புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

பாலுமகேந்திரா


பாலுமகேந்திரா

ஒருமுறை நிகழ்ந்தவன்பாலுமகேந்திராவை நான் சந்தித்திருக்கிறேன்..சீனுராமசாமி தனது தென்மேற்குப் பருவக்காற்று படத்திற்கான ப்ரீவ்யூவிற்கு வரும்படி தனது குருநாதரை அழைப்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்றபோது அவருடன் நானும் சென்றது தற்செயல்.எனக்கு மிக விருப்பமான மனிதர் ஒருவரை கிட்டத்தில் பார்க்கிற வாய்ப்பு அது என்று புத்திக்கு உரைக்கவே இல்லை.ஒரு வார்த்தை கூடப் பேசாத ஒரு நிகழ்வை சந்திப்பு என எப்படிச் சொல்ல முடியும்..?என்றாலும் பாலுமகேந்திரா என்னும் மனிதனை அவரது எல்லாப் படங்களின் வழியாகவும் அவரது வாழ்காலத்தில் எழுதப்பட்ட பல பிரதிகளின் வாயிலாகவும் தரிசித்த பல்லாயிரக்கணக்கானவர்களில் நானும் ஒருவன் என்பதைச் சொல்லிக்
கொள்வதில் தவறில்லை.


சில மாதங்களுக்கு முன்னால் மதுரை மினிப்ரியா திரையரங்கத்தில் தலைமுறைகள் திரைப்படத்தைப் பார்க்க என் சகதர்மிணியுடன் சென்றிருந்தேன்.தியேட்டரில் பெரிய கூட்டமேதும் இல்லை என்றாலும் அந்தப் படத்தின் பார்வையாளர்கள் அத்தனை பேரும் ஒருவித சாந்தமயக்கத்தில் இருந்ததை உணரமுடிந்தது.அந்த மயக்கம் அபூர்வமானது.அவ்வப்போது பாலுமகேந்திரா என்னும் கலைஞனின் படங்கள் புலன்களைக் கட்டி வைப்பது ஒரு ஆகமமாகவே தொடர்ந்துவந்திருக்கிறது.

அவரது கோகிலா படத்தை அன்றைய காலத்தின் அதிர்வு எனலாம்.தமிழில் அவர் இயக்கிய மூடுபனி சைக்கோ என்னும் கதையின் லேசான தழுவல் என்பவர்களும் அதனை மறுப்பவர்களுமாகத் தொடங்கியது.வேலை இல்லாப் பட்டதாரிகளின் ஷேவிங் செய்யாத சோகப் பாத்திரங்களுக்கு மத்தியில் தனது நாயகனை வேறோருவனாக்கி நம்மிடம் அனுப்பி வைத்தவர் பாலுமகேந்திரா.மூடுபனியின் நாயகனாக நடித்திருக்கும் நடிகர் பிரதாப் ஏற்ற பாத்திரம் அத்தகையது.தனிமையில் உழலும் செல்வந்தனின் மனச்சிதைவு.அதன் பின்னணியில் அவனுக்குப் பெண்கள் மீது ஏற்படும் தொடர்வெறுப்பு அதற்கு இணையாக அம்மா என்னும் ஒரு மனுஷியை வழிபாட்டுக்குரியவளாக மரணமற்றவளாக மாற்றிக்கொள்ளும் பிறழ்வு என்று அந்தக் காலகட்டம் முற்றிலும் அறியாத ஒருவனைக் கதைப்படுத்தியிருப்பார் பாலு.

மூடுபனியின் என் இனிய பொன் நிலாவே பாடல் பாலுவின் படமாக்கப் பட்ட உலகத்தின் அடி நாதமாக இன்றைக்கும் தமிழ் மனங்களின் தனிமைகாலத் தேர்வாகத் தன்னை உயிர்ப்பித்துக் கொண்டே வருவதில் வியப்பதற்கேதுமில்லை.இளையராஜா பாலு என்னும் நண்பனுக்கான பாடல்களைக் கூடுதல் ப்ரியத்துடன் அமைத்துவந்திருப்பதை பாலுவின் படப்பாடல்களின் வழியாக நம்மால் அறிய முடியும். கலரிங் மூலமாக ஒரு பெரிய மனோ நிலையை ஏற்படுத்துவதில் பாலுமகேந்திரா வல்லவர்.அவரது ஒவ்வொரு ஃப்ரேமும் தனித்தனியாகவும் மொத்தமாகவும் அழகழகு.மூடுபனியில் கல்கத்தா விஸ்வநாதன் ஷோபா//ஷோபா பானுச்சந்தர்//கல்கத்தா விஸ்வநாதன் பிரதாப்/பிரதாப் ஷோபா//பிரதாப் -கொல்லப்படும் பெண்கள்/என கதாபாத்திரங்களில் பின்னல் மிக அழகாக இருக்கும்.கதையைத் தன் துல்லியமான வசனங்களால் நகர்த்துவதில் பாலுமகேந்திரா இணையற்ற மேதை.   பிரதாப் விலைமாது வீட்டிற்குள் நுழைந்து அவளைக் கொன்றுவிட்டு வெளியே வருவார்.அவளது குழந்தை வெளியே விளையாடிக்கொண்டிருக்கும் அதனிடம் கம்மிய குரலில் அம்மாவைத் தொந்தரவு செய்யாதே.தூங்குறாங்க என்று சொல்லிவிட்டு நகர்வார்.


மூன்றாம் பிறை படத்தை அதற்கு அடுத்தாற்போல தொண்ணூறுகளின் இறுதியில் வந்த பாலுவின் பிரதம சீடனாக இன்றைக்கு அறியுப் படுகிற பாலாவின் முதல் படமான சேது உடன் ஒப்பிட இயலுவது சுவையான அம்சம்.ஒரு உற்சாகமான பெண் விபத்தில் அடிபட்டுத் தன்சுயத்தை இழக்கிறாள்.அவளுக்கும் சீனு என்ற ஒரு புதிய மனிதனுக்குமான நட்பும் இறுதியில் மீண்டு மறுபடி தன் பழைய சுயத்தினுள் திரும்புகிறவளுக்குத் தன் நனவிலி கால ஞாபகங்கள் ஏதுமில்லாமற்போவதுமான கதை மூன்றாம் பிறையினுடையது.பின்னாளில் இது சத்மா என்றபேரில் இந்தியிலும் வந்தது.சேது என்பவன் தலையிடிபடுவதற்கு முன்னால் அவன் காதலை ஏற்க மறுக்கும் காதலி அவன் சுயத்தை இழந்தபிறகு வேறோருவனாவதும் பின் மறுபடி நினைவுலகத்திற்குத் திரும்புகையில் காதலி இறந்துபோவதுமாக இரண்டு படங்களின் உலகங்களும் அருகருகே அமைந்தவை என்பது தற்செயலல்ல.இளையராஜாவிடம் இருந்து மாக்ஸிமம் அவ்ட்புட்டை வாங்கிய இயக்குனர் பாலு தான்.இன்றுவரை வேறு யாரையும் அந்த இடத்தில் யோசிக்க முடியாது.சதிலீலாவதி ஜூலிகணபதி தலைமுறைகள் என வணிகவிளைதல்களைத் தாண்டி உணர்வால் பேசிக்கொண்ட இரண்டு பேர் அவர்கள்.பாலுவின் ஆன்மா இளையராஜாவுக்குத் தெரியும்.அது அவர் இசையில் வழியும்.பின்னணி இசையைப் பொறுத்தவரை மிக புத்தம்புதிதாக பாலுவின் ஒவ்வொரு படத்திலும் முயன்றிருப்பார் ராஜா.நீங்கள் கேட்டவை உன் கண்ணில் நீர் வழிந்தால் ராமன் அப்துல்லா போன்ற படங்களில் பீஜீஎம் அத்தனை புத்துணர்வாக இருப்பதை உணரலாம்.

நீங்கள் கேட்டவை உன் கண்ணில் நீர் வழிந்தால் போன்ற படங்களில் அவர் பானுச்சந்தர் அர்ச்சனா சில்க்ஸ்மிதா ரஜனிகாந்த் மாதவி என அப்போது ஓடும் குதிரைகளைக் கூட கையிலெடுத்துப் படங்களைச் செய்தார்.அந்தப் படங்களும் கூட அந்தந்த நடிகர்களுக்குப் பிரியமான பட்டியலில் சென்று தம்மை இருத்திக் கொண்டன.பாலு எப்போதும் மிக அதிகமான பாத்திரங்களைக் கொண்டு படமெடுக்க விழைந்தவர் அல்ல.அவரது படங்களில் நிறமும் காலமும் இடங்களும் ஊர்களும் எல்லாமும் பாத்திரங்களாகவே சித்தரிக்கப் பட்டன.தொண்டுகிழவரான சொக்கலிங்க பாகவதர் தொடர்ந்து பாலுவின் படங்களில் இடம்பெற்றார்.அவர் நடிப்பில் வெளியான வீடு படம் தமிழ் சினிமாவின் குறிப்பிடத் தக்க முயல்வுகளில் ஒன்று.


அரூபத்தையும் ஏகாந்தத்தையும் படமாக்கும் வித்தை பாலுவுக்குக் கைவந்திருந்தது.அவர் படங்களில் பெரிதும் மலைப்பிரதேசங்கள் இடம்பெற்றன.அதுகாறும் வெறும் பாடல் காட்சிகளுக்கும் பொருந்தாத சேஸிங் சண்டைகளுக்கும் மட்டும் பயனாகி வந்த மலையும் மலை சார்ந்த நிலத்தையும் பாலு அவற்றின் யதார்த்தத்தோடு அந்தப் பகுதியின் வாழ்வியல் சிதையா வண்ணம் தொடர்ந்து தமது படங்களில் பயன்படுத்தி வந்தார்.இது பாலுவின் தனித்தன்மைகளில் ஒன்று எனலாம்.தன் கதைகளை மறுபடி மறுபடி கலைத்துப் போட்டுப் படங்கள் செய்வதை பாலு மகேந்திரா பெரும் ஆவலோடு முயன்றார் எனலாம்.அவரது ரெட்டை வால் குருவி மறுபடியும் இவ்விரண்டும் இருதாரம் என்பதன் சகல இண்டு இடுக்குகளைப் பேச முயன்றன.மறுபடியும் படம் இந்தியில் வெளியான மகேஷ்பட்டின் Arth
படத்தின் மறுவுரு.இருதாரம் என்பதைக் கிளுகிளுப்பான விஷயமாக என்றைக்கும் பாராத மனிதராக பாலு இருந்தது ஆச்சரியமல்ல.பாலு தொடர்ந்து சில மௌன வினவுகளைத் தன் படங்களின் பாத்திரங்களுக்கு நிகழும் சம்பவங்களெங்கும் புதைத்து வைத்தபடி இருந்தார்.அவ்வினாக்கள் அவருடையவை அல்ல.அவருக்கும் உரித்தானவை.


திருமணத்திற்குப் பின்னதான காதல் என்பதைத் தொடர்ந்து அவர் உரையாட விரும்பியிருக்கிறார்.இது சரி தப்பு என்று ஒரு நிலைப்பாட்டைச் சார்ந்தோ அதன் நியாயங்களை நிறுவியோ அவர் தன் படங்களைப் பயன்படுத்தவில்லை,,மாறாக ஒரு உலகத்தின் எல்லாக் கேள்விகளையும் கேட்டுவிட அவர் விரும்பினார் எனப் புரிகிறது.பின் நாட்களில் அவர் எடுத்த சதிலீலாவதி படமும் கூட இந்த மனவகைமையில் வருவது கவனிக்கத் தக்கது.அவர் பெண்களை வெகுவான அழகுப்பதுமைகளாகக் காட்டுவதிலிருந்து விலகியே இருந்தார்.ரேவதி மௌனிகா மாதவி அர்ச்சனா சில்க்ஸ்மிதா ஹீரா வினோதினி ப்ரியாமணி சரிதா ஈஸ்வரிராவ் ஸ்ரீதேவி எனப் பல நடிகைகளை வைத்து அவர் எடுத்த எல்லாப் படங்களுமே பெயரளவுப் பெண் பாத்திரங்களைக் கொண்டிராமல் நிசமான பெண்களைப் படைக்க விரும்பியது புரிந்துகொள்ளக் கூடியது.


பாலு மகேந்திரா பாடல்களின் இயக்குநர் என்று தைரியமாகச் சொல்லலாம்.பெருமளவுப் பாடல்களை உதட்டசைவேதுமின்றி மாண்டேஜ் வகைமைப் பாடல்களாக அவர் எடுத்து வந்திருந்தார்.மாண்டேஜ் வகைப் பாடல்கள் மீது அவருக்குத் தீராத ப்ரியம் இருந்திருக்கிறது.இயல்பு வாழ்க்கையில் யாரும் பாடல்களுக்கு உதடசைப்பதில்லை என்பதன் மேல் இருந்த அதிருப்தி கூட அவரை மாண்டேஜ் ரகப் படமாக்கலின் பால் தள்ளியிருக்கலாம்.ஒவ்வொரு சட்டகத்தையும் அத்தனை நேர்த்தியாக அழகாகப் படைத்த இன்னொரு ஒளிப்பதிவுக் கலைஞனை நம்மால் சுட்டவே முடியாது.அத்தனை ஓர்மை அந்தக் கலைஞன்.பாலு மகேந்திராவின் பிறமொழிப் படங்களான கோகிலா yathra சத்மா ஊமக்குயில் போன்றபடங்களுமே அந்தந்த மொழிகளில் அந்தக் காலகட்டத்தின் மறுநிலத்தில் நின்று கொண்ட கலைத்தன்மை உயர்ந்தோங்கிய படங்கள்.தன்னை ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளவே இல்லை பாலு.அவரது படங்களில் எது மிகவும் பிடிக்கும் என்ற கேள்விக்கு அவரைப் பிடித்தவர்கள் ஒவ்வொருவரும் இரண்டு அல்லது மூன்று படங்களைச் சொல்வார்கள்.அவரது எல்லாப் படங்களுமே ரசிகர்களுக்கு விருப்பமானவையாகத் தொடர்ந்தன.ராமன் அப்துல்லா ஜூலிகணபதி மூடுபனி இம்மூன்றும் எனக்குப் பிடித்தமான முதல் மூன்று படங்கள் என்பேன்.


அழியாத கோலங்கள் வீடு சந்தியாராகம் ஆகியன பாலுவின் கிளாசிக்ஸ் வரிசையை நிரப்புபவை.அழியாத கோலங்கள் படம் தான் தமிழின் முதல் முழுமையான நாஸ்டால்ஜிக் படம் என்று சொல்ல முடியும்.அதன் காலகட்டத்தில் மிகத் தைரியமான விலகல் முயல்வு என வருணிக்கப்பட்ட படம் அது.பாலு மனிதர்களின் கதைகளுக்கு இடையிலான வித்யாசங்களையும் அவற்றிற்கு இடையிலான பொதுமைகளையும் ஒருங்கே கலந்து குழைத்துத் தன் படங்களை செய்வதில் எப்போதும் ஆவல் கொண்டிருந்தார்.அவ்வகைப் படங்களில் நிராகரிக்கப் பட்ட மனங்களையும் குற்ற உணர்வுகளையும் துரோகத்தையும் சொல்மீறல்களையும் ஊடலையும் எப்போதும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் காதலையும் அழகுறப் படங்களில் முன்வைத்தவர் பாலுமகேந்திரா.அவர் படங்களில்  பொஸசிவ்னெஸ் எனப்படுகிற அன்புப்பிடிவாதத்தை ஒரு பாத்திரமாகவே மாற்றிப் படைப்பார்.மறுபடியும் படத்தின் ரோகிணி அதற்கு ஒரு வெளிப்படையான உதாரணம்.உற்றுப் பார்த்தால் வாழ்வின் மீதான மனிதனின் பொஸசிவ் நெஸ் தான் பாலுவின் படங்கள் என்று சொல்லலாம்.


ஊமக்குயில் என்னும் படம் மலையாளத்தில் ஒய்ஜீ மகேந்திரா மற்றும் பூர்ணிமா நடித்தது.இசை ராஜா.இயக்கம் பாலு மாண்டேஜில் கடலோரங்களில் அழகான அனுபவம் இந்தப் பாட்டு.
https://www.youtube.com/watch?v=OECTrXSke0A


ஜானகியும் ஜேசுதாஸூம் உருகியிருக்கும் இந்தப்பாடல் ஊமக்குயில் படத்தின் இன்னொரு பாடல்..மனதை வருடும்.

https://www.youtube.com/watch?v=bS2Rh42A-wg


இந்தப் பாடல் தன்னன்னம் தானனம் பாலுமகேந்திராவின் யாத்ரா படப்பாடல்.இதன் பல்லவியின் டெம்போவை மாற்றியமைத்து பின்னாளில் பூட்டுக்கள் போட்டாலும் என்ற பாடல் சத்ரியன் படத்தில் மீவுரு செய்திருப்பார் ராஜா


https://www.youtube.com/watch?v=Pnazx6-rK_A.

கொன்னொத்தொரு காவுண்டு
காவிநடுத்தொரு மரமுண்டு
மரத்தினிறையில் பூவுண்டு
பூ பறிக்கால் போருன்னோ
பூங்குயிலே பெண்ணாளே

அச்சன் காவிலு போயாலு
அம்ம விருன்நு போயாலு
ஆடிப்பாடான் போறாமோ
பூங்குயிலே பெண்ணாளே


https://www.youtube.com/watch?v=DrmeOU9VkAk


நான் என்னும் பொழுது
https://www.youtube.com/watch?v=Tr0URM0DJhY


இந்தப் பாடலின் அமைப்பிலேயே சோகம் இழையோடும்.
ஜெயச்சந்திரனின் குரலும் சுசீலாவின் குரலும் அந்த சோகத்தை மேலெழுதிச்செல்லும்.
சலீல் சவுத்ரி தான் பாலுவின் ஆரம்பப் படங்களுக்கு இசை அமைத்தார்.
https://www.youtube.com/watch?v=NuWKYZZPXc4

ராஜராஜ சோழன் நான் என்றபாடலை எப்போது முதலில் கேட்டேன் என்று ஞாபகமில்லை.ஆனால் என் வாழ்நாளுக்கான முதல்விருப்பப் பாடல் எது என்றால் இதைத் தான் சொல்வேன்.இதற்கு அடுத்துத் தான் ஸ்ரீதர் படமாக்கிய பனிவிழும் மலர்வனம் பாடல்.ராஜராஜ சோழன் நான் பாடலை எப்போது கேட்டாலும் அது எனக்கான பாடல் என்று சொல்லிக்கொள்வேன்.ஒவ்வொரு ரசிகனுக்கும் கொடுப்பினை அதுதானே..?     என்றாலும் பாலுமகேந்திரா என்னும் கலைஞன் இறந்துவிட்டார் என்று செய்திவந்த பிற்பாடு அவரது படங்களைப் பற்றி வரிசையாக என் முகப்புத்தகப் பக்கத்தில் பதிவிட்டுக்கொண்டிருந்தேன்.யூ ட்யூபில் ராஜராஜசோழன் நான் பாடல் ஒலித்தது.அப்போது ஏனோ தெரியவில்லை பாலு மகேந்திரா தான் அந்தச் சோழன் என்று தோன்றியது.அதை அவரும் மறுக்கமாட்டார் என்று விஷமங்கலந்த புன்னகையோடு நினைத்துக் கொண்டேன்.


பாலு மகேந்திரா..வீ லவ் யூ.
இந்த வீ என்பது நான் உள்ளிட்ட லட்சக்கணக்கான தமிழ்சினிமாப்ரியர்கள்.
சென்றுவருக சீமானே..
!