வீரியமிழந்தவன் என்றும்
குத்திக் காட்டும்……….”

1984 வரை வாழ்ந்த ஆத்மாநாம்,(ஈழப்ப்ரச்சினை ஆரம்பத்தில்) இந்தக் கவிதையை குந்தர் க்ராஸ் எள்ளல் தொனியில் எழுதியதை தீவிரத் தன் தொனியில் எழுதிய இந்தக் கவிதை இன்றைக்கும் ஈழத்தோடு பொருந்திச் செல்வது ஆச்சர்யமான மெய்மையின் தொடர்ச்சியே.

ஆத்மாநாம் தனது கவிதைகள் தவிரவும் மிக நுட்பமான மொழிபெயர்ப்புக்கள், விமர்சனங்கள் என பல தளத்திலும் இயங்கியவர். அவர் இன்றைக்கு இருந்து இருந்தால் இப்போது தான் அறுபது வயதாயிருக்கும். 1951 ஆமாண்டு பிறந்தவர். அவருடன் சேர்த்து அவரது அதி உன்னத நுட்பமான தனித்த ரகசியமான மெல்லிய கவி உலகமும் அவர் எழுதவிருந்த எழுதியிராத அத்தனை கவிதாநுட்பங்களும் தற்கொலை செய்து கொண்டன.

அவரும் வாழ்ந்திருக்க வேண்டியவர். அவர் கவிதைகள் மட்டும் வாழ்ந்து கொண்டே இருக்கின்றன. அமரமொழியின் நாயகன் ஆத்மாநாம்.

(குறிப்பு:ஆத்மாநாம் கவிதைகள் பற்றி நினைவுகளை விதைத்தவன் கட்டுரையின் இன்னுஞ்சில பகுதிகள் தனி இணைப்பாக பின்னர் எழுதுவேன்.)

நன்றி:திரு பிரம்மராஜன் தொகுத்த ஆத்மாநாம் படைப்புகள் (காலச்சுவடு வெளியீடு)