புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

கடவுச்சொல் 4 காதல் என்றால் என்ன..?


காதல் என்றால் என்ன..?


ப்படி ஒரு கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று இன்றைய தினம் விடிந்த போது எனக்குச் சொல்லப்பட்டிருக்கவில்லை.

இந்தக் கேள்விக்குள் நான் அழைக்கப் பட்ட சூழலைச் சொல்வதற்கு முன்னால் வேறு சில விஷயங்களை இங்கே பகிர்ந்துவிட்டுத் தொடரலாம் என நினைக்கிறேன்.எனக்கு வயது 36. 77 ஆமாண்டு ஒரு ஜனவரி ஞாயிற்றுக்கிழமை நான் பிறந்தேன்.என்பெற்றோருக்கு எனக்குமுன்னால் ஒரு பெண்குழந்தை.அவள் என்னைவிட ரெண்டே முக்காலாண்டுகள் மூத்தவள்.என் அக்காள். என் குடும்பம் மிடில் கிளாஸ் எனப்படும் மத்ய தரத்தினுள் புகுவதற்குச் சிரமப் பட்டுக் கொண்டிருந்த நேரம் என் பால்யகாலம்.கேட்பன எதுவும் ஒழுங்குறத் தரப்படாத ஒரு வாழ்வாரம்பத்தில் எனக்குத் தேவைக்கு அதிகமாகத் தரப்பட்ட ஒற்றைப் பொருளின் பெயர் புத்தகம்.
வீடெங்கும் புத்தகங்கள் இடறிக்கிடக்கிற சூழலில் தான் நான் வளர்க்கப் பட்டேன்.பொருளாதாரச்சுமையை என் அம்மா சுமந்தாள்.என் தகப்பன் ஒரு தோல்வியுற்ற தலைவன்.மெல்ல ஒரு கூட்டத்திலிருந்து பின் தங்கி வெளியேறி அமைதியாகி அதை விட மென்மையாக இறந்து போன ஒருவரின் மகன் நான். ஏழ்மை என்னைக் கட்டமைக்கவில்லை.மாறாகக் கனவுகள் என்னை வளர்த்தன.என் ஆதியாரம்பம் தொட்டு எனக்குக் கிடைத்த அளவை விடத் தனிமையை நான் நேசித்தேன். எனக்குள்ளே பேசிக்கொண்டே இருந்தேன்.என்னைக் காதலித்தேன்.வெறித்தனமான நார்ச்சிஸ்ட் நான் என்பது பின்னால் எனக்குத் தெரியவந்த போது ஒரு மென் புன்னகையோடு அதனை எதிர்கொண்டு கடந்து சென்றேன்.
படக்கதைகள் மாத நாவல்கள் விளையாட்டுப் பத்திரிக்கைகள் எனக் கலந்து கட்டியாக நான் வாசித்துக்கொண்டே இருந்தேன்.அஜாத சத்ரு என்று கோவி மணி சேகரனின் தொடர்கதை ஆனந்தவிகடனில் வந்த போது எனக்கு வயது 7.அதன் கதையோட்டத்தில் ஏதேனும் சந்தேகம் என்றால் என் அப்பா அல்லது என் அக்காள் என்னிடம் தான் கேட்பார்கள்.அந்த அளவுக்குக் கடும் வரலாற்றுத் தமிழைச் சரளமாக மனதில் நிறுத்தியபடி அமைந்தது என் ஆரம்பம்.
பன்னிரண்டு வயதில் சர்வ அலங்காரங்களும் எனக்குள் புகுந்திருந்தன.காதல் என்றில்லை.காமம் கருக்கலைப்பு கொலை மரணம் கவிதை என பன்னிரெண்டு தொடங்கிப் பதினைந்து வயதுக்குள் அனேக சுஜாதா நாவல்களை சிறுகதைகளைத் தாண்டிக் கொண்டிருந்தபோது தான் அதே சுஜாதாவின் கடைசிப்பக்கங்கள் முதலான அவரது அ-புனைவு தரிசனங்கள் எனக்குள் வேறொரு முக்கியமான கதவைத் திறந்து வைத்தன. கல்யாண்ஜி கலாப்ரியா விக்கிரமாதித்யன் ரவி சுப்ரமணியன் மீரா பிரமிள் நகுலன் மனுஷ்யபுத்திரன் கோணங்கி ரமேஷ் ப்ரேம் இறையன்பு மாலன் தேவன் காஸ்ரீஸ்ரீ பி.ஸ்ரீ பிவி.ஆர் மாயகாவ்ஸ்கி தஸ்த்யாயெவ்ஸ்கி தல்ஸ்தோய் நீட்ஷே ஓஷோ பாலகுமாரன் ஆத்மாநாம் ஆ மாதவன் கோபிகிருஷ்ணன் ராஜநாராயணன் குட்டிரேவதி அம்பை தொடங்கி எண்ணற்றோரைக் கரைந்தும் கலந்தும் கடந்தும் ஓடிக்கொண்டே இருந்தேன்.
நான் எழுத வந்தது வேறாச்சரியம்.எனக்குத் தெரியும் எனக்குள் எழுத்து உண்டென்பது. ஆனாலும் சோம்பல் அல்லாத வேறோர் தயக்கம் இருந்துகொண்டே இருந்தது.இரண்டொரு நண்பர்கள் வெற்று விமர்சகன் என்று என்னைக் கொம்பு சீவி விடத் தொடங்கினேன் எழுதுவதை. எழுத்தை தயாரித்துக் கொண்டிருந்த பல பலகாரச்சிற்பிகளுக்கு மத்தியில் எழுதி எழுதியே என்
எழுத்தை நானும் பிறர்போலவே மதிப்பிடவும் கண்டுணரவும் தலைப்பட்டேன்.
இலக்கிய எழுத்து என்ற வகைமைக்குள் எந்தவகையிலும் சிக்காமல் அதன் நண்டுப்பிடிகளை தாண்டியோடியபடி மூன்றாம் ஆண்டை நிறைத்து நாலாம் ஆண்டினுள் அடியெடுத்து வைக்க இருக்கிறேன். நிற்க..இது சுய பிரதாபம் அல்ல.என் வாழ்வில் மற்ற எல்லாரையும் விட என்னைக் காதலித்துக் கொண்டே இருக்கிறவன் நான். இதைத் தான் நீட்டியும் முழக்கியும் இதுவரை சொல்லிக்கொண்டிருந்தேன் என நம்புகிறேன். இப்போது மீண்டும் இந்தப் பகிர்வின் ஆரம்பத்துக்குச் செல்லலாம்.
இரு சக்கரவாகனத்தில் எங்கிருந்தோ வீடு மீண்டுகொண்டிருந்த போது ஒரு அழைப்பு வந்தது செல்பேசியில். பேசியவர் தன் பெயரை வெளியே சொல்லக் கூடாது எனச் சொல்லி இருக்கிறார்.அதனால் அவர் பெயரை யாமி என்று வைத்துக்கொள்வோம்.யாமி ஒரு கல்லூரி மாணவி.மதுரை புத்தகத் திருவிழாவில் எதிர்ப்பட்ட என்னை நிறுத்தி மனக்குகைச் சித்திரங்களையும் நட்பாட்டத்தையும் காரண காரியங்களோடு அலசி பாராட்டினார்.என் மனசென்னும் நாய்க்குட்டியின் ஒரு பிரதியை உடனே அவருக்குப் பரிசளித்தேன். சென்றுவிட்டார்.அவ்வப்பொழுது வாசித்தல் பகிர்தல் குறித்துப் பேசுவார். இன்று இந்தக் கேள்வியைக் கேட்டார்.என் 108 காதல் கவிதைகள் மற்றும் முகப்புத்தகத்தில் அதீதமாக நானும் கரைந்து இன்ன பிறரையும் கரையச்செய்த காதல் ஆகமம் மழை ஆகமம் முதலானவற்றை எல்லாம் வாசித்த ஒருவராக இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டிருக்கக் கூடும்.


காதல் என்றால் என்ன..?
நான் சொன்ன பதில் அவருக்கு மட்டுமல்ல.இன்னும் கொஞ்ச பேருக்குள் அதனை உட்செலுத்தலாம் என்ற நல்லெண்ணத்தில் இங்கே தருகிறேன்.

""காதல் என்பது பொய்.அதற்கு மாற்றான உண்மை என்று ஏதுமில்லை.மெய்ப்பிக்கப் பட்ட ஒரே காதல் என்பது சுயகாதல் மட்டுமே.உன்னை நீ நேசிப்பது மட்டுமே நிஜம்.வேறேவனும் எவளும் எதுவும் உன்னளவுக்கு என்றில்லை அதில் கால் பாகம் கூட உன்னை நேசித்து விட முடியாது. காதல் என்பது உனக்கு நீ வழங்கிக் கொள்ளக் கூடிய முதலாவது முக்கிய முத்தம்""


யாமிக்குப் புரிந்திருக்கும் கெட்டிக்காரப் பெண்.

அன்போடு
ஆத்மார்த்தி

Last Updated (Sunday, 13 October 2013 18:30)