புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

எலி யுத்தம்தீர்த்தராமன் மோவாய்க்கட்டையைச் சொறிந்து கொண்டார்.சிலபல நாட்களாகவே தொடர்ந்து சொறிந்ததால் அந்த இடமே புண்ணாகி இருந்தது. அந்த இடம் மட்டுமா..?அவர் மனசும் சொறியாமலே புண்ணாகியிருந்தது.அவர் மட்டும் ஒரு அணியாகவும் அவர் வீட்டில் மற்ற எல்லாருமே இன்னொரு டீமாகவும் மோதிக்கொள்ள நேரிடும் என்பது அவர் எதிர்பாராதது.பால்கனியில் நின்றுகொண்டிருந்தவருக்கு லேசாய் அழுகை வந்தது.ஒரு எலியை எப்படிக் கொல்லுவது..?இது தான் அவரது ப்ராப்ளம்.

"ஒண்ணு இன்னிக்கு நீ சாகணும்..இல்லை நான் சாகணும்.."என்று சபதமெடுத்துப் பல நாளாயிற்று.அதன் அடிப்படையில் திரு.தீர்த்தராமன் செத்து பத்து நாள் ஆகியிருக்க வேண்டும்.அவரது சபதத்தை சீரியசாக எடுத்துக்கொண்டு அந்த எலி வெற்றி பெற்றதாக அறிவித்து அவரை யாரும் சாகச்சொல்லவில்லை என்பதால் உயிர்வாழ்கிறார்.. 10 நாளாக நாட்டவுட் ரேட்ஸ்மேனாக வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்தது அந்த எலி.

இருந்து இருந்து கடனை உடனை வாங்கி சென்னைக்கு மிக அருகில் ஏர்போர்ட்டிற்கு மிக அருகில் துணை நகரத்துக்கு மிக அருகில் இருக்கும் இந்த அபார்ட்மெண்டில் தண்ணீர் வருகிறதா..?நாலாம் மாடியில் காற்று வருகிறதா..? என்றெல்லாம் பார்த்து பல செக் அப்புக்களுக்குப் பின்னால் வாங்கின வீட்டுக்குக் குடி வந்து ஒரு மாதம் தான் ஆகிறது.அவர் வீட்டார் எல்லாரும் அந்த எலியின் வருகையை லேசாக எடுத்துக்கொண்டாலும் ஆஸ் பீயிங் எ கேப்டன் ஆஃப் தி ஃபேமிலி தீர்த்தராமனால் அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை.

சென்ற ஞாயிற்றுக்கிழமை.முதலில் அப்படி ஒரு வஸ்து புகுந்ததைக் கண்டுபிடித்தது அவரது சின்ன மகள் கௌரி.எல்லோரும் மதியம் சாப்பாட்டுக்குப் பின் தூங்கிக் கொண்டிருந்த போது அரக்கப் பரக்க ஓடி வந்தாள்.

"அப்பா...அப்பா...தண்ணி குடிக்க சமயல் ரூமுக்குப் போனேனா..?அங்கே ஒரு....ஒரு......"என்று முடிக்காமல் இழுத்தாள். திக்கென்ற பார்வதிக்கு பயம்.."திருடன் வந்துட்டானா..?இருக்காதே....அபார்ட்மெண்ட் வாசலில் செக்யூரிடி உண்டே..?என்று சமாதானமானவள் தீர்த்தராமனை எழுப்பினாள்.போய்ப் பார்த்தவர் பின்னாலேயே குடும்பத்தார் எல்லாரும் வர விழித்தார்.


"என்னடி...என்னத்தைப் பார்த்தே..?
தன் கையை அகல விரித்தபடிக்கு சொன்னாள் கௌரி.  "அப்பா...இவ்ளாம் பெரிசா ஒரு எலி.ப்பா...பெருச்சாளின்னு நினைக்கிறேன்." என்றாள்.  அன்றைக்கு ஆரம்பித்த யுத்தம் அது.

அபார்ட்மெண்டில் அவருக்கு அடுத்த வீட்டில் குடியிருக்கும் ரிடையர்ட் போஸ்ட் மாஸ்டர் கணேசன் கடமையே கண்ணாகமொத்தம் 120 வீடுகளுக்கும் இந்த செய்தியைக் கொண்டு சேர்ப்பித்தார்.துக்கம் விசாரிக்க வருகிறாற் போல ஒவ்வொருவராக வந்து சென்றனர்.
அபார்ட்மெண்டின் சகலவாசிகளும் "எலி பாக்கப் போறோம். எலி பாக்கப் போறோம்" என்று தினமும் ஐந்தரை மணியிலிருந்து ஏழு மணி வரை வந்து போக ஆரம்பித்தனர்.பார்வதிக்கு ரொம்பப் பெருமை.தான் அலட்டிக்கொள்ளாமல் எல்லாரும் தன் வீட்டுக்கு வந்து அறிமுகம் ஆகிச்செல்வதால் அவள் தினமும் பட்டுப்புடவை கட்டிக்கொள்வதும் நாலரை மணிக்கே ரெடி ஆகிக் காத்திருப்பதுமாக இருந்தாள்.

வருகிறவர்களை முதலில் வரவேற்பாள்.பிறகு வீட்டை சுற்றிக் காண்பிப்பாள்.அதன் பின் சோஃபாவில் அமரவைத்துக் கர்ட்டஸிக்கு கொஞ்ச நேரம் பேசிவிட்டு வழியனுப்புவாள்.நேரத்துக்குத் தகுந்த மாதிரி ஸ்னாக்ஸ் அண்ட் டீ வேறு.சில முக்கியஸ்தர்களுக்கு முழு போஜனமும் உண்டு.

சற்று நேரத்துக்கு முன் பால் காரனுக்கு ஃபோன் செய்த பார்வதி     
தினமும் எக்ஸ்டிரா பால்பாக்கெட் நாலு போடச்சொன்னாள்.அதைக் கூடத் தாங்கிக் கொள்ள முடிந்த தீர்த்தராமனால் ஃபோனின்
வாயைப் பொத்தியபடியே "ஏங்க..இந்த மாசம் முழுக்க போட்டா போதுமா..அதுக்குள்ளே அந்த எலியைப் பிடிச்சிர மாட்டீங்க..?என்னும் போது நெஞ்செல்லாம் எரிந்தது.அவர் பதில் சொல்லாததால் தானே கேப்டனாகி "நீ இந்த மாசம் முழுக்க குடுப்பா...ஒண்ணாந்தேதி கன்ஃபார்ம் பண்ணிக்கலாம் அப்பறம் வேணுமான்னு."என்றாள்.

வைரஸ் புகுந்த சூப்பர் கம்ப்யூட்டர் மெல்ல செயலிழந்து எடைக்கு விற்கப்படுவதைப் போலத் தான் ஆகிக்கொண்டிருப்பதாக உணர்ந்தார் தீர்த்தராமன். சௌத்ரி படத்து வில்லன் போல ரௌத்ரமானார்."இன்னிக்கு ஒழிச்சிர்றேன்..இன்னிக்கு ஒழிச்சிர்றேன்.."எனக் கங்கணங்களைக் கட்டிக்கொண்டார்.ஆனால் எதிர் எலி எதிராளியாய்ப் பட்டையைக் கிளப்பிற்று.எலி பாஷாணம் வைக்கும் வரை சமர்த்தாயிருந்தது.அதை வைத்த அன்றைக்கு முன்னாலே எல்லாரிடமும்சொல்லி இருந்தார்."ரொம்பப் பவர் ஃபுல் பாஷாணம் இது.கண்டிப்பா எலி இன்னிக்கு நைட்டுத் தாங்காது" என்று,   மறு நாள் காலை எல்லோரும் திடுக்கிட்டனர்.

தீர்த்தராமனின் ஒரு பேண்ட்,அதே ராமனின் ஒரு சாக்ஸ்,அந்த அதே ராமனின் ஒரு புஸ்தகம் இவற்றை மட்டும் கடித்துக் குதறி இருந்தது அந்த எலி.வீட்டார் எல்லாரும் "முதல்ல பாஷாணத்தை எடுத்திட்டு போயி சாக்கடையில கொட்டிட்டு வாங்க...பக்கத்து வீட்டுத் தாத்தாவுக்கு லேசா இழுத்திட்டு இருக்கு,.ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிட்டா கொலைக்கேசாய்டும்.".என பயமுறுத்த சாக்கடையில் எறிந்து விட்டு வந்தார்.

அடுத்தடுத்து பத்து வகையான முயல்வுகள் எல்லாவற்றுக்கும்  டிமிக்கி கொடுத்தது அந்த எலி.அந்த வீட்டின் எல்லா அறைகளுக்கும் போய் வந்தாலும் கூட வேறார் பொருளையும் தொடுவதே இல்லை என்பதால் மற்றவர்களுக்கெல்லாம் அதன் மீது லேசாய் "ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்" வேறு.

"ஏம்பா கொல்லணும்னு சொல்றே..?உன்னால முடிஞ்சா அதைப் பிடி.பிடிச்சதுக்கப்பறம் ஒரு கூண்டுல விட்டு நாமளே வளக்கலாம்ப்பா...பழகிடுச்சுப்பா நல்லா.."என்ற அவரது கனிஷ்ட குமாரனைப் பார்வைத் துப்பாக்கியால் பலமுறை சுட்டார்.                மறுதினம் வேறு வழியின்றி 10 நாள் லீவை முடித்துக்கொண்டு ஆபீசுக்குப் போய் விட்டு வந்தவர் வாசலில் செருப்பை கழற்றும் போதே உள்ளே பேச்சும் சிரிப்புமாக இருந்தது.


உள்ளே ரெண்டு ஃபேமிலி இருந்தது.பச்சை நிற அரக்குப் பட்டுப்புடவையில் மிளிர்ந்தாள் பார்வதி.பழயதை எல்லாம் விற்றுவிட்டுப் புதிசாக வும்மிடியில் மூணு மாசத்துக்கு முன்னால் பண்ணிக்கொண்ட சின்னூண்டு வைர நெக்லஸ் அவள் கழுத்தில் டாலடித்தது.இன்றைக்கு புதிதாக லிப்ஸ்டிக் வேறு.தீர்த்தராமன் கோமா ஸ்டேஜை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.அவர் கையில் இருந்த லேப்டாப் பையைத் தான் வாங்கிக்கொண்டபடியே

"ஏங்க,.,இவர் தான் நம்ம அபார்ட்மெண்ட் செகரட்டரி ஸ்ரீராம் சார்.இது அவர் மிசஸ்.இவர் ட்ரெஷரர் ஆரோக்கியசாமி இது மிசஸ் ஸ்டெல்லா." என அறிமுகம் செய்தாள் பார்வதி. பலவீட்டுக் குழந்தைகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிகொண்டிருந்தனர்.எல்லா ரூமிலும் ஆள் இருந்தது.திடீரென்று "அங்கே பாருங்க...அங்கே பாருங்க.."என ஒரு சப்தமும் அதன்பின் "ஹைய்யோ...எவ்ளோ பெருசு...அழகா இருக்குல்ல..?"என்னும் சப்தமும் கேட்டது.கிரிக்கெட் மேட்ச்சின் கேட்ச் தருணம் போலக் கூச்சல்.

தீர்த்தராமனுக்கு திரும்பிப் பார்க்காமலே புரிந்தது.மிஸ்டர் எலியார் ஒருமுறை தரிசனம் கொடுத்து ஓரிடத்தில் இருந்து இன்னோர் இடம் ஓடி இருக்கிறார்.
"என்ன பேரு வெச்சிருக்கீங்க..?"இது மிசஸ் ஸ்டெல்லா
"நான் "போனி"ந்னு வெக்க சொல்றேன்..என் பொண்ணு கௌரி "புஜ்ஜி"ன்னு வெக்கலாமான்னு கேக்கறா...எங்க வீட்ல எதுவா இருந்தாலும் எங்க சார் தான் சொல்லணும்..என எல்லோரின் தட்டுக்களிலும் எக்ஸ்டிரா பஜ்ஜிகளை இட்டுக்கொண்டேசற்று சப்தமாக கூவினாள்.."ஏங்க...போனியா புஜ்ஜியா.உங்களுக்கு எது ஓக்கே..?"

இவர் தன் ரூமுள் இருந்தபடியே "எனக்கு பஜ்ஜில்லாம் வேணாம் பார்வதி...கொலஸ்ட்ரால்..:"என்றார். ஹால் மொத்தமும் கொல்லென்று சிரித்தது மீண்டும்.   இவர் வெளியே வந்தார்.ஒரு சம்பிரதாயத்துக்கு சோஃபாவில் அமர்ந்தார்.

"மிஸ்டர் தீர்த்தராமன்...என்ன முடிவு பண்ணீருக்கீங்க..?எத்தனை நாள் டயம் வேணும்..?"
எதுக்கு?"
"இல்லீங்க...நீங்க சொந்த வீடுன்னாலும் கூட ஒண்ணு நீங்க குடி இருக்கலாம்.இல்லைன்னா வாடகைக்கும் விடலாம்.பட் நீங்க குடி இருந்துக்கிட்டே டெனெண்ட் யாரையும் உள்வாடகைக்கு அமர்த்தக் கூடாது.அது தான் நம்ம அபார்ட்மெண்ட்ரூல்."
தன் தலையைத் தடவிக்கொண்ட தீர்த்தராமன் "நான் எங்கே வாடகைக்கு விட்டேன்..?" என்றார்.அவர் குரல் அவருக்கே கேட்கவில்லை
"இல்லே...பெருச்சாளியோ என்னமோ...நம்ம அபார்ட்மெண்ட்ல நாய் வளர்க்க கூடாதுன்னு ரூல் இருக்கு தெரியுமில்லே..?"
"ஏன் சார்..நானா வளர்க்கிறேன்..?எலி சார்..அது பெருச்சாளி...தானா நுழைஞ்சிடிச்சி..அதை கொல்றதுக்காக அலையறேன் அதைப் புரிஞ்சுக்காம என்னென்னமோ சொல்றீங்க..?" "இப்போது மிசஸ் ஸ்டெல்லா வாய்திறந்தாள்.
"சாரை ரொம்ப துன்புறுத்தாதீங்க..,,தீர்த்தராமன் சார்...நான் ரெட்கிராஸ் மற்றும் ப்ளூ கிராஸ் ரெண்டுலயும் மெம்பர்.நீங்க அந்த எலியை உயிரோட பிடிச்சு எங்கிட்டே ஒப்படையுங்க...நான் கன்செர்ன் பீப்பிளை விட்டு அதை ஃபாரெஸ்ட்ல விட்டுருவேன்.ப்ளீஸ் கொல்ல டிரை பண்ணாதீங்க..அது அஃபென்ஸ்.."

இதென்னடா வம்பு என்னும் போதே செகரட்டரி சொன்னார்.."நீங்க ஏன் கூகுள்லே ஒரு நல்ல வழியை செர்ச் பண்ணக் கூடாது.எதாவது புதுவிதமா...எலிபாஷாணத்துக்கு பதிலா எலியோட பாஷைல ஒண்ணு ரெண்டு வார்த்தை கத்துக்கிட்டு அது கூட பேச ட்ரை பண்ணலாம்.அல்லது வெறும் மயக்கத்துக்கு எப்படி எலிய ஆட்படுத்துறது...இந்த மாதிரி எல்லாம்.." அவர் மனைவி அவரை அடக்கினாள்.
"அதெல்லாம் நடக்காதுங்க...சார்....நீங்க சைதாப்பேட்டைல "ஸ்ரீலஸ்ரீ பிரகாஷ்ராஜபாலாசிங்" அப்டின்னு ஒரு முனிவர் இருக்கார்.
அவர் கிட்டே போனா வெத்தலைல...."

இடைமறித்த ஸ்டெல்லா.."மை போட்டு பாப்பாரா..?.."


அவள் பெருமிதமானாள்

"நோ நோ...வெத்தலைல பாக்கு வெச்சு சுண்ணாம்பு தடவி தின்னுடுவார்.அப்பறமா சொல்வார்...எலியை எப்படிக் கொல்லாமப் பிடிக்கலாம்குற டெக்னிக்கை...இன்ஃபேக்ட் நிறைய்ய ஐ.ட்டீ கம்பெனிக்கெல்லாம் அவர் கன்சல்டண்ட் தெரியுமா..?"

தன் சிண்டைப் பிய்த்துக்கொள்ளலாம் போல இருந்தது தீர்த்தராமனுக்கு.எல்லோரும் இன்னும் நாலு ஐடியா கொடுத்துக் குழப்பி விட்டுக் கிளம்பினதும் தன் அறைக்குச் சென்று தாள்ப்பாள் போட்டுக்கொண்டு "ஓ"வென்று அழுதார்.மறு நாள் சாயங்காலம் உற்சாகமாக வீட்டுக்கு வந்தார் தீர்த்தராமன்.
"என்னங்க இன்னிக்கு விசேஷம்..?"
"பார்வது...நாம எல்லாரும் இன்னிக்கு நைட் கிளம்பரோம்.இன்னோவா கார் புக் பண்ணிருக்கேன்.நீ குழந்தைகளை ரெடி பண்ணு.வீ ஆர் கோயிங் டு மதுரை."
"மதுரைல என்ன.?"என்றவளிடம்
"மதுரைல ஒண்ணுமில்லடீ...பிள்ளையார் பட்டிக்கு ஒரு வேண்டுதல் பாக்கி இருக்குல்லே..?அதை முடிச்சிட்டு மதுரைக்கும் போயிட்டு வந்துறலாம்னு தான்.எனக்கும் இந்த எலி பிடிக்கிற தொல்லைல இருந்து ரெண்டு நாள் லீவ் அதான்.."

பிள்ளையார் பட்டிக்குப் போவதற்கு பிட்ஸ்பர்க் போகிறாற் போல ரெடியானாள் பார்வதி.கிளம்பும் போது மறக்காமல் ஒரு தட்டில் பொரியைக் கொட்டி ஹால் நடுவே வைத்தாள்.பக்கத்திலேயே இன்னொரு பேசனில் தண்ணீர். சற்று சப்தமாய் குரல் கொடுத்தாள்.
"போனிக்கண்ணா......நாங்க பிள்ளையார்பட்டி போயிட்டு ரெண்டு நாளாகும வர்ரதுக்கு...உனக்கு அக்கமும் புவ்வாவும் வெச்சிருக்கேன்..சமர்த்தா இருக்கணும்...அம்மா சீக்கிரம் வந்துருவேன்.சேட்டை எதும் பண்ணக்கூடாதுடா குட்டிம்மா.."என்றவள் கதவை சார்த்தும் போது லேசாய்க் கண்கலங்க வேறு செய்தாள். தீர்த்தராமன் அவளிடம் நக்கலான குரலில்

என்னது ""அக்கம்...புவ்வா..?""என்றார்
"ரெண்டு நாள் ஊர்ல இருக்க மாட்டோம்ல..?அதான் போனிக்கு...சாப்பாடு வேண்டாமா.?"
"அதுக்கு நீ அம்மாவாடி...என்னால அந்த எலிக்கன்றாவிக்கெல்லாம் அப்பாவா இருக்க முடியாது.."என்றார் கறாராக.
"வேண்டாம்..அதென்ன இனிஷியலா கேக்கறது.?:
இதற்கு மேல் பேசினால் இன்னமும் மானம் கெடும் என வாய்மூடிக்கொண்டார் தீர்த்தராமன்.
அடுத்த ரெண்டு நாட்கள் கவலை மறந்து சுற்றி வேளா வேளைக்கு பிள்ளையார் பட்டி குன்னக்குடி அழகர் கோயில் சிவகங்கை காளிகோயில் பழமுதிர்சோலை திருப்பரங்குன்றம் என ஆன்மீகமாய் அலைந்து விட்டு நடுராத்திரி திரும்பி வந்தார்கள்.இன்னோவா கார் பார்க்கிங்கில் வந்து நின்றது.தங்கள் பை பெட்டி இத்யாதிகளை எடுத்துக் கீழே வைக்க உதவிய டிரைவர் திடீரென்று கத்தினான்.

"என்னாச்சுப்பா.?எனப் பக்கத்தில் போன தீர்த்தராமனிடம்
பெருச்சாளி சார்...எங்கே ஏறிச்சுன்னு தெரியலை.சனியன்..திடுதிப்புன்னு மேல குதிச்சு ஓடுது..."என்றான்.
ஆஹா...மனசுக்குள் கூவிக்கொண்டார் தீர்த்தராமன்...பிள்ளையாரப்பா...கருணை காட்டிட்டியா..?"ஊருக்கு எடுத்து வைத்த பையில் எப்படியோ ஏறி இருக்கிறது.இப்போது இடமறியாது இறங்கியும் போய்விட்டிருக்கிறது
அதற்குள் கௌரியிடம் சொன்னாள் பார்வதி..."போனி போயிடுத்தாடீ..?."

மனசே இல்லாமல் தூங்கினாள்.அதற்குப் பிறகு ரெண்டு நாள் எலி பற்றிய எந்தத் தொல்லையும் இல்லாமல் இருந்தார் தீர்த்தராமன்.அலுவலகத்தில் வேறு ஆனிவல் ஆடிட் என்பதால் பயங்கர பிஸியாய் இருந்தார்.
அடுத்த நாள் சாயங்காலம் வீட்டுக்குள் நுழைந்த தீர்த்தராமனிடம்
மூஞ்சியை உம்மென்று வைத்தபடி "இப்ப சந்தோஷமா..?"என்றாள் பார்வதி.
"என்னடீ?"
"இங்கே பாருங்க...போனி பாவம்...வாயில்லா ஜீவன்..அது பாட்டுக்கு சமர்த்தா வளைய வந்துண்டிருந்தது.என்னென்னமோ மாயமந்திரமெல்லாம் பண்ணி அதை விரட்டி யிருக்கீங்களே...இது நல்லாயிருக்கா..?என்ன செய்வீங்களோ...எனக்குத் தெரியாது.எனக்கு என் போனி வேணும்.போய் அதே மாதிரி இன்னொண்ணை வாங்கிட்டு அப்பறமா வீட்டுக்குள்ளே வாங்க.இல்லை நான் மனுஷியா இருக்க மாட்டேன்."

தீர்த்தராமன் தன்னையே பரிதாபமாய்ப் பார்த்துக் கொண்டார்.இவளை அடிக்க முடியாது.ஜாதகத்தில் பத்துப் பொருத்தமும் சூப்பர் என்று ஊடுவேலை பார்த்து தன் கல்யாணம் நடக்க காரணமாயிருந்த ஒன்றுவிட்ட மாமா விஸ்வநாதனைப் பழிவாங்கினால் என்ன..?என யோசிக்கலானார்.
ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்த வாக்கில் தூங்கினார்.
திடீரென்று வீடே சந்தோசத்தில் கத்தின சப்தம் கேட்டது.

"ஏங்க...இங்கே வாங்களேன்...அது வேற எலிங்க...நம்ம போனி இங்கேயே தான் இருக்குதுங்க...

தீர்த்தராமன் மயங்கி விழுந்தார்.