புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

மண்புழுவின் நான்காவது இதயம்

கையுறைகளுக்குள் குருதி கசிகிற மொழியின் பிரியக் காரன்.

நேசமித்ரன் எழுதிய மண்புழுவின் நான்காவது இதயம்

((வ்லசை வெளியீடு விலை ரூ 100))

கவிதைத் தொகுப்பினை முன்வைத்து.பின்னிரவில் பண்டங்கள் தீர்ந்த நிசியில்
ஆப்பாயில் இட்டுத்தரும்
ஆயாக்களின் கரம் ஆயிரம்
பாவமன்னிப்புகள் வழங்கிய
பேராயரின் கரத்தைவிட கனம்
செய்யப் பெறும்


நேசமித்ரனின் மண்புழுவின் நான்காவது இதயம் அதிர்ச்சிச் சொற்களின் கூட்டுமொழியாக ஒலிக்கிறது.யதேச்சாதிகாரத்தின் விளிம்புகள் குறித்து எந்த உணர்வும் இல்லாமல் பூட்டிய வாகனங்களில் விரையும் வாழ்க்கையை ஆசீர்வாதம் என்றழைத்துக்கொள்ளும் அத்துனை பேரையும் நிராகரித்தபடி கஞ்சா விற்பவனின் வருகைக்காகக் கரங்கள் நடுங்கக் காத்திருப்பவனின் நுரையீரல் வழியெங்கும் அடைத்துக்கொண்டிருக்கும்
கொலைக்கருணை மிக்க நிகோடினின் அதே சத்தியத்துடன் வாசிக்கிறவர்களை ஆரத் தழுவிக்கொள்கின்றன.அதே மழையென்று நிறுவத் தலைப்படும் மனிதகுலத்தை வஞ்சித்துக்கொண்டே வாழ்த்தவும் செய்யும் நீர்கூட்டத்தின் வருகையைப் போலவே நேசமித்ரனின் கவிதைகளும் தனித்துக் கலைகின்றன.
தனக்கு வாழக்கிடைத்த வாழ்க்கையைக் கண்ணில் அணிந்துகொண்டிருக்கிற மைனஸ் பவர் ஸ்பெக்டெகிள்ஸான இரட்டை சட்டகங்களின் வழியே எத்தனமும் வஞ்சகமும் வழிகிற க்ரூரமான பார்வையொன்றை நிலை நிறுத்திக் காட்சிகளாக மனனம் செய்யும் வாய்ப்புப் பெற்ற ஓருவனின் ஆளற்ற எதிர் இருக்கையைச் சபித்தபடி நேர்த்தும் தனிமைப்புலம்பல்களைப் போல ஒருகணம் தோற்றமளித்தாலும் அசரீரி வாக்குகள் ஆங்காங்கே பலித்துக்கொண்டே இருக்கும் அமானுஷ்யத்தின் சாட்சிகளற்ற கொலைக் கூடமாக இந்த உலகத்தை பத்திரம் செய்யும் சரிவரக் கொல்லப்படாத பாதிப் ப்ரேதன் ஒருவனின் மரண வாக்குமூலமாக இன்னொரு கணத்தில் தங்களை விரித்துக் கொள்கின்றன.

நேசமித்ரன் மகா அபாயமான கவிதை சொல்லியாக தனது மண்புழுவின் நான்காவது இதயம் தொகுப்பினூடே அடிக்கடி நிறுவிச்செல்கிறார்.இதற்கு முந்தைய அவரது முதல் கவிதைத் தொகுப்பான கார்ட்டூன் பொம்மைக்குக் குரல் கொடுப்பவள் தொகுப்பின் எல்லாக் கவிதைகளிலிருந்தும் விட்டு விலகி வெளியேறி நேசன் சென்றடைந்திருக்கிற இடம் மொழியில் இதுவரைக்கும் யாரும் சென்று பார்க்கத் தலைப்படாத ஆன்ம வனமாக விரிகின்றது.ஒரு ஆத்ம தரிசனத்துக்குண்டான எந்தவித முகாந்திரங்களும் முன் சத்தியங்களும் சொல்லப்படாத வன வழியொன்றில் இடது வலது கரங்களுக்குப் பதிலாக இரண்டு தராசுத் தட்டுகளை வாய்க்கப் பெற்ற ஒருவன் சொற்களை விழுங்கிச் செரித்துக் கவிதைகளைத் தன்னை அகழ்ந்தெடுக்க ஒரு வாய்ப்புக் கிட்டுமாயின் எங்கனம் குருதி சொட்டச்சொட்டக் கவிதைகளை எடுத்தெறிவானோ அதையே நிகழ்த்துகிறார்.

சூன்யத்தின் பேரமைதியில் சொற்களின் மீதான நம்பகம் மட்டும் எஞ்சுகிற ஒருவனின் கடைசிப் பயண ஞாபகங்களாய் விரிகின்றன இத்தொகுப்பின் கவிதைகள்.சொற்கள் குறித்த ஆதி தொட்ட அத்தனை சாத்தியப்பாடுகளையும் கலைத்துப் போட்டுவிட எத்தனிக்கும் நேசமித்ரன் அவற்றின் உடலெங்கும் மரணித்தலின் சாம்பலைப் பூசிவைக்கிறார்.சொற்கள் ஒவ்வொன்றாய் எரிகின்றன,தன்னைத் தானே புணரும் பேரிச்சை சுயநல உயிரிகளாக தம்மை மாற்றிக் கொள்ளும் அவரின் சொற்களின் உடலெங்கும் பொசுங்கும் கனலில் இருந்து ஒரே ஒரு சிகரட்டைப் பற்ற வைத்துக்கொள்வதன் மூலமாக புதிய மொழி ஒன்றை உருவாக்கிவிட முயன்று பார்க்கும் மகா வஞ்சக மொழியாளன் ஒருவனாக நேசமித்ரன் தன் கவிதைகளைக் கட்டியிருக்கும் சதமுடியைத் திறந்தவிழ்க்கிறார்.அவ்வனமெங்கும் பிரிபிரியாய்க் கலைந்தலைகின்றன சொற்கள்.

ஆம்
ஒருமகன்
தன் தாயின் நிர்வாணத்தை
பருவந்தப்பிப் பாராதிருக்கட்டும்


நேசமித்ரன் அச்சங்களுக்கும் அவமானங்களுக்கும் இடையில் நம்பப் படுகிற அத்துனை கற்சுவர்களையும் தெர்மகோல் கத்தி கொண்டு அறுத்தெறிய முற்படுகையில் அவை அவரது முயல்வின் மீதான அவநம்பிக்கையாகவே விரிந்து கொள்வது ஆச்சர்யமல்ல.இவ்வுலகம் புதிர்களை அவிழ்க்க முற்படுகிற யாரின் உடல்களையும் கல்லெறிந்து உரித்துப் பார்ப்பதை முதல் விஸ்வாசமாகக் கொண்டது என்பதில் ஐயமேதுமில்லை.மாறாக காலம் ஒரு கொடுங்கோலன் என்பதை அறிந்துகொள்கிற கணத்தில் சூசகங்களையும் பூடகங்களையும் வழிபட சம்மதிக்கும் அனைவருக்கும் மரணமுள்ளிட்ட அத்தனை வாதைகளையும் மறக்கச்செய்கிற பிரசாதரசம் நுனி நாக்கில் தடவப்படுகிறது.கடவுளற்ற போழ்தில் கிடைத்ததைக் கடவுளாக்கிக் கொள்ள எத்தனிக்கும் அறியாமையின் மீது தான் காலகாலமாகப் பயணித்து வந்திருக்கிறது மானுடம். இவை அத்தனையையும் ஒரு விதூஷகனின் வெள்ளைக் கைக்குட்டைக்கு உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருக்கிற
எம்பிராய்டரி மந்திரச்சொல்லென காண்பவர் கண்களிலெல்லாம் சிலுவைகளை அறைந்து பார்க்கிறது நேசனின் மொழி.

தட்டானின் கண்ணாடிக் கண்ணை
உறிஞ்சிக் கொண்டிருக்கிறது பசித்த சூரியன்
பனித்துளி ஞாபகத்தில்


தான் என்ன அனுபவத்தை நேர்த்துகிறோம் என்பதைக் குறித்த பிரதானங்கள் நேசமித்ரனிடம் பிறரைக் காட்டிலும் சற்று அதிகமாகவே இருப்பது வினோதம்.ஏனெனில் பிரதானங்கள் அற்றுப் போகிற பித்து நிலையை வழிபட்டுக் கொண்டிருக்கும் பலரது போலச்செய்யப்பட்ட வார்த்தைக் கூட்டக் கவிதைகள் ஆங்காங்கே பிடிபடுவதும் அவற்றின் இடவலக் கரங்களில் பூசப்பட்டிருக்கும் விபூதிப் பட்டைகள் ஆக்ஞை அற்று ஆங்காங்கே பாதிப் பாம்புகளின் பருவங்குறைந்த சட்டைகளென்று அறுந்து விழுவதையும் சலித்துக் கொண்டிருக்கையில் பிரதானங்களை தயவுசெய்து கைவிடுமாறு அன்போடு எச்சரிக்கிற கவிராயர்களின் மத்திமத்தில் அமர்ந்துகொண்டு தன்னிஷ்டப் பாடலை ராகந்தப்பிப் பாட முற்படுகிற கோமாளிப் பாடகனாய் இன்னும் இன்னும் பிரதானங்களை முன்வைக்கிற நேசமித்ரன் ஒருவகையில் அபாயமான தைரியசாலியும் ஆகிறார்.அவர் நம்பிய சொற்கள் அவரைக் கைவிடவில்லை என்பது வெறும் ஆறுதல் சொல்லல்ல.மாறாக வெகு நேர்த்தியான பன்னெடுங்கால
ஒத்திகைக்குப் பின்னதான ஆழவுறக்கத்தில் விரியும் கனவு ஒன்றில் மகாவித்தையை செய்துகாட்டுகிறவனுக்குக் கிட்டுகிற கரவொலிச் சத்தியமாய் இலக்கைத் தாக்கிவிட்டுத் திரும்பி வருகின்ற சமர்த்துப் பூமராங்குகளாக ஆகிப்போகின்றன இக்கவிதைகள்.

கடவுளாக்கப்பட்ட மரத்தின் கிளையெங்கும்
பிரார்த்தனைத் தொட்டில்கள்
எச்சமிட்டுப் பறக்கின்றன ஆடி சலித்த பறவைகள்.


நேசமித்ரனின் கவிதா மொழி சிற்பத்துக்குரிய மரங்களைத் தேர்வு செய்தபடியே வனமேகும் உளிக்காரனின்  லாவகத்தோடு திரிகிறது.ஒன்றல்ல பல கவிதைகளில் ஒன்றினுள் இன்னொன்றினுள் மற்றொன்றென மறைந்து கொள்கின்றன உபகவிதைகள்.அவை வாசித்தபடியே கடந்து செல்பவனின் ஓர்மைக்குள் சதாசர்வ காலமும் தொந்தரவு செய்கின்றன.பேருந்து கிளம்புகிற நேரம் தின்பண்டத்தை விற்பவளுக்கும் யாசகம் கேட்பவனுக்கும் நடக்கும் ஓர்மையற்ற போட்டி போல இக்கவிதைகளின் சமமின்மைகள் ஜிக் ஜாக் ஜாலங்களைச் செய்துபார்க்கின்றன. ஒன்றே மற்றோன்றாக மாறும் தருணங்களில் ஒரு சில வரிகளுக்குள்ளே பலகாலம் காத்திருத்தல் வெகு அழகாக நேர்கின்றது.

மின் கம்பிகளில் மரித்துத் தொங்கும்
காகத்தின் உடல் நினைவின் மிச்சம்அகால வார்த்தைகளை யாககுண்டத்தில் இருந்து சாம்பல் கிளறுகிற வேளையில் உள்ளேயிருந்து மகாகுறளி ஒன்று வெளிப்படும் தருணத்தின் எதிர்பாரா வருகை போலக் கையாளுகின்றன இக்கவிதைகள்.பல அறிந்த வார்த்தைகளின் கூட்டுலிபி வெகு இறுக்கமான மாயம் பூசிய அர்த்தங்களை மௌனமாய் நிகழ்த்துவதை என்னவென்பது.

ஒரு சவப்பெட்டியின்
கடைசி ஆணியைப் போல் இறங்குகிறது
இறுதிச்சொல்
.

இந்தத் தொகுப்பின் 48 ஆம் பக்கத்தில் இடம்பெற்றிருக்கிற வெயிலெனும் புனைவு என்னும் ஒற்றைக் கவிதை வாசிக்க வாசிக்க பல உபகவிதைகளாக கவிதையுள் கவிதைகளாக உடைந்து சிதறுவது கவிதை புனைவில் எளிதில் சாத்தியப்படாத அனுபவம் என்பேன்.இரண்டாயிரமாம் ஆண்டுக்குப் பின்னதான கவிசொலல்களில் மிக முக்கியமான அடைதல் ஒன்றை இக்கவிதையின் புனைவு சாத்தியப்படுத்தியிருக்கிறது என்பது நல்ல சகுனம்.   பின்னம் என்னும் ஒரு நெடுங்கவிதை வாசிப்பனுபவத்தினுள்ளே குருதியின் கனிவற்ற வாசனையைப் படர்த்துகின்றது.உன்னதா என்று தொடங்கும் அதே சொல் மறுவருகையில் மகாவலிக்குரிய ஒன்றாக மலர்வது சாதாரணமல்ல.என்னளவில் மிக முக்கியமான கவிதையாக இதனை சுட்டுகிறேன்.,

அதன் ஈற்று வரிகளில் இன்னும் இரண்டு நாள் என்பதில் கிட்டுகிற மிகையறு நீட்சி அசாதாரணமானது.ஒரு சுற்றுச்சுற்றி மீண்டும் துவக்கத்தி லிருந்தே மீள்பயணம் மேற்கொள்ளச் செய்வதில் அசாதாரணமாகிறது.

பத்துக்கும் மேற்பட்ட கதாகவிதைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன.அதுவரைக்குமான ஓட்டத்தின் திசையை மாற்றுகிற இவ்வசன கவிதைகள் மெல்ல அதன் வேகத்துக்கும் தடை சொல்வதைக் குறையாக அல்ல ஒரு செய்தியாக முன்வைக்க நேர்கின்றது.சில்க் ஸ்மிதா என்ற விஜயலட்சுமிக்கு எழுதப்பட்டதும் நதிமேல் நகரும் பறவையின் நிழல் என்பதும் ஞாபகத்தில் வரையும் வீடு என்பதும் தனிக்கின்றன.மற்றவற்றையும் குறை சொல்லித் தள்ளுவதற்கில்லை.

தமிழ்க்கவிதையின் இத்தனை ஆண்டுகால முயல்வுகளில் நேசமித்ரன் கண்டடைந்திருக்கிற கவிதைகளில் பலவும் அபாரமானவை.அவற்றின் இருண்மை பிரவகிக்கிற சூட்சுமம் இக்கவிதைகளின் தனித்திருத்தலை உறுதி செய்கின்றன. எந்தச்சொற்களுக்காக நிராகரிக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் உருவானதோ அவற்றையே மறுபடி ஒரு வருகைக்கு உட்படுத்துவதன் மூலமாக நேசமித்ரன் நிறமற்ற கவிதைகளை உருவாக்கி விட முனைந்திருக்கிறார்.அவரது அணுகல்கள் பொய்த்துவிடவில்லை. தன்னளவே கதைசொல்லிகளாகவும் வதங்கலின் உட்குறிகளாகவும் விரிந்துகொள்கிற இக்கவிதைகள் ஒளித்தெறலான நம்பிக்கையை ஒரு விளக்கிற்கு மாற்றாய் ஏற்றிவைக்கின்றன

வாழ்த்துதல்களும்
அன்பும்

ஆத்மார்த்தி