புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

வடிவேலு; துயரப் பொழுதின் யாழிசை

ஒரு நள்ளிரவில் இந்தக் கட்டுரையை எழுதுவதற்குத் தனித்த காரணம் ஏதேனும் அகப்படுமா? இந்தக் கட்டுரையின் நடு நாயகம்.சற்று முந்தைய காலத்தில் கோடம்பாக்கத்தின் கால்ஷீட் மேனேஜர்கள் பயபக்தியுடன் உச்சரித்த சில பெயர்களில் ஒன்று வடிவேலு..தமிழ் சினிமாவின் தலைமை நகைச்சுவை அதிகாரி வடிவேலு கடந்த மூன்று வருடகாலமாகப் பணி இடை நீக்கத்தில் இருப்பதென்னவோ  வாஸ்தவம் தான்.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஆளுமைகளில் முதல் முக்கியஸ்தராக நான் சொல்ல விரும்புவது என்.எஸ்.கே எனப்படுகிற கலைவாணர் கிருஷ்ணனைத் தான்.திரையிலும் வெளியிலுமாக பூசிக்கப் பட்ட முதல் வேந்தராக அவரைச் சொல்லக் காரணங்கள் இருக்கின்றன.அறிந்த காரணங்கள்.வடிவேலு அந்த வரிசையில் எத்தனையாவது ஆளுமை என்பதை விட்டுவிடலாம்.
வடிவேலு அறிமுகமானது எண்பதுகளின் இறுதியில்.அப்போது கோலோச்சிய மன்னரின் பெயர்
கவுண்டமணி.எழுபதுகளின் மத்தியில்.முன் வழுக்கைத் தலையும் ஒல்லி தேகமுமாக கவுண்டமணி எந்தப் பின்புல ஊக்கங்களும் இல்லாமல் அறிமுகமானார்.பிற்காலத்தில் உச்சம் தொட்ட ரஜனியும் அவரும் இணைந்த பதினாறுவயதினிலே தான் அவருக்கான முதல் அடையாளமானது.அதில் அவர் அடிக்கடி உச்சரித்த "பத்த வெச்சிட்டியே பரட்டை" என்னும் வசனம் ஆணி அடித்தது.
சுவர் இல்லாத சித்திரங்கள் புதிய வார்ப்புகள் நெற்றிக்கண் வரையிலான படங்களில் கவுண்டமணி குணச்சித்திர நடிகர் என்று சொல்லத் தக்க அளவிலேயே மெலிதான சின்ன பெரிய பாத்திரங்களை எல்லாம் ஏற்று நடித்தபடி நகர்ந்து வந்தார்.சுருளிராஜனின் மரணம் ஏற்படுத்திய
வெற்றிடமும் ஆர்.சுந்தர்ராஜன் கே.ரங்கராஜ் உள்ளிட்ட புதிய இயக்குநர்களின் வருகையும் கவுண்டமணியைத் தனி நகைச்சுவை ஆளுமையாக்க உதவின.
உதயகீதம் படம் ஒரு மைல் கல்.கவுண்டமணி அதகளம் செய்தார்.அப்படியே நிரந்தரித்துக் கொண்டார்.உடன் நடிப்பதற்கு தோதான ஒரு இணையாக செந்தில் உருவானார்.இருவரும் இணைந்த படங்கள் பெருவெற்றி பெற்றன.கரகாட்டக்காரன் ஒரு வருடம் ஓடியது.அதில் இவ்விணைக்குச் செவ்விய பங்குண்டு.சில படங்களில் நாயகனாக?!வும் நடித்தார் மணி.
அப்போது தான் என் ராசாவின் மனசிலே படத்தில் கவுண்ட மணி செந்தில் ஆகியோருடன் சின்னஞ்சிறு பாத்திரத்தில் அறிமுகமானார் வடிவேலு.மிகவும் குச்சியான தேகம்.துருத்திக் கொண்டிருக்கும் பெரிய பற்களுமாக அவரை அன்றைக்கு அளவெடுத்தவர்கள்
காலம் என்னும் யானை மாலையைக் கொணர்ந்து அவர் கழுத்தில் தான் சூட்டப்போகிறது என்று சொன்னால் தலைதெறிக்க ஓடியிருப்பார்கள்.ஆனால் அது தான் நடந்தது. தனக்குக் கிடைத்த வாய்ப்புக்களிலெல்லாமும் மிளிர்வதற்கான தாகத்தினோடே நடித்தபடி நகர்ந்து கொண்டிருந்தார் வடிவேலு.ஆரம்ப காலத்தில் அவருக்கு என்னமாதிரியான பாத்திரங்களை வழங்குவது என்பதில் இயக்குநர்களுக்குக் குழப்பம் இருந்திருக்கக் கூடும்.கமல் நடித்த பரதன் இயக்கிய தேவர்மகன் படத்தில் இசக்கி என்னும் கதாபாத்திரத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பார் வடிவேலு.பார்க்கப்போனால் நகைச்சுவைக்கு சற்றும் வாய்ப்பில்லாத ஒரு கதையோட்டம் கொண்ட படம் தேவர்மகன்.ஆனால் அதனுள் வழங்கப் பட்ட வாய்ப்பைத் ஸ்கோர் செய்துகொண்டது வடிவேலுவின் தனித்துவம்.
அந்தக் காலகட்டத்தில் ஆர்வி உதயகுமார் உள்ளிட்ட இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து வாய்ப்புக்கிடைத்தது வடிவேலுவிற்கு.சிங்காரவேலன் படத்தில் கமல் கவுண்டமணி ஆகிய ராட்சச நடிகர்களுடன் அவரும் இருப்பார்.கோயில்காளை உள்ளிட்ட பல படங்களில் செந்திலுக்கு அடுத்து கவுண்டமணியிடம் அடி உதை வாங்கும் இன்னொருவராக நடித்தார்.இவற்றுக்கு நடுவே பாரதிராஜாவின் கிழக்குச் சீமையிலே படம் வடிவேலுவைத் தனி ட்ராக் செய்யும் நம்பிக்கைக்கு உயர்த்திற்று.அதற்கடுத்தாற் போல் வடிவேலுவைத் தனியாக படங்களில் அமர்த்தலாம் என்னும் அடுத்த கட்ட நம்பிக்கை உருவானது.
பாஞ்சாலங்குறிச்சி,கண்ணாத்தாள் போன்ற படங்களில் தனி ட்ராக் செய்தபடியே வீ சேகர் விக்கிரமன் உள்ளிட்ட பிரபல இயக்குநர்களின் படங்களில் விவேக் உடனும் நடிக்கலானார் வடிவேலு.காதலன் படத்தில் ஷங்கர் அவரை பிரபுதேவாவின் நண்பராக கல்லூரி மாணவர் தலைவராக கற்பனித்த இடத்திலேயே வெற்றியடைந்தார்.தொட்டவை துலங்க ஆரம்பித்தது வடிவேலுவிற்கு.
இதே நேரத்தில் இரண்டொரு தளங்களில் முந்தி ஓடிய குதிரையான விவேக்கிற்குப் படங்கள் குவிந்தன.கவுண்டமணியின் அமைதிக்காலம் உருவானது.மெல்ல மெல்ல வடிவேலுவின் தனி ட்ராக் படங்கள் அதிகரித்தன.ஒருமுறை உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்த
வடிவேலு தனக்குக் கிடைத்த மருத்துவமனை ஓய்வைக் கூட அடுத்து தான் ஏற்கப் போகும் கதாபாத்திரங்களுக்கான காமெடி டிஸ்கஷன் என்று வர்ணித்தார்.அதனைப் படித்த சிலர் அப்போதைக்கு நமுட்டுச் சிரிப்பை மறைத்துக்கொண்டிருக்கக் கூடும்.அதன் பின் சொன்னதை செய்து காட்டினார் வடிவேலு.
இந்த இடத்தில் தான் தானும் ஒரு நடிகர் என்ற நிலையைக் கடந்து தான் யார் என்பதை உலகத்துக்கு நிரூபிக்கும் வடிவேலுவின் நிஜ ஆட்டம் துவங்கியது.அதற்கு முன்பே வடிவேலு தனக்கான கரவொலிகளைக் கவனித்தபடியே இருந்து வந்ததாக உணரமுடியும்.வடிவேலு சாமான்யர்களைக் குறிவைத்தார்.அவருடைய பாத்திரங்கள் ஒன்றுக்கொன்று சம்மந்தமற்றவை போலத் தோன்றினாலும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வியலுக்குள் தொடர்ந்து இயங்க ஆரம்பித்தன.முன் காலத்தில் கிராமத்து விட்டேற்றி ஒருவனாகப் பல படங்களில் தோன்றிய வடிவேலு நகரமயமாக்கலின் லட்சோப லட்சம் மனிதர்களின் பொதுக் குறியீடாகத் தன்னை முன் வைக்க ஆரம்பித்தார்.மத்யம வாழ்வின் சலிப்பைத் தன் கையிலெடுத்தார்.தோல்வி வெற்றி என்ற இரட்டைப் பதங்களுக்குள்ளே சின்னச்சின்ன கதுப்புக்களாக ஒளிந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான சந்தர்ப்பங்களை வடிவேலு மிகச்சரியாகப் பயன்படுத்த ஆரம்பித்தார்.
மூன்றுவிதமாக வடிவேலுவின் கதாபாத்திரங்களைப் பார்க்க முடிகிறது.முதலாவது மத்யம வாழ்வின் சலிப்பை முன் வைத்த கதாபாத்திரங்கள் ப்யூனில் துவங்கி நில விற்பனையில் ஈடுபடும் நடுத்தரகர் வரை போலீஸ் கான்ஸ்டபிள் தொடங்கி கோர்ட்டில் மணியடிக்கும் டவாலி வரைக்கும் ஆட்டோ டிரைவர் தொடங்கி அரசாங்க மருத்துவமனையின் கம்பவுண்டர் வரைக்குமான பொதுப்பாத்திரங்களின் சலிப்பை முன் வைத்தன வடிவேலுவின் பாத்திரங்கள்.
அடுத்ததாக அதீதமாக உருவாக்கப்படும் ஃப்ராடுலண்ட் கதாபாத்திரங்கள் திருடனாக போக்கிரியாக பிக் பாக்கெட் அடிப்பவனாக ஊரை அடித்துத் தன் வயிற்றை நிரப்புபவனாக என்று பலரகப் பாத்திரங்களை ஏற்றார் வடிவேலு.மூன்றாவதாக அதீதமான நம்மால் பார்த்திட வாய்ப்பே இல்லாத கதாபாத்திரங்கள் போலி தாதா போலி ரவுடி என அவர் எதைச்செய்தாலும் ரசிக்க ஒரு பெருங்கூட்டம் உருவாகி இருந்ததை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.
வடிவேலு தமிழ்த் திரைவரலாற்றில் மற்ற எல்லா நகைச்சுவை நடிகர்களின் பட்டியலில் இருந்தும் தன்னைத் தனித்துக் கொள்ள அவரது உடல்மொழி உதவிற்று.அதை விட அவர் தனக்கென்று தனிப்பாணியாகத் தனக்குத் தானே பேசிக்கொள்ள ஆரம்பித்திருந்தார்.அது ரசிகனை நேரடியாக அவ்வந்தக் காட்சிகளினுள்ளே வரவழைத்துக் கொண்டது.,இது முன் எப்போதும் எவர்க்கும் வாய்க்காத ஒன்று ரசிக்கையில் ரசித்து கலைகையில் மறந்து தன் வாழ்க்கைக்குள் எந்த இடமும் தராமலேயே இருந்து வந்த ரசிகசமூகம் வடிவேலுவை அப்படி நிறுத்த முடியாமற் போனது ஆச்சரியமல்ல.அதற்கான காரணம் வடிவேலு கைக்கொண்ட பிரத்யேக மொழி.
"ஆகா...ஆரம்பத்திலயே ஆரம்பிச்சிட்டாங்கியளா..?"
"அது போன மாசம்...இது இந்த மாசம்..."
"பலே வெள்ளையத்தேவா..."
"கைப்புள்ள இன்னும் ஏண்டா முழிச்சிருக்க..தூங்க்...
."

தனக்குத் தானே பேசிக்கொண்ட வடிவேலுவின் மொழியாடல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது.தமிழன் தன்னிலை மறந்தது அவற்றின் மேல் கொண்ட  லயிப்பில் தான் எனலாம்.
""ஆணியே பிடுங்க வேணாம்"" என மேலிருந்து கீழாக தன்னிரு கைகளை இறக்கி வடிவேலு சொன்னது ஒரே ஒரு முறை தான்.அந்த வாக்கியம் இன்றைக்கு கார்ப்பொரேட் செக்டாரிலும் அரச நிறுவனங்களிலும் பல்வேறு தொனிகளில் பயன்படுத்தப்படுகின்றன.குறுஞ்செ
ய்திகளில் அதிகளவு அனுப்பப் பட்டிருக்கின்றன."""மாப்பு வெச்சிட்டாண்டா ஆப்பு""" என்று சர்வ வல்லமை பொருந்திய ரஜனியின் சந்திரமுகி படத்தில் வடிவேலு ரௌத்ர தாண்டவம் ஆடினார்.அவரது எல்லா வசனங்களுமே மக்களால் பிரதியெடுக்கப் பட்டன.அதிக முறை உச்சரிக்கப்பட்டன.வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளில் வெகு துல்லியமான கதைத் தன்மையும் அதற்கென்று படத்திற்குள் படமாக கதைக்குள் கதையாக ஒரு துவக்கமும் ஒரு கதையும் பின் ஒரு அழிவு அல்லது முடிவும் இருந்தது வெகுவாக எடுபட்டது.சுந்தர் சியின் படங்களான வின்னர் வடிவேலுவை ராஜாதி ராஜனாக்கியது..

மையக் கதையாடலுடனேயே உபகதையாக வின்னர் படத்தில் வருத்தப் படாத வாலிபர் சங்கத்தின் நிறுவன தலைவராகக் கைப்புள்ள என்னும் கதாபாத்திரம் ஏற்றார் பென்சில் மீசை அவர் முகத்திற்கு எடுப்பாயிருந்தது.எவர் வாகனத்திலும் பயணிக்காத கைப்புள்ள தன் சொந்த ட்ரை சைக்கிளில் தான் பயணிப்பார்.அடி வாங்குவதைக் கூடப் போன மாசம் இது இந்த மாசம் என்று பிரித்துப் பொருள் காண்பார்.இந்தப் படத்தின் வடிவேலு பேசிய அனைத்து வசனங்களுமே மக்களின் மனனத்துக்குள் இடம்பெற்றது அதற்கு முன் தமிழ்த் திரை உலகில் வேறெந்த நகைச்சுவை நட்சத்திரத்துக்கும் வழங்கப் படாத மரியாதை எனலாம்.
சுயத்தை அறுத்து எறிந்தார் வடிவேலு.தன்னை உச்சபட்சமாக எள்ளிக்கொண்டார்.தன்னை கலைத்து கேலி செய்வதற்குண்டான சகல சாத்தியங்களையும் திரைப்படுத்தினார்.அவருடைய எண்ணம் துல்லியமாக நிறைவேறியது.அடுத்தடுத்து அவரது அறுவடை கொழித்தது.அடுத்து வந்த கிரி படத்தின் வீரபாகு கதாபாத்திரம் இன்னொரு உயரசிகரத்தை அவர்வசமாக்கியது.
கிரி படத்தில் "திருப்பி நீ ஏன் அடிக்கலை..?" எனக் கேட்கும் ஆர்த்தியிடம் தன் சுண்டுவிரல் நகத்தையே நோக்கியபடி "அதுல ஒருத்தன் சொல்றான்...இவன் எம்புட்டு அடிச்சாலும் தாங்குறாண்டா..ரொம்ப நல்லவன்னு..சொல்லிட்டாம்மா.."என்று கேவுவார்.திரையரங்கில் இருக்கும் நாற்காலிகள் கூட நகைத்தன.ஆம் அது தான் நடந்தது.தலைநகரம் படத்தில் தன் வசனங்களாலும் தோற்றத்தாலும் இன்னும் பொறி பறக்கச் செய்தார் வடிவேலு."அவன் பயங்கர கறுப்பா இருப்பான்..நீ கறுப்பா பயங்கரமா இருக்கே.." இந்த வசனமாகட்டும் "நீ யாரையோ நெனச்சி வாழாவெட்டியா இருக்கப் போறே...நான் உன்னையவே நினைச்சு வெட்டியா வாழாம இருக்கப் போறேன்...என்ற வசனமும் மக்களை நகைத்து உருள வைத்தன.                   
சிம்புதேவனின் இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி உத்தமபுத்திரன் உள்ளிட்ட இருவேட ராஜ கதைகளின் நவவடிவம்.படம் முழுவதும் நுண் அரசியல் வசனங்களையும் நடப்புக்காலப் பகடிகளையும் உள்ளடக்கிய அந்தப் படத்தில் பெரிய நகைச்சுவை நட்சத்திரங்களான கவுண்டமணி மற்றும் விவேக் தவிர மற்ற எல்லாருமே கிட்டத்தட்ட நடித்திருந்தார்கள்.நாகேஷும் நாசரும் மனோரமாவும் அந்தப் படத்தை அலங்கரித்தனர்.நின்று விளையாடினார் வடிவேலு.குழந்தைகளின் பிடித்தமான கேலிப்பொருளாக இம்சை அரசன் கதாபாத்திரம் மாறிப்போனது.உண்மையைச் சொல்லப் போனால் பத்தாண்டுகளுக்கு முன்னால் விகடனில் சிம்பு ஒரு கார்ட்டூனிஸ்டாக வரைந்து உருவாக்கிய ஒரு கற்பனைப் பாத்திரத்தை வடிவேலுவைக் கொண்டு பரிமளிக்க செய்ததே அந்தப் படம்.பட்டி தொட்டியெல்லாம் வெற்றிபெற்றது
பின்னர் வந்த குசேலன் படத்தில் மீண்டும் ரஜனியுடன் நடித்தார்.இந்திர லோகத்தில் நா,அழகப்பன் என்றொரு படத்தில் நாயகனாகவே நடித்தார்.அது முன் படங்களின் வெற்றியைப் பெறவில்லை.என்றாலும் நகைச்சுவைப் பாத்திரங்களில் வடிவேலு தொட்டதெல்லாம் பொன் கொழித்தது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனக்கும் விஜயகாந்துக்கும் முன் காலங்களில் ஏற்பட்ட சொந்த உரசல்களைப் பொதுப் பகையாக மாற்ற முனைந்தது வடிவேலுவின் திரை வாழ்க்கையை முடித்து வைக்கும் அஸ்திரமாகச் சித்தரிக்கப் படுகிறது.விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த காலங்களில் எதுவும் பேசாதிருந்த வடிவேலு அவர் தேர்தலுக்குத் தயாராகும் போது தன்னை அவரது எதிரியாக முன் வைத்தார்.ஊர் ரெண்டு பட்டால் கூத்துக்காரர்களுக்குக் கொண்டாட்டம் என்பார்கள்.இங்கே கூத்துக்காரர்களை ரெண்டுபடுத்தி ஊர் நாட்டாண்மைகள் கொண்டாடிக் கொண்டனர்.
அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி அமைத்த அந்தத் தேர்தலில் விஜயகாந்த் வரவே கூடாது என்ற முழக்கத்தோடு திமுக காங்கிரஸ் அணியை ஆதரித்துப் பட்டி தொட்டியெல்லாம் பிரச்சாரம் செய்தார் வடிவேலு.அதிமுக பற்றியோ அதன் தலைமை பற்றியோ எதுவும் பேசாமல் கவனமாகத் தவிர்த்தார் என்றாலும் அவரது எதிர்ப்பின் பலன் அதிமுகவுக்கும் இழப்பை ஏற்படுத்தும் என்பதை அவர் உணர்ந்துகொள்ளவில்லை.வடிவேலுவி
ன் பிரச்சாரம் கடலளவு ரசத்தில் விழுந்த பெருங்காயத் துண்டைப் போலக் காணாமற்போனது.விஜயகாந்த்தின் தேமுதிக உள்ளிட்ட அதிமுக அணி அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியேறியது.ஒரு விதூஷகனின் உண்மையான பிரச்சாரத்தை அவரது நகைச்சுவை முனைவின் தொடர்ச்சியாகவே கருதிய தமிழக மக்கள் அவருக்கு எத்தனை வலிக்கும் என்பது பற்றிக் கவலையேதுமின்றி வடிவேலுவை வீழ்த்தினார்கள்.அதற்கு அவர்களிடம் ஒரு காரணம் இருந்திருக்கக் கூடும்.நம்ம வடிவேலு வாங்காத அடியா உதையா..?அதெல்லாம் அவருக்கு சகஜமப்பா என்று.
அதன் பின் மூன்று ஆண்டுகளாக வடிவேலு எந்தப் படத்திற்காகவும் அழைக்கப் படவில்லை.அவர் நடிக்காமல் இருப்பதை அவருக்குப் படங்கள் கிடைக்காமல் இருப்பதை இந்த அரசாங்கம் விரும்பவில்லை என்பதைப் போன்ற பதில்வராத சித்திரம் ஒன்று வலியப் புனையப்பட்டிருக்கிறது.உண்மையை சொல்லப் போனால் அதிமுகவிற்கும் தேமுதிகவிற்குமான தேர்தல் உறவு சில மாதங்களில் முறிந்து போனது.அன்றைக்கு நியாயமாக வடிவேலு மறுபடி வெளிச்சத்துக்கு வந்திருக்க வேண்டுமல்லவா..?இங்கே இரண்டு கூற்றுக்களை கவனம் கொள்ளத் தேவையாகின்றது.ஒன்று,திரைத்துறை
யைப் பொறுத்தவரை அதிமுகவை விட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிடி இறுக்கமானது.முன் சமீபகாலத்தில் நடிகர் சங்கத்தின் தலைவராக விளங்கியவரின் அரசியல் ஏற்றம் தான் இப்போதைய கட்சி என்பதை கவனிக்க வேண்டும்.இன்னொன்று தேமுதிகவை எதிர்க்கிறேன் பேர்வழி என்று திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்ததால் அவர் திமுக அனுதாபியாக அல்ல அந்தக் கட்சிக்காரராகவே பார்க்கப் பட்டது வினோதமல்ல.இந்தக் கண்மறைவுக்காலம் வடிவேலு என்ற மகா கலைஞனின் ஆட்டத்தை முடித்துவைத்து விட்டதா..?வடிவேலுவிற்குப் பின்னால் அரைடஜன் நகைச்சுவை நடிகர்கள் உருவாகி விட்ட போதிலும் சந்தானம் மட்டுமே கொஞ்சம்  தனிக்கிறார்.ஆனாலும் சந்தானம் அடுத்த வடிவேலுவா என்னும் வினாவைக் கேட்கவே வேண்டியதில்லை.இல்லை என்பதே பதிலாகிறது.சூரி கிட்டத்தட்ட வடிவேலுவை நினைவுபடுத்தியாவது தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப் போராடுகிறார்.கஞ்சா கருப்பு போன்ற நடிகர்கள் ஆங்காங்கே நடித்த வண்ணம் இருந்தாலும் கூட,வடிவேலுவின் இடம் ஒரு திரைமறைவில் தான் இருக்கின்றதே ஒழிய அந்த நாற்காலியின் மீது படிந்திருக்கும் ஒட்டடைத் தூசிகளை அகற்றிவிட்டு அங்கே வேறோருவர் அமர்ந்துவிடவில்லை.
தெனாலிராமன் என்றொரு படத்தில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார் வடிவேலு என்று செய்திகள்  வந்தவண்ணம் இருக்கின்றன.இன்றைக்கும் எந்த தொலைக்காட்சி சானலை திறந்தாலும் ஒரு முழு தினத்தின் பல மணிநேரங்களை வடிவேலு ஆக்கிரமிக்கிறார்.மக்கள் அவரைப் பார்த்தபடியே வாழ்ந்துகொள்கிறார்கள் தத்தமது வாழ்க்கையை.வடிவேலு தனிமையிலிருக்கிறார் என்னும் வாக்கியம் பொய்யல்ல என்றாலும் அவரது ஆட்டம் முழுவதுமாக முடிந்து போய்விடவில்லை என்பதை சொல்லியாக வேண்டும்.வடிவேலு மறுபடியும் வந்து நடித்து அவரது பழைய இடத்தைப் பிடிப்பாரா மாட்டாரா என்பது அர்த்தமற்றது.ஏன் எனில் வடிவேலுவுக்கு மக்கள் வழங்கிய அதே ஒரே இடம் அவருக்கு மட்டுமானது.அவர் வருவார்.காலம் ஒரு நகைச்சுவைக் கலைஞனை அடிக்கடிப் புறக்கணிப்பதைப் போல பாவனை செய்யும்.ஆனால் அதுவொரு மாய ஆட்டம்.கண்கட்டும் வித்தைக்காரனின் மேடையில் பெட்டிக்குள் நுழைந்துகொண்ட மேஜிக் கலைஞன் யாரும் எதிர்பாராத திசையில் இருந்து நடந்து வருவானல்லவா..?காத்திருக்கலாம்.
பெட்டியில் நுழைந்து கொண்டிருக்கும் வடிவேலு எந்தத் திசையை உடைத்துக்கொண்டு வரப்போகிறார் என்பதைக் காண்பதற்கு.