புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

கடவுச்சொல் 2

கடவுச்சொல் 2 நட்பாட்டம்


ற்ற நண்பன் என்று யாரைச்சொல்வது..?ஒன்றுக்கு மேற்பட்ட நண்பர்கள் இருக்க வாய்ப்பதன் பேர் தான் வாழ்வு.உற்ற நண்பன் என்பது ஒருவனை அல்லது ஒருத்தியை நியமிப்பதன்று.அது ஒப்பனைகள் அற்ற ஒரு கணத்தில் உயிர் நெகிழ் தருணத்தில் இரண்டு பேர்கள் உணர்ந்துகொள்வது.உற்ற நண்பனை சந்திக்கிற பயணத்திற்குத் தானே வாழ்தல் என்று பெயர்..? நாமெல்லாரும் ஞாபக இயந்திரங்கள் தானே..?நினைவுத் தகடு நிரம்பிக்கொண்டே இருக்கிறது.முதல் மழையின் மற்ற பிரதிகளாய்த் தானே ஒவ்வொரு மழையையும் அணுகுகிறோம்.மழை நம்மை வாரி அணைக்கிற அன்னை போலவா எல்லா தருணங்களிலும் நிகழ்கிறது..?யார் வாழ்வில் நாம் முதன் முதலில் நண்பனாகவோ தோழியாகவோ நுழைந்தோம் என்று ஞாபகம் இருக்கின்றதா நம்மிடம்..?அதே
அந்த முதல் தோழமையுடன் இன்னமும் ஈரம் குறையாத நேசம் தொடர்கிறதா என்ற கேள்வியை எழுப்பிப் பார்க்கலாம் தானே..?யார் நமது முதல் சினேகிதம்..?

நடபாட்டம் என்னும் தொடரில் கிட்டத்தட்ட 150 கவிதைகளுக்கு மேல் பத்து வாரங்கள் எழுதிய அனுபவத்தின் ஈரம் இன்னமும் எனக்குள் காயவில்லை.எப்போதும் காயாது என்றே நம்புகிறேன்.நட்பு குறித்து எழுதுங்கள் என ஆனந்தவிகடனின் ஆசிரியர் கண்ணன் அவர்கள் என்னிடம் சொன்னபோது அதன் அபாயம் தெரியாதவனாக உடனே ஒத்துக்கொண்டேன்.நட்பு குறித்து சில வாரங்கள் எழுதுங்கள் என சொல்லி விட்டு அதன் இரண்டு பக்கங்களை எந்த வரிக்கட்டுமானமும் இல்லாமல் நிரப்பிக் கொள்ளும் சௌகரியத்தை எனக்குத் தந்தது விகடன்.முதல் இரண்டு வாரங்கள் எழுதியபோது ஒருங்கே பாராட்டுக்களும்
கிண்டல்களும் எழுந்தன.முகப்புத்தகத்தில் அதிஷா வினோ என்னும் பெரியவர் ஒருவர் அவை கவிதைகளா..?எனக் கேட்டார்.
அவர் கேட்டதற்கு அவர் பக்கத்திலேயே நான் சென்று அவை கவிதைகள் அல்ல என நிறுவுங்கள் என்றேன்.அதற்கு அவர் "எனக்குப் புரியவில்லை"என்று பதிலினார்.

அதிஷா என்றில்லை.இரண்டு வரிகளில் ஒருவன் எழுதுகிற எதை இதற்கு முன் நாம் பொருட்படுத்தினோம் என்று சிந்தித்தால் புத்திசாலித் தனமான வரிகள் எல்லாம் கவிதைகளாகாது என்று பதில் சொல்வது வழக்கமாகிறது.முந்தா நாள் நடந்த் ஒரு இலக்கியக் கூட்டத்தில் படியில் பயணம் நொடியில் மரணம் என்ற பேருந்து வாசகத்தைக் கிண்டலாகக் குறிப்பிட்டார் நண்பர் லிபி ஆரண்யா.அவை கவிதை ஆகாது என்ற சம்மதம் எனக்கும் உண்டு.அவற்றைத் தாண்டி அந்த இரண்டு வரிகள் நேர்த்திவைத்திருக்கிற கற்பித்தலை நம்மால் உதாசீனப்படுத்தவே முடியாது.நாலு அல்லது ஐந்து வரியில் அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தப்பா எதேனும் எழுதி ஒருவனுக்குக் கற்பிக்க முடியாத ஏதோ ஒன்றைப் படியில் பயணம் நொடியில் மரணம் என்ற அந்த வாசகம் நேர்த்தி இருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.ஒரு கவிதைக்குண்டான வழிபடுதல்கள் ஏதற்கும் ஒரு கவிதைக்குண்டான பரிவட்டங்கள் ஏதற்கும் தகுதியற்ற வரிகளில் ஒன்றாகவே அதுவும் இருந்துவிட்டுப் போகட்டும்.ஆனாலும் அதன் வீச்சு பெரியது.நிராகரிக்க முடியாதது.

இரண்டு வரிகள் மூன்று வரிகள் என எழுத ஆரம்பித்ததை எல்லாம் வெறித்தனமாக தள்ளி வைத்துவிட்டு
நட்பாட்டம் மூன்றாவது வாரத்திலிருந்து வேறோன்றாக மறுகிளம்பல் செய்தது.என்வாழ்வில் நான் அத்தனை  பாராட்டுக்களைக் கொத்துக் கொத்தாகப் பார்த்ததும் கேட்டதும் அந்த சமயத்தில் தான் முதன்முறை.விகடன் என்பது வெறும் பத்திரிக்கை மட்டும் அல்ல அது தமிழ் கலாச்சாரத்தின் தவிர்க்க முடியாத அணிகலன் என்பதை அழுத்தந்திருத்தமாக நான் எனக்கே நிகழ்ந்த சொந்த அனுபவத்தின் வாயிலாக உணர்ந்தேன். இன்றைக்கும் எங்கேயாவது யாராவது நட்பாட்டத்தின் கவிதைகளை சிலாகிக்கிறார்கள்.தென் ஆப்பிரிக்காவில் வசிக்கிற ரத்தின பாண்டியனும் கோவையில் வசிக்கிற பாலகணபதியும் ஒரே குரலில் உச்சி முகர்கிறார்கள்.கிட்டத்தட்ட அவர்கள் இருவரின் வாசகங்களும் ஒன்று தான் என்னுமளவுக்கு "ஆத்மார்த்தி..தமிழில் நட்புக் குறித்து எழுதப்பட்ட கவிதைகள் மிகக் குறைவு.அவற்றில் தவிர்க்க முடியாதவை வரிசையில் அறிவுமதி அண்ணனின் நட்புக்காலம் அதன் பின் உங்களின் நட்பாட்டம் தான்"என்று


ஒரு பள்ளியிலும் மூன்று கல்லூரிகளிலும் பேசுவதற்காக அழைக்கப் பட்ட போது நட்பாட்டம் கவிதைகளைப் படித்திருப்பதாகவும் அவற்றை மிகவும் ரசித்ததாகவும் அவ்வந்த தமிழாசிரியர்கள் பாராட்டியபோது நெகிழ நேர்ந்தது.அதே நெகிழ்ச்சியின் மாபெரிய வடிவமாக என்னை உணர்ந்தது மதுரையில் 1982ஆமாண்டு பசுமலை பள்ளியில் +2 படித்த மாணவர்களின் அலும்னி சந்திப்பு ஒன்றிற்கான அழைப்பிதழில் நட்பாட்டம் கவிதைகளையும் பதிப்பித்து அந்த விழாவில் நான் கலந்து கொண்டு நிச்சயம் பேசவேண்டும் என உருக்கமாக அழைத்தனர்.அந்த விழாவில் அடியேனும் கலந்து கொண்டதற்குக் காரணம் அழைப்பிதழ் அல்ல.அவற்றில் எடுத்தாளப்பட்ட விகடனின் நட்பாட்டம் கவிதைகள் தான்.


இந்தப் புத்தகத் திருவிழாவில் நட்பாட்டம் கவிதைகளுக்காக  முகம் தெரியாத வாசகர்களால் பாராட்டப் பட்டேன்."எப்போது நட்பாட்டம் புத்தகமாக வரும்?'என நிறைய்ய விசாரிப்புக்கள்.வரும்.வரும் ஜனவரியில் வரும் என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தேன்.  என் வாழ்வின் முதல் நண்பனாக என் நினைவில் தங்கியவன் பெயர் ஜோ.அவன் என்னோடு மூன்றாம் வகுப்பில் படித்தான். 7ஆவது வரை ஒன்றாகப் படித்தோம் என நினைவு.இப்போது எங்கே இருக்கிறான் எனத் தெரியவில்லை.அவனுக்கு நான் தான் முதல் நண்பனா எனத் தெரியாது.எனக்கு அவன் தான்.புதூரைச் சேர்ந்த அவனை மறுபடி பார்க்க ஆசை.அவனுக்கும் நட்பாட்டத்தில் பங்குண்டு அல்லவா..?

ஆனந்தவிகடன் எனக்கு அளித்த பெருவைரம் நட்பாட்டம்.அந்தத் தொடருக்கு என்ன பெயர் வைக்கலாம்
என நூற்றுக்கணக்கான தலைப்புக்களை யோசித்து திகைத்துக் கொண்டிருந்தபோது "நட்பாட்டம்னு வைக்கலாம் பாஸ்.நல்லா இருக்குல்ல..?"என்று கண்ணன் சார் கேட்டபோது மொழி படத்தில் எரிவதைப் போல பகலிலும் கூடப் பிரகாசிக்கும் நட்பாட்ட விளக்கு என் மனக்கண் முன் எரிந்தது.வியந்தபடியே "வெச்சிக்கலாம் சார்...நல்லா இருக்கு"என்றேன்.விகடனின் பொறுப்பாசிரியர் கார்த்திகேயன் என்னிடம் இருந்து கவிதைகளைப் பெறுவதே அலாதி தனி சுகம்.இருபது அனுப்புகையில் ஏழு ஓக்கே என பதில் வரும்.எனக்கு வெறி வரும்.இன்னும் இருபது அனுப்புவேன். அதில் இருந்து மறுபடி எட்டு ஓக்கே என்பார்.நான் செதுக்கும் ஒவ்வொரு வரிக்கும் பின்னால் நின்றுகொண்டு என்னைச் செதுக்கியவர் அவர் தான்.அவருக்கும் என் ஆயுள்கால நன்றிகள் சொல்லியே தீரவேண்டும். இன்றைக்கும் நட்புத் தொடங்குகிற நட்பில் அடங்குகிற நட்பாய் நெருங்குகிற நட்பில் உருகுகிற
அனைவருக்குமே  நட்பாட்டம் கவிதைகளை சமர்ப்பிக்கிறேன்.

தொடர்வேன்
ஆத்மார்த்தி

Last Updated (Sunday, 22 September 2013 18:52)