புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

முத்தங்கள் பற்றிப் பேசலாம்

வசுமித்ரவின் ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்கான காரணங்கள்
உள்ளன  கவிதைத் தொகுப்பை முன்வைத்து

மனம் பிறழ்ந்த ஒருவன் எவருமறியாது தன் முன் வந்து போய்க்கொண்டிருக்கிற உங்களையோ என்னையோ போலி செய்கிறான்.அதனைப் பிதற்றல் எனக் கடந்து விடும் யாருக்கும் அவன் பாவனைகளில் கசிகின்ற சேதி புரிவது இல்லை.மதிப் பீடுகள் எத்தனங்கள் சிபாரிசுகள் முன் தேவைகள் இவற்றின் பிசுபிசுப்புக்களுடனும் அழுகிய நாற்றத்துடனும் எதிர்ப்படுகிற ஒழுங்கானவர்களை கொஞ்சமும் கருணையின்றி மறுதலிக்கிற செப்பிடுவித்தைக்காரன் இவன்.ஒரு பொம்மையைக் கைவிட எத்தனிக்கிற கணத்தில் குழந்தைகளின்  முன் நின்று கொண்டு அவர்களைக் கொஞ்சியும் கெஞ்சியும் அதட்டியும் மீண்டும் பால்யத்தின் கடந்துவந்த பாதையில் திரும்பப் போய்விடச்சொல்லி அழுது அரற்றியபடி கேவுகிற ஒரே ஒருவன் இருக்கக் கூடுமெனில் அவன் பெயர் வசு மித்ர.

வசு மித்ர எழுதி கருப்புப் ப்ரதிகள் வெளியீடாக கடந்த 2005ஆமாண்டு வெளி வந்திருக்கும் ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்கான காரணங்கள் உள்ளன என்கிற தொகுப்பின் கவிதைகளோடு கடந்த இரவுகளிலும் பகல்களிலு மாக இறுக்கமாகப் பிணைந்துகிடந்தேன். எழுத்துக்கள் சர்ப்பங்களாக மாறி என்னைத் துரத்தின.பால்ய வயதில் அறியத் தொடங்கிய தாய்மொழியில் மிகப் பரிச்சயமான வார்த்தைகள் என இதுகாறும் இறுமார்ந்திருந்த எனக்கு மிகப் பரிச்சயமான சாந்தமான பொருளறிந்த திறந்த வார்த்தைகளே என்னைத் துரத்துகிற சர்ப்பங்களாக மாற நேர்ந்தது வசு மித்ர செய்து காட்டும் சூன்யங்களின் துவக்கம் தான்.

முத்தம் என்றொரு வார்த்தை.இதழ்கள் இணைத்து இரண்டு நபர்களின் வாழ்வின் உத்தமமான செயலாக எனக்கு அறிவிக்கப் பட்டிருந்தது.நம்மில் பலருக்கும் அதில் உடன்படுதல் இருக்கக் கூடும்.முத்தம் ஒரு சர்ப்பமாகின்றது. நாகத்தின் கருணை அளப்பரியது.வசு மித்ர தன் சர்ப்பங்களை எவ்விதப் பாசாங்கு மில்லாது தன் கல்லறையின் இடுக்குகளில் இருந்து ஒவ்வொன்றாக விடுதலை செய்கின்றார்.அத்தனை முத்தங்கள் தேவைப்படத் தான் செய்கின்றன. குறுங்கத்தி யொன்றை முத்தத்தில் உரசுகீறார்,முத்தம் என நீ முடிக்கும் எந்தக் கடிதமும் ஏன் உன் புணர்ச்சியை ஞாபகமூட்டவில்லை.?என்ற கேள்வி கவனம் பெறுகின்றது. அன்றைய தினத்தின் குறுகிய இரவும் பேரோலமும் ஒரு முத்தம் பற்றிய கவலை யோடு என் உதடுகளை அறுத்தெறிவதில் முடிகிறது என்ற சொல்லாடலில் முத்தம் பொசுங்குகிறது.தீமயமாகிறது உலகம்..நாமறியாமல் முத்தங்களை யாரேனும் காவு கொள்ளக் கூடும்.பெயரற்ற இருவர் நம் அறைச்சுவர்களுக்கு முத்தங்களை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.என்ற சொற்றொடரில் வருகின்ற முத்தங்கள் வஞ்சகமானவை யாகவும் தன்னை ரெட்டித்துக் கொள்கிற சூட்சுமம் தெரிந்து வினைபுரிகிற தன்னிச்சை உயிரிகளாகவும் எனக்குப் படுகின்றன..அறைச்சுவர்கள் காமத்தைக் கடத்துகின்றன. தனக்குள் அலசித் திருப்புகின்றன.உனது முத்தத்தை விற்று குழந்தைக்கு நடைவண்டி யோ அறை நிரப்பும் கடலையோ அதன் மீது பறக்கத் துடிக்கும் புறாவொன்றையோ வாங்க முடிகிற அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது விற்கப்பட்ட முத்தத்தை பதிலாய் வாங்க முடியாதென்பது..இந்த இடத்தில் முத்தத்தின் பிரதிமைகள் சுக்கு நூறாகின்றன. துடைத்த கணத்தில் விரல்களில் பிசுபிசுக்கின்ற அப்போதைய முத்தத்தின் மிச்ச-ஈரத்தின் கோரல்கள் நம்மைச் சுடுமணலில் நிறுத்துகின்றன.

முத்தங்களுக்குத் தனித்த உடலினையும் அரூபமான உயிரொன்றையும் ஒரு சிற்பியின் லாவகமும் அகதியின் அவசரமும் கலந்து உருவாக்கிட முனைகிறார் வசுமித்ர.அவரது வெவ்வேறு கவிதைகளினுள்ளே சில பொதுமைத் தொடர்ச்சிகள் வாசகனைப் பேரின்பமும் பெருந்துன்பமும் அற்ற ஒரு இடுக்கில் அமர்விக்கின்றன. அவற்றில் தலையாயது முத்தம். இங்கே சொல்லப்படுகிற முத்தம் தனித்தது.அது ஒற்றை வார்த்தையோ ஒரு பொருளோ அன்று. அகராதி என்ற அமைப்பினுள் தலை குனிந்து நிற்கிற வார்த்தைகளையும் அவற்றின் கைகளைக் கட்டியிருக்கிற சொல்லப்பட்ட அர்த்தங்களையும் தன் குறுங்கத்தி ஒன்றினால் அறுத்தெறிகிறார் வசுமித்ர.அவர் மிகப் பொறுமையாக ஒவ்வொரு வார்த்தைகளாக கீறி அறுத்து அவற்றின் குருதி வழிய தூக்கி எறிகிறார்.அவை விடுதலை நிலத்தில் விழுகின்றன.இங்கே முத்தம் அவற்றில் முதன்மை வார்த்தையாகின்றது.ஒரு கால இடைவெளிக்குப் பின்னதாய்க் கடந்து வருகிற முதல் முத்தம் முதல் துயரமாகின்றது.படிக்கட்டில் அமரும் முத்தங்கள் அவனது வீட்டைக் காவல் காக்கின்றன. ஒரு முத்தத்தால் பூமியைப் பிளக்க முடிகின்றது. இன்னொரு முத்தம் துரோகத்தால் வனையப்பட்டதாக நேர்கின்றது.அவளிடம் தூண்டிலைத் தூற எறிந்துவிட்டு கொடுக்கால் ஒரு முத்தம் வேண்ட அவனால் மட்டும் முடிகின்றது.கைவிடப்பட்டவனாகிய பரிதாபத்திற்குரிய கடவுளிடம் முத்தங்கள் பற்றிய எந்தக் கேள்வியும் சென்றணுகக் கூடாது என்பதில் கவிசொல்லி காத்திரமாகவும் கவனமாகவும் இருப்பது தெரிகிறது. சாத்தான் முத்தத்தால் கைதியாவதும் கடவுள் முத்தத்தால் வேவுபார்க்கப் படுவதும் ஒருங்கே நிகழ்கின்றது.ஏவாள் என்பவளுக்கு துயரம் முத்தத்தின் வழி காத்திருந்தது கவனத்தில் கொள்ளப் படுகின்றது.முத்தத்தாலான ஓர் உலகின் ஒரு மனிதனாக நம்மை கைப்பிடித்தழைக்கிறான் கவிஞன்.

முத்தம் என்றது ஒற்றை வார்த்தையன்று.

வசுமித்ரவின் குறளிவேலையின் மற்ற பகுதிகள் வாசகனைக் கொன்று தின்றுவிடுவதாக அமைகின்றன. வசுமித்ர மிகக் கருணையோடு கூடிய வக்ரங்களின் குரலாய்த் தன் சுயத்தை அறுத்தெறிகிறார்.நிர்வாணத்தைப் பற்றிய உரையாடலில் வார்த்தைகள் வாக்கியங்கள் மற்றும் வாதங்கள் இவற்றை மட்டுமே தன்னிரு கைகளில் மாற்றி மாற்றி குலுக்கியும் உருட்டியும் முன் நிற்கிற அனைவரின் பார்வைகளையும் சூன்யத்தின் புள்ளியற்ற கரும்புள்ளியில் நிலைக்க வைக்கிறார்.அவரது கவிதைகள் எதையும் நிறுவுவதற்கானவை அல்ல என்றே கருதுகிறேன்.எந்த பிரயத்தனமும் இல்லாமல் காமம் காதல் அன்பு முத்தம் ஸ்னேகிதம் குரோதம் கடவுள் சைத்தான் என சொல்லி வைக்கப்பட்ட அத்தனை சொற்களையும் தன் வித்தைகனத்தின் மூலமாய் விடுதலை செய்து காண்பிக்கிற வசுமித்ர. இத்தொகுப்பின் கவிதைகளின் நடுவாந்திரத்தில் தன்னை மறைத்து தன் உருவத்தை சாம்பலாக்கி காணாமல் போகின்றார்.அவ்வேலையும் அவரது ஜாலங்களில் ஒன்றாக இருக்குமோ என்று ஐயப்படுகையில் லேசான எள்ளலினூடே வசு மித்ர வெளிப்படுகிறார். சொற்களைக் காப்பாற்றுகிற நிசமானதொரு உரையாடலை நிகழ்த்துவதன் ஒரு பகுதியாக தன் அழிவும் நேர்வதை இக்கவிதைகள் விவரிக்கையில் கண்கள் உறைவதைத் தவிர வேறு வழியில்லை.வசு மித்ர என்னும் ஒரு நிகழ்வு இத்தொகுதியின் கவிதைகளினூடே நிகழ்ந்து முடிந்திருக்கிறது என்பதே நான் உணர்கிற முன் வைக்கிற சேதி.அது ஒரு மீளா நிகழ்வு என்பதற்கு இதொகுப்பின் கவிதைகள் சாட்சியம் சொல்கிறவை..

இந்தக் கவிதைகள் முத்தம் பற்றின பிரகடனங்களோ அல்லாது முத்தம் குறித்த வகுப்பெடுத்தலோ அல்ல.வார்த்தைகள் மூலமாகவே வாழப்பழகிக் கொண்டு அர்த்தக் கடத்திகளாக அறிதலின் வெளியில் கோர ஒலி எழுப்பியபடி நம்பகங்களை நிறுவுகிற பெருங்கூட்டமொன்றின் கூச்சல் திசைக்கு எதிரான இருளைத் தன் இரு கைகளால் விலக்கியபடி கண்விழியின்  உயிர்ப்பை அன்றி வேறொரு வெளிச்சமும் இல்லாத சூன்யத்தின் வனத்தினுள் நடை போடுகின்றன வசுமித்ரவின் இத்தொகுப்புக் கவிதைகள். நிரூபணங்களுக்கும் நிரூபணங்களுக்குப் பின்னதான கூச்சலுக்கும் சற்றும் தொடர்பில்லாத அனுபவம் ஒன்றையே பெயர்த்தலாக்கி எந்த நோக்கமும் இல்லாது நகர்தலையே நோக்கமாகக் கொள்கின்றன வசுவின் வாசகங்கள்.

ஒரே சித்திரத்தின் வெவ்வேறு பரிமாணங்களால் நிரம்புகின்றன கவிதைகள்.காமம் நிறமற்றது.மேலும் அது இருளையும் ஒளிர்தலையும் புறத்தே நிறுத்திவிடுகிறது.  உடல் குறுவாளாகின்றது.புராதன ஆப்பிளாக அவனது இதயம் மாறுகின்றது.அந்தக் கணத்தில் கானகம் தன் மரமொன்றை வேரோடு சாய்க்க ஏதுவாய்ப் பொழிகிறது மழை.மரப்பல்லிகளும் பூனைகளும் எலிகளும் கம்பளிப்பூச்சிகளும் மாவுருவங்களை ஏற்கின்றன. சொன்ன சொல்லுக்கு ஆடும் கோழையாக மனிதன் ஆட்டுவிக்கப் படுகின்றான்.காமம் என்ற கற்பிதங்களை எல்லாமும் உடைத்தெறிகின்றன இக்கவிதைகள்.எல்லா நிகழ்வுகளுமே உரையாடலுக்கான திரைமுன் அரங்கமாக விரிகின்றன.இவ்வுரையாடல்கள் யதார்த்தமானவை.விலகி நிற்பவை உரையாடல் என்ற பதம் மட்டுமே.அவை தட்டையானவை அல்ல.உதடுகளில் பிறக்கிற பழக்கப்பட்ட வாக்கியங்களால் செய்விக்கப்பட்ட வழமை மாறா உரையாடல்களுக்கு இங்கே வேலையில்லை. இவை உயிர்த்தலின் சாட்சியங்கள்.இவ்வுரையாடல் நீட்சியொன்றையே சுவாசித்து தன்னைத் தக்கவைத்துக் கொள்கின்றன. வசுமித்ரவின் கவிதைகள் ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்கான காரணங்கள் உள்ளன என்னும் தொகுப்பின் கனம் மௌனமாய் மற்றும் அலட்சியமாய் சுழல்புதையாழம் ஒன்றில் நம்மை சிக்க வைக்கின்றன.வாசிக்கிறவனை முன்னும் பின்னுமாய் இரண்டாய்ப் பிளந்து விடுகிற கத்தியாய்க் கூட இருக்கக் கூடும்.