புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

சொல்லாடல் 2

திரும்பப் பெறும் திருவிழா

முகப்புத்தகத்தில் ஒரு தனிக்குழுவை ஆரம்பித்து அதில் எழுதிய கவிதைகளை ஒரு புத்தகமாக்கி அந்தப் புத்தகத்தை அனைத்து பத்திரிக்கை அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்தேன்.என் 108 காதல் கவிதைகள் என்னும் நூலின் கதை இதுதான்.ஒரு பொன் கிடைத்தாலும் கிடைக்காத புதனன்று என் முகப்புத்தகச் சுவரில் வந்து அந்தக் கவிதைகளுக்கான தன் பாராட்டுக்களைத் தெரியப்படுத்தினார் ஆனந்தவிகடன் ஆசிரியர் ரா.கண்ணன் அவர்கள்.அன்றைய தினம் என் எழுத்து வாழ்க்கையில் அடுத்த கட்டம் ஆரம்பமாயிற்று.
ஆனந்தவிகடன் அலுவலகத்துக்குச் சென்று ரா.கண்ணன் சாரை சந்தித்தேன்.அப்போது அவர் சொன்ன ஒரு சொல்லுக்காகத் தான்.   எதையோ கேட்ட அவரிடம் நான் "கட்டாயமா. சார் " என்றேன்.   அவர் சிரித்தபடியே "நிச்சயமா"ந்னு சொல்லுங்க பாஸ்.கட்டாயமான்னு சொல்லவேண்டாமே.."என்றார்.

சிந்தித்தால் நண்பர்களே..என் ஆழ்மனதின் சின்னஞ்சிறிய அகராதியில் இடம்பெற்றிருக்கக் கூடிய சிற்சில வார்த்தைகளில்
ஒன்று தான் இப்படிக் கட்டாயமா எனச்சொல்வதும்.அவரை சந்திப்பதற்கு முன் லட்சம் முறைகளுக்கு மேல் உபயோகித்திருப்பேன்.நானும்
அதனை யோசித்ததில்லை.வேறாரும் சுட்டியதுமில்லை.அப்படி அவர் சுட்டியபிறகு மிகவும் கடினப் பிரயாசைகளுக்குப் பின் இப்போது
என்னிடம் அந்த வார்த்தை இல்லவே இல்லை.ஒரு வார்த்தையை வரவேற்பது மிகச்சுலபம்.அதனை வழியனுப்புவது மிகவும் கடினம்.ரா.கண்ணன் அவர்களை சந்தித்திராவிட்டால் வேறாரும் அந்தச்சொல்லை அத்தனை அழகான பக்குவத்தில் எனக்கு சுட்டிக்காட்டியிருப்பார்களா என்று உறுதி சொல்லமுடியவில்லை.இப்போது கட்டாயமா என்னும் சொல் என்னிடம் அதற்குண்டான அர்த்தப் பகுதியில் மட்டுமே இருப்பதற்கும் நிச்சயமாக என்னும் வரவேண்டிய சொல்லும் அதற்குண்டான அர்த்தப்பரப்பில் இயங்குவதற்கும் அவருக்கு என் தனித்த நன்றிகள்..


மனிதன் என்பவன் மொழிக்கல்ல..வார்த்தைகளுக்கு அடிமையானவன் தானே..?ஒவ்வொருவரும் நல்ல மற்றும் கெட்ட வார்த்தைகள் எத்தனைக்கெல்லாம் அடிமையாக இருக்கிறோம்..?நம்மால் சொல்லாமல் இருக்கமுடியாத வார்த்தைகள் அனைத்தும் சேர்த்து ஒரு பிம்பத்தை கட்டமைக்கின்றன.அவை தான் நம்மை மற்றவர் மனதில் வரைகின்றன.அந்த பிம்பம் நமக்குண்டான மரியாதையை கொடுக்கவோ கெடுக்கவோ அயராது முயல்கின்றன.அவை நம் மனதின் அடிவாரத்தில் சென்று தங்களுக்கு இசைவான ஒரு இருள்மூலையில் படிந்துகொள்கின்றன.நாம் யோசிக்கையிலெல்லாம் அவை போர்வை மூடிப் படுத்திருக்கின்றன.ஆனால் அவை வெளியே நடமாடுகையிலெல்லாமும் நம் அகக் கண்களைக் கட்டிவிடுகின்றன.

இத்தைய அடிமைப்படுத்தும் சொற்களுக்கென்று தனியான ஒரு திரும்பப் பெறும் திருவிழாவை நாம் யாராவது நிகழ்த்துகிறோமா..?நிச்சயமாக இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.ஒவ்வொருவருடைய குண அதிசயமாகப் பிறர் வரிசைப்படுத்துகையில் மட்டுமல்லாது ஒருவர் இல்லாத இடத்தில் அவரைக் கேலியும் கிண்டலும் செய்து எள்ளுவதற்கான கச்சாப்பொருட்களாகத் தான் அவ்வார்த்தைகள் உபயோகமாகின்றன.எத்தனையோ பிரச்சினைகள் இருக்கையில் இதென்ன பிரமாதம் என்று கருதுவோர்க்கில்லை இக்கட்டுரை.சுயபரிசோதனையின் முதல் வெம்மை எது தெரியுமா..?நாம் திரும்பப் பெறவேண்டிய சொற்களுக்கான கணக்கெடுப்புத் தான்.ஒவ்வொருவரும் நிகழ்த்திப் பார்ப்போம்,எவ்வெந்த சொற்களை நாம் கைவிட வேண்டியிருக்கின்றன என்பதனை.

துப்பறியும் கதாபாத்திரங்களைப் பற்றிப் பேசலாம்..ஒரு மர்மத்தின் முடிச்சை ஒருதரம் அவிழ்த்தவனை  இன்னொரு கதையில் நுழைத்ததன் மூலம் அவனுக்கு ஒரு தொடர்வரவை ஏற்படுத்த முடிந்தது. அப்படிப் பட்ட தொடர்வருகையை ஏற்படுத்தியதன் மூலம் கற்பனைப் பாத்திரங்களின் அற்பாயுளை நீட்டித்து வைத்த முதல் எழுத்தாளர் யாராக இருந்தாலும் அவர் பேருக்கு ஒரு அர்ச்சனை செய்துவிடலாம்.
துப்பறியும் கதாபாத்திரங்களில் தேவனின் சீ.ஐடி சந்துருவும் துப்பறியும் சாம்புவும் குறிப்பிடத் தக்கவர்கள்.சந்துரு மிக அமைதியானவன்.சாம்பு பயந்தாங்கொள்ளி.ஆனால் அளவற்ற அதிருஷ்டசாலி.அவன் தொட்டதெல்லாம் துலங்கும்.தேவன் உருவாக்கிய சாம்பு முன்பாதி இருபதாம் நூற்றாண்டில் பலரது வீடுகளுக்குள்ளே நுழைந்து நிரந்தரித்தான். பலரது மனங்களை அலங்கரித்தான்.பலப்பல தருணங்களில் சாம்பு ஒரு உடன்வாழ்பவனாகவே கருதப்பட்டான்.சாம்புவை முதலாவது நட்சத்திர துப்பறிவாளன் என்றே சொல்லலாம்.


சங்கர்லால் மிக ஸ்டைலான வாழ்வை வாழ்ந்தவர் எனலாம்.தமிழ்வாணன் தன் பிரதி பிம்பத்தை சங்கர்லால் ஆக்கினார்.பிறகு மெல்ல சங்கர்லாலாக அவரும் கொஞ்சம் மாறிப் பல புதினங்களைப் படைத்தார்.வாழ்வு நிச்சயமற்றது என்ற ஒரு வரியை ஒரு கதைசொல்லி தன் கதைகளின் தொடர் உத்தியாக மாற்றிக்கொண்டது வெற்றிகரமாயிற்று.சங்கர்லால் பல நாடுகளிலும் புகுந்து உழன்று கழன்று ஜெயித்த அனாயாசன்.தமிழ்வாணனின் எழுத்துக்களில் பிறந்த சங்கர்லாலைக் கதாபாத்திரம் என்பதைத் தாண்டி மனிதாபாத்திரன் என்று தேடியவர்களும் நம்பத் தலைப்பட்டவர்களும் அனேகர்.தமிழ்வாணன் இறந்த பிறகும் சங்கர்லாலைத் தேடிக் காத்திருந்தவர்களின் மனங்களில் இன்னமும் ஜீவித்துக் கொண்டே தான் இருக்கிறார் சங்கர்லால்.


சுஜாதா எழுபதுகளின் மத்தியில் துப்பறியும் நாவல்களைப் படைக்கத் தொடங்கினார்.அவர் உருவாக்கிய இரட்டைப் பாத்திரங்கள் கணேஷ் மற்றும் வசந்த்.உற்று நோக்கினால் சுஜாதாவின் நிஜ இயல்பில் குழைந்து உருவாகியவன் கணேஷ் என உணரலாம்.வசந்த் அப்படி அல்லன்.சுஜாதாவின் இயல்புகளுக்கு நேர்மாறான சுஜாதா வாழவிரும்பிய குணாம்சனாக வசந்த் உருவானான்.


நிற்க.கணேஷும் வசந்தும் வக்கீல்கள்.கோர்ட்டிற்கு உள்ளேயு வாதாடி வெல்லும் சொல்லாளர்கள்.அதே நேரம் கோர்ட்டிற்கு வெளியே கண்ணாமூச்சிகளையும் கபடகுற்றங்களையும் புகுந்து வாகை சூடும் வில்லாளர்களுமானார்கள்.சுஜாதாவை விட அதிகம் பேர் அவர் உருவாக்கிய கணேஷையும் வசந்தையும் அதிகம் விரும்பி இன்னும் இன்றும் அவர்களை உயிர்ப்பித்துக்கொண்டே தாமும் வாழ்கிறார்கள்.

பட்டுக்கோட்டை பிரபாகரின் பரத் சுசிலா இணை இன்னமும் திருமணம் செய்துகொள்ளாத நிரந்தர யுவயுவதி இணை.அடிப்படையில் பிரபாகரை மிகவும் பாதித்த ஆளுமை சுஜாதா என்பது தாண்டி பரத் ஒருபாதி கணேஷின் தொடர்ச்சி என்று சொல்லலாம்.அவனது தனித்தன்மைகளை நிறுவியதால் மெல்ல மெல்ல பரத் என்னும் வக்கீல் கணேஷில் இருந்து விலகி வெளிப்பட்டு வேறோருவனாகி நிரந்தரித்தான்.இன்னும் பல எழுத்தாளர்கள் உருவாக்கிய பலப்பல கதாபாத்திரங்கள் துப்பறியும் நாவல்களின் இருள் உலகில் இன்னமும் உலவிக் கொண்டு தான் இருக்கின்றார்கள்


தமிழ் போன்ற செம்மொழியில் மேற்கத்திய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குழந்தையான துப்பறியும் நவீனங்களுக்கான இடம் என்ன என சிந்திக்க நேர்கிறது.தமிழ் சமூகத்தின் இத்தனை ஆண்டுகால வாழ்வியலில் ஆயிரத்தில் ஒருவர் அல்ல பத்தாயிரத்தில் ஒருவர் கூட ஒரு துப்பறியும் நிறுவனத்தை நாடித் தனக்கு நேரும் இக்கட்டை விளக்கி உதவிகோரும் சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை என்பதே மெய்.என்றாலும் எழுபது எண்பது ஆண்டுகளாகத் துப்பறியும் கதைகள் பல வடிவங்களைத் தாண்டி குக்கிராமங்களில் வசிப்பவர்களாலும் வாசிக்கப் பட்டுத் தொடரப்பட்டு வருவதை வெறும் எழுத்தின்பம் என்று ஒதுக்கிவைக்க முடியாது.

ுற்றப்புதினங்கள் இலக்கியமல்ல என்றும் அவற்றை எழுதுகிறவர்கள் இலக்கியவாதிகள் அல்லர் என்றும் தொடர்குரல் ஒன்று எதிராடிக்கொண்டே இருப்பதை இங்கே ஒதுக்கிவைக்கலாம்.குற்றப்புதினங்களுக்கு உண்டான இலக்கியஸ்தானம் குறித்ததல்ல இந்தப் பகிர்தல்.மாறாக அவற்றுக்கு மக்கள் மனங்களில் உண்டான இடம் மறுதலிக்க இயலாதது என்பதே.

உளவியல் காரணங்கள் சொல்வது என்னவெனில் தமிழ்மக்கள் என்றில்லை.நடுத்தர வர்க்கத்து வாழ்க்கை ஞாயிறுக்கும் திங்களுக்கும் எந்த விதமான வித்யாசங்களையும் ஒரு சாமான்யனுக்குத் தருவதில்லை.அவனுக்குக் கிட்டுகிற இசை இலக்கியம் சினிமா உள்ளிட்ட கலைவடிவங்களின் பரிணாமங்கள் எல்லோரையும் எப்போதும் ஈர்ப்பதில்லை.அப்படிப் பட்ட சாமான்யர்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர் என்ன செய்தாவது தத்தமது வாழ்க்கை தமக்கு அளிக்கிற வித்யாசமற்ற வேலிகளைத் தங்கள் மானசீக நிலங்களிலாவது தாண்டி ஓடுவதற்கு விரும்புகிறார்கள்.என்ன செய்தாவது தங்கள் தினசரி வாழ்க்கையின் ஈரமற்ற வெற்றுத்தனத்தை ஈரப்படுத்த விழைகிறார்கள்.அவர்கள் கையிலெடுக்கிற துப்பறியும் நாவல்கள் அவர்களுக்கு உறக்கத்துக்கு முந்தைய இன்பமாக மாறுகின்றது.மாயவலியின்
மருந்தற்ற நிவாரணியாகத் துப்பறியும் நவீனங்கள் செயலாற்றுகின்றன.

இத்தகைய துப்பறியும் நவீனங்களின் முதல் இரண்டு பக்கங்களைத் தாண்டும்போதே வாசிக்கிறவனும் அந்தக் கதைசொல்லி தனக்கு முன்வைக்கிற சவாலை ஏற்றுக்கொள்கிறான்.அதற்குத் தன் மூளையின் சகல முடுக்குகளையும் ஒப்புக்கொடுக்கிறான்.என்ன செய்தாவது கடைசிப்பக்கத்தில் அதன் மர்மம் தானே அவிழும் கணத்திற்கு முந்தைய கணம் வரைக்கும் விரைந்தோடுகிற புரவியாகித் தான் அதன் மர்மத்தை அவிழ்த்தேயாக வேண்டும் என்று தீவிரமாக முனைகின்றான்.இதில் சுவாரசியமான ஒன்று என்னவெனில் தான் வெல்கிற கணங்களில் அவன் அடைகின்ற இன்பத்தை விடத் தான் தோற்கடிக்கப் படுகிற கணங்களையே அவன் பெரிதும் விரும்புகிறான்.தத்தமது குழந்தையிடம் தோல்வியடைகிற பெற்றமனம் அடைகிற பித்து நிலை இது.இலக்கியம் இல்லை என்பவர்கள் சொல்லிக் கொண்டிருக்கட்டும்.எனக்கு இது இலக்கியமே.
சரி...
சுயம்பு--முதலோன்--அரூபி--அகநிலை--அதிகுணன்--ஐ--நிதாசனன்--நித்தன்--நிமலன்--குணபத்ரன்--தற்பான்--தனிக்கோலான்--நிரந்தரன்--அனந்தன்--அனாதி--ஆதி இந்தச்சொற்களெல்லாமும் பல இடங்களில் புழக்கத்தில் இருக்கிற மற்றும் அப்படி இல்லாத சொற்கள்.இவையெல்லாமும் கடவுள் என்னும் ஒற்றைச்சொல்லின் அர்த்தங்கள்.இன்னும் அதே சொல்லுக்குப் பல அர்த்தங்கள் இருக்கின்றன என்பது இன்னொரு தகவல்.கடவுள் இருக்கிறாரா இல்லையா எனும் விவாதங்கள் வேறு,எத்தனை சொற்களாலானது அந்தச்சொல்..?

தொடர்வோம்
ஆத்மார்த்தி