புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

ஒற்றை தேவதை

லேசாய்த் தலை சுற்றுகிறாற் போல் இருந்தது முத்துதிரனுக்கு.தான் காலையில் இருந்தே எதையும் உண்ணவில்லை என்பதை.அப்போது தான் உணர்ந்தான்அவன் பயணத்தின் இருபத்தி மூன்றாவது நாளில்  இருந்தான்.அவன் மிகவும் சோர்வாக இருந்தான்.அந்தப் படகில் முத்துதிரனையும் சேர்த்து கிட்டத்தட்ட 17 பேர் இருந்தனர்.அப்போது அவன் இங்கிலாந்திலிருந்து பாரிஸ் நகரம் நோக்கிய பயணத்தில் இருந்தான்.முத்துதிரனிடம் ஒரு பெரிய்ய பயணப் பை இருந்தது.அதைத் தவிர அவன் உடலோடு ஒட்டிய ஒரு தோல் பை இருந்தது.உயர் ரகமான அந்த தோல்பையை அவன் காஷ்மீரில் ஒரு கைவினைப்பொருள் கண்காட்சியில் வாங்கியிருந்தான்..

முப்பத்தியாறாவது முறையாக அவன் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மடித்து உள்ளே வைத்து விட்டு அந்தப் பையில் இருந்து தன் ஹெட்ஸெட்டை எடுத்துக் காதுகளில் பொருத்திக் கொண்டான்.அதிலிருந்து வழிந்த இசை அவன் மனதிற்கு மிகவும்  இதமானதாயிருந்தது.சற்று தள்ளினாற் போல் அமர்ந்திருந்த ஒரு செம்பட்டைத் தலையன் அவனைப் பார்த்து ஸ்னேகமாக சிரித்தான்.அப்படி அவன் சிரித்தது இதோடு ஏழெட்டு முறை இருக்கக் கூடும்.பதிலுக்கு சிரிக்காமல் வேறுபுறம் முகத்தைத் திருப்பிக் கொண்டதும் மீண்டும் ஒருமுறை நிகழ்ந்தது.செம்பட்டை மண்டையன் ஒரு அடிமையைப் போல் மீண்டும் மீண்டும் முத்துதிரனை அணுக முயன்றது லேசாயொரு கித்தாய்ப்பை நல்கியது.

அப்போது குளிர்ந்த கடற்காற்று முத்துதிரனின் உடலை மெல்ல வருடியது. இப்போது அந்த செம்பட்டைத் தலையன் தன் உணவுப்பையில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து முத்துதிரனிடம் நீட்டினான்.அதை மறுக்க எண்ணிய முத்துதிரன் பிறகு வாங்கிக் கொண்டான். அவனது இந்தச்செய்கை அந்தச்செம்பட்டைத் தலையனுக்கு மிகுந்த மன நிறைவைத் தந்தது. அவன் மகிழ்ச்சி அவனது முகத்தில் ஒரு பாலாடையென வழிந்தது.அவன் சந்தோஷத்துடன் தன் தண்ணீர்க்குவளையை எடுத்து நீட்டினான்.முத்துதிரன் அதையும் மௌனமாக வாங்கிக் கொண்டான். இவற்றையெல்லாம் அவன் மிகுந்த ஆளுமையுடனே செய்ததை உணர்ந்தான்..

முத்துதிரன் எப்போதுமே மிகுந்த ஆளுமைத்திறன் உடையவன் தான்.அவனது குரல் அத்தனை கம்பீரமாக இருக்கும்.அவனுக்கு ஏவல் செய்வதற்கு அவனை யாரென்றறியாதவர்கள் கூட முன் வருவர்.அன்னியப்புதிய இடங்களில் கூட எத்தனையோ முறை முத்துதிரன் வரவேற்கப் பட்டிருக்கிறான்.இது அவனளவில் மிகவும் பழகிய விஷயமாகிவிட்டிருந்தது. முத்துதிரன் தன் கையில் இருந்த உணவை ஒரு கணம் உற்றுப்பார்த்தான்.மேலேயும் கீழேயும் ரொட்டி நடுவே முட்டையும் வேகவைக்கப்பட்ட் இறைச்சியும் கலவையாக்கி காய்கறிகளும் சேர்த்து அலங்காரமாக இருந்தது.அவன் இப்போது தன் பசியின் நிமித்தம் அதனை உண்ணலானான்.

முடித்ததும் அவன் கைகளில் செம்பட்டைத் தலையன் நாஃப்கினைக் கொடுத்தான். மெல்லப் படகின் ஊசலாட்டத்தை கவனிக்க ஆரம்பித்த முத்துதிரன் தன் வாயைத் துடைத்துவிட்டு அந்த நாஃப்கினை நீட்ட பயபக்தியுடன் அதனை பெற்றுக்கொண்ட செம்பட்டைத் தலையன் அவனை விட்டு  நீங்கினான்.இப்போது வீசிய காற்று முத்துதிரனுக்கு ரம்மியமானதொரு உணர்வைத் தந்தது. முத்துதிரன் தன் கண்களை மூடிக்கொண்டான்.அவன் மனமெங்கும் ஒற்றை முகம் ஒரு ஓவியத்தின்    பூர்த்திக்கணமாய் நிரம்பலாயிற்று.எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத முகங்கள் இந்த உலகத்தில் எப்போதாவது தான் நிகழ்கின்றன.முகம் என்பதை முத்துதிரன் ஒரு வாழ்ந்து மறையும் நெடியதொரு நிகழ்வாகத் தான் எப்போதும் எண்ணுவான்.எல்லா நிகழ்வுகளும் விரும்பத்தக்கவை என்று நிர்ப்பந்தித்து விட முடியாது அல்லவா..?

எந்த ஒரு மனிதனும் தன் முன் விருப்பத்தை தான் வாழ்கின்ற வாழ்வின் எந்த குறுக்கு சந்திலும் நிர்பந்திக்க முடியாது என்றாலும் எளிதில் கடக்கவியாலாது சில அபூர்வமான நிகழ்வுகள் எந்த ஒரு மனித வாழ்விலும் ஊடுபாவாக நேர்ந்துவிடுகின்றன.அத்தகைய நிகழ்வுகளுக்கு முன்னும் பின்னுமாய் அறுந்து தொங்குகின்றது அவரவர் வாழ்வு.முத்துதிரன் வாழ்வினை இரண்டாகக் கிழிக்கும் அப்படியானதொரு நிகழ்வு ஒரு மதுச்சாலையில் நிகழ்ந்தது.ஒரு வாரத்துக்கு முன்னால்.

உலகம் ஒரு பெரிய கடவுளின் சாபத்தை சந்தித்த ஒரு தினம் முடிவுக்கு வந்தது.அன்றைக்கு வரை இறந்து போயிருந்த அனைவருடைய ஆத்மாக்களின் பிரதிநிதியாய் உலகின் நகர்தலைக் கண்காணித்து வந்த ஒரு ஊர்சுற்றி மரம் இருந்தது.தன்னை வழிபடுகிறவர்களை சபிக்கிற அந்த மரம் ஒரு சுதந்தரி.எப்போது எங்கே இருக்கும் என்று எவரும் கணிக்கவியலாது.அந்த மரம் அன்றைக்கு பெரிய கடவுளின் சாபத்துக்கெதிராய்த் தன் முதல் வாதத்தை வைத்த போது அழிவின் விளிம்பில் இருந்த பூமி காலநீட்சியை பெற்று தப்பிப் பிழைத்தது.

அந்த ஊர்சுற்றி மரத்தின் வாதமானது..."இந்த உலகம் எங்கே துவங்கியதோ அங்கேயே சென்று முடிவது தான் நியாயங்களின் நியாயமாக இருக்கும்.அதன்றி வேறு எப்படி அழிந்தாலும் அங்கே நியாயமும்  சேர்ந்தழியும்"என்று இருந்தது.அதனை மௌனமாக ஏற்றுக்கொண்ட பெரிய கடவுள் தன் பதிலை குரல்கடவுளான  அசரீரி ஒருவரின் மூலமாய் "அப்படியே ஆகட்டும்" எனப் பொழிந்தது.

3098 ஆம் ஆண்டு நடந்து கொண்டிருந்தது.அதன் கடைசி தினத்தில் இருந்து ஒவ்வொரு தினமாக குறைந்து கொண்டே வந்தது.நேற்றென்பது நாளையாகவும் நாளையென்பது நேற்றாகவும் சபிக்கப் பட்டிருந்ததால் வாழ்க்கை என்பது கிட்டத்தட்ட நரகமாகவே அறியப்பட்டது.அறம்,ஒழுக்கம் போன்ற விதிவிதிகள் யாவையும் விலக்கிக் கொள்ளப் பட்டிருந்தன.அன்பும் காதலும் அரும்வார்த்தையகத்தில் பேணப்பட்டன. சூட்சுமங்களும் சூசகங்களும் வழக்கொழிந்துவிட்ட நிர்வாணம் வாழ்தலின் எல்லா தருணங்களையும் கட்டிப் பின்னிழுத்துக் கொண்டிருந்தது.முத்துதிரனுக்கு இப்போது 28 வயது.இன்னமும் 28 வருடங்களில் அவன் கைக்குழந்தையாகி மரிப்பான் என்பது திட்டவட்டம்.அதற்குள் ஒரு பதின்மூன்று வருட பால்யம் பெரியதொரு சாபமாக அவனைப் பயமுறுத்தியது.

முத்துதிரன் தான் அறிந்த அத்தனை வாக்கியங்களையும் பேசிவிட்ட அயற்சியில் இருந்தான்.சரியும் தவறுமற்று விஸ்வாசமும் துரோகமுமற்று நன்மை தீமையற்று சூன்யமொன்றில் தான் எப்போதும் ஆழ்ந்து கிடப்பதாகவே நம்பினான்.என்ன செய்தாலும் தன்னால் தப்பிக்கவே இயலாதென்று தீர்ந்து தீர்ந்து நிரம்பினான்.நீர்மமற்ற கண்ணீரும் வரமறுத்த ஓலமுமாய்த் தன் தனிமையின் ஒரு இருளுக்கும் இன்னொரு இருளுக்குமிடையில் தேம்பித் திரிந்தான்.

ஒரு வாரத்துக்கு முன்னால் முத்துதிரன் அன்றைக்குக் காலையில் இருந்தே மிகவும் படபடக்கின்ற இதயத்தோடு இருப்பதை உணர்ந்தான்.என்ன செய்தாவது உடனே தன் மனோ நிலையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் வெகு நாட்களுக்குப் பின் ஒரு மதுச்சாலையினுள் நுழைந்தான். அந்த மதுச்சாலையில் அதிக பணத்தை முன்னால் கட்டுகிறவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப் பட்டது. அலட்சியமாக தன் கால்சட்டைப் பையிலிருந்து பணத்தாட்களை எடுத்து விசிறிவிட்டு நுழைந்த முத்துதிரன் அந்த மதுச்சாலையின் இருளடைந்த மூலையில் ஒரு கண்ணாடிக்கு முன்னால் அழகிய வேலைப்பாடுகளுடன் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தான்.அவனுக்கு முன்னால் இருந்த கண்ணாடியில் தெரிகிற அவனது  பிம்பத்தை அவனே வெறுத்தான்.தன்னைத் தானே கொலை செய்துவிட வேண்டுமென்று விரும்பினான். தன் கோப்பையில் இரண்டுக்கும் மேற்பட்ட மதுக்குடும்பங்களைச் சேர்ந்த திரவங்களைக் கலந்து அதே போல் தன் முன்னால் இருந்த இன்னொரு கோப்பையிலும் நிரப்பினான்.ஐஸ்துண்டங்களை இரண்டிலும் மிதக்க விட்டவன் தனக்கானதை எடுத்துக்கொண்டு இன்னொன்றை தான் பாவனையில் அந்த இருள்மூலையில் சிருஷ்டித்த தன் பால்ய நண்பன் "முதல்" என்றவனுக்காக வழங்கினான். முதல் முத்துதிரனின் முகத்தைப் பார்த்ததுமே அவன் ஏதோ பெரிய மனவருத்தத்தில் இருப்பதை உணர்ந்துகொண்டான்.

"ஏன் நண்பா உன்னைக் காணச்சகிக்கவில்லை...என்ன பிரச்சினை உனக்கு...?"என்றான்.
"இல்லை முதல்...என் பிரச்சினை என்னவென்றே என்னால் சொல்லவியலவில்லை,முன் பழைய காலத்தில் நாமெலார்க்கும் வழங்கப்பட்டிருந்த வாழ்க்கை எத்தனை அவ நம்பிக்கைகளைக் கொண்டிருந்ததோ அத்தனை அழகானதாகவும் இருந்தது.இன்றைக்கு எல்லாமே வரைபடங்களின் வழிக்குறிப்புக்களைப் போல சுருங்கிவிட்டதை எண்ணி மனம் விம்முகிறதடா..."என்றான் முத்துதிரன்.

"இதை நினைத்து நீ கலங்கினால் என்னைப் பார்.நீயாவது முடிவு தினத்தன்று சாபத்தினைப் பெற்று  உன் வாழ்க்கை யூ வளைவெடுத்துத் திரும்பினாலும் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்.நான் சென்ற வருடம்  இறந்தவன்.இனி அடுத்த வருடம் மீண்டும் வந்தாகவேண்டும்.ப்ரேதமாக உயிரோடிருப்பது கொடிது. எப்போதடா மீண்டும் குழந்தையாகிப் பிறந்த நாளை அடைந்து நிரந்தரமாக இறப்பது என்று தெரியாமல் என்னைப் போன்ற எத்தனை பேர் இந்தக் காலசாபத்தினால் வாடுகின்றோம் என்று யோசி.."என்றான் முதல்.

"அது சரி...என் மனம் அமைதியுற ஏதாவது சொல் நண்பா....நீ அடுத்த வருடம் மீண்டும் உன் இறந்த தினத்தன்று பிறந்து வருகையில் உன்னை ஆரத்தழுவி முத்தமிடுகிறேன்.."என்ற முத்துதிரன் மெல்ல தான் ஏனெனத் தெரியாது சகஜமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்தான்.

திடீரென்று அத்தனை இருளான மதுச்சாலையின் பக்கவாட்டுச்சுவரில் ஒளிவாய்க்கால் பாய்ந்தது.அனைவரின் கவனமும் அங்கே குவிய இருளை விலக்கிக் கொண்டு சுவரில் ஒரு நீலப்படம் ஓடலாயிற்று.நீலப்படங்களில் நடிப்பதற்கு ஆள்கிடைக்காத அந்தக் காலகட்டத்தில் பழம்பழைய படங்களே ஆங்கொன்றும் இங்கொன்றுமாய் அதில் ஆர்வம் கொண்டோருக்குக் கிட்டிவந்த சூழலில் இந்த மதுச்சாலை போன்ற பணம் பெருக்கெடுக்கிற ஸ்தலங்களில் மட்டுமே காலப்புதிய நீலப்படங்கள் ஒளிபரப்பப் பட்டன.அதற்கும் சேர்த்துப் பெருந்தொகை வசூலிக்கப் பட்டதால் விரும்பாதோரும் அதை ஏற்றாக வேண்டியது கட்டாயம்.

அந்த நீலப்படத்தில் நடித்த இருவருமே மெய்மறவாது மற்றெல்லாம் மறந்து ஒரு நிமித்தத்தை தத்தமது நடிப்பற்ற நிஜ நடிப்பால் உயிர்த்திருந்ததை உணர்ந்த முத்துதிரன் தன் மெய்மறந்தான்.அவன் கவனமெலாம் அந்த சுவரில் நிலைத்தது.மொத்தம் இருபத்தோரு நிமிடம் ஓடக்கூடியதாக அந்தப் படம் இருந்தது.அதன் கதையற்ற கதை நேரடித்தன்மையும் பெருங்கருணையும் ஒருங்கே கொண்டதாக இருந்தது.அதில் நடித்த நடிகை வழக்கமாய் மற்றவர்கள் போலல்லாது தன் கண்களை எப்போதும் மூடிக்கொண்டிருக்கவில்லை.அவள் ஒரு உயிருள்ள ஓவியம் போல் இருந்தாள். உடநடிகன் உயிரற்ற மிருகம் போல் இயங்கினான்.அவன் அவளை வென்றாக வேண்டிய கட்டாயமூர்க்கனாய் விரைந்தான். அவளோ அவனைத் தன் இடதுகர விரல்களின் நுனியால் கையாண்டாள்.மொத்தத்தில் வென்றுகொண்டே இருந்தாள். அவன் சில்லறைகள் நிரம்பிய பையின் சிதறல்கள் போல் தெறித்துதிர்ந்தான்.

இப்போது முத்துதிரனின் வாழ்க்கை நில்லாது பதறிக்கொண்டே இருந்த அவனது முந்தைய கணம் முற்றிலும் மாறிவிட்டதை உணர்ந்தான்.அவன் வாழ்க்கையின் மொத்த அர்த்தமாக அந்தப் படத்தில் நாயகியான ஒற்றைதேவதையைக் கண்டறிய வேண்டியதை உணர்ந்தான்.காமமற்ற காதலாகத் தன் செய்கையை நிச்சயம் செய்துகொண்டான்.அதில் இருந்து உடனே மரங்களிடைக் குரங்காகத் தாவிமாறினான்.முத்துதிரன் வாழ்க்கையை அவள் காலடியில் சுக்கு நூற்றியொன்றாக உடைத்தெறியத் தலைப்பட்டான்.அவனைக் கொல்ல அவனே விரும்புவதைப் போலுணர்ந்தான்.

அவள் பெயர் கிளாரா என்பதும் அவளுக்கு இன்னமும் திருமணமாகவில்லை என்றும் அவள் வசிப்பது பாரிஸ் என்ற போதும் அவள் பிறப்பால் லண்டனைச் சேர்ந்தவள் என்றும் அவளொரு கோபக்காரி என்ற தகவலும் முத்துதிரனுக்குக் கிடைத்தன.ஒவ்வொரு தகவலையும் பழைய காலத்துக் கடவுளருக்குப் ப்ரத்யேகமாய்க் கோர்க்கப் பட்ட பூமாலைகளின் தனித் தனிப் பூக்களைச் சேகரிக்கிற பக்தபழையவனைப் போலச் சேகரம் செய்தான்.அதன் நீட்சியில் சாலைகளையும் இருப்புப்பாதைகளையும் நீர்வழிகளையும் வான்வெளிகளையும் கடந்து கடந்து இந்தப் படகில் கிளாராவை நோக்கிய தன் பயணத்தில் தன்னைச் செலுத்திக் கொண்டான்.
******************
இன்னமும் இரண்டு மணி நேரப் பயணம் பாக்கி இருக்கிறதாய் உதவிமாலுமி ஒருவள் வந்து சொன்னாள்.அவளின் குரல் முத்துதிரனை எழுப்பியது.விழித்துப் பார்த்தவன் காலடியில் அமர்ந்துகொண்டு அவனது தொடைமீது தன் வலது கரத்தை வைத்துக்கொண்டிருந்த செம்பட்டைத்
தலையனைப் பார்க்கையில் வெறுப்பாக வந்தது முத்துதிரனுக்கு.செம்பட்டைத் தலையன் வெகு இயல்பாக உறங்கிக் கொண்டு தான் இருந்தான் என்ற போதும் மதியம் உணவு நேரத்தில் அவன் முத்துதிரனிடத்தில் தான் அவன் மீது குன்றாக் காதலோடு இருப்பதாகத் தெரிவித்த பொழுதில்
கடும் கோபமுற்று அவனை நிராகரித்தது நினைவுக்கு வந்தது.அதன் பின்னும் அவன் தன்னருகில் அமர்ந்தும் உறங்கியும் இருந்ததை முத்துதிரன் விரும்பவே இயலாதவனாய் இருந்தான்.ஆனலும்  ஏதோ ஒரு பரிதாபத்தில் அவனை அடிக்காமல் நகர்ந்தான்.

முத்துதிரன் தனக்கும் சேர்த்து சாய்ந்து கொண்டிருந்த அன்றைய அந்தியை மிகவும் விரும்பினான்.அவன் அந்தப் பெருநகரத்தை மட்டுமல்ல,அதனுள் ஒரு முகவரியின் ஏதோவொரு அறையில் அவனுக்கான சந்திப்பை நிகழ்த்துவதற்காகக் காத்திருந்த கிளாராவையும் நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற நினைவே தன்னைக் கிளர்த்துவதாய் உணர்ந்தான்.கிளாராவிடம் தருவதற்காக விலை உயர்ந்த பொருட்கள் வாசானாதிகளைப் பொட்டலம் கட்டிக் கையோடு எடுத்து வந்திருந்தான். மேலும் அன்றைக்குக் காலையில் தான் கிளாராவின் ஏற்பாட்டாளனுடன் செல்பேசியில் பேசி அவளது சந்திப்பனுமதியையும் வாங்கி விட்டிருந்தான். தடைகளற்ற மானசீகச் சாலையொன்றில் கிளாராவை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த அந்தப் பயணம் அவனுக்கு எப்போதடா பூர்த்தியாகும் என்றிருந்தது. இப்போது படகு துறைமுகத்தை அடைந்திருந்தது.

ஒரு ராட்சத நகரம் அந்த இரவுப் பொழுதில் வெளிச்சமயமாகவும் அதே நேரம் அமைதியாகவும் அதிதிகளை வரவேற்றது.தன் பை இத்யாதிகளை சுமந்து கொண்டு சற்று விரைந்த நடையில் முத்துதிரன் நகரத்தினுள்ளே தன்னை செலுத்திக் கொள்ள விழைந்தான். தன்னைக் கடந்து சென்ற செம்பட்டைத் தலையன் காயமுற்ற பாவத்திலான தன் முகத்தை கொஞ்சமும் முத்துதிரனின் பக்கம் திருப்பிவிடாமல் சென்றது லேசானதொரு வித்யாசத்தை உணர்த்தியது. அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் முத்துதிரன் தன் பைகளோடு வாசலில் அவனை வரவேற்ற முதலாவது டாக்ஸியை அணுகி தான் செல்ல விரும்பிய பிரதேசத்தை சொன்னான்.டாக்சி அந்தச்சாலையில் தன் வேகத்தின் உச்சபட்சத்தை உடனே சோதித்துவிடும் எத்தனத்துடன் உராய்ந்து பறந்தது

.முன்னரே பதிந்து வைத்திருந்த ஒரு அறையில் தன் பொருட்களை வைத்து விட்டு அலுப்புக் களைய ஆனந்தமாய் ஒரு குளியலை முடித்துக் கொண்டு விலை உயர்ந்த கோட் உள்ளிட்ட ஆடைகளை அணிந்தான்.முத்துதிரன் மணி பார்த்தான்.அவனுக்கான சந்திப்பனுமதி நேரத்துக்கு இன்னமும் ஒரு மணிநேரம் இருந்தது. தன் உடைகளின் மீது ஒருதலைக் காதலுக்கான வாசனைத் திரவியத்தை பூசிக்கொண்டான்.அவனது கேசம் ஒரு வளர்ப்புப் பாம்பைப் போலச் சுருண்டு இருந்தது.அவனைப் பார்க்கிறவர்களுக்கு அவன் ஒரு வன்மை மிக்க நபர் என்பது நேரடியாகத் தெரியும் வண்ணம் தன் கம்பீரத்தை முன் நிறுத்தி அவன் செய்து கொண்டிருந்த ஆடை அலங்காரங்கள் முத்துதிரனுக்கு திருப்திகரமாக இருந்தது.

காரணமே இல்லாமல் செம்பட்டைத் தலையன் நினைவு வந்தது முத்துதிரனுக்கு."என்னையும் என் காதலையும் ஏற்றுக்கொள் மகாராஜா"என்று அவன் பலமுறை கெஞ்சினான்.தன் நினைவுகளுக்குள் செம்பட்டைத் தலையனை வரவிடாமல்; அவனை வெளித்தள்ளிக் கதவு சார்த்தினான் முத்துதிரன்.அவனிடம் அப்போது எந்த பச்சாதாபமும் இல்லை.முந்தைய காலத்தில் அவனும் கூட எல்லாப் பாலினங்களுடனும் தன் இச்சையைப் பகிர்ந்துகொண்டவன் தான் என்றாலும் ஏனோ அவனுக்கு செம்பட்டைத் தலையனைப் பிடிக்கவே இல்லை.அதற்கு என்ன காரணம் என்பதும் வெளிப்படையாகத் தெரிந்ததே.செம்பட்டைத் தலையன் வந்த சூழல் அப்படி..."வாழைத் தண்டுக் கால்களும் வெண்ணை கடைகிற இடுப்புமாய் கிளாரா என்னும் காந்தவதியைத் தேடி ஓடிக்கொண்டிருக்கிற வழியில் அவன் அப்படி நடந்து கொண்டதில் ஒரு வியப்புமில்லை.

இப்போது முத்துதிரனின் கார் அந்த விலாசத்தின் முன் நின்றது.முன்பே பேசிவிட்டதால் ஏற்பாட்டாளன் அவனை வாசலில் இருந்து வரவேற்றான்.வீட்டின் உள்ளே சென்ற முத்துதிரனை கிளாரா வரவேற்றாள்.அவளது வரவேற்பு ஒரு முத்தத்தை முதலெழுத்தாக கொண்டிருந்தது.கிளாராவின் முத்தத்தை அனுபவிக்க முடியாத ஒரு குறுகுறுப்போடு முத்துதிரன் சோஃபாவில் படாரென விழுந்தான்.

"ஏன் என்னவாயிற்று..?"என்றாள் கிளாரா..
"கிளாரா....நான் உன்னோடு பேசவேண்டும்..."
"சரி பேசு...ஆனால் நேரத்தை ஏன் ஒற்றைச்செயல் செய்து வீணடிக்கிறாய்....வா சல்லாபித்துக் கொண்டே பேசலாம்.."
"இல்லை கிளாரா...நான் சொல்ல வந்தது என்னவென்றால்...நான்...நான் உன்னைக் காதலிக்கிறேன்..."
"அதற்கென்ன..?இங்கே வாரத்திற்கு ஐந்து பேரை நான் சந்திக்கிறேன்.எல்லாருமே என்னைக் காதலிக்கிறேன்.
'"கிளாரா...என் காதல் நீ அறியாதது...நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்..."

"இதோ பார்...இங்கே நேரத்திற்கு அன்னியாய விலை என்பதை நீ அறிந்தும் விளையாடுகிறாய்.நான் ஒரு வாரத்திற்கு ஐந்து ஆடவர்களைப் பார்த்துவருகிறேன்.அனைவருமே என்னைக் காதலித்தவர்கள் தான்.இன்றைய இரவு நீ என் காதலன்.அவ்வளவு தான்.உன்னதம் என்று நீ உளறிக்கொண்டிருப்பதை உடனே நிறுத்து."என்றாள். இப்போது முத்துதிரனுக்கு கண்களில் லேசாய்க் கண்ணீர் எட்டிப்பார்த்தது.அவன் நினைப்பதை விட்டுவிட்டு வேறு திசையில் தன் கதை செல்வதை உணர்ந்தான்.என்ன சொல்லித் தன்னை புரியவைப்பது என்பது புரியாமல் தன்
வார்த்தைகளை இழந்த வறியவனாய் குறுகினான்.

"கிளாரா...நீ எனக்கு மொத்தமாய் வேண்டும்.எனக்கு மட்டுமாய் வேண்டும்.நான் உன்னை நிரந்தரமாகக் காதலிக்க விரும்புகிறேன். என் செல்வந்தம் நீ அறியாதது.நீ எவ்வளவு பணத்தை எதிர்பார்க்கிறாய் எனச்சொல்.மொத்தமாய் உன் காலடியில் கொட்டுகிறேன். என்னோடு வா..வந்துவிடு.நீயற்று வாழ்தல் நரகம்."என்றான்.

"முத்துதிரன்...உன்னை நினைத்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது.காதலும் அன்பும் இன்றைக்கு எந்த அளவுக்கு கேலி செய்யப்பட்டிருக்கின்றன என்பதை நீ அறியாயா..?சரி போகட்டும்...இந்தக் காலசாபத்தினால் என் வாழ்க்கையில் நான் ஒவ்வொரு நாளாக இழந்து ஒரு தினம் பரிபூர்ணமான என் பால்யத்துக்கும் அதன் பின்னர் குழந்தமைக்கும் திரும்பப் போகிறேன் என்ற அறிந்ததில் இருந்தே என் வாழ்க்கை புதிய அர்த்தத்தைப் பெற்று விட்டது.இழப்பதற்கு ஒன்றுமற்ற நகர்தல் எனது..உன் பணம் எனக்கு பெரிய நிறைவைத் தந்துவிடாது.உன் காதலை நான் வியப்பதற்கில்லை.நான் ஒத்து வர வேண்டுமென்றால் என்னிடம் என் கனவுக்காதலனை நீ அழைத்து வருவாயா..?"என்றாள்


அதிர்ந்து போனாலும் சமாளித்துக் கொண்ட முத்துதிரன்..உலர்ந்த தன் உதடுகளுக்கு நீர் ஒற்றிக்கொண்டே கேட்டான்"பிறகு நான் எதற்கு...?"
"முத்துதிரன்...பழைய கைவிடப் பட்ட அறங்கள் எதனையும் மறுநிறுவலுக்கு முயலாதே...உன் காதல் உனக்கு...அதில் நீ வெல்ல வேண்டுமானால் என் காதலில் நானும் வெல்ல வேண்டும்.இனி வரப்போகும் எதையும் நாம் தீர்மானித்து விட இயலாது.உன்னை நான் ஏற்றுக்கொண்டு  உன்னோடு வந்தாலும்,நம் இருவரின் முன் வாழ்க்கையிலும் நாம் இருவருமே இல்லை.ஆக நாளை வரவிருக்கும் நேற்றைப் பொழுது நிகழ்ந்த  போது ஒன்றாகவும் நிகழும் போது மற்றொன்றாகவும் இருக்கக் கூடிய சாபத்தினைக் கழிக்க வேண்டிய பயணத்தில் இதை விட வேறு வழி இல்லை. என்ன சொல்கிறாய்,,?"

முத்துதிரன் தன் கனவுகளனைத்தும் தற்கொலை செய்து இறந்து கிடக்கிறாற்போல் உணர்ந்தான்.வேறு வழியே இல்லை.
"சரி..நான் சம்மதிக்கிறேன்.யார் உன் காதலன்.?"என்று கேட்டான்.
இப்போது கிளாராவின் முகம் நாணத்தால் சிவந்தது.அவள் சொன்னாள்..ஆயிரம் ஆண்களைக் கண்டிருந்தாலும் என் கனவில் வந்து தன்
சேஷ்டைகளை செய்யும் இந்த மாயவித்தைக்காரன் தான் அவன்.ஆசைமுகத்தான் அவனை என் முன் கொணர்ந்து நிறுத்து.உன்னைப் பொருட்படுத்துகிறேன்." என்றாள்.ஆர்வம் பொங்க கிளாரா தன்னிடம் நீட்டிய ஓவியச்சுருளை வாங்கி படபடக்கிற இதயத்தோடு நடுங்குகிற கரங்களால் அதனைப் பிரித்தான். அந்த ஓவியத்தில் முத்துதிரனைப் பார்த்து தன் வசீகரப் புன்னகையை வீசிக்கொண்டிருந்தான் செம்பட்டைத்தலையன்.