புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

சொல்லாடல் 1

வாழ்வின் பெருங்காலம்


இந்த உலகின் முதல் மொழி எது என்பது நெடிய பயணம்.முதல் சொல் என்னவாக இருக்கும்.,.?யாரால் சொல்ல இயலும்..? சொற்களால் ததும்புகிற ஒருவாழ்க்கை வாழக் கிடைப்பது பெரிய கொடுப்பினை.உச்சரிக்கையிலும் மௌனிக்கையிலும் மொழி அழகாகிறது.அர்த்தம் நிரம்பிய சொற்கள் நம்மை எப்போதும் சூழ்ந்த வண்ணம் இருக்கிறோம்,."ம்" என்பது ஒற்றை எழுத்தா..?அல்லவே.அது ஒரு சொல்.வெறும் சொல்லன்று.மகா கனம் பொருந்திய திருவாளர் "ம்" ஸ்வாமிகள் போற்றி போற்றி என்று ஒரு முறை உரக்கக் கூவுங்கள்.மானசீகமாய் "ம்" ஸ்வாமிகளின் திசை பார்த்து வீழ்ந்து வணங்குங்கள்.கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.அத்தனை பெரிய்ய வார்த்தை அந்த ஒரு "ம்"

ஒரு சர்வாதிகாரியின் "ம்" என்ற தலையசைவுடனான வார்த்தை தானே யூத இனத்தைக் கொன்று குவித்தது?.ராஜபக்ஷேவின் ஒரு ம் மாறி இருந்தால் அத்தனை லட்சம் தமிழர்கள் உயிரிழந்திருப்பார்களா..?ஒரு ராணுவ அதிகாரியின் வினவுதலுக்கு ஆட்சியாளர் ஒருவரின் ம் தானே ஜப்பானின் ஹிரோஷிமா மீதும் நாகஸாகி மீதும் குண்டு மழை பொழிந்தது..?பின்லேடனின் ம் இருந்திராவிட்டால் ஆஃப்கன் யுத்தமாவது அமெரிக்கத் தாக்குதலாவது செப்டெம்பர் பதினொன்று சம்பவக் க்ரூரங்களாவது... எதுவும் நிகழ்ந்திருக்காது அல்லவா..?"ம்" என்பது மிக நுட்பமான வார்த்தை.ஒரு "ம்" என்பது பல முடிவுகளுக்கான திறப்பாக இருக்கிறது சிலருக்கு அது வாழ்க்கையை அள்ளித்தரும் அட்சயபாத்திரம். வேறு சிலருக்கு அது வீழ்த்தும் அஸ்திரம்.அன்பை நாடி வந்து கண் ததும்புகிறவர்களில் எத்தனை பேர் ம் என்ற ஒற்றைச் சொல் கிடைக்காத தற்காகத் தங்கள் உயிரை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்..?காதலில் வாழ்க்கையில் குடும்பத்தில் சமூகத்தில் வரலாற்றில் அரசியலில் என எல்லாப்பரப்பிலும் ம் என்ற ஒற்றைச்சொல்லின் வருகையும் தொலைதலும் மிகப் பிரம்மாண்டமானது.மொழியால் மட்டுமே சாத்தியமான வசீகரங்கள் தான் எத்தனை..?அருகாமையில் அமர்ந்து தலை தடவிய படியே வாழ்க்கைக்குத் தேவையான அதி உன்னத நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கிற அத்யந்த சினேகிதன் போல மொழியும் சொற்களும் கண்மறைவு நாடகங்களை ஏற்படுத்தியபடியே தானும் நகர்ந்து நம்மையும் நகர்த்திச் செல்கிறது.

கோத்திபுவா என்றொரு நடனம் ஒடியாவின் பாரம்பரிய நடன வகைகளில் ஒன்று.கோத்தி என்றால் தனி புவா என்றால் ஆண்.எனப் பொருள்.ஆனால் இந்த நடனம் தனியாக ஒரு ஆண் நேர்த்துவது அல்ல என்பது இதன் சுவாரசியமான துவக்கம்.நான்கு அல்லது ஆறு ஆடவர்கள் சேர்ந்து இந்த நடனத்தை ஆடுகின்றனர்.உடலை உலர்த்தி உருக்கிக் கற்க வேண்டிய இந்த நடனத்தினை ஆறு வயது முதல் பதினான்கு வயதிற்கு இடைப்பட்ட சிறார்கள் மட்டும் தான் ஆடக்கூடுகிறது. மற்றவர்க்கு அனுமதி இல்லை.மேலும் இந்த நடனத்தை ஆடுகிற ஆண் சிறார்கள் பெண் வேடமிட்டுத் தான் ஆடவேண்டி யிருக்கிறது என்பது இன்னொரு ரசம்.மூவகை உபவாத்தியர்கள் உதவி புரிய கோத்தி புவாவை ஆடுகிறவர்கள் பாடிக்கொண்டே ஆடுகிறார்கள்.காண்பவர் கண்கள் விரிந்து ஒரு கட்டத்தில் வெளியே விழுந்துவிட்டாலும் ஆச்சர்யமல்ல
என்னும் அளவுக்கு கொள்ளை அழகு இந்த நடனம்.

ஆய கலைகள் அறுபத்தி நான்கு என்ற பழைய பட்டியலை இப்போது எடுத்துப் பார்த்தால் சிரிப்பு வரும். அரதப்பழைய விஷயங்களில் பல இப்போது புழக்கத்தில் இல்லை.அவற்றின் இடங்களில் புத்தம்புதிய கலைகள் வந்தமர்ந்து கொள்வது இயற்கையின் நியதி தான்.ஆனால்  இந்தியாவின் ஆதிப் கலைகள் பலவும் மெல்ல அழிந்து வருவதை ஏற்பதற் கில்லை..பல கலைகள் வெறும் ஏட்டுத்தகவல்களாகத் தான் விஞ்சி நிற்கின்றன.சில கலைகளின் கடைசி விற்பன்னர்கள் தொடர்வதற்குச் சீடகுலம் இல்லாது அவர்களோடே அக்கலைகளும் அழிந்துகொண்டிருப்பது வெறும் செய்தியல்ல. மீட்டெடுக்கவும் உயிர்பாய்ச்சவும் அரசாங்கங்களும் தன்னார்வ அமைப்புக்களும் பொதுமக்களும் எனப் பல்துறை முனைப்புத் தேவையாகின்றது.மரணத்துக்குப் பின் ஒரு மனிதனை மிக அதிகமாக இழிவுபடுத்துவது யார் என்று தெரியுமா..?சொன்னால் அடிக்க வருவீர்கள்.அவனது மிக நெருக்கமான உறவுகள் தான் என்பதே இதன் விடையாக இருக்க முடியும்.ஒரு மனிதனை இறப்புக்குப் பின்  பராமரிப்பது  பெரியதொரு கலை.அது மாபெரிய நாகரீகம்.எல்லாருக்கும் புரிந்துவிடாத சூட்சுமம்.மிக அபூர்வமானதொரு உயர்குணம்.

மதுரையின் சுற்றுவட்டாரத்தில் இருக்கிற பழைய புத்தகக் கடைகள் அனைத்தும் எனக்குப் பழக்கம்.அவர்களின் நெடுங்கால வாடிக்கையாளன் நான். சில வியாபாரிகள் மொத்தமாகக் கொள்முதல் செய்யும் சந்தர்ப்பங்களில் என்னை அழைப்பது உண்டு.அவர்களோடு நானும் உடன் செல்வேன்.விற்கிறவர்களின் வீட்டுக்கு சென்று அந்த வியாபாரிகள் ஒரு விலை கொடுத்து அங்கே இருக்கிற அத்தனை புத்தகங்களையும் வாங்கும் வரை அமைதி காப்பேன்.அவர்களது டீல் முடிந்தபிறகு எனக்குத் தேவையான புத்தகங்களை நான் மேலதிக விலை கொடுத்து வாங்கி வருவேன்.எல்லாருக்கும் லாபவெற்றி என்ற அளவில் இருக்கும் அந்த நடவடிக்கை.

பழைய புத்தக வியாபாரி ஒருவர் என் எண்ணை அழைத்து ஒரு முகவரியை சொல்லி அங்கே சரியாக மதியம் மூன்று மணிக்கு வந்து விடுமாறு கூறினார்.எதில் தாமதித்தாலும் புத்தகம் என் காதலி என்பதால் நான் தாமதிப்பதே கிடையாது.நான் அந்த முகவரிக்கு சென்றுவிட்டேன்.நான் போய்ப் பத்து நிமிடங்கழித்து அவரும் வந்தார்.அதை வீடு என சொல்ல முடியாது,மதுரை அண்ணா நகர் ஏரியா பணக்காரர்களின் பிரதேசம்.அங்கே ஏதோவொரு தெருவில் பெரிய வீடு.அங்கே எங்களை வரவேற்றவருக்கு ஐம்பது வயது இருக்கும்.அவரும் அவரது மனைவியும் தங்களுக்குள் கிசுகிசுத்தபடியே நின்றனர்..வியாபாரி விலை சொல்ல சொல்ல நானும் அவரும் ஆளுக்கொரு பேப்பரில் விலையை வரிசையாக எழுதினபடியே வந்தோம்.


அத்தனையும் அற்புதமான புத்தக சேகரம்.ஒரு மனிதன் தன் வாழ்வின் பெருங்காலத்தை தொலைத்துக் கண்டடைந்த காகிதச்சொர்கம் அது.அதெல்லாமும் அந்த வீட்டில் நான் பார்த்த மனிதனின் தந்தை வருந்திச்சேர்த்த செல்வம்.,அன்றைக்குப் பதினைந்து தினங்கள் முன்னால் தான் அவர் இறந்து போயிருக்கிறார் போலும்.அவரது இறப்புக்குப் பின் அவர் சேகரித்த புத்தகங்கள் அனைத்தையும் வைப்பதற்கு இடமில்லை...இதையெல்லாம் எங்கே வெச்சி மெயிண்டெய்ன் பண்றது..?இப்பல்லாம் புக்கு படிக்கிறதுக்கு யாருக்கு நேரம் இருக்கு என்பன போன்ற அற்ப காரணங்களை சொல்லியபடியே எங்களுக்கு விற்றுக்கொண்டிருந்தார்கள்.மொத்
தம் ஆறாயிரத்து எண்ணூறு ரூபாய்க்கு அவற்றை வாங்கினார் என் நண்பவியாபாரி.

அவற்றிலிருந்து எனக்கு வேண்டியவற்றை பிரித்து எடுத்துக் கொண்டிருந்தேன்.எனக்கு வேண்டாம் என ஒதுக்கியவற்றை நண்பர் தனக்கான மூட்டையில் அடக்கிக் கொண்டிருந்தார்.அப்போது மாடியில் இருந்து மெல்ல ஒரு மூதாட்டி எங்கள் அருகே வந்தார். மெல்லிய குரலில் என்னிடம் "ஏம்ப்பா..எவ்ளோ ரூவாய்க்கு போச்சு இதெல்லாம்..?"என்றார்.
நான் மென்முறுவலுடன் ஏளாயிரம் ரூவாய்க்கும்மா.."என்றேன்.வீட்டினுள் பார்த்தார்.அவரது மகன் மிச்சம் இருநூறு ரூபாயை எடுத்து வருவதற்காக உள்ளே சென்றிருந்தார்.

"இந்த வீடு மட்டும் ஒரு கோடி ரூவா பெறும்.ஏழாயிரம் ரூபாய்க்கு என் புருஷன் உசுரா நெனச்ச புஸ்தகங்களை வித்துப்புட்டானே...படுபாவி...
நானும் சாகுறவரைக்குமாச்சும் வெச்சிருந்து விக்கப் படாதா..?"என்றார்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.தன் கரங்களால் அவற்றைக் கடைசி முறை தடவிப்பார்த்த அந்த அம்மாள் அவற்றில் ஒன்றைப் பெயர்கூடப் படிக்காமல் எடுத்து "இதை மட்டும் நா வெச்சுக்கிறேன்யா...ஞாபகார்த்
தத்துக்கு"என்றவர் மெல்ல நடந்து வீட்டினுள் சென்று மறைந்தார்.

ஏழு ஆயிரம் ரூபாய்த் தாட்களைப் பெற்றுக்கொண்டு உள்ளே சென்றிருந்த அந்த நல்மகன் திரும்ப வந்து "நூறு ரூபா தாம்பா இருக்கு..இந்தாங்க.."என்றார்.நானும் என் நண்பரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

தொடரும்
ஆத்மார்த்தி

Last Updated (Wednesday, 22 January 2014 09:42)