புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

காத்திருக்கும் சொற்கள் 2

காத்திருக்கும் சொற்கள் 2

பட்டன்கள் வைத்த சட்டை அணிந்தவளின் கவிதைகள்


முகப்புத்தகம் ஒருவனுக்குச் செய்துவிடச் சாத்தியமுள்ள நன்மைதீமைகளில் ஒன்று அன்னியம் உடை படும் தூரதூரப் பரிச்சயங்கள்.அவற்றில் ஒன்றெனவே எனக்கும் சுஜாதாவுக்குமான ஏதோ ஒன்று தொடங்கியது. யாரிடமும் யாருக்கும் ஈர்ப்பதற்கென்று எதாவது ஒன்று இருந்து தொலைக்கும் தானே..? பெங்களூருவின் நகரவாழ்வில் ஒரு உயர் மத்தியக் குடும்பத்தின் செலுத்துநராக இருக்க வாய்த்த ஒரு பட்டதாரிப் பெண்ணுக்குச் சற்றும் சம்மந்தமே இல்லாத சொற்களை எடுத்துக் கொண்டு எனது அத்யந்தத் துக்குள் நுழைய முற்பட்டார் சுஜாதா.

உலகின் அதிக பிஸ்கட்டுக்களையும் சாக்லேட்டுக்களையும் தனக்கு வழங்கியிருக்கவேண்டும் என்ற பெருங்குறையோடு பெரியவர்களின் உலகத்தினுள் நுழையும் கோபக்காரச் சிறுமி,அளவான வார்த்தை களுடன் வாழ நிர்ப்பந்திக்கப்படுகிற எத்தனையோ பெண்களுக்கு மத்தியிலிருந்து ஏதாவதொரு கேள்வியை விடாப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு உயர்த்திய கரமும் வெறித்த கண்களுமாய் வாழ்க்கையின் வழக்க
விசாரங்கள் அனைத்தையும் எள்ள கோபிக்க கனல் கொண்டு எரிக்க மாற்ற புதுப்பிக்க வேறாய்த் துவங்க சீர்படுத்த சிதைக்க எனப் பல கனல்களை ஒரு பிடியிலேற்றிப் பந்தத்தைக் கையில் கொண்டவளாய் முன்னே நடக்கும் பட்டன்கள் வைத்த சட்டை அணிந்த புதிய பெண் ஒருத்தியின் கட்டும் தளையுமற்ற விட்டேற்றி வார்த்தைகளை எழுதமுற்படும் புதிய கவி சுஜாதா.

அவர் எழுத எழுத அதனைப் பின் தொடர்ந்து ஒன்று விடாமல் வாசித்து வந்த சில பலருள் நானுமொருவன்.
தன் கவிதைகள் தொகுப்பாகிக் கொண்டிருப்பதாக என்னிடம் ஒரு தினம் அவர் அலைபேசியில் சொல்லும் போது அது எனக்குள் எந்த ஒரு உணர்வையும் ஏற்படுத்தவில்லை.அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சுஜாதாவின் எல்லாக் கவிதைகளையும் அவர் பகிர்ந்த எழுதிய பிரசுரமான எல்லாக் கவிதைகளையும் அவற்றின் தன்னந்தனிச் சூட்டுடன் உடனே வாசித்துத் தொடர்பவன் நான்.எனக்குத் தெரியாமல் ரகசியமாய் அவர் எழுதியிருந்தால் அவை மட்டுந்தான் எனக்குப் புதிய கவிதைகள்.

காலங்களைக் கடந்து வருபவன் என்ற தலைப்பில் சுஜாதாவின் 70 கவிதைகள் இந்தத் தொகுப்பில் இடம்
பெற்றிருக்கின்றன.மூழ்கிச் சாவேனெனில் நீரென்ன பாலென்ன என்ற வாக்கியத்தைத் தன் கடைசிக் குறிப்பாக இந்தத் தொகுப்பில் ஆக்கியிருக்கிறார் சுஜாதா.என்னைப் பல இரவுபகல்களில் செயல்படவிடாமற் செய்த பெருமை அவ்வரிகளுக்கு உண்டு.

சுஜாதாவின் கவிதைகள் மிக நேர்தன்மையில் இயங்குபவை.சூட்சும ஆச்சர்யங்களோ புதிர்தன்மையின் தொட்டுச் சென்று தொடர்ந்தடையும் இருள்விலக்கிக் கண்டடைதல்களோ எதுவும் அற்ற நேரான கவிதைகள்.மொழியின் சிக்கல்கள் பிரதான பூர்வ சமானங்களைக் கொண்டு சித்துவிளையாடிப் பார்க்கும் அந்தரநாட்டியம் ஏதுமற்ற இலகுவான முடிச்சுகளற்ற வார்த்தைகளாலான கவிதைகள்.இன்னும் சொல்லிச் சென்றால் ஒரு காட்சியின் குறைபாடாகத் துருத்திக் கொண்டு சண்டித்தனம் செய்தபடி நகரமறுக்கும் நெடுஞ்சாலை எருமைகள் போலவும் சரியாய் எதிரியின் மார்புக்கு நேரே உயர்த்துகையில் விடுபட
மறுக்கும் நாட்டுத் துப்பாக்கியின் டிரிக்கர் போலவும் அர்த்தமற்ற அர்த்தங்களை முன்வைத்தபடி செல்லும் நேர்கோட்டுக் கவிதைகள்.

இத்தொகுப்பின் எந்தக் கவிதையும் இலக்கியப் பூடகங்களோ முன் சத்தியங்களோ இல்லாமல் இயங்குவது
மாபெரிய ஆறுதல் மட்டுமல்ல மிகப் புதியதான வாசிப்பனுபவத்தை நிகழ்த்த வல்லதாயிருக்கின்றன. நிறையக் கவிதைகள் மிகச்சாதாரணமாய்க் கடந்து போக நிர்ப்பந்திக்கின்றன.ஒருவேளை அவை எழுதப்பட்டதற்கான குறைந்த பட்ச நியாயத்தைக் கோரத் தவறியிருக்கக் கூடும்.ஆனால் வேறு பல கவிதைகள் மிக உன்னத உயரத்தில் தங்களை இருத்திக் கொள்கின்றன.இந்தச் சமமற்ற தன்மை தான் கலையின் அழகு என்பேன்.கவிதைகள் என்றில்லை.ஒன்றுக்கொன்று சமப்பட வாய்ப்பற்ற எதைத்
தொகுத்தாலும் அவற்றின் இடைமௌனத்தைக் கீறாது கசியாது வெறும் நிசப்தமாக மட்டும் நிகழ்ந்து செல்ல வாய்ப்பே இல்லை எதைக் கோர்த்தாலும் தொகுத்தாலும் அப்படியான சமமற்ற உணர்தலை ஏற்படுத்தவே செய்யும்

ஒரு இசைப்பேழையில் வரிசையாகத் தொகுக்கப்பட்ட பாடல்கள் மனதாழத்தில் ஒரே மன நிலையில் இயங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது மாயை.சோகம் ததும்புகிற பாடல்களை வரிசையாகக் கேட்பதன் மூலமாக ஏற்படக் கூடிய உணர்தல் அவற்றைக் கேட்கத் தொடங்கும் முன் இருந்த உணர்நிலையை அதிகரித்தோ அல்லது குறைத்தோ விடக் கூடியது.ஒரே பாடலைப் பலமுறை கேட்கையில் தேங்கிவிட வாய்ப்புள்ள துக்கத்தின் ஒற்றைப்புள்ளி கூட சோகப்பாடல்களின் வரிசையைக் கேட்கையில் வாய்ப்பதில்லை.ஓவிய அடுக்குகள் சிற்பங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட சீட்டுக்கட்டுகள் என தொகுத்தலின் இயலாமையாக இந்தச் சமானம் நேர்கின்றது.சுஜாதாவின் சுமாரான கவிதைகளுக்கு முன்னும் பின்னுமான ஆகச்சிறந்த கவிதைகள் இங்கே பேச வேண்டியதாகின்றன.எந்த சமரசமும் இல்லாமல் முன்னந்தலையின் முடிக்கற்றைகளைக் கலைத்து விளையாடும் குழந்தையின்
மனவோட்டத்துடனேயே தன் கவிதைகளைச் சரமாக்கித் தருகிறார் சுஜாதா.அவை படிக்கையில் வாசகனை வெவ்வேறாய்க் கூறு போட்டு விளையாடுகின்றன.

மொழியின் சாதாரணங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வற்றைத் தன்னிஷ்டத்துக்குக் கலைத்துப் போடுவதன் மூலமாகத் தன் கவிதைக்கு நியாயமான பெரு முடிச்சை ஏற்படுத்த விழைகிறார் சுஜாதா.அது தான் அவரது கவிதாதேடலின் பெரிய நகர்தலாக மாறுகிறது.
அந்தப் பெருமுடிச்சு அகப்படும் வரைக்கும் கவிதை கண்கட்டிய கோமாளியைப் போல அலைகிறது.அந்த முடிச்சைப் பற்றியவுடன் மருந்தளிக்கப் பட்ட மனப்பிறழ்வாளனைப் போல சமர்த்தாகித் தூங்குகிறது.

தன் கைச்சித்திரங்களைக் கலைப்பதற்கென்று எந்தவித சூத்திரங்களையும் சுஜாதா வைத்திருக்கவில்லை அல்லது இப்படி சொல்லமுடியும் சூத்திரங்கள் கைவரும் வரைக்குமான காத்திருத்தல் கூட சுஜாதாவிடம் இல்லவே இல்லை.மிக மிக அமைதியான மென்மையான அதி அவசரம் அவரிடம் நேர்கிறது. மிகப்பெரிய வரிவரியாய் நீள்கிற கவிதைகளல்ல அவர் முன்வைப்பது.சிக்கனமாய்த் தன்னை எங்கேயும் எப்போதும் முடித்துக் கொள்ளத் தலைப்படும் அபாரமான வெட்டுக்கத்தி வாக்கியங்களின் தொடர்கண்ணிகள் அவை.

புதிர்விளையாட்டின் முடிச்சுக்களை
கலைத்துவிடும் ஆவலுடன்
உன்னுள் பயணிக்கத் தொடங்கிய என்னை
மலர் வனம் ஒன்றின்
நகரும் சிற்றோடையின் கரையில்
கொண்டுவந்து சேர்த்துவிட்டு
நீ மௌனிக்கிறாய்.

வெளிச்சம் என்னும் முதற்கவிதையின் ஈற்று வரிகள் இவை
.

கவிதைகளை ஆரம்பிப்பது ஒரு கலை எனலாம்.பல நல்ல கவிஞர்களின் கவிதை துவக்க வரிகள் அப்படி ஒன்றும் சிலாகிக்குமளவு இருப்பதில்லை.அதை ஒரு காரணியாக்கி நிர்பந்திக்கக் கூடாது என்பதும் நிசமே.ஆனாலும் நல்லாரம்பங்கள் ஒருகவிதை குறித்த காத்திரமான கருத்துருவாக்கத்தை துவங்கித் தருகின்றன.வாசகனை துவக்கத்திலேயே அவன் உளநோக்கைக் குவியச்செய்வதில் பெரும் பங்காற்று கின்றன.சுஜாதாவுக்கு கவிதைகளை எப்படி ஆரம்பிப்பது என மிக நன்றாகத் தெரிந்திருக்கிறது

ஈக்கள் மொய்த்திடும் உன் இறந்த புன்னகையை
என் வாசல் மாக்கோலத்தில் கிடத்திச் செல்கிறாய்


கொஞ்சம் இமைகளை இலகுவாக்கு

பகல் உதிர்க்கும் அனல் பூக்களை
மாலையாகத் தொடுத்துக் கொண்டிருக்கிறேன்
.

புழுங்கும் மௌனச்சுவற்றுக்குள்
நான் தனித்திருக்கிறேன்இவை மேற்சொன்னதற்கான சாட்சியங்கள்


சுஜாதாவின் சிறு மற்றும் குறுங்கவிதைகள் அபாரமான மனப்பிழிதலை ஏற்படுத்துகின்றன.இருளில் நடக்கையில் எதிர்பாராத தருணத்தில் பிடரியில் பலமாக தாக்கப்படுவதைப் போன்ற வலியை அவை தந்துசெல்கின்றன.நாலைந்து வரிகளுக்குள் அதுகாறும் வாழ்வியலில் பேசியபடியே தேர்ந்து கொண்டிருக்கும் மொழியின் சாதாரணங்களிலிருந்து விட்டு விலகி அனிச்சையான அபூர்வமான பிரயோகங்களினூடாக வந்து விழும் கவிதைகளாக அவை நேர்கின்றன.சுஜாதாவின் வருகை
தமிழ்க்கவிதையின் நெடிய பக்கங்களில் மாற்றேதுமின்றி அவருக்கு வழங்கப்பட்டே ஆக வேண்டிய தனியிடம் ஒன்றைப் பெற்றுத் தரக் கூடியவையாக குறுங்கவிதைகள் அமைந்திருக்கின்றன.,


நீரில் குறிபார்த்து
வான்மிதக்கும் பறவையை
வீழ்த்தும் கலையை
எங்கு கற்றாய்


இந்தக் கவிதை ஏற்படுத்திச் செல்லும் சித்திரத்திலிருந்து வழியும் வர்ணங்கள் வாழ்காலந்தாண்டும் நீளப்பெரியவை.

சின்னஞ்சிறு பறவையின்
அழகிய நீலவானம்
சட்டென்று காணவில்லை
அதை
நிலா தின்றுவிட்டது


பறவை வானம் நிலா நீலம் இந்தச்சொற்களைக் கொண்டு இதுவரைக்கும் எழுதப்பட்ட கவிதைகளின் தலைமைக் கவிதை இது.

ஜ்வாலைகளில் நழுவும் பனி என்றொரு கவிதை...

சதுரங்கத்தில் வெட்டுண்ட ராணியை மீட்டெடுக்க
சிப்பாய்களை முன் நகர்த்துகிறாய்
மீண்டு வரும் ராணி
சிப்பாய்களின் சாயலோடு இருக்கிறாள்

தமிழின் ஆகச்சிறந்த கவிதைகளைத் தொகுக்கையில் மறவாமல் இந்தக் கவிதையை தேர்வெடுக்க வேண்டும்.இல்லாவிடில் அது ஆகச்சிறந்ததாகாது.

சுஜாதா செல்வராஜின் முதல் கவிதைத் தொகுதி இது என்ற உணர்வே பெரும்பாலான பக்கங்களில் எழவில்லை.தேர்ந்த கவிசொல்லியின் சொற்கள் தான் பக்கங்களெங்கும் விரவிக் கிடக்கின்றன.சுஜாதா எதிர்காலத்தில் பல ஆகச்சிறந்த கவிதைகளைப் படைக்கக் கூடும் என்பதற்கான சர்வசாட்சியமே இக்கவிதைகள்.அதற்கான எல்லா அசௌகரியங்களையும் மனப்பிறழ்தல்களையும் மகாவாழ்வு அவருக்கு வழங்கட்டும் என்று ஆசீர்வதித்து வைக்கிறேன்.

மனுஷ்யபுத்திரனின் சாயல் சில கவிதைகளில் தென்படுகின்றது,இது தவிர்த்தே ஆக வேண்டியது. அடுத்ததாய் குறை சொல்வதற்குப் பார்த்தால் பூக்காடா தீக்காடா என்றெல்லாம் எழுதுவது.சொற்கள் அபினியை விடவும் மயக்கத்தை செய்துகாட்டுபவை.அவற்றின் பிடியில் அகப்படுவது நல்லதற்கல்ல. சுஜாதா இவற்றைத் தவிர்க்க வேண்டும்.மேலும் சொல்வதானால் யாரென்ன சொன்னாலும் தன் பாடலைத் தானாய் முணுமுணுத்துக் கொண்டபடி தன் சாலையில் தானாய் நடக்க விழையும் தன்னந்தனி சுஜாதாவுக்கு மனம் நிறைவான வாழ்த்துதல்களை மட்டும் சொல்லலாம்.குறையொன்றுமில்லை


காலங்களைக் கடந்து வருபவன்////புது எழுத்து பதிப்பக வெளியீடு////விலை ரூ 90

(அளவே இல்லாத)
ப்ரியத்துடன்

ஆத்மார்த்தி