புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

காத்திருக்கும் சொற்கள் 3

புத்தகத் திருவிழா சென்னை 2015

புத்தகத் திருவிழாவின் கலந்துகட்டித் தெருக்களில் அலைந்து அலைந்து எந்தெந்த ஸ்டால் எங்கெங்கே இருக்கின்றது எனத் தெரியாமல் முக்காலே மூணுவாசிக் கடைகளை மட்டும் சேவித்துவிட்டுத் திரும்பினேன்.

புத்தகத் திருவிழா அமைப்பாளர்களுக்கு சில யோசனைகள்.

(இனி வரும் காலத்திலாவது நடைமுறைப் படுத்தினால் நலம்.)

1பொத்தாம் பொதுவாக எல்லா கடைகளையும் லாட் முறையில் ஒதுக்காதீர்கள்.நடந்தே சாக வேண்டியிருக்கிறது.


தமிழ்ப் பதிப்பகங்களின் ஸ்டால்கள்
மீடியா துறை சார்ந்த ஸ்டால்கள்(பத்திரிகைகள் டீவீ இன்னபிற)
ஆங்கிலப் புத்தகங்கள்
குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கான ஸ்டால்கள்
கல்வி சார்ந்த புத்தகங்களுக்கான ஸ்டால்கள்
புத்தகக் கடைகளுக்கான ஸ்டால்கள்


கலவை சாதம் மாதிரி எல்லாவற்றையும் ஒரே பாத்திரத்தில் போட்டு கலந்து கொடுமைப் படுத்துவதை நிறுத்திவிட்டு இப்படி ஆறு பிரிவுகளில் கடைகளை அமைத்தால் எல்லாரும் எல்லாக் கடைகளையும் பார்த்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இராது.ஒட்டுமொத்தக் கூட்டமும் கிரிவலம் வருகிறாற்போல எல்லாத் தெருக்களிலும் அலைந்து தீர வேண்டியிராது.சீடீ விற்கிறவர்கள் யோகா சாமியாரின் கடை விஞ்ஞான உபகரணக் கடை இங்கிலீஷ் புத்தகங்கள் கொட்டி வைத்திருக்கும் மூர்மார்க்கெட் கடை என எல்லாவற்றுக்கும் நடுவே இலக்கிய பொஸ்தக விற்பனையாளர்கள் சிலர் மாட்டிக்கொண்டு கழுத்து பிதுங்குகிறார்கள். ஆவன செய்தால் நல்லது.


2.அதெல்லாம் முடியாது.இதெல்லாம் ரூல்ஸாக்கும் என மீசை முறுக்கும் பட்சத்தில் மேற் சொன்ன உபபிரிவாக்கத்துடன் கூடிய கடைகளின் பட்டியலையாவது பேப்பரில் அச்சடித்துத் தரலாம்.எல்லாக் கடைகளின் பெயர்களையும் ஆங்கிலத்தில் அடித்துத் தருகிற விகடனின் லிஸ்டிலேயே சில கடைகளைக் கண்டறிவது கஷ்டமாயிருக்கிறது,

3.ஏற்கனவே பலமுறை சொன்னது தான்.தரையில் இருக்கக் கூடிய ஏற்றத் தாழ்வுகளை செப்பனிடுவது என்பது அதிகட்டாய அவசிய அவசரம்.கிழக்கு அரங்கத்தைத் தாண்டி காலச்சுவடு அரங்கம் இருக்கிறது. அங்கே பில் செலுத்துமிடத்துக்குப் பின்னால் செயற்கைத் தரையின் பிளவுகளை ஸெல்லோ டேப் போட்டு ஒட்டிக் கொண்டிருந்தார்கள்.ஒட்டி விட்டு அந்த பணியாளர் நகரும் வரை நான் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.இங்கிலீஷ் படத்தில் வருகிற க்ராஃபிக்ஸ் காட்ச போல சரியாக ஒன்றே முக்கால் நிமிடத்தில் பொளக் என்று பிளந்து கொண்டது மறுபடியும். சனிக்கிழமை சாயந்திரம் வேறொரு வீதியில் அவசர அவசரமாய் நடந்துகொண்டிருந்த ஒரு மூக்கு மாமா தரையில் ரெக்ஸீன் ஷீட் பிளவைக் கவனிக்காமல் காலை விட்டதில் லேசாக ஏர்வாக் செய்து அப் ஆகி நேரே நந்தனம் சிக்னலில் காத்திருந்த ஆட்டோவின் உள்ளே லேண்ட் ஆனாராம். பார்த்தவர்கள் சொல்லிக் கொண்டார்கள்.

.4.கண்டெய்னரில் திருட்டுத் தனமாய் நம் நாட்டுக்குள் நுழையும் அயல் நாட்டுப் பழைய புஸ்தகங்களை விற்பவர்களுக்கு இடம் தந்து அவர்கள் வாழ்வில் குத்துவிளக்கு ஏற்றி வைக்கும் பபாஸிஸ்வாமிகள் தமிழ் பழைய புத்தக நேர்மையாளர்கள் யாருக்கேனும் இடம் தந்து குறைந்த பட்சம் ஒரு குண்டு பல்பாவது ஏற்றித் தந்தால் நல்லது.சாலச்சுகம்5.நிறைய புஸ்தகங்களை வாங்கி  தூக்க முடியாமல் தூக்கிச் செல்கின்றனர்.புஸ்தகமும் போதைதான் என்பதை உணர்ந்து பப் மற்றும் பார்களில் அளவு மீறிக் குடித்து விட்டு அலம்பல் செய்பவர்களை அப்புறப் படுத்துவதற்கென்றே வைத்திருக்கும் பவுன்ஸர்களைப் போல தூக்க முடியாமல் தூக்கிச் சிரமப் படும் புஸ்தகபோதையாளர்களை அலேக்காக தூக்கிச் சென்று வெளியே இறக்கிவிட்டாலும் சரி.முடியாத பட்சத்தில் குறைந்த பட்சம் புஸ்தகங்களையாவது வாசல் வரைக்கும் கொணர்ந்து கொடுத்தால் நல்லது நடக்கும். இதெல்லாம் நடக்காது என்பவர்கள்  தூக்குச் சுமப்பவர்களுக்கு ஏதுவாக பிக் பஸார் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் போன்ற தியாகச்செம்மல் கடைகளில் வைத்திருப்பது போன்ற ட்ராலிகளை ஏற்படுத்தித் தந்தால் நிறைய பேரின் அவஸ்தைகள் புன்னகையாய் மாறும்.


6.பொதுவான சுமைப் பைகள் பொதுவான நோட்டீஸ்கள் பொதுவான பில்லிங் என எவ்வளவோ செய்யலாம்.பபாஸிக் காரர்கள் யோசித்தால் நலம்.


ஆசீர்வாதம்.


அன்போடு
ஆத்மார்த்தி

12.01.2015