புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

கவுண்டமணி

அதனினும் இனிது 16.முரண் சங்கீதம்
கவுண்டமணி


கவுண்டமணி ஒரு முரண்சங்கீதம்.எல்லோரும் செல்லும் இடதுபுறத்தை விரும்பாத எதிர்ப்புற வாகனம் போல மேலோட்டமாகத் தெரிந்தாலும் தமிழ் சினிமாவை முழுக்க முப்பதாண்டு காலம் அதுவும் நான்கு கூறுகளாக நான்கு வெவ்வேறு முகங்கள் காட்டி ஆளவந்தார் கவுண்டமணி.ஆரம்ப காலப் படங்களில் கிடைத்ததை எல்லாம் தின்று செரிக்கும் பெரும்பசிக்காரனாகத் தான் தன் கணக்கைத் துவங்கினார் மணி.குறிப்பாக பாரதிராஜாவின் பதினாறுவயதினிலே என்ற படம் எங்கனம் எல்லோரையும் வெளிச்சப் படுத்தியதோ அங்கனம் மணியையும் தனியே ஒதுக்கி காட்டியது."இது எப்படி இருக்கு?"என்று ஸ்டைல் காட்டிய வில்லன் ரஜனிகாந்துக்கு அப்படம் முக்கியமான படம் என்றால் "பத்த வெச்சிட்டியே பரட்டை" என்ற தன்வசனத்தை எல்லோரும் கவனிக்கும் வண்ணம் சொல்லிக் கணக்கைத் துவக்கினார் மணி.


என்ன டெய்லர் என்று கொஞ்சும் சுமதியை ஆசையொழுகப் பார்த்தபடி பிழைப்பு இயந்திரத்தை ஓடச்செய்யும் அந்தப் பாத்திரத்துக்கு பாக்யராஜால் மட்டுமல்ல வேறு யாராலும் இன்னொரு நடிகரைக் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது.நெற்றிக்கண் படத்தில் சபல ரஜினிக்கு மேனேஜராக வந்ததும்,அமாவாசை....என்று பெரியமனிதர் ஜீ சீனிவாசன் விளிக்கும் போதெல்லாம் "உள்ளதைச்சொல்றீங்க"என்று ஒத்து ஊதுவதிலாகட்டும்,மணி கிடைத்ததை எல்லாம் பயன்படுத்திக் கொண்டார்.


கோவைத்தம்பியின் தயாரிப்புகளிலும் ஆர்.சுந்தர்ராஜன் மற்றும் பாக்யராஜ்,இயக்கங்களிலும் மோகன் கமல் மற்றும் ரஜனி உள்ளிட்ட பல இளைய நடிகர்களின் படங்களிலும் தொடர்ந்து இடம்பெற ஆரம்பித்தார் மணி இரண்டாவது ஆட்டம் தொடங்கிற்று. கொக்கரக்கோ,உதயகீதம்,கீதாஞ்சலி, என எத்தனையோ படங்கள் மணியின் தனி காமெடி ட்ராக்குடன் இடம்பெற்றன.உடன் வந்தார் செந்தில்.தனியாகவும் இணைந்தும் இருவருமே நடித்த பல படங்கள் வெற்றிபெற்றமைக்கு இருவரும் காரணகர்த்தாக்களானார்கள்.கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடித்த கரகாட்டக் காரனும் பிரபு நடித்த பி.வாசுவின் சின்னத்தம்பியும் ஐந்து வருட காலகட்டங்களுக்குள் அடுத்தடுத்து ஒரு வருடம் ஓடிய படங்கள்.இரண்டின் சில பொதுமைகளுள் கவுண்டமணி முக்கியக் காரணர்.கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழக் காமெடி அவரை உச்சத்தில் கொண்டுபோனது.கூடவே பயணித்தார் செந்திலும்.

சூரியன் படத்தில் சொல்வார்..."அரசியல்வாதிகள்னாலே தியாகிகள் தானே...?".."ஓ...சோகத்திலும் ஒரு சுகம்..""காந்தக் கண்ணழகி..உனக்கு நான் மினிஸ்ட்ரில இடம் பாக்குறேன்...""அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...""உடனே எனக்கு ஃப்ளைட் புக் பண்ணுங்க...நான் டெல்லி போகணும்..."இவையெல்லாமும் லோக்கலில் ஏமாற்றிப்பிழைக்கும் அரசியல்வாதிகளை இன்றைக்கு வரை கண் முன் நிறுத்துபவை.
ரஜினி துவங்கி கமல் தொட்டு எல்லோருடனும் நடித்த மணி எல்லா நாயகர்களுக்கும் சமநாயகராகவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் என்றால் அது நிஜமே.பேர் சொல்லும் பிள்ளை படத்தில் கேஆர் விஜயாவின் மருமகனாக லஞ்சம் வாங்கி வேலை இழப்பவராக நடித்திருப்பார் மணி.அந்தப் படத்தில் கமல் ஹீரோ.மொத்தமே அதன் பின் நாலு படங்களில் தான் கமலுடன் நடித்தார் மணி.தன்னை நிலை நிறுத்திக் கொண்ட பின் அவர் தன் சொந்த உரையாடல் பலத்தால் எழுந்து நின்றார்.நாயகர்கள் நடுங்கினர் என்றால் அது தான் நடந்தது.சிங்காரவேலன் மற்றும் இந்தியன் ஆகிய படங்களில் கமலுடனும் மன்னன் உழைப்பாளி மற்றும் பாபா ஆகியவற்றில் ரஜினியுடனும் 90களுக்குப் பின் நடித்தார்.


மணிவண்ணனுக்கு இணக்கமான நடிகராக அவர் இருந்தார் என்பது ரசமானது.எத்தனையோ படங்களில் மணிவண்ணன் கவுண்ட மணியின் சிறந்த நடிப்பை வெளிக்கொணர்ந்தார்.முக்கியமான படம் புதுமனிதன்.பின்னால் நடிகராக உருவெடுத்த மணிவண்ணனுடன் மாமன் மகள் உள்ளத்தை அள்ளித்தா படங்களில் தானும் சதமடித்தார் மணி.உள்ளத்தை அள்ளித்தா படம் அவரை இணை நாயகனாக்கியது.அடுத்தடுத்த படங்களை எடுத்த சுந்தர்.சி.கவுண்டமணிக்கெனவே கதைகளைத் திருத்தினார்.அல்லது யோசித்தார்.உனக்காக எல்லாம் உனக்காக படம் ஒரு உதாரணம்.வில்லனாக ரகசியப் போலீஸ் படத்தில் மிளிர்ந்தார் மணி.பதவிக்கு வரத்துடிக்கும் அமைச்சராக தத்ரூபம் காட்டியிருப்பார் மணி. பரதனின் ஆவாரம்பூ படத்தில் வாழ்ந்து காட்டியிருப்பார் மணி.வாத்தியார் வீட்டுப் பிள்ளை,மதுரைவீரன் எங்கசாமி போன்ற சில படங்களில் வில்லன் என்றால் கதைப்படி வில்லனாகவே நடித்திருப்பார்.

ஷங்கரின் படங்களான இந்தியன் ஜெண்டில்மேன் இரண்டிலும் கலக்கியிருப்பார் மணி.அவர் கதா நாயகனாக பணம் பத்தும் செய்யும் போன்ற சில படங்களில் நடித்தது இன்னுமொரு ஆச்சர்யம்.சரத்குமாருடன் மகாபிரபு படத்தில் அடிக்கும் லூட்டி ஒரு சாம்பிள்.சத்யராஜுடன் பிரம்மா நடிகன் என பல படங்கள்,பி.வாசுவின் அன்புக்குரிய நடிகர் கவுண்டமணி.இளைய தலைமுறை நடிகர்களான விஜய் அஜீத் உள்ளிட்டவர்களின் ஆரம்பப் படங்கள் பலவற்றில் நடித்தார் மணி.பார்த்திபனுக்கும் மணிக்கும் நன்றாக ஒத்துவந்தது.இயக்குநர்கள் குருதனபால்,ரங்கனாதன்.சி.சுந்தர்.சி,ஆகியவர்கள் மணியுடன் நிறைய்ய படங்கள் செய்தார்கள்.வீ சேகர் பல வித்யாசமான வேடங்களை மணிக்கு வழங்கினார்.ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் மற்றும் பொறந்த வீடா புகுந்த வீடா மேலும் பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் போன்றபடங்கள் சில.

மணி இன்று வரை பேட்டிகளைத் தவிர்த்துக்கொண்டே வந்து இருக்கிறார்.என் நினைவறிய ஆனந்தவிகடனில் ஒரே ஒரு அட்டைப்படப் பேட்டி படித்த ஞாபகம்.மணி சொந்தமாய் வசனம் பேசும் ஆற்றல் படைத்தவர்.ஆரம்ப படங்களுக்கு ஏ.வீரப்பன் என்ற (மெட்ராஸ் டு பாண்டிச்சேரி படத்து காமெடி நடிகர்)ப்ழைய நடிகர் மணிக்கு டிராக் எழுதிவந்தார்.என்ற போதும் மணி இயக்குநர்களிடம் தனக்கு என்ன பாத்திரம் என்று கேட்டுக்கொண்டு சூழலுக்கேற்ற வசனங்களைக் கச்சிதமாக பேசிவிடும் ஆற்றல் கொண்டவராக திகழ்ந்தார்.

உலக சினிமாக்களை விரும்பிப் பார்க்கும் ஆர்வம் கொண்ட மணி சினிமாவின் நுட்பங்களை நன்கு அறிந்த அறிவுஜீவி என அவரோடு நெருக்கமாய்ப் பழகிய நண்பர்கள் சிலர் சொல்லக் கேட்டு இருக்கிறேன்.கடைசியாக மன்மதன் படத்தில் நடித்த மணி அதன் பின் ஓய்வெடுக்கலானார்.இன்றைக்கும் என்றைக்கும் தகர்க்க முடியாத மணி தமிழ் நிலத்தின் நகைச்சுவை சக்கரவர்த்தி என்று சொன்னால் அது மிகையாய்ச்  சொல்வதல்ல..ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து இருக்கிற மணி என்னும் நடிகரின் படப் பட்டியலும் அவர் வென்ற நகைச்சுவைக் காட்சிகள் பட்டியலும் மிகப் பரந்த ஒன்று.ஒரு சிட்டிகை சர்க்கரை அள்ளி நாக்கில் தடவினாற்போன்றதே மணி என்னும் மகாநடிகன் பற்றிய இப்பதிவு,