புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

கனவின் அழைப்பொலி

குப்பை பொறுக்குகிற ஒருவனைப்
பின் தொடர்ந்து செல்லலாம்.
அவன்
எந்தவிதமான ஒழுங்கையும் கடைபிடிக்காமல்
வீதிகளை அணுகுகின்றான்.
ஒரு முட்டுச்சந்தின் இறுதி வரை
இருபுறங்களிலும் திறப்பேதும் இருக்கும் என நம்புகின்றான்.
பார்வையை இடறும் எல்லாப் பொருட்களையும்
முதலில் எடுத்துத்
தன் தோள்சரியும் பையில் அடக்கிக் கொள்கிறான்.
எடை குறைவான பொருட்களைச் சேகரிப்பது சுலபமாயிருக்கிறது.
நல்ல பிளாஸ்டிக்கும் சுமாரான பிளாஸ்டிக்கும்
கணிசமாய்த் தேறுகிற தினங்களில்
அவன் வான் பார்த்து நன்றி பகிர்வான்.
தன்னிடத்துக்குச் செல்லும் வரை
கிட்டுகிற எல்லாவற்றையும் சேகரம் செய்கிறான்.
கொட்டிக் கவிழ்த்து
விலைபோகிறவைகளைத் தக்கவைத்துக்கொண்டு
விலையற்றவைகளை மீண்டும்
வேறோர் இடத்தில் எறிவதை வழக்கமாக்கி வைத்திருக்கிறான்.
பேப்பரில் சுற்றியபடி வந்துவிட்ட ஆணுறையையும்
ரத்தம் தோய்ந்த பஞ்சுத் துணுக்குகளையும்
உடைந்து போன கடவுள் சிலையையும்
கிழித்தெறியப்பட்ட கடிதசத்தியத் துகள்களையும்
பாதி எரிந்த  கரன்ஸிக் கட்டு ஒன்றையும்
சபித்தல் இல்லாமல் அணுக முடிந்தது அவனால்.
புலர்ந்துகொண்டிருந்த காலை வேளையில்
ஒரு கொழுத்த குப்பைத் தொட்டியைக்
குச்சி கொண்டு கிளறுகையில்
உள்ளே இருந்து கேட்ட குழந்தையின் முனகல்
தன் கனவின் அழைப்பொலியாக
நிரந்தரித்துப் போனதை நடுங்கியபடியே கேட்கிறான்.
அதனை மாற்றி விடுவதற்கான
வாடிக்கையாளர் சேவை மையத்தின்
தொடர்பு எண் கிட்டுகிற நாளை நோக்கித்
தன் பிரார்த்தனைகளை உதிர்த்தபடி
வாழச்சம்மதிக்கிறான்.
மற்றபடி சாலச்சுகம்