புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

கடவுச்சொல் 1

கடவுச்சொல் 1

துரை புத்தகத் திருவிழா முடிந்தது.இந்த முறையும் சென்ற வருடங்களைப் போலவே மனுஷ்யபுத்திரன் வந்ததிலிருந்து திரும்பக் கிளம்பும் தினம் வரை எப்போதெல்லாம் முடிந்ததோ அப்போதெல்லாம் அவருடன் நேரம் கழிக்க முடிந்தது.ஐந்து வருடங்களுக்கு முன்னால் இதே மதுரை புத்தகத் திருவிழா அரங்கத்தில் தான் அவரை முதன்முதலாக சந்தித்தேன்.அதற்கு ஒரு
ஆண்டு முன்னால் நண்பர் ஒருவரிடம் இருந்து மனுஷ்யபுத்திரனின் செல்பேசி எண்ணை வாங்கி முதல்முறை அவரிடம் பேசுவதற்காக முயற்சிக்கையில் என்னென்ன பேசவேண்டும் என மனசுக்குள் ஒரு பட்டியல் செய்து கொண்டு துவங்கிய கணம் எல்லாம் மறந்து எதெதையோ வினவிவிட்டு வைத்ததும் நிழலாடியது.நான் தான் எழுதுகிறவனாக மாறி இருக்கிறேன்.அவர் அப்படியே இருக்கிறார்.ஒரு முழு மகாபாரதத்துக்கும் ஒரே கிருஷ்ணபரமாத்மா போல.
கடந்த இருபது தினங்களும் ஒட்டுமொத்த வருடத்தின் ஒழுங்கான சோம்பல் தினங்களில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டு இருந்ததன் ஒரு காரணம் புத்தகத் திருவிழா.வயல்கண்ட மாடினமாய் மாறி மாறி இரண்டு ஏற்படுத்தப்பட்ட வீதிகளில் உழன்று கொண்டே இருந்தது மனசு.எனக்கு மட்டுந்தானா என்று சோதித்துப் பார்த்தால் எழுதுகிற எல்லாருக்குமே ஏதேனும் ஒருவகையில் புத்தகக் கடலாய்க் காணக் கிடைக்கிற புத்தகத் திருவிழா சொர்க்கந்தான்.
சென்ற வருடம் என் 108 காதல் கவிதைகள் நூலுக்கான அறிமுக விழாவில் மனுஷ்யபுத்திரன் இளைய அப்துல்லா லிபி ஆரண்யா பிஜி சரவணன் ஆகியோர் பேசினார்கள்.நானும் இருந்தேன்.இந்த ஆண்டு செப் 1 ஆம் தேதி திலகபாமாவின் இதுவரையிலான மொத்தத் தொகுப்பை காவ்யா பதிப்பகம் கொணர்ந்தது.ஒரு கனமான புத்தகம்.அதற்கான விழாவில் தோழி தமிழச்சி அமிர்தம் சூர்யா பேரா.ஞானசம்மந்தன் ஆகியோருடன் நானும் பேசினேன்.ரமேஷ் வைத்யா சி மணி ஷண்முக சுப்பையா போன்ற கவிஞர்களைப் பற்றியெல்லாமும் பேசிவிட்டு திலகபாமா கவிதைகளுக்குள் நுழைந்தபோது நேரம் அவ்வளவு தான் என அச்சுறுத்தப் பட்டேன்.மேடைகள் வாழ்க.
ஏழாம் தேதி வதனம் பதிப்பகம் சார்பாக மனுஷ்யபுத்திரன் மனுஷி சபிதா ஆகியோர் எழுதிய ஐந்து புத்தகங்களுக்கு ஒரு விழாவை நடத்தலாம் என முடிவு செய்து அதற்குண்டான வேலைகளில் ஆழ்ந்ததிலும் ரெண்டு அல்லது மூன்று நாட்கள் விடாமல் நீர்வாள் சுழற்றிய மழையினாலும் கடைசி நிமிடம் வரை பரபர என்று இருந்ததில் புத்தகத் திருவிழா சென்றதே தெரியவில்லை.
அதிலும் ஏழாம் தேதி காலை மனுஷ்யபுத்திரன் தங்கியிருந்த விடுதிக்கு செல்லும் வழியில் எனது காரும் முன்னால் சென்ற சிறு லாரியும் முத்தமிட்டுக்கொண்டன.என் காரின் முன்புறம் மெல்ல நொறுங்குவதை வேறொன்றும் செய்யவியலாது பார்த்துக்கொண்டிருந்தேன்.தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் சென்றது என்று சொல்லலாம்.அதிலொரு சிக்கல்.வந்ததே
தலைப்பாகைக்கு மட்டுந்தான்.தலைப்பாகைக்கு வந்தது அத்தோடே போச்சு.
அதன் பின்னரும் மதியம் மதுரையின் புகழ் பெற்ற குமார் உணவகத்தில் விழாவுக்காக வந்திருந்த அபிலாஷ் சுகிதா
மனுஷி செந்தில்  ரவிக்குமார் சுந்தரவல்லி ஆகியோருடன் நானும் மனுஷ்யபுத்திரனுடன் மதிய உணவருந்தினோம்.சிரித்து சிரித்து
வயிறு வலித்ததில் காலை நிகழ்ந்த வாகனமுத்தம் மறந்தே போயிற்று.  மதுரை மருத்துவக் கழக உள்ளரங்கில் மிக நெகிழ்ச்சியாக நடந்தேறிய மாலை விழா முடிந்ததும் அன்றைக்கிரவு வீட்டுக்கு வந்த போது மணி 12க்கு மேல் ஆகியிருந்தது.மனசு லேசாயிருந்தது.


தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடல் உயிர் தத்துவமாய் நிற்கும்
தானே கடல்மலை ஆதியுமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே


திருமந்திரம் சிவனடியார்க்குச் சிவம்.,தமிழடியார்க்குத் தவம்.திளைக்கத் திகட்டாது.

பிளாக் காமெடி வகையறா படங்கள் தமிழில் சொற்பமாய்த் தேறும்.அந்த வகையில் புதியவர் நவீன் இயக்கி நடித்திருக்கும் மூடர்கூடம் குறியீடுகளாலான திரைக்கவிதை.வழக்கங்களின் தலையிலடித்து விட்டு இப்படி ஒரு படம் பண்ணப் பணம் மட்டும் போதாது.மிகுந்த தைரியம் வேண்டும்.வசன நேர்த்திக்காக மட்டும் இரண்டாவது முறை பார்த்தேன்.இந்த ஆண்டின் இதுவரையிலான சிறந்த படம். அவசியம் பார்க்க வேண்டியது.
இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் நூறு என்ற ஒரு குண்டுப்புத்தகம் அடையாளம் வெளியீடாக வந்துள்ளது.அதைத் தொகுத்திருப்பவர் வீ..அரசு.அவரது தேர்வெடுத்தலில் சுஜாதா எஸ்.ராமகிருஷ்ணன் ஜெயமோகன் ஆகியோருக்கு இடம் இல்லை.இந்த உறுத்தலைத் தவிர்த்தால் ஒரு ஐம்பது கதைகள் முக்கியமானவை.மிச்சம் செருகப்பட்டவை..நான் காசு கொடுத்து வாங்கிவிட்டேன் லைப்ரரியில் கிடைத்தால் படிக்கலாம்

குறையொன்றுமில்லை.

தொடர்வேன்


ஆத்மார்த்தி