புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

சிவாஜி கணேசனின் முத்தங்கள்

முதல்பதிப்பு டிசம்பர் 2011.வெளியீடு
காலச்சுவடு பதிப்பகம் விலை ரூ 70.
கவிதைத் தொகுப்பிற்கான நூல்விமர்சனம்

ஆத்மார்த்தி

பெருவெறி மூளும் கடுவளிக் குரங்கு

இசை எழுதிய மூன்றாவது கவிதைத் தொகுப்பாக வெளிவந்திருக்கும் சிவாஜிகணேசனின் முத்தங்கள் தொகுப்பில் இருக்கிற கவிதைகள் ஏற்கனவே அறிந்து பலமுறைகள் உபயோகமாகி இருக்கிற மொழியின் திட்டவட்ட வாக்கியங்களை எள்ளலோடு கலைத்துப் போடுகின்றன.வாசக கவனத்தினை ஈர்ப்பதற்குரிய முன் முடிவென்றோ அல்லது ஓரு உத்தியாகவோ இதனைக் கடந்துவிட முடியாது.இசை மிக அபாயகரமானதொரு விளையாட்டாக தானறிந்த மொழியை அணுகுகின்றார்.இசையின் நடை கோணல்களைக் கொண்டதாக இருக்கிறது. வாசகன் சதுரங்கச்சாலையின் சவுகரியங்கள் மற்றும் சாபங்களுக்கு உண்டான கட்டங்களில் தாவிக் குதித்தபடிக்கு அவரைத் தொடர வேண்டியவனாகின்றான்.தான் வாழ்கிற சூழலை எள்ளுகிற முகமற்றவனின் வாக்குகளாக சாலையெங்கும் அலைந்துகொண்டே இருக்கின்றன கவிதைகள். இதை ஒரு விளையாட்டென்றோ தீவிரசெய்கையென்றோ திட்டம் செய்யாவண்ணம் உறுத்தலின்றி நிகழ்த்துவதில் வென்றுவிடுகின்றன எத்தனங்கள்.

எப்படியேனும் ஒரு சொந்த வீட்டை நிர்மாணித்து விடுவதாக சத்தியம் செய்கிற தருணம் என்பது மத்யம வாழ்வில் காணக்கிடைக்கிற ஒன்று.அதையே சொற்களால் ஒரு வீடு கட்டியதாகவும் அதைத் தன் பிரியத்துக்குரியவளின் வீடென்றும் அந்த நகரத்திலேயே கலைத்தன்மை மிளிரும் வீடு உன்னுடையது தான் எனச் சொல்லும் இடத்தில் சத்தியம் செய்தவன் வெளியில் நிற்கின்றான்.கலைத்தன்மை மிளிரும் வீடு கவிதையில்."போல" என்ற உவமஉருபைக் கொண்டு கவிஞர்கள் சாத்தியப்படுத்தாத சிலவற்றை இசை சாத்தியமாக்குவது வாசகனை கிளர்த்துகிறது.பிஸ்கட்டைப் பிட்டு தேநீரில் நனைத்துச் சுவைப்பது போல இந்த ஞாயிற்றுக்கிழமையைப் பிட்டு ஒரு கோப்பை மதுவில் நனைத்துச் சுவைக்கிறேன் எனத் தொடங்கும் தென்றல் என்றழைக்கப் படும் ஞாயிற்றுக்கிழமையின் காற்று என்னும் கவிதை வரிகளெங்கும் அனுமதிக்கப்பட்ட அவஸ்தைகளினூடே அவ்வப்போது வந்து செல்லும் விடுபடுதல் எங்கனம் ஒரு ஞாயிற்றுக்கிழமையை தனிக்கச் செய்கிறது என்பதை அழகுற முன் வைக்கிறது.கவிஞனின் மகிழ்ச்சி ஒரு ரப்பர் பந்தெனத் துள்ளிக்குதிக்க இயலுகின்றது.

இன்னொரு கவிதையான ஒரு குள்ளமான காதல் நூறு காதல்களுக்கிடையில் தன் கையை உயர்த்திக் காட்ட வேண்டியிருக்கிறது என்றறிவிக்கையில் ஊனகணங்கள் தனித்துத் தெரிவதை சொல்லிவிடுகிற இசை மனிதர்களின் பெயர்களைக் கொண்டு இந்தத் தொகுதியெங்கும் தனது சித்து விளையாட்டை செய்துகாண்பிக்கிறார்.சொற்களை சற்றும் பொருட்படுத்தாத கலைஞன் பெயர்களைக் கொண்டு ஒரு மாயவேலையைச் செய்வதென்பது வெற்றுச்செயலன்று,மாறாக அது நிலைத்ததும் குவிந்ததுமான வாக்கியங்களின் இடைவெளி மௌனங்களைக் கூட கணக்கில் எடுக்கச் செய்கிற வசிய வேலையின் முக்கியப் பகுதியாகின்றது.MR.ரமேஷ் பணி நிமித்தமாக பல ஊர்களுக்கு செல்கிறவர்.சென்ற முறை ரமேஷால் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு எறும்பு அங்கு ஒரு விடுதியறைக்குள் நன்றாகவே வாழ்ந்து வருகிறது/கொஞ்சம் ஹிந்தி கூட பேசக் கற்றுக்கொண்டு விட்டது என்ற நாகர்கோயில் எக்ஸ்பிரஸில் பயணிக்கும் எறும்பு என்னும் கவிதை சமகாலத்தில் எழுதப்பட்ட மிக முக்கியமானதொரு கவிதையாக தன்னை நிலை நிறுத்திக் கொள்கின்றது.தேசாந்திர வாழ்க்கை விதிக்கப்பட்டிருக்கிறவனின் அலைதல்கள் குறித்து இக்கவிதை பேசாமல் விடுகிற வாசகங்களின் நிலைகொள்கிறான் வாசிப்பவன்.அவனது மீள்தல் எளிதானதல்ல.

சமூகம் என்ற கட்டமைப்பின் பலகீனச்சுவர்களை தன் உரத்த குரலாலேயே வீழச்செய்துவிட இசை தன் கவிதைகளை முன்வைக்கிறார்.ஒரு ஊரில் ஒரு ராஜா என்று கதை சொல்வதை மாற்றி ஒரு ஊரில் நாலைந்து ராஜாக்கள் என்று விரிக்கிறார் புதிய கதையொன்றை.தன்னைப் போன்ற  போலிப்பிரதி ஒருவனை உருவாக்கிவிடும் கவிஞன் போலியைத் தேடுகையில் அவனால் இப்பிரபஞ்சத்தினுள்ளே எங்கேயும் தாக்குப்பிடித்துவிட முடியவில்லை எனச்சொல்வதன் மூலம் தன் வாழ்தலின் மீதான் சலிப்பை பட்டவர்த்தனம் செய்கிறார்.    விருப்பமற்ற நிகழ்தல்களை ஜிலேபி  என்னும் இனிப்புப் பதார்த்தம் கைக்கொள்ளும் தருணங்களாகப் பிரசங்கிக்கும் கவிஞர் சிவாஜி கணேசனின் முத்தங்கள் என்னும் கவிதையில்  வெற்றிகரமான ஒரு மனிதபிரபலத்தை வெளியேற்றி விட்டு ஒரு அறிந்த பெயரை அணுக வேண்டிய நிர்பந்தமொன்றை முன்வைக்கிறார்.அந்தப்  புள்ளியில் டி.சிவாஜிகணேசன் என்ற கேள்விப்படாத மனிதரொருவரின் வாழ்தலின் சில பகுதிகளை சொல்வதன் மூலமாக கட்டுப்பாடற்ற தன் ராட்சசத்தை முன் நிறுத்திப் பேயாட்டம் போடுகிறார்.முன்னுரையில் இதே சிவாஜிகணேசனுக்குத் தான் எத்தனை ரசிகர்கள் என்று குறிப்பிட்ட இடத்தில் இருந்து தேடி வந்து முன் எத்தனத்துடன் தன் கவிதைகளை அணுகச்செய்து தோற்கடிப்பதை ஒரு பரவசமுமின்றி செய்துகாண்பிக்கிறார்.

டாம்பீகங்களை அறுத்தெறியும் வாளாக தனது மொழியைக் கொண்டு தன்னால் முடிந்துவிடக் கூடிய உச்சபட்ச  கீறல்களை தான் இயங்குகிற மொழியின் உடலில் செய்துவிடுகிற வஞ்சகத்தை இசையின் கவிதைகளெங்கும் காண ,முடிகிறது.இத்தனை சூட்சுமத்துடனும் பொசுங்கித் தீயும் நாற்றத்தை குத்திக் கிழித்திவிடுகிற தன் ஆவல் கொஞ்சமும் குறைந்துவிடாது வெகு கவனத்துடனும் புனையப் பட்டிருக்கிற இசையின் கவிதைகள் மேம்போக்கான வாசக பார்வைக்கு அங்கதங்களாகத் தோன்றிவிடக் கூடிய அபாயம் இருப்பதையும் இசை உணர்ந்தே வைத்திருக்கிறார்.மதுரசத்தை பெற்றுவருகிறவன் ஏசுவின் முகத்தோடு வருகிறான் என்னும் கவிதை ஒரு நாராசத்தின் விளைதல்களை நிசப்தத்தினுள் பதிவது நிச்சயமாக மொழியைத் தன்போக்கில் திருப்பிக் கொண்டவனின் கல்லெறிதல் தான். இசை கற்பிதங்களை சுக்கு நூறாக்குகிறார்.அவரது கவிதைகளெங்கும் மனிதர்களும் பெயர்களும் எண்களும் என புழக்கத்தில் பொதுவெளியில் எளிதாக பிரதியிடக் கூடிய உபபொருட்களைக் கொண்டே தன் கவிதைகளை கட்டுகின்றார்.இதனை இசையின் தனித்துவம் என்று சொல்லுகிற அதே நேரத்தில்  எல்லா நேரமும் இதை முனைந்து பார்ப்பதென்பது தனக்கென ஒரு துணைபாணியை ஏற்படுத்துவதற்கான ஒரு விழைதலாகவோ அல்லால் வாசகமனதில் இரட்டித்தலின் அயற்சியை ஏற்படுத்துவதன் மூலமாக அவனை சிக்கலுறச்செய்வதற்கான முயல்வெனவோ கருதவேண்டியிருக்கிறது. இசை எதனையும் அறிவுறுத்தவில்லை.எந்த மஞ்சள் கோட்டையும் ஞாபகப்படுத்தவில்லை.இசை எது குறித்தும் தன் இயலாமையை அல்லது கோபத்தை வெளிப்படையாக கொட்டித்தீர்க்கவில்லை.இவற்றுக்கெல்லாம் மாறாக தன் மொழியினூடே இசை தன் புறவாழ்க்கையின் தருணங்களை நிர்வாணப் படுத்துகிறார்.தான் எதிர்நோக்குகிற அறத்தை விடுபட்ட இடங்களைப் பூர்த்தி செய்யும் லாவகத்துடன் வாசகன் கைகளில் தந்துவிட்டு அமைதி காக்கிறார்.இப்போது பந்து வாசகனின் கால்களுக்கருகே கிடக்கிறது.இசை ஒரு நட்சத்திர ஆட்டக்காரனைப் போல இதழ்கசியும் புன்னகையோடு வாசகனின் நகர்தலுக்காக காத்திருக்கிறார்.சிவாஜிகணேசனின் முத்தங்கள் இசை என்னும் கவிஞனின் கவிதைகள் மட்டுமல்ல...ஒரு கனவைத் திட்டமிட்டவனின் சடைபிரியிலிருந்து பிறந்து அக்கனவின் நுழைவாயிலில் ஆவலோடு விரைந்து கொண்டிருக்கும் வார்த்தைசர்ப்பங்கள்.