புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

ஆனந்தி இரயிலில் பயணிக்கிறாள்

ஆனந்தி இரயிலில் பயணிக்கிறாள்.


பின்னணி இசையின்றி நிகழ்சப்தத்துடன்
படமாக்கப்படும் காணொளி போல்
அந்தக் காட்சி துவங்குகிறது.
ஒன்றன் பின் ஒன்றாய்  
எந்திரயானைக்கூட்டம் போல் இரயில் நிற்கிறது.
இன்னும் பயணியர் பட்டியல் ஒட்டப்படவில்லை.
கல் பெஞ்சு ஒன்றில் அமர்ந்தவாறு
கடக்கிற முகங்களை வாசித்துப்பார்க்கிறேன்
எனக்கடுத்த இருக்கைகளில் ஒரு குடும்பம் வந்தமர்கிறது.
அதில் அந்தப் பெண்ணை எங்கே பார்த்திருக்கிறேன்?
என்றென் ஜென்மாந்திர நினைவுகளில் நிரடிக்கொண்டே
பின்னோக்கி ஓடுகிற குதிரை.
ஒரு தகவலில் நின்று மூச்சுவாங்குகிறது.
'அவள் பெயர் ஆனந்தி'.
எங்களிருவருக்குமான பால்யம்
ஒரே தெருவில் வாய்த்திருந்தது.
என்னை விட அவளுக்கு
ஒரு வயதாவது சில மாதங்களாவது அதிகம் என்பது நம்பகம்.
தாவணிக்கு மாறிய பருவத்தில்
சில சாயங்காலங்களில்
அவளைப் பின் தொடர்ந்து சென்றிருந்தேன்.
செம்பழுப்பு நிறத்தினாலான அந்த தினங்களில்
அவள் பேரழகியாய்த் தோன்றுவாள்.
எப்படியேனும் பேசிவிடவேண்டுமென்று
முனைந்து கொண்டிருந்தேன்.
என்றபோதும் குறிப்பிடும்படி
ஒரு சந்தர்ப்பமும் வாய்க்கவில்லை.
எங்கள் தெருவில் வேறோர் இணை
அப்போது ஊர்தாண்டிப் பறந்திருந்தது.
சிறிது காலம் கழித்து
அந்த இணையில் நாயகன் மட்டும் கொல்லப்பட்டான்.
நாயகி கொஞ்ச நாட்கள்
அழுத முகத்தோடு முடங்கிக்கிடந்தாள்:.
அதன் பின் வெகுதொலைவில்
வேறொருவருடன் வாழ நேர்ந்தாள்.
எனக்கும்
ஆனந்திக்கும்
அந்தக்கதைக்கும் தொடர்புமில்லை.
என்றாலும் எங்கள் கதையின்
ஆரம்ப அத்தியாயங்கள்
அதனுடன் சேர்த்துவைத்து எரிக்கப்பட்டிருக்கக் கூடும்.
இரயில் கிளம்பத் தயாராகிச் சப்தமிடுகிறது.
ஆனந்தி எனக்கெதிர்த்த இருக்கையில்
தன் குடும்பத்துடன் பயணித்துக் கொண்டிருக்கிறாள்.
எங்கள் பார்வைகள் யதேச்சையாக முட்டிப்பிரிகின்றன.
இருக்கைகளுக்கு இடையில் சிரித்தபடி அலைகிற
தன் குழந்தையை வாரியெடுக்கிறாள்.
அது ஆனந்தியின் கழுத்தைக் கட்டுகிறது.
அதன் கன்னங்களில் மாறி மாறி முத்துகிறாள்.
இரயில் ஞாபக இருளைக் கிழித்தபடி
விரைந்து கொண்டிருக்கிறது.

Last Updated (Sunday, 28 September 2014 04:33)