புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

காத்திருக்கும் சொற்கள் 1

காகிதப் படகில் சாசப் பயணம்

பெ.கருணாகரன் எனக்கு முகப்புத்தகத்தில் நண்பர்.ஐயாயிரம் பேரில் சொற்பமான நண்பர்களைத் தான் உரிமையோடு நினைத்துக் கொள்ள முடிகிறது.இது வெறும் ப்ரியம் சம்மந்தப் பட்டதல்ல.பத்திரிகைத் துறையில் பணிபுரியும் அனைவருடனும் நல்ல அன்போடும் நட்போடும் இருக்கத் தலைப்படுகையில் கருணாகரனும் அவ்வழியே எனக்கு அறிமுகமானவர்.புதியதலைமுறையில் நான் எழுதிய மனக்குகைச் சித்திரங்கள் எனக்குப் பெருவெளிச்சமாக மாறியது.இன்னமும் யாராவது அதைப் பற்றிக் குறிப்பிட்டுக் கொண்டே இருக்கின்றனர். புதிய தலைமுறையில் அந்தத் தொடர் எழுத ஆரம்பித்த போதிலிருந்து அந்தக் குழுமத்தின் அனைவருமே எனக்கு நட்பன்பாக மாறியது ரசமான ஒரு தகவல்.

ருபத்தி ஐந்து ஆண்டுகளாகப் பத்திரிக்கைத் துறையில் பல்வேறு பத்திரிக்கைகளில் பணிபுரிந்தவர் என்பதிலிருந்து துவங்குகிறது கருணாகரனின் காகிதப் படகில் சாகசப் பயணம்.ஒரு புத்தகத்திற்கு முதல் லட்சணம் அதன் தலைப்பு.பல புத்தகங்களுக்கு முதல் லட்சணத்தைத் தாண்டி வேறு வசீகரங்கள் அமையாமற்போவதும் யதார்த்தம்.ஆனால் தலைப்பில் இருக்கக் கூடிய ஒரு சஞ்சாரத்திற்கான அழைப்பைக் கடைசிப் பக்கம் வரைக்கும் தோன்றச்செய்வது சாதாரண கார்யமல்ல.கருணாகரனின் இந்தப் புத்தகம் அதனைச் சாதிக்கிறது.

ங்கிலத்தில் ஒரு துறை சார்ந்த அனுபவசரிதைகள் அதிகம்.இன்னும் சொல்லப்போனால் கதை கவிதை உட்பட மற்ற வடிவங்களுக்கு இருக்கிறாற்போலவே ஒரு பெருங்கூட்டம் இப்படியான துறை சார்ந்த அனுபவசரிதைகளை மட்டும் வாசித்து சேகரித்து பகிர்ந்து பரவலாக்கிக் கொள்ளும் கொண்டாட்ட மனநிலையோடு இருப்பதைப் பல நாடுகளிலும் காணலாம்.ஆனால் இந்திய அளவில் அனேகமாக இப்படியான புத்தகங்கள் ஓய்வுபெற்ற சிபி ஐ அதிகாரியோ போலீஸ் அதிகாரியோ எழுதுவார்கள்.அவர்கள் ஈடுபட்ட சில முக்கியமான வழக்குகளின் வெளிச்சத்தில் கொஞ்சத்தை அந்தப் புத்தகங்களும் சற்றே பெறும்.ஆனாலும் அப்படி எழுதப்பட்ட பல புத்தகங்கள் வாசிப்புத் திணறலைத் தான் ஏற்படுத்தும்.

எம்ஜி.ஆர் போன்ற மகா ஆளுமைகளுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்ற சிலர் அப்படியான ஆளுமைகளுடனான தத்தமது அனுபவத் தொகையை எழுதுவதென்பது வேறு.அவை பெரும்பாலும் அந்த ஆளுமைகளின் பக்கவாட்டுச் சுயசரிதைகளாகவே இருக்க நேரும்.இன்னும் சொன்னால் ஒரு வங்கியின் தலைமைப் பணியில் இருக்கக் கூடிய ஒருவரின் அனுபவத் தொகை நூலுக்குள் வாசிப்பவர்களுக்குக் குன்றாத சுவாரசியம் இருக்கவேண்டுமானால் உண்மையிலேயே அந்த வங்கியாளர் அத்தனை வித்யாசமான வாழ்வியலை வரமாகப் பெற்றிருந்தாலொழிய சாத்தியமில்லை.நந்தா வின் வரலாறு ஜீடீ நாயுடுவின் சுயசரிதை ஏவி.எம் செட்டியாரின் வரலாறு சந்திரபாபுவின் வரலாறு என தனித்த சில நூல்களை பெரிதும் ரசித்திருக்கிறேன்.பெரும்பாலும் வாழ்ந்து முடித்த அல்லது ஓய்வுபெற்ற ஒரு மனிதரால் எழுதப்படும் சரிதைகளுக்கு வேறு சில பிரச்சினைகளும் தோன்றிவிடுகிறது.

ந்த வகையில் பெ.கருணாகரன் முழுவதுமாக ஊடகத் துறை சார்ந்தவர் என்பது இந்த நூலின் முதல்வெளிச்சம்.அவரது இருபத்தி ஐந்து ஆண்டுகள் என்பது ஊடகத்துறையின் மிகச்சமீபமான காலகட்டம் என்பது அடுத்த முக்கியத்துவம்.மூன்றாவது சம்பவங்களை அடுக்கித் தருவதில் அவர் காட்டியிருக்கும் உழைப்பு இந்தப் புத்தகத்தை மிகவும் உயர்தரமாக ஆக்கித் தந்திருக்கிறது.கருணாகரன் ரகசியங்களை அவிழ்ப்பதிலோ அல்லது வெடிகுண்டுகளை வெடிப்பதிலோ பெரும் ஆர்வம் கொண்டவரில்லை.அவரது வாழ்வில் என்ன நடந்ததோ எவ்வெவ்விதங்களில் அவை நிகழ்ந்ததோ அதனை அப்படியே மாலையாகக் கோர்த்திருக்கிறார்.ஒரு பத்திரிக்கையின் எடிடிங் பணியில் தன்னை ஒப்புக்கொடுத்திருப்பதாலோ என்னவோ இந்தப் புத்தகத்தின் எடிடிங் சிலாகித்துச் சொல்லத் தக்கதாகிறது. இதில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் மற்றும் அவற்றின் அடிநாதமாக விளங்கக் கூடிய உரையாடல்கள் இவ்விரண்டும் வாசிக்கிற வர்களுக்கு ஒரு நாவலைப் படிப்பதற்குண்டான ஸ்வாரசியத்தைத் தக்கவைத்துக்கொண்டே செல்வதும் குறிப்பிடத் தகுந்தது.

பொன்மொழிகளில் மிகச்சிறப்பானது தன் வாழ்க்கை அனுபவத்தை வெளியே பகிர்வது எனலாம்.அப்படிப் பார்த்தால் பெ.கருணாகரன் எழுதியிருக்கும் காகிதப் படகில் சாகசப் பயணம் நூலைப் படித்து முடிக்கையில் இவற்றிலிருந்து வெறும் சாகச உணர்தலைத் தாண்டி வாசிப்பவனுக்குள் ஒரு படர்க்கை மனிதனின் கால் நூற்றாண்டு அனுபவங்களின் ரசம் தேங்குகிறது.அது எளிதில் கிட்டாதது.

காகிதப் படகில் சாகசப் பயணம்
குன்றம் பதிப்பகம்

விலை ரூ150