புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

தேவதை மகன்

எஸ்.கோதண்டபாணி அவன் பெயர்..அவனுக்கு ஆறு வயதிருக்கையில் என நினைவு.முதன் முதலில் கிருஷ்ணன் வாத்தியாரைப் பார்க்க அம்மா அவனையும் கூட்டிக்கொண்டு போயிருந்தாள்.கிருஷ்ணன் வாத்தியாரின் வீடு திருப்பரங்குன்றத்தில் மலையின் பின்புறம் இருந்தது,.அந்த இடத்துக்கு தென்பரங் குன்றம் எனப் பெயர்.இன்னமும் அந்த நாளை கோதண்டத்தால் மறக்க முடியவில்லை.அதற்குக் காரணம் அன்றைக்கு என்ன நினைத்தாளோ அம்மா யூனிஃபார்முடன் ஸ்கூலுக்குக் கிளம்பியவனை "நீயும் என்னோட வரியா?" எனக் கேட்டாள்.

அம்மா அதுவரை கோதண்டத்தை எடுத்துக் கொஞ்சியதும் இல்லை.அடித்துத் தள்ளியதும் இல்லை.அவனுக்கு எல்லாமே அம்மாவைப் பெற்ற பாட்டிதான்.அவளை அம்மா எனத் தான் கோதண்டமும் அழைப்பான்.அதனாலேயே அம்மாவோடு அவனுக்கு ஒட்டாமல் போனது.பாட்டியின் உலகம் அவனால் ஆனது.அவள் இறந்து போகும் வரை தகப்பனின் நிழல் விழாத வீடென்னும் தகவல் கூட அவனுக்குள் எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை.அவள் இறந்து போன ஒரு வாரத்தில் எல்லாம் தலைகீழானது.

அம்மா தன்னிடம் கேட்ட கேள்வியை நம்பாதவனாய் ஒரு நிமிடம் அப்படியே நின்றுகொண்டிருந்தான் கோதண்டம்.மறுகணம் ரூமுக்குள் நுழைந்து வெள்ளை சட்டையை அவிழ்த்து விட்டு உள்ளே மரபீரோவில் அடுக்கில் இருந்து ஒரு இங்கிலீஷ் பனியனை எடுத்து அணிந்துகொண்டு வெளியே வந்தான்.அவர்கள் இருந்தது சிம்மக்கல்லின் நெரிசலான எல்லாளம்மன் காலனியின் ஒண்டுக் குடித்தனம்.அங்கே இருந்து முதல் பஸ் எடுத்து பெரியார் நிலையம் வந்தார்கள்.அங்கே மீண்டும்  பஸ் ஏறி திருப்பரங்குன்றம் சன்னதி ஸ்டாப்பில் இறங்கிக் கொண்டார்கள்.

அம்மா அழுது கொண்டே வந்தாள்.எதற்கு அழுகிறாள் என கோதண்டத்துக்குப் புரியவில்லை.கிருஷ்ணன் வாத்தியார் வீடு இருந்த தெருவை நெருங்கியதும் அம்மா பரபரத்தாள்.தன் முகத்தை முந்தானையால் துடைத்துக்கொண்டாள்.பின்னே சென்ற கையால் விரவித் தன் கூந்தலின் ஒழுங்கை உறுதி செய்துகொண்டவள் ஒரு கையால் கோதண்டத்தின் வலக்கரத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.வேலிககாத்தான் செடிகளை நெருக்கமாகப் பதித்திருந்தனர்.அடித்த காற்றுக்கு வீதியெங்கும் உதிர்ந்து கிடந்த சருகுகள் ஒருமுறை கிளம்பி அடங்கின.மூங்கிலால் ஆன கதவைத் தள்ளித் திறந்தாள் அம்மா.  அந்த சப்தம் கேட்டு உள்ளே இருந்த நாய் குறைத்தது.மீண்டும் வெளியே காலை இழுத்து கதவை அவசரமாகப் பூட்டினாள்.இவனைப் பற்றியிருந்த கரம் இன்னும் அழுத்தியது.   சப்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்த அம்மாள் அனேகமாக கிருஷ்ணன் வாத்தியாரின் மனைவியாக இருக்க வேண்டும்.

"வாங்க...அது ஒண்ணியுஞ்செய்யாது."என்றவள் முன் திசையில் பாய்ச்சல் காட்டத் தயாராக இருந்த நாயை "ச்சீ...போ சனியனே அந்தாண்டை....உன்னைய வாசப்பக்கம் வரக் கூடாதுன்னு எத்தனைவாட்டி சொல்றது...?" என்று ஏசினாள்.ஓங்கிய வெறுங்கையை விசிறினாள்.நெடுநாளாய் அவளிடம் பழகிய நாய்போலும்.உடனே சின்னதாய் முனகி விட்டுக் கிளம்பியது.அந்த வீட்டின் பக்கவாட்டில் ஒரு ஆள் நடந்து செல்லுமளவுக்கு இருந்த இடத்தில் விரைந்து பின்புறம் சென்று மறைந்தது.அதைப் பார்த்த கோதண்டத்துக்கு அந்தப் பக்கவாட்டு இடமே ஒரு நாய்க்கு உண்டான வழியாகத் தோன்றியது.அவன் இப்போது அம்மாவின் சேலையில் தன் பெருவாரி உடலை மறைத்துக் கொண்டான்.

நாய் தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டதை ரசித்தவளாய் அந்த அம்மாள்  "ஏன் இன்னம் அங்கயே நிக்கிறீங்க..?உள்ளே வாங்க..."என்றாள்.


உள்ளே நுழைந்த அம்மாவின் பின்னால் ஒடுங்கியவாறே நடந்தான் கோதண்டம்.இதற்குள் அரவம் கேட்டு வாசலில் தென்பட்ட கிருஷ்ணன் வாத்தியார் லேசாகச் செறுமினார்.

"யாரு...பஞ்சவர்ணமா...என்ன இந்தப்பக்கம்..?"என்றார்.நுழைந்துகொண்டே இரு கரங்களையும் கூப்பினாள் அம்மா.பக்கவாட்டில் இருந்து கரிய உடம்புடன் வெளிப்பட்ட ஆள்காரன் ஒருவன் இரண்டு நாற்காலிகளை வீட்டுத் திண்ணையிலிருந்து எடுத்து வந்து இருத்தினான்.அதில் ஒன்றில் அமர்ந்து கொண்டார் வாத்தியார்.

"உக்காரும்மா..."என்றவர் தன் மனைவியிடம் திரும்பி "சரசு காப்பித்தண்ணி எதாச்சும் கொண்டா "என்றார்.அவர் முன்னால் ஒடுங்கியவாறே அமர்ந்தாள் அம்மா.தன் மடியில் ஒரு கேடயத்தைப் போல கோதண்டத்தை இருத்திக் கொண்டாள்.

"வாத்தியாரய்யா...எங்கம்மா தவறிடிச்சி.இந்த ஊர்ல யாருமில்ல.பொழைப்புமில்ல.அதான் மெட்ராஸூக்குப் போயிரலாம்னு பாக்குறேன்.,உங்ககிட்டே ஒரு வார்த்த சொல்லிட்டுப் போலாம்னுட்டு வந்தேன்."என்றாள்   அம்மா மிக மெல்லிய குரலில் பேசியது என்னவோ போலிருந்தது கோதண்டத்துக்கு.

வாத்தியாரின் மனைவி ஒரு தட்டில் காப்பித் தம்ளர்களை நீட்டினாள்.    யோசனையுடன் அதை எடுத்துக் கொண்டாள் அம்மா.
"சரசு..இதாரு தெரியுதா..?நம்ம கர்ணபார்ட் சம்முவம் இருந்தானில்ல...? பனமரத்தில பாதி ஒசரத்துக்கு ஒருத்தன் வருவான்ல கூத்துப் பளக..அவன் சம்சாரம்.நாசமாப் போறவன்.ஏத்த வேசமெல்லாம் கர்ணனும் ராமனும்.கொணமெல்லாம் அசுர கொணம்."என்று சலித்தார்.அமைதியாக இருந்த அம்மாவிடம்

"இங்க பாரு பஞ்சவர்ணம்.மதுரை மாதிரி இல்ல மெட்ராஸூ.அங்கே என்ன பொளப்பு பாக்கப் போறே..?ஒழுங்கா ஒங்க வீட்டார் பேச்சக் கேட்டிருந்தியானா இப்பிடி சீரளிஞ்சிருக்க வேணாம்.சரி இன்னிமே அதைப் பேசக் கூடாதில்ல..?சம்முவம் கேரளாவில் இருக்கான்னு ஒருத்தன் சொல்றான்.இன்னொருத்தன் அவன் வெளிநாட்டுக்கு ஓடிட்டான்னு கதை விடுறான்.சில பேரு அவன் செத்திட்டான்னு சொல்றானுங்க...எதை நம்புறது எதை விடுறதுன்னு தெரியலை."


செம்புத் தண்ணீரை எடுத்து களக் களக் எனக் குடித்தவர் "பஞ்சவர்ணம்..மெட்ராஸுக்குப் போறியே..அங்க ஆரு இருக்கா..?" என்றார்.இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என யோசித்துக்கொண்டிருந்த அம்மா மெல்ல வாய் திறந்தாள்.


"வாத்தியாரய்யா...எனக்கு தூரத்து சொந்தக்காரரு அங்கே ஏஜெண்டா இருக்காரு.சினிமாவுல கூட்டம் கும்பலுக்கு ஆள் கொண்டார வேலை.அவரு தான் அங்கே வரச்சொல்லி இருக்காரு.நானும் யோசிச்சிப் பார்த்தேன்.முன்ன மாதிரி இங்கே நாடகத்துல வேசங்கட்ட வாய்ப்பு வாரதில்ல.அதுமில்லாம இங்கே யாரா இருந்தாலும் ஆதரவா பேசுற சாக்குல அடி மடியில கைவெக்க பாக்குறாங்க.."என்று நிறுத்தினாள்.தன் மோவாய்க்கட்டையை திருகிக் கொண்டார் வாத்தியார்.மழை வருமா என வானம் பார்த்தார்.அவர் பார்த்தது கண்டு கோதண்டமும் வானம் பார்த்தான்.அவன் தலையை சிரமப் பட்டு திருப்பி தாழ்த்தினாள் அம்மா.காதோரம் கிசுகிசுத்தாள்."அப்டி பார்க்காத கோதண்டா"

வாத்தியார் இருமினார்.நல்ல கபம்.அது மழைக்காலம் என்பதால் கபம் ஒரு சண்டைக்காரனைப் போல அவரைப் பிடித்திருந்தது.வாயோரம் கூட்டிய எச்சிலை புறத்தே துப்பினார்.

"சரி பஞ்சு.நீ முடிவெடுத்திட்ட...நாடகம் வேற சினிமா வேற.நாமல்லாம் சினிமாவுக்குப் போறது தப்பில்ல.ஆனா சிறக்காது.இது ஒரு மாதிரி கட்டுக்கோப்பு.சினிமா அப்பிடி இல்ல.முந்தா நேத்து ஒரு படம் பார்த்தேன்.மூடுபனின்னு.புதுசா ஒரு டைரக்டர் பேரு,என்னமோ மகேந்திராவாம் பேரு.எனக்குக் கதையே புரியலை.ஒரு கிறுக்குப்பயலோட கதை.அம்மா செத்திர்றா.அவ பொணத்தை வெச்சிட்டு அம்மா அம்மான்றான்.ரெண்டு நா கூட ஓடாதுன்னு சொன்னேன்.ஊரே போயி அம்முது.ரசனை மாறிட்டு இருக்கு பஞ்சு.சினிமா நமக்கெல்லாம் சரி வராது.இருந்தாலும் நா தடுக்கலை.கெளம்பிப் போ.ஆனா திரும்ப வந்துறாத.ரெண்டு பக்கமும் மதிப்பிருக்காது.நல்ல படியா போயிட்டு வா."என்றார்.


எழுந்து விடை கொடுக்கிறவரைப் போல நின்று தன் இரு கரங்களையும் இறுகப் பொத்திக் கொண்டார்.அதற்குள் உள்ளே இருந்த அவரது சட்டையை எடுத்து வந்து கொடுத்தான் ஆள்காரன்.  அதன் பாக்கெட்டில் கை விட்டு சிக்கிய தாட்களை எடுத்து அப்படியே நீட்டினார்.மொத்தம் நூற்றைம்பது ரூபாய் இருந்திருக்கும்.அதனை நம்பமுடியாமல் வாங்கிக்கொண்ட அம்மா கை கூப்பினாள்.


வாத்தியாரின் மனைவிக்கு அவர் பெருந்தொகையை அள்ளிக்கொடுத்ததில் பிடித்தமில்லை என்பது அவள் முகத்தில் தெரிந்தது.வாத்தியார் வீட்டில் இருந்து மறுபடி திருப்பரங்குன்றத்துக்கு மலையைச்சுற்றி நடந்தார்கள்.கோயிலுக்குக் கூப்பிடு தூரத்தில் உடுப்பிவிலாஸ் என்னும் ஹோட்டல் இருந்தது.அதனைத் தாண்ட முற்பட்டவள் டக்கென்று உள்ளே நுழைந்தாள்.அதற்கு முன்பு பாட்டியுடன் ஒரு முறை பெரியார் நிலையத்தில் இருக்கிற ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டிருக்கிறான் கோதண்டம்.இது அதைவிடப் பெரிய ஹோட்டலாக இருந்தது.சப்ளையரிடம் ரெண்டு செட் பூரி என்றாள் அம்மா.அவள் குரலில் தீர்க்கம் இருந்தது.ஆசை ஆசையாக பிய்த்துச் சாப்பிட்டான் கோதண்டம்.அவனுக்கு பூரியும் கிழங்கும் அதுவரை பார்த்திராத ருசியாக இருந்தது.


"வேற என்னடா வேணும்..?"என்றாள் அம்மா. யோசித்தவன் "இன்னும் பூரிம்மா"என்றான்.அம்மா சப்ளையரிடம் "இன்னொரு செட் பூரி"என்றாள்.சாப்பிட்டதும் அம்மா காஃபியை ஊதி ஊதிக் குடித்தாள்.கல்லாவிற்கு மேலே இருந்த ராட்சச கடிகாரத்தில் மணி பார்த்தான் கோதண்டம்.அவனுக்கு மணி பார்க்க அம்மா சொல்லித் தந்திருந்தாள்.மணி பதினொன்றாக பத்து நிமிடம் இருந்தது.

ஒவ்வொரு நாளும் அன்று என்ன தேதி என்ன கிழமை என சொல்ல வேண்டும்.அது தான் முதற்பாடம் அவனுக்கு.அன்று கூட டுடே இஸ் எ ஃப்ரைடே.டுடேஸ் டேட் இஸ் செவெந்த் நவம்பர் நைண்டீன் எய்ட்டீ என்று சொன்ன பிறகே ஸ்கூலுக்கு தயாரானான்.சில நாட்கள் முன்பு பாட்டி இறந்த அன்றைக்கும் அவன் அப்படி என்ன கிழமை என்ன தேதி என சொல்ல விரும்பினான்.அம்மா அழுதுகொண்டே இருந்ததால் சொல்லவில்லை.அம்மா அவன் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தாள்.

"யம்மா... "என்றான் கோதண்டம்.
"என்னப்பா..."
"மெட்ராஸூக்கு போகப்போறோமா நம்ம..?"
"ஆமா கண்ணா..இன்னிமே மெட்ராஸ் தான்.உங்கப்பன் துண்டை உதறித் தோள்ல போட்டுக் கெளம்பிட்டான்லய்யா...அதான்.நாம பொளைக்கணுமில்ல..?"என்றாள்.

மீண்டும் கொஞ்ச நேரம் கழித்து
"யம்மா..." என்றவனிடம் "என்ன ..?" எனக் கேட்ட குரலில் லேசாய்க் கடுமை இருந்தது.
"வாத்தியாரு சொன்னாரில்ல..நேத்து புதுப் படம் வந்திச்சி..பார்த்தேன்னிட்டு..அதென்ன படம்மா...மூடும்பனி...அதுக்கு என்னையக் கூட்டிப்போறியாம்மா..?"
"போலாம்பா...சாந்தி தியேட்டருக்கு வரும்ல..அப்பப் போலாம்."
"பொய் சொல்லாதம்மா..நாம மெட்ராசுக்குல்ல போறோம்...அங்கே எதுனா கொட்டாய்ல ஓடும்ல..."என்றான்.

பஸ் ஸ்டாண்ட் வந்திருந்தது.கிடைத்த பஸ் நேரே சிம்மக்கல் போவதாக இருந்தது.வீட்டுக்கு வந்ததும் பெட்டியைக் கட்ட ஆரம்பித்தாள் அம்மா.ஒரு இரவு தூங்கி மறு தினம் காலை எழுந்ததும் மெட்ராஸுக்கு வந்து சேர்ந்தது புரியத் தொடங்கியது கோதண்டத்துக்கு.இது வேறு மிருகம் என்பது அந்தச்சிறுவனுக்குப் புரிய நெடு நேரம் ஆகவில்லை.யாரும் யாரையும் கண்டுகொள்ளாத பெரு நகரமாய் அது அச்சுறுத்தியது.அப்போது கோதண்டத்துக்கு ஆறு வயது முடிந்த நேரம்.அந்தக் கணத்திலிருந்து அவனை அறியாமல் அவன் வாழ்வு ஒன்றில் இருந்து ரெண்டாக மாறியது. மதுரையை மெட்ராஸ் உடன் ஒப்பிட்டது அவன் மனசு.கோதண்டத்தின் வாழ்க்கையே அதன் பின் ஒப்பீடுகளால் ஆகிப்போனது.இருக்கும்.வீட்டைப் பழைய வீட்டோடும் சுற்றி இருந்தவர்களை மதுரை மனிதர்களோடும் சதா ஒப்பிட்டுக்கொண்டே இருந்தான்.புதிய பள்ளிக்கூடம் அவனுக்கு சுத்தமாகப் பிடிக்காமல் போனது.பழைய அம்மா பிடித்த அளவுக்குப் பஞ்சவர்ணத்தின் புதிய கோலம் அவனுக்குப் பிடிக்கவில்லை.

பஞ்சவர்ணத்தின் தூரத்து உறவினர் வெள்ளைச்சாமி சொன்ன சொல் தவறவில்லை.மொத்தம் நூற்றுப் பதினேழு படங்கள்.அத்தனையிலும் பஞ்சவர்ணம் முகம் காட்டினாள்.பக்கம் பக்கமாக வசனம் பேசிப் பல மேடைகளை ஆக்கிரமித்த மதுரை பஞ்சவர்ணம் அல்ல அவள்.இப்போது அவள் ஒரு உப நடிகை.ஒரு படத்திலாவது வசனம் பேசி விட வேண்டும் என அவள் ஆசைப்பட்டதில் தவறில்லை.ஆனால் அந்த ஆசை நிசமாகவே இல்லை.கோதண்டம் எட்டாவது வரைக்கும் படித்தான்.அவன் படிப்பை நிறுத்தியது ஆறு மாதம் கழித்தே தெரிந்தது அம்மாவுக்கு.தினமும் பையை எடுத்துக்கொண்டு எங்கேயாவது சுற்றிவிட்டு வருவான்.அதற்கு இதற்கென்று காசு வாங்கிக் கொண்டு போவான்.படிப்பு நின்ற அன்றைக்கு தன்னை அவன் அதுவரையும் ஏமாற்றியிருக்கிறான் என்ற தகவல் பஞ்சவர்ணத்துக்கு வலித்தது.ஆனாலும் அவனை ஒன்றும் கேட்கவில்லை. கோதண்டம் ஜிம்முக்குப் போக ஆரம்பித்தான்.உடல் அவனது நிலமானது.மழையும் வெய்யிலும் மாறி மாறி அடித்தன.டான்ஸ் கிளாசுக்குப் போனவனுக்கு டான்ஸ் சுட்டுப் போட்டாலும் வரவில்லை.எத்தைத் தின்றால் பித்தத்துக்குத் தீர்வு என அவனுக்குத தெரியவில்லை.

வெள்ளைச்சாமிக்கு அசிஸ்டெண்டாக ஸ்டூடியோக்களுக்கும் அவுட்டோர் படப்பிடிப்புக்களுக்கும் சென்றுவர ஆரம்பித்தான்.அவனது கணக்கை ஒரு இளம் இயக்குனர் ஆரம்பித்து வைத்தார்.முதன் முதலில் தன்னைப் பெரிய திரையில் பார்த்த போது கோதண்டம் அடைந்த சிலிர்ப்புக்கு அளவே இல்லை.விரைந்து கடக்கும் ரயிலைப் போல மின்னல் வெட்டி மீளும் ஒரு கணத்தின் பாதியில் அவன் வந்து போன அந்தத் திரைப்படத்தை ஆறேழு முறை பார்த்தான்.அம்மா நடித்த எந்தப் படத்தையும் அவன் பார்த்ததில்லை.அவன் பெரும்பாலும் படம் பார்ப்பதை தவிர்க்கிறதற்குத் தான் காரணங்கள் இருந்தன.ஒரு கவர்ச்சி நடிகை தனது ஆட்டத்துக்காகவும் போதை ததும்பும் விழிகளுக்காகவும் கொஞ்சல் மொழிக்காகவும் பெரிதாகக் கொண்டாடப் பட்டவர்.அவருக்கு தன்னோடு ஆடுகிற உப தேவதைகளின் கூட்டத்தில் பஞ்சவர்ணத்தை ரொம்பவே பிடித்துப் போனது.பெருத்த வாழ்வில் சில நிகழ்வுகளே காரணங்களாக மாறிப்போகின்றன.அவற்றுக்கென தனியான காரணங்கள் கிட்டுவதில்லை.

பஞ்சவர்ணம் கால் பிறழ்ந்து கீழே விழுந்து மகா பெரிய்ய மாவுக்கட்டோடு வீட்டில் முடங்கினாள்.அன்றைக்கு கடைக்குப் போய்விட்டு வந்த கோதண்டம் தன் வீட்டுக்கு முன்னே பெரும் கும்பல் இருந்ததைக் கண்டு பதறி என்னவோ ஏதோ என ஓடினான்.அவன் வீட்டுக்குள் நுழையவே சில நிமிடங்கள் பிடித்தன."சிலுக்கு...சிலுக்கு" என்று குரல்கள் கிசுகிசுத்துக் கொண்டிருந்தன.எல்லாரையும் வெறித்தனமாகத் தாண்டி உள்ளே சென்றவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.திரையில் வேறொருத்தியாக மிளிரும் தன் தேவதைத்தனங்கள் ஏதும் இல்லாது வெகு இயல்பாக பேசிக்கொண்டிருந்த அந்த நடிகையை அவனுக்கு ரொம்பப் பிடித்திருந்தது.கிளம்புகிற நேரத்தில் வீட்டை சுற்றிப்பார்க்கிற சாக்கில் உள் ரூமுக்குள் நுழைந்த நடிகை கோதண்டத்தின் கையைப் பிடித்து சின்னதாய் ஒரு கவரை வைத்து அழுத்தினார்."அம்மாவை பத்திரமாப் பார்த்துக்க தம்பி"என்று கிளம்பினாள்.

அதே நடிகை வேறொரு மழையற்ற நாளில் தூக்கில் தொங்கியதாகப் பேப்பரில் படித்த அன்றைக்கு கோதண்டம் மனசு நொறுங்கினான்.வெகு காலத்துக்கு அந்த நடிகை அவன் கனவில் வந்து எதை எதையோ பேசிக்கொண்டிருந்தாள்.அவன் கையில் பலமுறை கவர்களை வைத்து அழுத்தினாள்."வாங்கிக்கோ தம்பி..அம்மாவைப் பார்த்துக்க..."என்று சிரித்தாள்.அதே நடிகை இன்னும் சில கனவுகளில் வாயிலும் மூக்கிலும் ரத்தம் வழிய கோதண்டத்தைத் துரத்தினாள்.அவன் மூச்சிரைக்க ஓடிக் களைத்த ஒரு நாளில் அவள் காணாமற்போனாள்.

காலம்   பலரது வாழ்க்கையையும் வெளிவர இயலாத திரைப்படத்தைப் போல ஆக்கிச்செல்கிறது.காரணங்கள் தான் வித்யாசப்படுகின்றன.கோதண்டம் சென்னை சினிமாவின் பரபரப்பான பல தினங்களுக்கு நடுவே வளர்ந்தான் என சொல்ல முடியாது.வாழ்ந்துகொண்டிருந்தான் என்று சொல்வதே சரி.நாற்பது வயதாகியும் கோதண்டத்துக்குக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே வரவில்லை.பஞ்சவர்ணம் வீட்டோடு முடங்கினாள்.வெள்ளைச்சாமியின் மரணத்துக்குப் பின் அவர் மகன் ரமேசு துணை நடிகர் ஏஜெண்டாக வாரிசு முறைப்படி பதவி ஏற்றான்.அவனுக்கு நல்ல டிமாண்ட் இருந்தது.இயககுனர் தயாரிப்பாளர் என சினிமாவில் எங்கேயெல்லாம் தங்கள் தலைவலியை வேறொருவன் சுமக்கிறானோ அவனை மரியாதையாக நடத்தவே செய்தார்கள்.அந்த மரியாதை அவன் தொழிலை விஸ்தரித்தது.கோதண்டத்தைக் கூடவே வைத்துக் கொண்டான்.அம்மாவுக்கு எந்தக் கவலையும் இல்லை.நாலு வருடங்களாக நடமாட்டம் இல்லை.முடக்குவாதத்தால் ஒரு கட்டிலின் செவ்வகத்துக்குள் அவள் வாழ்க்கை அடங்க நேர்ந்தது.ஆடிய பாதங்களின் ஆடாத தருணங்களை நகர்த்துவதற்குத் .தான் நடித்த நூற்றுப் பதினேழு படங்களின் எண்ணற்ற பிம்பங்களைக் கலைத்துத் தன் மனத்திரையில் மாற்றி மாற்றி ஓட்டிக்கொண்டிருந்தாள்.

கோதண்டம் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான்.அவனுக்கு ஏனோ சின்னவயதில் தேதியும் கிழமையும் சொல்லி ஒவ்வொரு நாளையும் துவக்கும் சின்னப்பையனாக மாறவேண்டும் என்ற ஆசை வந்தது.மனசுக்குள் சொல்லிப் பார்த்தான்."டுடே இஸ் ய ஃப்ரைடே.டுடேஸ் டேட் இஸ் செவெந்த் ஜூன் டூதௌசண்ட் தர்டீன் என சொல்லிக்கொண்டிருந்த போதே சிலிர்ப்பாக இருந்தது.அவன் ஓட்டிக்கொண்டு வந்த புல்லட்டையும் அவன் அணிந்திருந்த காக்கி யூனிஃபார்மையும் பார்க்கிறவர்கள் அவன் ஒரு சப் இன்ஸ்பெக்டர் என்பதை எள்ளொன்றின் உட்புறமளவு கூட சந்தேகம் இல்லாமல் ஒத்துக்கொள்ளும் வண்ணம் அவன் தோற்றம் கனகச்சிதமாக இருந்தது.இன்னமும் கோதண்டத்தால் நடந்ததை நம்ப முடியவில்லை.வேக வேகமாக படிகளில் ஏறி வீட்டுக்குள் நுழைந்தான்.

அம்மா கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாள்.பஞ்சவர்ணத்தின் உடலை லேசாகப் புரட்டினான் கோதண்டம்.அவள் கண்கள் திறந்து மேல் நோக்கி வெறித்துக் கொண்டிருந்தன.

"யம்மா....இன்னைக்கு என்னா விசேசம்னு தெரியுமா..?தெரியுமாம்மா..?"தன் தொப்பியை ஒருதரம் கழற்றி கர்ச்சீஃபால் நெற்றியைத் துடைத்து மறுபடி மாட்டிக் கொண்டான்.


"யம்மா..அடிப் பஞ்சவர்ணம்...நூத்துப் பதினேளு படத்தில முகம் காட்டினவளே..ஆடித்தோத்தவளே..இன்னிக்கு உன் மவன் ஒரு படத்துல போலீஸ் காரனா நடிச்சிட்டு வந்திருக்கேன்.பக்கம் பக்கமா வசனம் பேசிட்டேன்மா...இரு..அந்த வசனத்தை உனக்கு அப்பிடியே நடிச்சு காமிக்கிறேன்.உன்னையத் தாம்மா நெனைச்சேன்.அதை நடிக்கும் போது..உன் கண்ணுல எத்தனை நாளு அதைப் பாத்துருக்கேன் நானு..?இது ஒரு தனி ஏக்கம்மா...வாயிருந்தும் ஊமையா வாழுறது பெரிய்ய வலியில்ல...என் தங்கமே..என்னைப் பெத்த தாயி...நீ முகம் காட்டின படம் எதையும் நா பார்த்ததில்லை.இரு இந்தப் படம் வரட்டும்.உன்னைய தூக்கிட்டுப் போயி பார்க்க வெக்கிறேன்..?இந்தப் படத்துல என்பேரு என்ன தெரியுமாம்மா..?.சப் இன்ஸ்பெக்டர் சின்னமுத்தும்மா..ரொம்ப கோவக்காரன்...ஓபனிங்ல என்னான்னா..."

சின்னமுத்துவாகவே மாறி ஏற்ற இறக்கங்களுடன் தனக்கான வசனங்களை பேசிக்காட்டிக்கொண்டிருக்கிறான் கோதண்டம்.வெறித்த விழிகளில் லேசாய்த் துளிர்க்கும் நீர்முத்துக்களில் பதிவு செய்துகொள்கிறாள் பஞ்சவர்ணம்

Last Updated (Saturday, 04 January 2014 17:46)