புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

கடவுச்சொல் 5சென்னை விஸிட் 1

அவசரபவன் சாம்பாரும் ஒன்பை டூ காஃபியும்.


ஈரோடு தமிழன்பன் எண்பதாம் பிறந்த தினத்தை முன்னிட்டு இலக்கியம் உள்ளிட்ட சில துறைகளில் இயங்கும் இளையவர்களுக்கு அவர் பெயரில் விருது வழங்கப்படுவதாகவும் அதற்காக அடியேனும் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாகவும் சில மாதங்களுக்கு முன்னால் பேரா.அமிர்த கணேசன் என்னைத் தொடர்பு கொண்டு தெரிவித்த போது என் மகிழ்வைத் தெரியப்படுத்திக் கொண்டேன்.அதற்கான  விழா சென்னையில் மே ஐந்தாம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இரயில்களைப் பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவுத் துண்டைப் போட்டு இடம்பிடித்து வைத்திருந்த பலருடனும் மோத வழியின்றி தத்கல் புத்கலுக்கும் வகையின்றி இந்த முறை சென்னைக்கு காரில் சென்று வரலாம் என்று முடிவானதும் வீட்டில் என் மகளும் மகனும் ஹேய் என்ற கூச்சலோடு உடனே கிளம்பத் தயாரானார்கள்.என் மனையாளின் அக்காள் வீட்டுக்கு அவர்கள் சென்று வரும் உறவுப்பயணத்தில் ஒரு சீட்டை எனக்கும் வழங்க முன் வந்த கதை எனக்குப் பின்னால் தான் தெரிந்தது.

மூன்றாம் தேதி அதிகாலை மதுரையைத் தாண்டும் போது மணி நாலரை.மிகச்சரியாக திருச்சியைத் தாண்டி ஒரு அவசரபவனில் காலை உணவுக்கு நிறுத்தினோம்.அங்கே அந்த ஓட்டல் மட்டுந்தான் இருந்தது.ஆகவே அது மிகச்சிறந்த ஓட்டலாக இருந்ததில் வியப்பில்லை.அந்த ஓட்டலில் சர்வர் வரத் தாமதமான ஒரு கணத்தில் மிகச்சரியாக நான் சாம்பார் கேட்க மேஸ்திரிப் பெரியவர் ஒருவர் மிகச்சரியாக ஒரு கிண்ணத்தில் சாம்பாரை எடுத்து வந்து என் தட்டில் கைதவறிக் கொட்டினார்.


நிமிர்ந்து பார்த்த என்னிடம் "எண்ணைக் கை அதனால் கொட்டிவிட்டது என்றார்.அவர் சாரி கேட்டிருந்தால் நான் பரவாயில்லை என்று சொல்லி இருப்பேன்.வேறென்ன சொல்வது..?சாரி கேட்ட பிறகும் அவரோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தால் என்னால் சென்னைக்கு சரிபொழுதில் சென்றடைய முடியாது.அவருக்கோ வேறு பிரச்சினையில்லை.அந்த ஓட்டலிலே தான் பணிபுரிகிறார்.அதனால் ஒருவேளை அவர் வேலை நேரம் இரவு 6 மணி வரைக்கும் என்று உத்தேசமாக வைத்துக்கொண்டால் ஐந்தே முக்கால் வரைக்கும் கூட என்னோடு அவரால் சண்டை போட்டுக்கொண்டே இருக்க முடியும்.

இதயெல்லாம் அனுசரித்துத் தானோ என்னவோ அவர் சாரியே கேட்கவில்லை.நானும் பரவாயில்லை என்று சொல்லத் துடித்த உதடுகளை வைத்துக்கொண்டு பரிதாபனாக இன்னொரு கப் சாம்பாரைக் கொண்டு வந்து தருகிறாரா எனப் பார்த்துக்கொண்டிருந்தேன்.அந்த மேஸ்திரியானவர் மிகச்சிறப்பாகத் தன் கரங்களை சோப் ஆயிலெல்லாம் விட்டுப் ப்ரமாதமாக கழுவிக்கொண்டு மீண்டும் என் பக்கம் வந்து நிற்கவும் இன்னொரு சர்வர் ஒரு வாழை இலை போர்த்திய தட்டில் வேறு யாருக்கோ கொண்டு போய்க் கொண்டிருந்த(ஹப்பா எத்தனை கொண்டு..?) ஒரு மாண்புமிக்க சாம்பார் கப்பை வழிமறித்து என்னைக் காட்டி "சாருக்கு சாம்பார் கொடு"என்று சிபாரிசு செய்தார்.

அந்த சர்வரும் தன் மேலதிகார மேஸ்திரியை மீற முடியாமல் என் தட்டின் பக்கம் அந்த சாம்பார் கப்பை வைத்து விட்டு மறுபடி இன்னொரு கப் சாம்பாரை எடுப்பதற்காக சமையலறை பக்கம் சென்றார்.இப்போது என் முகத்தைப் பார்த்த மேஸ்திரியார் "இவனுங்க பொறுப்பாவே இருக்கறதில்லை சார்..டயத்துக்கு சப்ளை பாக்கறதேயில்லை.அப்பறம் பாருங்க சாம்பார் கொட்டி சாருக்கு வேற சங்கடமாயிடுச்சி...பின்னாடி பாத்ரூம் இருக்கு"என்று தொடர்பற்ற வாக்கியங்களைப் புதுக்கவிதை போல  ஒப்பித்தார்.உற்றுப் பார்த்தேன்.அவர் கைகள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்ததை கவனிக்க முடிந்தது.

எதற்கும் இருக்கட்டும் என்று நான் "சரி விடுங்க தெரியாமத் தானே கொட்டிச்சி..நீங்க ஒண்ணும் வேணும்னு கொட்டலையே..?"என்றேன்.அதை அவருக்கு ஆதரவான குரலில் தான் சொன்னேன்.என்றாலும் அதையே அவர் நான் ஏதோ குறை சொல்கிறேன் என எடுத்துக் கொண்டார் போலும். "இல்லை சார்...வழக்கமா நான் சப்ளை பாக்கறதில்லை சார்.நான் மேஸ்திரி சார்.சப்ளையர் லேட்டாக்கினதால் தான் நான் கொட்டிட்டேன்"என்றார்.,

ஆயிரம் பக்க பின் நவீனத்துவ நாவலைப் ப்ரூஃப் பார்க்கும் சபிக்கப்பட்டவரைப் போல என்னை நானே நொந்துகொண்டேன்.சப்ளையர் கொட்ட வேண்டியதை அவருக்கு பதிலாகத் தான் கொட்டியதாக சொல்லிக்கொண்டிருந்தவர் தலையில் ரெண்டு கொட்டு கொட்டலாமா என யோசித்தேன்.அப்பறம் நான்கு வழிச்சாலையில் எழுத்தாளர் ரகளை என்று தலைப்புச்செய்தி ஓடியதால் அமைதியானேன்.

இப்போது மிகப் பரிதாபமாக என் மனைவியைப் பார்த்தேன்.அவள் என்னைப் பார்த்து ஒன் பை டூ காஃபி.என்றாள்.அதற்கு அர்த்தம் என்ன என்றால் தனக்குப் பாதி காப்பி போதும் என்பதால் நானும் பாதிக் காப்பி தான் குடித்தாக வேண்டும்.முழு காப்பி குடிக்கிற பாக்கியமே பத்துப் பன்னெண்டு வருஷமாக இல்லை.வேண்டுமானால் இன்னொரு காப்பி ஆர்டர் செய்து அதை முழுவதுமாகக் குடித்துக் கொள்ளலாமா என நானும் அவளிடம் கேட்டதில்லை.அவளாகச் சொன்னதும் இல்லை.இது என் குடும்ப காப்பி ஸ்டோரி என்பதை பாவம் சப்ளையர்கள் அறிவதில்லை அல்லவா..?

நான் சப்ளையரிடம் ஒன் பை டூ காப்பி என்றேன்.அவர் உடனே "ஒன் பை டூ இல்லை சார்..:என்றார்,   உடனே தள்ளி நின்றுகொண்டிருந்த மேஸ்திரி பாய்ந்து வந்தார்.

"ஒரு காப்பி கொண்டு வாய்யா..ஏன் எதைக் கேட்டாலும் இல்லைன்ற..?நீ ஒரு காப்பி குடுத்தா அவங்க ஷேர் பண்ணிக்க போறாங்க...அதை விட்டுட்டு.."போய்யா...சீக்கிரம் வா..என்று அவரைத் துரத்தினார்.மாமனார் முகத்தில் விழித்தெழும் புதுமாப்பிள்ளை போல் தெறித்து உள்பக்கம் ஓடினார் சப்ளையர்.என்னிடம் மறுபடி "இப்டி தான் சார்.லேட்டாக்குறாங்க...சாம்பார் கொட்டி என்று அந்த வாக்கியத்தை முடிக்காமலேயே வாசல் பக்கம் சென்றார்,.

சப்ளையர் மிக நேர்த்தியாக மேசையில் வைத்த காஃபியைக் குடித்து விட்டு அவசரமாக வெளியே சென்று தோட்டத்துப் பக்கத்தில் நின்றுகொண்டு ஒரு சிகரட்டைப் பற்ற வைத்தேன்.அங்கே எனக்கு சப்ளை செய்த சப்ளையர் எதற்கோ வந்தவர் " சட்டைல சாம்பாரைக் கொட்டுனாரே ஸார்...இதையே அந்தாளைத் தவிர நாங்க யாராச்சும் சப்ளை பாக்குறவங்க கொட்டிருந்தோம்னு வைங்க...அவ்ளோ தான்..ஆடித்தீர்த்திருப்பான்..நாக்கு பூரா வெஷம்...அந்தாளு கொட்டிட்டதால பம்முறான்..ஓனரோட சொந்தக்காரன்ற பந்தா...நீங்க அந்தாளை நாக்கை பிடுங்குறாப்ள கேட்டிருக்கணும் ஸார்..."என்று சொல்லிவிட்டுச் சென்றார்

தம்மை எறிந்துவிட்டு பில் தொகையை செட்டில் செய்துவிட்டு காரில் ஏறப் போனேன்.என் மகன் செப்பல் செப்பல் என்று அழ ஆரம்பித்தான்.அவனது செருப்பை உள்ளெயே விட்டுவிட்டான் போல என்று நான் மறுபடி உள்ளே வந்தேன்.  செருப்பைத் தேடி எடுத்துக் கொண்டு நகர்ந்து கொண்டே அந்த மேஸ்திரியைக் காணமே எனத் தேடினேன்.ஒரு டேபிளில் மக்களோடு மக்களாக அமர்ந்துகொண்டு பொங்கலைத் தின்றுகொண்டிருந்த மேஸ்திரி   "சார் அடிக்கடி வரணும்..."என்றவாறே கையை உயர்த்தி டாட்டா காட்டினார்.என்னிடம் ஸ்டாக் இருந்த அத்தனை ஆசீர்வாதச்சொற்களையும் அவருக்கு தந்துவிடும் உத்தேசத்துடன் நகர்ந்து வந்து காரில் ஏறி அமர்ந்தேன்.

என் மனைவியிடம் "ஏம்மா..சட்டைல இன்னும் சாம்பார் இருக்குதா..?:"என்றேன் கவலையாக.
பகபகவென்று சிரித்த என் மகள்   "யப்போவ்..சாம்பார்ல தான் சட்டையே இருக்குது.."என்று இன்னும் சிரித்தாள்.

சென்னையை நோக்கி விரைந்துகொண்டிருந்த காரின் முன் சீட்டில் அமர்ந்தவாறு சட்டையைக் கழற்றி இன்னொரு டீஷர்ட்டுக்கு மாறினேன்.அந்த மேஸ்திரியை எப்படிப் பழிவாங்கலாம் என்று சிறப்பான ஐடியா தருபவர்களுக்கு என் மனசில் ஒரு அபார்ட்மெண்ட் கட்டித் தருவேன்