புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

கந்தசாமியின் சினிமா

வாழ்தல் இனிது 7

கந்தசாமியின் சினிமா

உனக்கென

****************

நினைவுகளையும்

புன்னகைகளையும் தவிர

வேறெதைத் தரமுடியும்

சிகரங்களில் உறைகிறது காலம் தொகுப்பில் கனிமொழி

சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன்.இப்போது எடுத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்களுக்குப் பிறகு ஃபிலிம் என்ற ஒன்றே வழக்கொழிந்து போகப்போகிறது என்பது தான் அது.என் வாழ்வின் ஆரம்பத்தில் நான் பார்த்த சினிமாக்கள் என் நினைவில் நிழலாட்டம் நேர்த்தின.

சாந்தி என்றொரு தியேட்டர்.இப்போது அது இல்லை,மதுரையின் ஆகப்பரபரப்பான மேலமாசிவீதி பகுதியில் கோலோச்சிய அந்தத் திரையரங்கத்தில் நீலமலைத் திருடன் என்னும் படத்தைத் தான் என் வாழ்வின் முதல் படமாகக் கருத  வேண்டியிருக்கிறது. சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா என்று குதிரையில் பாடியவாறே என்னைக் கடந்து இடவலமாய்ச் சென்ற ரஞ்சன் தான் நான் தரிசித்த முதல் நாயகன் என்றாலும் என் மனதில் பதிந்த முதல் நட்சத்திரம் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் தான்.

என் அப்பா தீவிரமான எம்ஜியார் பக்தர்.அவர் கையில் எம்ஜி.ஆர் படத்தைப் பச்சை குத்தியிருப்பார்.எம்ஜி.ஆர் தான் அவரது இஷ்டநாயகன்.அவருடன் பிறந்த என் சிற்றப்பா தீவிர சிவாஜி ரசிகர்.நான் ந்யூட்ரலாகத் தான் இருந்த ஞாபகம்.எனது பால்யத்தில் எனக்கு ரஜனி மேல் பித்தோ பித்து.ஆனால் இந்த அத்தியாயம் வேறொரு கதையைப் பேசுவதற்கானது.சிவாஜி கணேசனை நான் தரிசித்தது வெறும் திரையில் அல்ல.,நான் படித்த ஆரம்பப் பள்ளியில் வருடத்திற்கு ஓரிரு முறை மாணவர்களிடமெல்லாம் காசு வசூலித்து திரைப்படம் காட்டுவார்கள்.அனேகமாக நெடுவிடுமுறைக் காலத்தின் முதல் தினத்தில் அமையும்.நான் அந்தப் பள்ளியில் படித்த மூன்று வருடங்களும் அனேகமாக பார்த்த அனைத்துப் படங்களுமே சிவாஜி படங்கள் தான் என்பது தற்செயல் ஆச்சர்யம். ஞானஒளி கப்பலோட்டியதமிழன் எங்கள் தங்க ராஜா பாரதவிலாஸ் போன்ற படங்களைக் கண் கொட்டாமல் பார்த்தது அங்கே தான்.

பத்து நாட்களுக்கு முன்னரே டீச்சர் அறிவித்து விடுவார்.தலைக்கு ரெண்டு ரூவா கொண்டாந்துறணும்.சரியா..? நான் அதை வீட்டில் சென்று அறிவிப்பேன்.என் பாட்டி தான் நிதிமந்திரி.அவள் அவ்வளவு சீக்கிரம் காசைத் தரமாட்டாள்.வெளியுறவுத் துறை உள்துறை ஆகியவற்றை வகிக்கும் என் அக்கா மற்றும் அம்மாவிடம் கலந்தாலோசித்து விட்டு காசைத் தருவாள்.ரெண்டுக்கு நாலாய்ப் பொய் சொல்லிக் காசை வாங்கிப்போவேன்.

அந்த நாளும் வரும்.

இங்கே தான் சினிமாகந்தசாமியின் வருகை.சினிமா கந்தசாமிக்கு இது தான் தொழில்.எதுவென்றால் பல பழைய படங்களின் ஒரு ப்ரிண்டை அல்லது சில ப்ரிண்ட்களை  வாங்கி வைத்துக் கொள்வார்.தியேட்டர்களில் படம் வினியோகிப்பது அவர் வேலை அல்ல.இது போலப் பள்ளிகளை அணுகி ஒவ்வொரு பள்ளியிலுமாகப் படம் காண்பிப்பது அவர் வேலை.தெற்குத் தமிழகத்தின் அனேகப் பள்ளிகளுடைய ஆஸ்தான சினிமா ஓட்டுனர் அவர் தான்.சற்றே குள்ளமான உருவம்.அதற்குச் சம்மந்தமில்லாத பருமன்.ஒரு நாற்பத்தைந்து வயதிருக்கும். எப்போதும் வெற்றிலை போட்டுச் சிவந்த வாய்.தோளில் ஒரு துண்டு.ஆனாலும் அவர் தோற்றத்தில் ஒரு சின்ன கவர்ச்சி இருக்கத் தான் செய்தது.அவரை ஏனோ எனக்குப் பிடித்தது.அவரிடம் ஒரு ப்ரொஜக்டர் இருக்கும்.அவர் தான் ஆப்பரேட்டரும்.ஸ்கூலுக்கு முதல் நாளே வந்து தங்கி விடுவார்.அவர் படம் காண்பிக்கப் போகும் ரூமில் விளக்கைப் போட்டுக்கொண்டு குறுக்கும் நெடுக்குமாக நடப்பார்.அவரது கவனமெல்லாம் அந்த அறையின் நீள அகலம் என்ன என்பதில் தொடங்கி ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு அப்பால் முதல் வரிசையிலிருந்து குத்துமதிப்பாக எத்தனை குழந்தைகள் அமர்வார்கள் என்பதை எண்ணி மொத்தம் எவ்வளவு காசு வசூலாகும் என்பது வரை எல்லாவற்றையும் மனனம் செய்து பார்ப்பார்.

அந்த நீண்ட ஹாலில் இருக்கும் சேர் பெஞ்சு இத்யாதிகள் நீக்கப்படும்.எல்லா சன்னல்களிலும் கனமான அடர்வண்ண பெட்ஷீட்டுக்களைக் கயிறு கொண்டு கட்டுவார் கந்தசாமி.விளக்கை அணைத்தால் உள்ளே கும்மிருட்டாக இருக்கும் அளவுக்கு பக்காவாக அந்த அறையை ஒரு அரங்கமாய்த் தயார்செய்வார்.மறு நாள் காலையில் பள்ளிக்கு குறித்த நேரத்தில் வந்து சேர்வோம் பிள்ளைகள் யாவரும். சினிமா கந்தசாமி யாரிடமும் கோபப் படவே மாட்டார்.எப்போதும் சிரித்துக் கொண்டே இருபபார்.என்ன கேட்டாலும் சிரிப்பார்.எந்த நேரமும் வெற்றிலை பாக்குப் போட்ட வண்ணம் இருப்பார்.சினிமா கந்தசாமியின் வெற்றிலைச் சிவந்த பெரிய உதடுகளின் சிரிப்பு அவ்வளவு எளிதில் மறக்க முடியாத சிரிப்பாகவே இருந்தது.

குழந்தைகள் அனைவரையும் ரூமில் அமரவைத்துவிட்டு எங்கள் ஜூலி மிஸ் உள்ளிட்ட பெரிய டீச்சர் சின்ன டீச்சர் எல்லாருமாய் வந்து சைலன்ஸ்..யாராச்சும் பேசுனீங்க அப்பறம் வெளில அனுப்பிடிவேன் என்ற யதேச்சாதிகாரக் குரலுக்கு லேசாய் அதிரும் குழந்தைகளின் மடம் மறுகணமே கொல்லென்று மறுபடி கத்த ஆரம்பிக்கும்.அதைக் கேட்டுவிட்டு எப்போதும் கடுகடுவென்று இருக்கும் பெரிய டீச்சர் அன்றைக்கு மட்டும்  "இதுங்க எங்கே நாம சொல்றதைக் கேக்குதுங்க..."என்றவாறே தலையசைப்பார்.

தூரத்தே கைகட்டிக் காத்துக் கொண்டிருக்கும் கந்தசாமி உடனே மன்னரின் கண்ணசைவு கிட்டிய மாலுமி கப்பலைத் திருப்புவதைப் போல ப்ரொஜொக்டரை ஆன் செய்வார்.விர்ரென்று ஓடத்துவங்கும் படத்தைக் கண்  விரியப் பார்க்கத் தொடங்குவோம்.அத்தனை சின்னஞ்சிறிய வயதில் சிவாஜியின் அழுத்தகனமான குடும்பச் சித்திரங்களையோ அல்லது சரித்திரக் காவியங்களையோ  முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ள முடியாதெனினும் பெரிய இடத்தில் பெரும் பெரிய முகங்கள் அடுத்தடுத்துப் பேசும் வசனங்கள் என அந்தப் படம் பார்த்தல் என்பது எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத மகா ஆரம்பங்களில் ஒன்று என்றே சொல்ல வேண்டும். ஞான ஒளி பார்த்த பிற்பாடு ரொம்ப நாளைக்கு இந்த உலகத்தில் சின்ன சிவாஜி முறுக்கு மீசை கொண்ட வயதான சிவாஜி என்று இரண்டு சிவாஜிகள் இருப்பதாகவே நம்பிக்கொண்டிருந்தேன்.என் அப்பாவிடம் உலகில் மொத்தம் எத்தனை சிவாஜி என்று கேட்பேன்.அவருக்கோ சிவாஜியை சுத்தமாய்ப் பிடிக்காது.(எம்ஜி.ஆர் பக்தராம்)அதனால் ஒவ்வொரு தரம் நாலு சிவாஜி என்பார்.சிலசமயம் ஏழு சிவாஜி என்பார். அதன்பிற்பாடு என் பால்யத்தின் எந்த வீதியிலும் சினிமா கந்தசாமியைப் பார்க்கவே இல்லை.,அப்படி ஒரு மனிதர் மெல்ல என் நினைவுகளிலிருந்தெல்லாம் நீங்கிப் போனார்.நான் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு அனேகமாக 98ஆம் வருடம் என நினைக்கிறேன்.வழக்கமாகச் செல்லும் சலூனுக்குச் சென்றேன்.அங்கே என் நண்பன் சக்தி வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.வழக்கமாய் சென்று அமர்ந்து பேப்பர்கள் வாசித்து எனப் போகாத பொழுதைப் போக்கப் பல இடங்கள் வைத்திருந்தேன்.அதிலொன்று அந்தக் கடை.

அப்போது பக்கத்துக் கடையில் யாரோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்த சப்தம் கேட்டது. வெளியே சென்ற எனக்கு ஆச்சரியம்.சினிமா கந்தசாமி.என்னை அவருக்கு நினைவிருக்காது.ஆனால் எனக்கு மறக்க முடியாத மனிதர் அல்லவா அவர்..?என்னை அறிமுகம் செய்து கொண்டேன்.அவருக்கு ஆச்சர்யம். என் பள்ளி இத்யாதிகளைக் கேட்டறிந்தார்.என்னோடே சக்தியின் கடைக்குள் வந்தவர் அமர்ந்து அளவளாவ ஆரம்பித்தார். இப்போதும் படங்கள் திரையிடப் பள்ளிகளுக்குச் செல்கிறீர்களா எனக் கேட்டதற்குப் பெரிதாகச் சிரித்துக்கொண்டே "எங்கே தம்பி...?இப்ப வீசீடி அது இதுன்னு வந்திட்டது...சினிமாவோட முகமே மாறிடுச்சி. எல்லார் வீட்லயும் டீவீ.எப்பப் பார்த்தாலும் சினிமான்னு வேற மாதிரி ஆயிட்டுது.இப்படி ஒரு தொழில்ல நான் இருந்தேன்னு சொன்னாலே இன்னைக்கு யாரும் சிரிப்பாங்க.ஹூம்.."என்றார்.

பெரும் மூச்சொன்றை விடுதலை செய்தவர் தன் தோளில் இருந்த துண்டை உதறியபடியே "என் வாழ்க்கையே சினிமா தான்னு ஆயிட்டுது தம்பி. ஆனாலும் நான் சினிமாக்காரன் இல்லை.சினிமாவுக்கு வெளியே இருந்து சினிமாவைத் தாங்கிட்டிருக்கிற ஆயிரங்கால்ல நானும் ஒருத்தன்.என்னைய யாருக்குந்தெரியாது. ஆனா எனக்குத் தெரியாத சினிமா இருக்குமா..?"என்றவருக்கு சக்தி வரவழைத்த தேநீர் இதமாய் இருந்தது போலும் வெளியே பலமாக ஒலிப்பெருக்கியின் சப்தம் திடீரென்று தொடங்க சக்தி கடைக்கதவை ஆதுரமாய்ச் சார்த்தினான். அங்கே நான் சக்தி மற்றும் பன்னீர் ஆகிய மூவரும் இருந்தோம்.எங்கள் முகங்களையே மாறி மாறிப் பார்த்த கந்தசாமி மீண்டும் பேசலானார்.

"அதாவது தம்பி...சினிமா தன்னை மாத்திக்கிச்சி,.நாங்க தான் அடியாய்டோம்.இப்பிடி காலகாலத்துக்கும்  பெருந்தொழில் எதுவும் தன் தோற்றத்தை மாத்திக்கும்போதெல்லாம் அதை நம்பி இருக்கவுக நாலு பேருக்கு நட்டமும் வரும்.நாப்பது பேருக்குப் புதுசா லாபமும் வரத்தான் செய்யும்.இதெல்லாம் இயற்கை.ஒண்ணுஞ்செய்ய முடியாது." எங்கள் ஆர்வமும் முகத்தில் லேசாய்ப் படர்ந்த திகைப்பும் கந்தசாமிக்கு ஏதோ சொல்லிலடங்காத திருப்தியைத் தந்திருக்கக் கூடும்.எல்லோரிடமும் பேசிவிடாத வார்த்தைகளைக் கிட்டத்தட்ட பாதிரிக்குப் பக்கவாட்டில் அமர்ந்து பாவமன்னிப்புக் கோருகிற ஒருவனது குரலில் மொழிந்துகொண்டிருந்தார்.

"எம்பிள்ளைகளை சினிமா வாடையே படாமத் தான் வளர்த்தேன்.பொண்ணைக் கட்டிக் குடுத்திட்டேன். பய்யன் என் சொல்படி கேக்கலை.வீட்டை விட்டு ஓடிட்டான்.மெட்ராஸ் பக்கம் திரியுறான்னு அப்பப்போ கேள்வி. சரி..நானென்ன எந்தகப்பன் பேச்சைக் கேட்டா வளர்ந்தேன்.. இருக்கட்டும்...கருவேல மரத்துக்கெதுக்குக் கோளாறு..? தானா வரட்டும்னு விட்டுட்டேன்."சினிமாவில் அசிஸ்டண்ட் டைரக்டராக முயற்சித்துக் கொண்டிருக்கிற தன் மகனைத் தான் அவ்வளவு மெலிதாக எங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று அப்புறம்தான் தெரிந்தது. "ஒரு சின்ன நப்பாசை....நாம எத்தனை ஊருக்கு எத்தனை படப்பெட்டியைத் தூக்கிச்சொமந்தோம்..?இந்த சினிமாக் கந்தசாமியோட மவன் பேரு திரையில வந்துறாதா..?ஹூம்...எல்லாம் ஆண்டவன் விட்ட வழி.."என்று தன் அதுகாறும் வரலாற்றைச் சொல்லி முடித்தார்.

இப்போது என்ன செய்றீங்க என்னும் கேள்விக்கு கண் விரிய "ஃபிலிம் ரெப்பா இருக்கேன் ராஜா. இப்பக் கூட சென்ட்ரல் தேட்டர்ல மன்னாதி மன்னன் படம் அட்டெண்ட் பண்றேன்.வெளியூர்களுக்குப் போறதில்ல. லோக்கல் மதுரைன்னா போய்க்கிர்றது.நமக்கு சினிமா தான் சாமி சாத்தான் எல்லாமும்.வேறெதும் தெரியாதே கண்ணா.."என்று சிரித்தார். தன்னிடம் இருந்த சினிமா ஸ்பூல்களை எல்லாம் பாதுகாக்கவும் இயலாமல் பயன்படுத்தவும் முடியாமல் எடைக்குப் போட்டுவிட்டதாகச் சொன்ன போது அந்தப் பெரியவரின் கண்களில் நிசமாகவே நீர்தளும்பியது.தான் வாழ்ந்த ஒரு காலத்தின் பிரதிநிதித்வம் அங்கே மண்ணாய்ப் போனதாகவே மருகினார்.சினிமா கந்தசாமி என்று தான் இன்னமும் தன் பேர் கேட்பவர்களிடம் சொல்வதாகச் சொன்ன போது ஒரு சின்ன செருக்குத் தொனித்தது.

என் கண்களுக்கு ஒரு காலத்தில் ஓங்கி ஒளிர்ந்த ஒரு நட்சத்திரம் மெல்ல மங்கிக் கூட்டத்தில் ஒருவராக அடுத்த காலத்துப் படங்களில் கிடைத்த வாய்ப்பைப் பெற்றுக்கொண்டு நடித்தாற்போலவே தோன்றியது. வெளியே ஒலிப்பெருக்கி ஓய்ந்திருந்தது.தானும் பேசி முடித்த திருப்தியுடன் டக்கென்று எழுந்து விடைபெற்றுக் கொண்டு இல்லாத மிடுக்கைத் தன் நடையிலேற்றின படி வேகவேகமான காலடிகளோடு காணாமற்போன கந்தசாமி நானறிந்த நாயகன் தான். முன் பழைய காலத்தின் நட்சத்திரங்கள்.கைவிடப் பட்ட தொழில்கள் மூத்தவர்களின் ஞாபகங்களில் மட்டும் நடனமாடும் பெயர்கள். உற்றுக்கேளுங்கள். ஒவ்வொரு முதியவருக்குள்ளேயும் ஒராயிரம் கதைகள்.