புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

வீடுபேறு

புதிய வீட்டுக்குக் குடியேறுவது என்பது
வெறும் நிகழ்வன்று.
அது இரண்டு வீடுகளுக்கு
இடையிலான ஒப்பிடல் நோக்கல்.
புதிய முகவரியை மனனம் செய்துகொண்டே
பழைய வீடொன்றைக் கைவிடுவதற்குச்
கில வாக்கியங்கள் உதவுகின்றன

பழைய வீட்டை விடப் புதிய வீட்டினுள்
"வெளிச்சம் அதிகம்" எனலாம்.
பழைய வீட்டைச்சுற்றிலும் மரங்கள் இருந்தன
என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
பின் பக்கக் கதவைத் தாழிட்டாயிற்றா?என்ற கவலையில்
நள்ளிரவுகளில் எழுந்து சென்று
உறுதி செய்துகொள்ளும் அவஸ்தை இல்லை என்று இன்புறலாம்.
திறந்து புகுவதற்குப்
பின் பக்கம் என்றேதும் வாய்க்காத
அடுக்கக வீடென்று அங்கலாய்க்கத் தேவையில்லை.

வீட்டு வராந்தாவில் சின்னதாய்
பணச்செடி மட்டும் போதும் என்று திருப்தியுறலாம்.
துளசி வளர்க்கத் தோட்ட்மில்லை என்பதை மறந்துவிடலாம்.
நன்மைக்கும் தீமைக்கும்
ஒரு தெருவையே அழைக்கும் அன்பினைக்
கைவிடவேண்டியது காலநியதி
என்று அமைதியுறலாம்.
அக்கம் பக்கத்தார் வந்துபேசித் தொந்தரவு செய்யாத
அடுக்ககக் கலாச்சாரத்தை வியந்து கொள்ளலாம்.

நாய் பூனை காதல்பறவைகள்
என்றெதுவும் வளர்ப்பதற்கு
அசோசியேஷன் அனுமதிக்காது
என்பதைப் பேசவேண்டியதில்லை.
சப்தம் வராத தனிமை கேட்டேன் என்ற பாடலை
மின்சாரத்தனமாக ஒலிக்கும்
வாசல்மணி அழைப்பொலி எண்ணிப்
பெருமிதம் கொள்ளலாம்.

இருபத்து நாலு மணி நேரமும்
செக்யூரிட்டி என்று செருக்கடையலாம்.
இரண்டு பக்கமும்
வீடுகள் இல்லாத பாவனையில் வாழ்ந்துகொள்ளலாம்.
லிஃப்டில் சந்திக்கையில்
சின்னதாய் ஒரு புன்னகை.
அதற்கு மேலதிகமாய்
முனகலாய் ஒரு ஹலோ.
இப்படி வாழ்வதன் பேர் தான் வாழ்வு.

(தினகரன் தீபாவளி மலர் 2013 இல் இடம்பெற்ற கவிதை)