புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

கடவுளுடன் பிரார்த்தித்தல்


கதவுகளற்ற தீவில் தனித்தலையும் யாத்ரீகன்

கடவுளுடன் பிரார்த்தித்தல்

கடவுளுடன் பிரார்த்தித்தல் என்னும் மிக மெல்லியதொரு தொகுப்பு மனுஷ்யபுத்திரனின் இன்னுமொரு தொகுப்பாக மிதந்துகொண்டிருக்கிறது.மனுஷ்யபுத்திரன் என்னும் மனிதன் கவிதைக்காரனாக தன்னை அறிந்துகொண்டதற்கும் அறிவித்துக் கொண்டதற்கும்
இடையில் மெல்லிய ஊடுநூல் இருப்பதற்கான சாத்தியங்கள் காட்சிக்குப் புலப்படுகிற கவிதைகளைக் கண்டு உணர்கிற வாசகபார்வை இது.
மனுஷ்யபுத்திரன் சொற்களில் மிகுந்த கவனம் கொள்கிறார்.அவர் தன் மொழியை வெகு நிதானமாக  பாறையை அணுகும் ஒரு சிற்பி
போல் அணுகுகிறார்.தன் கவிதைகள் எழுதப்பட்ட காலம் தனக்குள் புரட்டுகிற குருதியை பெயர்த்து பிறர் மீது தெளித்துவிடுவதில் உடன்பட
மறுக்கிறார்.மாறாகத் தானும் தன் சிதைவுமாகப் பெருவாழ்வு வாழ்ந்து அதனின்றும் கவிதைகளைக் கட்டுவது மனுஷ்யபுத்திரனின் தேர்வாகின்றது. அந்த வகையில் எளிதில் தன் கவிதைகளைக் கடந்து செல்கிற எவரையும் மர்மப் புன்னகை ஒன்றுடன் தானும் தன் மொழி படர்கிற தனிமையுமாக உற்று நோக்குவதில் இன்புறுகிறார்.
அறிந்த வாக்கியங்களையும் எல்லோருக்கும் நிர்பந்திக்கப் படுகிற வாழ்தல் கணங்களையும் கவிதைகளாக மாற்றுவது மனுஷ்யபுத்திரனின் ஒருமித்த ப்ரியமாகிறது. காலத்துடன் இயைந்து செல்லாத புனைவை வலிந்து உருவாக்குகிற மற்றவர்களின் கவிதைகளில் இருந்து மனுஷ்ய புத்திரனின் கவிதைகள் தனித்து நிற்கின்றன. வாழ்வியலில் மறுதலிக்கப் படுகிற அல்லது கைவிடப் பட்ட மேலும் சாத்தியப் படாத நாடகவசனங்களை ஒத்த எந்த ஒரு அல்லது பல வாக்கியங்களையும் கொண்டு கவிதை நெய்ய வேண்டிய எந்த சூழலிலும் மௌனம்
காத்துவிடுவதை தன் உசிதமாக அறிவித்துவிடுகிறார். சாமான்யர்களின் மொழியில் இருந்தே ஒவ்வொரு சொல்லாக அல்லது வாக்கியங்களாக எடுத்து அவ்வவை தன்னைக் கடக்கையில் அல்லது அவற்றைத் தான் கடக்கையில் தன் கவிதைகளுக்கான முயல்வுகளை விரிப்பதன் மூலமாக கதவுகளற்ற தீவு ஒன்றில் தனித்தலையும் சஞ்சாரி யாகத் தன் கவிதைகளை மனுஷ்யபுத்திரன் உருவாக்குவதை அறிய முடிகிறது.
கடவுளுடன் பிரார்த்தித்தல் என்னும் இத்தொகுப்பில் மனுஷ்யபுத்திரன் இதற்கு முன்பான தொகுதிகளில் தான் அவிழ்த்த அதே தனிமை அதே வாதை அதே வதங்கல் அதே நிராகரிப்பு அதே கண்டனம் என "ஒரே சாயல்போன்ற" தருணங்களை மீண்டுமொருமுறை கவிதைப் படுத்தி இருந்தாலும் கூட,கூந்தல் அவிழ்ந்த நாட்டியக்காரன் ஒருவன் அதனை முடிந்தவாறே ஒரு ஊரை அல்லது ஒரு நாட்டை ஒரு காலகட்டத்தைச் சபித்துவிடுவது போலக் கவிதைகளை உதிர்த்தெறிந்திருக்கிறார்.மேலும் சபித்தல் என்பது பெரும்பாலும் கண்ணீர் உகுக்கும் கணமொன்றில் அடிவயிற்றின் ஓங்காரம் கலந்து மனிதப்பிளிறலாக நியாயம் அறுகிற இமைப்பொழுதில் நேர்ந்துவிடும் அதனியல்பை மறுக்கிறார் மனுஷ்யபுத்திரனின் சபித்தல் எள்ளல் மிகுந்தது.தன்னைப் பாதுகாத்துக்கொண்ட பிறகு எதிர்த்திசையை சபித்துவிட்டுக் கிளம்பும் மாயவேலை அது.

மொழி மனுஷ்யபுத்திரனுக்குக் கைகட்டிச் சேவகம் செய்கிறது. பழகிய மிருகமாய் முழுவதும் கட்டுப் பாட்டுக்குத் தன்னை
ஒப்புக்கொடுத்த சிந்தையற்ற அடிமையாய் மாறுகிறது.அவர் அதன் மீது மாறாத வாஞ்சையுடன் கையாளு கிறார்.அவருக்கும் மொழிக்குமான உறவாடல் என்பது வெகுவாகத் தனிக்கிறது.கவிதைகளுக்குள் தனித்த சைகைகளை ஏற்படுத்தி மகிழ்கிறார்.அவை எளிதில் கடந்துபோகக் கூடிய சாத்தியங்களை கண்கட்டுகிற வழிமாற்றிகளாக நேர்த்துகிறார். மொழி தன் விஷத்தைத் தானே உண்டு மரிக்கும் சர்ப்பமாகின்றது. மனுஷ்யபுத்திரன் தன் மொழியை மீண்டும் உயிர்த்தெழ வைக்கிறார்.
எல்லாக் கவிதைகளுமே நேரடித் தன்மை கொண்டிருப்பதாகத் தோற்றமளிக்கின்றன.அத்தகைய தோற்றத்தை மிகவும் விரும்புகிற மனுஷ்யபுத்திரன் ஆதாரங்களுடன் உறவாடுகிற மறைபொருட்களை சூனிய மூலையில் கந்தல் துணியென சுருட்டி எறிகிறார்.ஒருபோதும் அதனுள் குறுக்கும் நெடுக்குமாக சேதியறியாது திரும்புவதில்லை என்ற மகா தீர்மானம் இல்லாத எவர்க்கும் அவை சாதாரண வாக்கியங் களாகவே கண்கட்டி முடிகின்றன.
உதாரணமாக பிசாசுகளின் கவிஞன் என்னும் கவிதையின் இடைவரி இப்படி இருக்கிறது. ""எப்போதும் பயத்திற்குள் அசைகிறது அவன் வேட்கையின் சாயைகள்"அவ்வளவு தான்.நீட்டினால் ஒற்றைவரி.இந்த வரி இந்தக் கவிதையின் இடைவரி என்று கடந்துவிடச் சாத்தியமுள்ளதுஅதே நேரம் இந்த வரி மட்டும் தனிக்கையில் வெகு பலமான அதிர்வை வாசகனுடைய மூளையில் விதைக்க வல்லது.விதைக்கிறது என்று உறுதியாக சொல்லமுடியும் நேரடியாக அங்கதமெனக் கொள்வோரை அங்கதம் செய்யும் சித்துவேலை இங்கே தொடங்குகிறது.
மனுஷ்யபுத்திரன் இத்தொகுப்பெங்கும் தன் வழக்கவழக்கமாகவே ஒரு தன்மை நபரின் மனம் மற்றும் அதன் மற்றமையான பொது மற்றும் அதன் இன்னொரு மற்றமையான "நீ" என்பவளை/என்பவனை முன் நிறுத்துகிறார்.எல்லாக் கவிதைகளின் எல்லா "நீ" என்பவளும் அல்லது என்பவனும் 'ஒரே நபர்' என்று எண்ணிக் கடக்கையில் அடுத்த முடிச்சு இறுக்குகிறது வாசகனின் கழுத்தில்.முரண்பட்ட செயல்கள் மற்றும் குண ஆதாரங்களைக் கிளைக்கச் செய்வதன் மூலமாக மனுஷ்யபுத்திரனின் "தன்மை" ஒற்றைச் சுயமாக வெளிப்பட்டுத் தொடர்கிற அதே
நேரத்தில் அரூபியாய்த் தொடர்கிற 'நீ' என்பவள்/என்பவன் வெவ்வேறு வேறுவேறுகள் என்பதை மிக நயமாக நிறுவத் தவறுவதில்லை.


உதாரணமாக:-

"அதிகரித்துக்கொண்டிருக்கும்
உன் படுக்கையறையின் வெப்பம்
எந்த மூச்சிலிருந்து கிளைக்கிறதென்று
நீ அறிய மாட்டாய்
"

என்னும் வரிகள் பிசாசுகளின் கவிஞன் என்னும் கவிதையில் தென்படுகிறது.

மேலும்

"மேஜை மேலிருந்த
உன் மரக்குதிரை
நேற்றிரவு வேட்டைக்குப் போனது
".

என்னும் வரி "வேட்டை" என்னும் கவிதையிலும்
மேலும் இன்னொரு கவிதையான "மழை வரும் போது"

துக்கத்தில்
தழுவிக் கிடக்கும் பெண்

ஒரு பெண் போலவே இல்லை

நீ"


மேலும் இன்னோர் கவிதையான
"அந்த இடம் " கவிதையில்

"நீ அங்குதான்
இருப்பதாகச் சொன்னாய்

நான் அங்குவந்த போது

அந்த இடம்
கலைந்துவிட்டிருந்தது
"

இதுவரையிலான அடுத்தடுத்த கவிதைகளில் வாசகனுக்குள் ஒரே நீ என்பவள் கட்டமைந்து விடுவதற்கான பொது சாத்தியத்தை அனுமதிக்கிற அதே நேரத்தில் இணைப் பாதையென இன்னொரு சூட்சும சாத்தியத்தை மொழியின் துணைகொண்டே சாதுர்யமாக உருவாக்கி விடுவதும் நிகழ்கிறது. ."எந்த மூச்சிலிருந்து கிளைக்கிறது அந்த வெப்பம் என நீ அறிய மாட்டாய்" என்னும் போது வாசகனுடைய சிந்தனையில் ஒரு நீ என்பவள் வந்தமர்கிறாள்.இன்னொரு கவிதையில் நீ என்பவளின் மரக்குதிரை வேட்டைக்குப் போக இயலுகிறது.நீ என்பவளை ஒரு சொல்வசதியெனக் கொள்கிற சாத்தியத்தை அனுமதிக்கிற அதே நேரம் அடுத்தடுத்த இன்னுமிரண்டு கவிதைகளில் துண்டாடப் படுகிறாள் அதே நீ என்பவள். ஒரு பெண் போலவே இல்லை நீ என்கையில் சொல்லப் படுகிற துக்கம் மறைந்து  உடல் ஒரு சித்திரமாய்த் தீட்டப்படுகிறது வாசகனுடைய எண்ணப் பரப்பில்,அதே சித்திரத்தின் மீது மழை பெய்கிறாற் போல் அடுத்த வேறொரு கவிதையில் அழித்து விடுவது வசீகரிக்கிறது.நீ அங்குதான் இருப்பதாக சொன்னாய்,இதன் பிறகு நான் அங்கே வரும் போது அந்த இடம் கலைந்துவிட்டிருந்தது என்பதை வாசிக்கையிலேயே மெல்லக் கலைகிற புகையாய் சிதைந்து அழிகிறது நீ என்கிற தொடர்பிம்பம்.மீண்டும் மீண்டும் வாசகனைக் காலி செய்து நிரப்பி காலி செய்து நிரப்பி விளையாடுகின்றன இக்கவிதைகள்.
நித்திய வாழ்வின் சாபங்களில் இருந்து தனக்கான கவிதைகளைக் கண்டெறியும் போக்கு  இத்தொகுப்பின் சில கவிதைகளில் இணக்க மாகிறது.உதாரணமாக மனுஷ்ய புத்திரனின் ஆகச்சிறந்த கவிதைகள் என்று நான் தேர்வு செய்யும் பட்டியலில் எப்போதும் இடம்பெறக் கூடிய ஒரு கவிதை ப்ரொஜெக்ட்.நடைபாதை வாசிகளிடம் தனியார் தொலைக்காட்சிக் காரனொருவன் பேட்டி ஒன்றை ஒளிப்பதிவு செய்கிறான்.மிகுந்த கரிசனத்துடன் அவர்களின் குரலற்ற குரல் ஒலிக்கிறதற்கான நிலத்தைக் கட்டமைக்கிற செயலாக அந்தப் பேட்டி முடிவுறுகிறது.அந்தப் பேட்டியாளனின் மொழியிலேயே இக்கவிதை ஒலித்து முடிக்கிறது.  பேட்டி கொடுத்த ஒரு கிழவன் "அய்யா ஏதாவது பிரச்சினை என்றால் உங்களிடம் சொல்லலாமா..?"என்று கேட்க

அவ்வளவு கனிந்த முகத்தோடு
என் தொலைபேசி எண்ணை
எழுதிக் கொடுத்தேன்

உலகின்
எந்த டைரக்டரியிலும்
இல்லாத
ஒரு எண்ணை.


அவ்வளவுதான்.சுஜாதாவின் கதாபாணி வசீகரம் கடைசி இரண்டு வரிகளில் வாசகனுக்கென ஒரு அயற்சியை ஒரு எதிர்பாராமையை ஒரு கண்டறிதலை ஒரு திடுக்கிடும் உண்மையை வைத்துக்கொண்டே கதை நெடுக அழைத்து வருவது.அப்படி அழைத்துவருகையில் தான் முன்பே தீர்மானிக்கப் பட்டுவிடக் கூடிய பிடிபடு தருணங்கள் அவை என்னும் அபாயத்தினூடே விளையாடிப் பார்க்கும் வழக்கம் சுஜாதாவுக்கு உண்டு.இதே பாணியிலான கவிஞர் என்று ஆத்மாநாமைக் கூறுவதை விடவும் கலாப்ரியாவைக் கூறலாம்.கலாப்ரியா கடைசியில் ஒரு கவிதையைக் கருணையின்றி அப்பட்டமாக நிர்வாணப் படுத்துவதை ரசிக்கும்படிச்செய்வார்.இந்த இரண்டு ஆளுமைகளாலுமே உந்தப் பட்டவராக நம்மால் மனுஷ்யபுத்திரனை அறியமுடியும்.ஒரு சிறுகதைக்குரிய அத்தனை நாற்சதுர எல்லைகளையும் கொண்டிருக்கும் ப்ரொஜெக்ட் கவிதை சமகாலத்தில் எழுதப் பட்ட அரசியல் கவிதைகளில் மூன்றாமவருக்கான இடம் எது என்பதனை ஒரு விவாதமாக முன்னெடுக்க வல்லது.
சம்பளத்திற்கெதிரான கருணை அல்லது கரிசனம் என்ற பதம் தொண்ணூறுகளின் எதிரே பலத்த அதிர்ச்சியுடன் நமக்கெல்லாம் அறிமுகமானது.அந்த நேரம் உலகமயமாக்கலின் ஒவ்வொரு கதவாகத் திறந்து கொண்டிருந்தது.உலகம் தன் வரைபட எல்லைகளை மாற்றி அமைக்க வேண்டிய நிரப்பந்தமாகவும் அது இருந்தது.அப்படிப்பட்ட சூழலில் சம்பளத்திற்கெதிரான கருணையாளர்கள் தன்னார்வத் தொண்டர்கள்,ஊடகவாதிகள் என பலரும் புதிய அச்சில் வார்க்கப் பட்டு வெளித்தள்ளப் பட்டார்கள்.அவர்களுக்கெதிரான குரல்கள் தமிழ்க் கவிதை
உலகத்தில் கண்டனங்களாகக் கூடப் பதிவு செய்யப் படவில்லை என்பது பெருஞ்சோகம்.மனுஷ்யபுத்திரன் தன் ப்ரொஜெக்ட் கவிதையை தனியொருவனால் எறியமுடிந்த கல்லென்று வீசிச்செல்கிறார்.
கடவுள் மிகவும் பரிதாபத்துக்குரியவன் என்று தன் மெலிந்த புன்னகையோடு பகிரும் மனுஷ்யபுத்திரன் கடவுளுக்கான தன் வாஞ்சையைத் தவிர செய்வதற்கொன்றுமில்லை என்கிறார் துயருற்றிருந்த என் கடவுளுக்கு என்னும் கவிதையில்.
ஒரு வாக்கியத்தின் பல நிகழ்தகவுகளைப் பரிசோதித்துப் பார்க்கிற கவிதாபாணி இன்றைக்கு மனுஷ்யபுத்திரனின் தனிச்சொத்தாகவும் அவர் பேரால் கட்டளையிடப் பட்ட ஒரு ஆகமமாகவும் மாறியிருக்கிறது.அதைப் பற்றி பேசாமல் அல்லது அதை மட்டுமே பேசி மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் குறித்த எந்த ஆய்வையும் பூர்த்தி செய்துவிட முடியாது.இந்தத் தொகுப்பில் அவ்வகைப் பாணியில் அமைந்த கடவுளுடன் பிரார்த்தித்தல் என்னும் கவிதையை அவர் அவ்வகையில் விரித்திருப்பது தனிக் கவனம் பெறுகிறது.,


"நீ கைவிடப் படும்போது மட்டுமே
கடவுளுடன் சேர்ந்து பிரார்த்திக்கும்
மகத்தான வேளை
உனக்குக் கிடைக்கிறது
."

இதனை "கைவிடப் பட்ட பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் குடிகாரர்கள் பைத்தியங்கள் உபயோகமற்றவர்கள் நோயாளிகள் உடல் சிதைக்கப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டவர்கள் காட்டிக்கொடுக்கப் பட்டவர்கள் கிறிஸ்துக்களின் உலகம்" என்ற முன்வகைமைப் பட்டியலில் ஒன்றுக்கொன்று சேர வாய்ப்பே அற்ற தனித்த உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கிறார்.இப்பட்டியலில் உடல் சிதைக்கப்பட்ட,தண்டிக்கப்பட்ட,காட்டிக்கொடுக்கப் பட்ட,மற்றும் கிறிஸ்துக்கள் என்னும் பதங்கள் நமக்குள் இவை வெறும் அடுக்குகள் அல்ல என்னும் தீவிரத்தை உணர்த்தி விரிக்கின்றன.
கொல்லப் படாதவர்களுக்காகக் கடவுள் பிரார்த்திக்கிறார் என்று சொல்கையிலேயே நிராகரிக்கப் பட்ட கடவுளின் இயலாமை வாசகனுக்குள் வலி பெயர்க்கிறது.அந்த வலி போலியானது அல்ல.மாறாக அந்த வலி ஒரு கேள்வியாகத் தன்னைத் துவங்குகிறது.ஒரு கவிதையை உரையாடலுக்கான நீட்சியாக மாற்றி விடும் வேலையை ஒரு சுழல் பந்து வீச்சாளனைப் போல செய்து காண்பிக்கிற மனுஷ்யபுத்திரன்,தன் கவிதை உலகத்தின் முக்கியமான பல கவிதைகளை கடவுளுடன் பிரார்த்தித்தல் என்னும் இத்தொகுப்பில் தந்திருக்கிறார்.இவை எழுப்பக் கூடிய(எழுப்பினால்)கேள்விகள் பதில் தெரியாமல் வாசகமனதை உறங்கவிடாது என்ற அளவில்,வெறும்
கேள்விகளல்ல..வாசகனின் தனிமையின் சுதந்திரத்தைக் கைக்கொள்ளும் சாபங்கள்.