புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

கற்பனா

தத்ரூபனின் முன் நெற்றியில் வந்து விழக் கூடிய முடிக்கற்றை அவனது முகத்தின் கவர்ச்சியைப் பன்மடங்கு அதிகரித்தது.அப்போது தனக்கான காலை உணவை உண்டுவிட்டுத் தன்னறைக்குத் திரும்பினான். தன் அறைக்கதவைத் திறந்து உள்ளே சென்றவுடன் பூட்டித் தாழிட்டான் தத்ரூபன். அறையின் விளக்கைப் போட்டான்.அவனது கட்டிலில் போர்வை அசைந்தது.கட்டிலின் நடுவே இருந்த போர்வை அசைந்தது.அதை மெல்லத் தன் கைகளால் விலக்கித் தூர  எறிந்தான்.
கட்டிலில் சிறுகுழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களுக்கு உயிர் வந்தாற்போல் சிறு சிறு உருவங்கள் காணப்பட்டன.சிங்கம் புலி வேட்டை நாய் முதலான விலங்குகள்,இரண்டு  முதியவர்கள்,மூன்று பருவ வயதுப் பெண்கள் ஒரு மூதாட்டி,இரண்டு சிப்பாய்கள்,ஒரு கடுவன்  பூனை இரண்டு பாம்புகள்,எனக் கிட்டத்தட்ட எண்பது உயிருள்ள மனித மற்றும் மிருகங்கள்  அந்த கட்டிலின் நடுவாந்திரத்தில் படுத்திருந்தனர்.அவன் காலடியில் ஏதோ நிரட குனிந்து  பார்த்தான்."ஆவ்" என்ற சப்தத்துடன் உள்ளங்கையளவு இருந்த மூன்று  யானைகள் ஓடிச் சென்று அறைமூலையில் முடங்கின.
அரை அடி உயரமே இருந்த ஒரு முதியவர் அந்தக் கூட்டத்தின் தலைவர் போல  மிடுக்காகத் தெரிந்தார். சற்றே கோபமான குரலில் ."தத்ரூபன்..என்னை தூக்கிக் கொள்." என்றார். அவரைத் தன் இரண்டு விரல்களால் எடுத்து தன் வலது உள்ளங்கையில்
அமர்த்திக் கொண்டான்.அவரது கால்கள் அவனது கையினின்றும் வெளியே வழிந்து  தொங்கின.
"தத்ரூபன்...எங்களை எல்லாம் ஏன் இப்படி சித்ரவதை செய்கிறாய்..?" முகம் வாடிய  தத்ரூபன்..."அய்யய்யோ..என்ன தாத்தா இப்படி ஏசுகிறீர்கள்..?நான் என்ன சித்ரவதை  செய்கிறேன்..?உங்கள் எல்லாரின் மீதும் எத்தனை அன்போடு இருக்கிறேன்..?என்னைப்
போய்..."
அவன் முடிக்கும் முன்பே போர்வை விளிம்பிலிருந்து வெளியே வந்த யுவதி ஒருத்தி  சீறினாள்.."நிறுத்து உன் பசப்பலை...உன் மாய்மாலப் பேச்சில் மயங்கியது போதும்..நீ  உன்மத்தன்..வஞ்சகன்..சுயநல துரோகி...யாரோ உனக்கு வழங்கிய சாபத்தால் நீ வரைந்த  ஓவியங்களெல்லாவற்றுக்கும் உயிர் வந்தது.அது உன் குற்றம்.நீ வரைந்ததால் தானே  நாங்கள் உருவானோம்..எங்களை மறுபடியும் அரூபமாக்குவதாக வாக்களித்து விட்டு நீ  உன் வழியில் திரிகிறாய்.எங்களைப் பற்றி சிந்தித்தாயா..?"என்றாள் அவள்.ஒரு சுண்டு  விரலின் பாதியளவு இருந்த அவளது மார்பகங்கள் கோபத்தில் பொங்கிக் கொண்டிருந்தன .

தத்ரூபன் ஏதும் பேசாமல் அந்த முதியவரை கட்டிலில் சரித்து விட்டு தான் கொணர்ந்த  பொட்டலத்தினைப் பிரித்து ஒரு சாப்பாட்டுத் தட்டில் அதில் இருந்த விதவிதமான உணவு  உருண்டைகளை அடுக்கலானான்.அந்த மொத்த கவளங்களையும் ஒன்றாய்த் திரட்டினால்  ஒரு மனிதனுக்கு ஒரு வேளைக்கு உட்செல்லும் உணவில் முக்கால் பங்கு தான் இருக்கும்.
"எங்களின் கதை உனக்கு கேவலமாய்த் தானிருக்கும் தத்ரூபன்..நீ சுமக்கவியலாத சாபங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறாய்..."என எச்சரித்த அந்த முதியவர் அனைவரிடமும்.."ம்ம்..சாப்பிடுங்கள் "என உத்தரவிட்டார்.மனிதர்கள் ஒரு புறமும் மிருகவகைகள் மறுபுறமும்  அந்தத் தட்டைச் சுற்றி இரண்டு அரை வட்டங்கள் அமைத்தனர்.

2.அவர்களின் கதை இதுதான்.


தத்ரூபன் ஒரு ஓவியன்.வரமோ சாபமோ அவன் ஓவியக்கலையைக் கற்றுத்தேர்ந்து தனக்கென்று ஒரு ஓவியப் பட்டறையைத் துவக்கினான்.ஒரே நேரத்தில் வனவனாந்திரங்களின் வெவ்வேறு ஐந்து ஓவியங்களைத் தொடங்கி நிறைவு செய்கையில் தான் அந்த வித்யாசத்தை `உணரத்தொடங்கினான்.
அவன் எதை வரைந்தாலும் அந்த ஓவியம் உடனே நிஜமாயிற்று.அவனால் இன்றுவரை ஒரு ஓவியத்தைக் கூட முழுவதுமாகப் பூர்த்தி செய்ய இயலவில்லை.நதியை வரைந்த போது .நதி நிஜமாகவே புறப்பட்டோடியது.கானகத்தை வரைகையில் சின்னதாக ஒரு ஓவியத்தின்  சட்டகத்துக்குள் அடங்கக் கூடிய  கானகமொன்று மெய்யானது.தன் ஆர்வக்கோளாறால் மறு நாள் காலையில் பார்த்தால்....இத்தனை ஜந்துக்களும் மனிதர்களுமாய் அவன் அறை முழுவதும் குறுவுருவங்கள் நிரம்பித் ததும்பினர்.
அன்றிலிருந்து தன் தூரிகையைத் தூரத்தில் வைத்தான்.சின்னூண்டு யானையை என்ன செய்வது..?அதை விட 'கால் அடி' உயர பெண்ணை எங்கே விடுவது.?ஒரு பாம்பு, சின்ன மண் புழுவைக் கண்டாலேயே அஞ்சிக் கொண்டு அரற்றினால் அவற்றை எங்கே அனுப்புவது..?மொத்த மாகவும் பகுதிகளாகவும் தீர்வேதுமின்றி அலைந்தான் தத்ரூபன்.
எல்லாரும் உண்டு உறங்கலாயினர். ஒவ்வொன்றும் செய்கிற கொனஷ்டைகளும் கேட்கிற பதார்த்த வகை வகைகளும்..ஹப்பா...'தத்ரூபனுக் குத் திடீரென்று கற்பனாவைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியது.


3.அதே நேரம் கற்பனா தன் வீட்டின் சாவித் துவாரம் வழியே வெளியேறி யாருமற்ற சாலைகளில் நடந்து வந்துகொண்டிருந்தாள்.எதிரே வந்துசென்ற எவர் கண்ணுக்கும் அவள் தெரியமாட்டாள். அந்த நிசம் அவளுக்கு கனவைவிட இன்பத்தை வாரி வழங்குவதாயிருந்தது.            கற்பனா அவளது தாய்க்கும் தந்தைக்கும் திருமணமான மூன்றாம் நாள் "தங்களது முதல் குழந்தை ஒரு பெண்குழந்தையாகப் பிறந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?"
என்று இருவரும் ஒருமித்துச் செய்த கற்பனையைப் பிளந்து பிறந்தவள்.பிறந்து வந்த கற்பனையான அவளை பெற்றவர்களே அறிந்திருக்கவில்லை.அவளைப் பொறுத்தவரை அவள் தன் தாய் தந்தை யரோடு இருந்தும் வசித்தும் வளர்ந்தும் வாழ்ந்தும் வருகிறவள்.ஆனால் அவர்களைப் பொறுத்த மட்டில் "தங்களுக்குத் திருமணமாகி பதினேழு வருடங்களாகியும் ஒரு குழந்தை இல்லையே..?" என்ற ஏக்கம் ஒருபுறமும்
"திருமணமான ஒரு வருடத்தில் தங்கள் விருப்பப்படி ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தால் இன்னேரம் அவள் எவ்வளவு பெரிய பெண்ணாகி இருப்பாள்..?" என்ற அங்கலாய்ப்பு ,மறுபுறமும் கொண்டு வாழ்ந்து வந்தனர்.அவர்களறியாமல் அவர்களின் பெண்ணாகவே கற்பனா தன் அரூபமும் அசரீரமும் தந்த தைரியத்தில் சர்வ சுதந்தரியாகத் திரிந்தாள்.
தானெப்படி இருப்போம் என்றே தெரியாத ஒருவள் தான் கற்பனா.என்ன செய்தாவது தன்னைத் தானே ஒருமுறை பார்த்துவிட அவள் செய்த பிரயத்தனங்கள் அற்பமாய் முடிந்தன.ஒரு நாள் அவள் நிஜத்தை வரைவதற்கான மூலப்பொருட்கள் விற்கிற கடையிலிருந்து சில வண்ணங்களை திருடிக் கொண்டு நகர்ந்தாள். கற்பனாவின் பின்புறத்தில் ஓங்கித் தட்டிய ஆடவனைப் பார்த்ததும் ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கான இலக்கியங்களில் ஒட்டுமொத்தமாய்ச் சொல்லிவிடமுடியாத வெட்கத்தையும்
காதலையும் ஒருங்கே உணர்ந்தாள் கற்பனா..அதைவிட, "அவனது கண்களுக்கு மட்டும் ரூபவதியாய்த் தான் தெரிகிறோம்" என்ற நினைப்பே அவளுக்கு மிகவும் கிறக்கத்தைத் தந்தது.
அன்றிலிருந்து தத்ரூபனையே தன் நண்பனாகவும் காதலனாகவும் வரித்துக் கொண்டாள் கற்பனா.அவனிடம் அவள் ஒரே ஒரு வேண்டுகோளை வைத்தாள்."அன்பனே...சாத்தியமற்ற காதலின் பேரரசனே...எனக்காக...எனகாக என்னை ஒரு காகிதத்தில் ஓவியமாய் நீ தீட்டித் தருவாயா..?கண்ணாடி முன் நின்றால் கூட எனக்கு நான் தெரிவது இல்லை.வழிந்தோடும் நீரிலும் நான் அகப்படுவதில்லை.அன்பன்பனே...உன் கண்களுக்குள் தெரிகிற சின்னஞ்சிறு நிழலாட்டம் மட்டும் தானடா இப்போதைக்கு "நான்" என்பவளின்  சாட்சியம்.நீ ஒரு ஓவியனாக அமைந்தது என் அதிருஷ்டம்..எனக்காக என்னை வரைவாயா..?"எனக்
கண்கள் மல்கினாள்.
அவள் பேரழகின் மீது காதலும் அவளை உடனே அடைந்துவிடவேண்டுமென்ற இச்சையும் நெடிய காலம் அவளோடு கழிக்க வேண்டுமென்ற ஆவலும் அவள் மடியில் உடனே மரித்துப் போக வேண்டுமென்ற அவஸ்தையும் தத்ரூபனின் நெஞ்சத்தில் ஒருங்கே குழைந்தன .அவன் உடனே "உன்னை,நான்,வரையாமலா...?"எனக் கேட்டான்.
அந்தச் சந்திப்பு அவர்கள் இருவரின் உயிரையும் ஒரு கயிறு கொண்டு பிணைத்தது.ஆனால் மறு முறை அவளைச் சந்திக்கிறதற்குள் தன் தூரிகையைத் தூர எறியவேண்டிய நிர்ப்பந்தம் தத்ரூபனுக்கு நேர்ந்திருந்தது.அவன் வேறேதற்கும் இன்றி கற்பனாவுக்குத் தான் கொடுத்த சத்தியத்தின் ஒலிக்குறிப்புக்களைக் கூடத் தன்னால் காப்பாற்ற இயலாமல் போனதை எண்ணி வெம்பினான்.தன்னைக்கொலை செய்துவிடுமாறு காலத்தின் முன் மண்டியிட்டான்.எதுவும் நிகழாமல் சூன்யனானான்.
இன்னமும் தன் உருவப்படத்தை தத்ரூபனால் வரைந்து தந்துவிட முடியும் என்று கற்பனா நம்பிக்கொண்டிருந்தாள்.அது முடியாது என்று அறிந்திருந்த போதிலும் பொய்யாய் நடித்துக் கொண்டிருந்தான் தத்ரூபன்.அவனுக்கு என்ன செய்தாவது தன் அறைக்குள் வந்து நேர்ந்த அனைவரையும் மீண்டும் ஓவியங்களுக்குள்ளேயே திரும்ப அனுப்பிவிட முடியும் என்ற நம்பிக்கை
இருந்தது.அதற்கான முயல்வுகளில் வரிசையாகத் தோற்றுக்கொண்டே வந்தபிற்பாடு தான் தத்ரூபன் நம்பிக்கை அற்றவனானான்,

4.மா
லையாகியிருந்தது.வாயிற்கதவு திறந்திருந்ததை உணராத தத்ரூபன் தன் நாற்காலியிலேயே அமர்ந்தபடி உறங்கியதை உணர்ந்தான்.கண்விழித்தபோது கற்பனாவின் வாசனை அந்த அறையெங்கும் மிதந்தது.குள்ளபெரியவர் மட்டும் ஓரக்கண்ணால் எங்கேயோ பார்த்தபடி இருந்தார்.அவரிடம் "தாத்தா...கற்பனா வந்திருந்தாளா..?"என்றான்.
அவர் அதே திசையில் பார்த்துக்கொண்டே "ஆம் தத்ரூபன்..வந்தாள்..எங்களை பார்த்தாள். திடுக்கிட்டாள்.வரிசையாகக் கேள்விகள் கேட்டாள்.பதில்கள் பெற்றாள்.கண்ணீர்விட்டாள்.கிளம்
பிச் சென்றாள்.அவளது வாசனையால் இவற்றை எல்லாமும் நாங்கள் உணர்ந்தோம்."என்றார்.
தத்ரூபன் வேகமாய்க் கிளம்பித் தன் வாகனத்தில் ஏறி கற்பனாவைத் தேடிச்சென்றான்.கற்பனா நீர்த்தோட்டத்தில் சோகமே உருவாக அமர்ந்திருந்தாள்.அவளை நெருங்கி ஆதுரமாக அவள் பின்னந்தலையை வருடினான் தத்ரூபன்.கற்பனா விசும்பலானாள்.தனக்குத் தெரிந்த மொழிகளிலும் மௌனத்திலுமாய் மாறி மாறி அவளை சமாதானப் படுத்தினான்.நகர்தலற்ற
இருளில் முடக்கப்பட்டதாக இருவரும் உணர்ந்தனர்.    மெல்ல கற்பனா வாய்மொழிந்தாள்.
"தத்ரூபன்...நாமிருவருமே சேரமுடியாதவர்கள்.சேர்ந்தது வியப்பு.சேர்வது பிழை.இனி ஆகவேண்டியதை கவனி...உன் வாழ்விலிருந்து நான் விலகி விடுகிறேன்.உன்னால் உன் முதல் சத்தியத்தையே மெய்ப்பிக்க முடியாது.இந்த உண்மையைச் செரிக்க இயலாதவளாக நான் கிளம்புகிறேன்."என்றாள்.
"கற்பனா...நீ இல்லாத  பாழ்வாழ்வு ஏதற்கெனக்கு..?நான் முடிவெடுத்து விட்டேன்.என் உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறேன்.நீ நிம்மதியாய் இரு அன்பழகே.."எனத் தழுதழுத்தான்.
அவனை நெருங்கி வந்த கற்பனா..மெல்ல அவன் கன்னத்தில் இதழொற்றி விட்டு "சரி அப்படியானால் சேர முடியாத வாழ்வை விடுத்து சேர முடிகிற மரணத்துட் புகுவோம்.அதற்கென்ன தடை.?"என்றாள்.
இருவரும் அதன் பின்னர் பலவாறு விவாதித்தனர்.மரணத்தை விடக் கொடுமையானது அது குறித்த பயம்.அதை விட வக்ரமானது மரணம் வரும் வழி.அதை விட பெருந்துன்பம் எது வாக இருக்க முடியும்...?மரணத்தைத் தேர்ந்தெடுத்தல் தவிர..?விதவித விஷங்கள் கிட்டுகிற வணிகக் கூடத்துக்கு இருவருமாய் சென்று  மிகுந்த அலசலுக்குப் பின் "கல்விஷத்தை" தேர்வெடுத்தனர்.
அந்த விஷக்கடை வியாபாரிணி புன்னகையுடன் "பரிசோதனை செய்ய வேண்டுமா"எனக் கேட்டாள்.
தத்ரூபன் தலையாட்டினான்.,ஒரு சிறிய கண்ணாடிப் பெட்டிக்குள் முதலில் இரண்டு சுண்டெலிகளை விட்ட வியாபாரிணி அதை நன்றாகப் பூட்டி விட்டு மெல்ல ஒரு முனையில் இருந்த பொத்தானை அழுத்தினாள்.வானவில்லின் அத்தனை வர்ணங்களுடன் அந்த விஷமானது மெல்ல படர்ந்தது கண்ணாடிப் பெட்டியில்.ஒரு மைக்ரோ கணத்தில் டக் டக்கென்று ஏதோ சப்தம் கேட்க விஷம் நின்றுபோய் அந்த பெட்டியுள் இரண்டு கல்லாலான சுண்டெலி சிற்பங்கள் கிடந்தன.
"இது தான் கல்விஷம்.இந்த போத்தலில் இருக்கிற விஷத்தைப் பூட்டிய ஒரு அறைக்குள் படர்த்தினால் அந்த அறையினுள் இருக்கிற அனைத்துவகையான உயிரினங்களுமே கல்லாய்ச் சமைய வேண்டியிருக்கும். கவனம்..."என்றாள்.

முதல் முறையாகவும் ஒரே முறையாகவும் இருவரும் முழுவதுமாக ஒருவரை பிறர்க்கு அர்ப்பணித்து விடுவது என்றும் அதன் பிறகு தங்களைக் கல்லாக்கிக் கொள்வது என்பதாகவும் அவர்களின் முடிவு இருந்தது.

5.கற்பனா மிக அழகாக இருந்தாள்.அவள் செய்நேர்த்தியுடன் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அவளது நகநுனி துவங்கி கூந்தல் நுனி வரை மிளிர்ந்தது.அவளை அவளுக்கே மிகவும் பிடித்தது.பிரதிபிம்பத்தை காணவியலாத தன் பேரழகை தத்ரூபனின் விழிப்பாவையில் கண்டுணர்ந்தாள்.அவளுக்கு அழுகை முட்டிற்று.   அவள் கண்ணீர்த் துளிகளையும் பருகி விடும் அவசரகாமத்தில் அவளை வெறியோடு அணுகினான் தத்ரூபன்.கற்பனாவின் மேனியை ஒரு  இசை அமைப்பாளனைப் போல் அணுகத் துவங்கினான்
தத்ரூபன்.அவளை நீர்மமாக மாற்றி அப்படியே உறிஞ்சி விடவேண்டுமென்று எத்தனித்தான்.அவளோ அவனைத் தன் உள்நெருப்பால் பொசுக்கித் தன்னோடு கலந்துகொள்ள வேண்டுமென்று இயங்கினாள்.இருவருமே சப்தமற்ற பேரோசை ஒன்றைத் தத்தமது மௌனத்தின் உள்ளரங்கில் நிகழ்த்திக்கொண்டிருந்தனர்.தன்
னை ஒரு புத்தகத்தை போல மென்மையாக வாசிக்க வேண்டுமென்று கற்பனா விரும்பினாள்.ஆனால் தோல்கருவிகளைப் பிளந்து அறைகிறாற் போல் மிகப் பலமாக வாசிப்பதையே தத்ரூபன் விழைந்தான்.
'கூடல் என்பது மலைப்பாதையில் ஏறும் வாகனம் போன்று துவங்குகிறது.பின் வேகமெடுக்கையில் அது உடல்களின் சமவெளியில் ஆத்திரத்தோடு பாயும் வெள்ளம் போல அலட்சிய வெறி கொள்கின்றது.ஆனால் அதுவே உச்சத்தை அடைகையில் காமம் சரிவுப்பாதையில் இறங்குகிற வாகனத்தைப் போலத் தலைதெறிக்க விரைகிறது.மோதி விளையாடும் இச்சையுடனேயே முழுப்பயணமும் நேர்கிற அபூர்வம் அது.'
கற்பனா தன்னை இழந்து தன்னையே அடைந்துகொண்டிருந்தாள்.அவளது உடலின் சகல பகுதிகளையும் அவள் தத்ரூபனிடத்தில் ஒப்புவிப்பதை விரும்பினாள்.தத்ரூபனின் உடலை ஒரு வனத்தை முதல் முறை ஆக்கிரமிக்கிற வஞ்சகக் கூட்டத்தின் தீப்பந்தங்களைப் போல அழித்துக்கொண்டிருந்தாள் .கேள்விப்பட்டதைப் போலப் பன்மடங்கு தன்னை அதிகரித்துக் கொள்ளும் மாயச்சிற்பமாக அங்கே காமம்  நிறைந்து வழியலாயிற்று.
அந்த நேரத்தில் கற்பனாவுக்கு ஏற்கனவே தானும் தத்ரூபனும் பேசி வைத்தாற்போல கூடலை முடித்துக் கொண்டு மரணத்தை தனிக்க நிகழ்த்துவதில் ப்ரியமில்லாது போனது.அவள் உச்சபட்சமான இன்பக் கணத்தில் இருந்தாள்.அவளது இடது கரத்தினுள் அந்த கல்விஷக் குடுவை இருந்தது.அவள் அதன்  மூடியை மெல்லத் திறந்தாள்.    இப்போது காமத்தின் வினாத்தாளை முழுவதுமாகப் பூர்த்தி செய்து விட்ட திருப்தி அந்த இரண்டு பேர் முகங்களிலும் தெரியத் துவங்கிய கணத்தில் கற்பனா தன் இடது கையில் இருந்த கல்விஷக் குடுவையை சடாரென்று கட்டிலுக்குப்
பக்கவாட்டுச் சுவரில் எறிந்தாள்.பல சுக்குகளாய் அது உடைந்...........ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ..................