புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

இருப்பது கனவு 1

இருப்பது கனவு 1

சிறுபுள்ளி பெருங்கோலம்

ண்பர் ஒருவரின் பெயர் ********அவர் ஒரு நுகர்வோர் பொருள் நிறுவனத்தின் இடைவியாபாரி.அவரது அலுவலகமும் பொருளகமும் இணைந்திருக்கும்.அட்டைப்பெட்டிகள் வந்தும் போயும் இருக்கக் கூடிய இடம்.மிகவும் சிறிய ஆனால் நேர்த்தியான அலுவலக அறை அவருடையது.சமீபத்தில் என் ஆடாத நடனம் புத்தகத்தைப் படித்துவிட்டு ஒரு இரவு நேரம் சந்திக்கலாமா என அழைத்தார்.நாலைந்து கதைகளைப் பற்றி நுட்பமான அவரது பார்வைகளைப் பகிர்ந்துகொண்டார்.பரம திருப்தியுடன் ஆளுக்கொரு குவளை தேநீர் அருந்தினோம்.ஊழியர்கள் யாரும் இல்லை.ஒரே ஒரு உதவியாளர் மட்டும் இருந்தார்.சரி கிளம்பலாம் என்று பார்க்கும் போது பின் சபுற சுவரில் ஒரு பலகை மீது ஒரு ட்ராப் பாக்ஸ் இருந்தது.அதனை உற்றுப் பார்த்தவன் இது என்ன பெட்டி ஸார்..?எனக் கேட்டேன்.மிக மெலிதான குரலில் "என்னை சந்திக்க வரும் ஒவ்வொருவரிடமும் ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்து பூர்த்தி செய்யச் சொல்வேன்.இரண்டு கேள்விகள் மட்டுமே உள்ள சீட்டு அது.நீங்களும் பூர்த்தி செய்யுங்களேன் என்று ஒரு சீட்டைத் தந்தார்.அதை வாங்கிப் பார்த்தேன்.

1.உங்களிடம் வெகு நாட்களாக நீங்கள் வெறுக்கும் குணம் எது..?
2.சமீபத்தில் நீங்கள் செய்த நல்ல காரியம் எது.?

ரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்வதற்கான வெற்றிடம் மட்டுந்தான் இருந்தது.பேர் முகவரி போன் நம்பர் எதுவும் கேட்கப் படவில்லை.நானும் எழுதி அந்தப் பெட்டியில் போட்டுவிட்டு வந்தேன்.இந்த இரண்டு கேள்விகளுக்கு தான் சந்திக்கிற அத்தனை மனிதர்களிடமிருந்தும் தொடர்ந்து பதில் பெற்றுக் கொண்டிருக்கும் என் நண்பரை மனதார பாராட்டினேன்.ஒரு மனிதன் தன்னிடமே வெறுக்கும் குணங்களைத் தொகுக்கையில் தன்னிடமிருந்து அதை நீக்கிக் கொள்வதற்கான ஆரம்பப் புள்ளியாக அது இருக்கு மல்லவா..? அதை விட சமீபத்தில் செய்த நல்ல காரியத்தை அறிந்து தொகுக்கையில் அவற்றில் தன் கைவருவனவற்றைத் தானும் கடைப்பிடிக்கலாம் அல்லவா..?ஒரு மூலையில் தான் தேன் கூடு இருக்கிறது. ஆனால் தேன் சேகரத்தில் ஒச்சமிருப்பதில்லை.இது போன்ற பெட்டிகளை இன்னும் பல இடங்களில் வைக்கலாம் எனத் தோன்றுகிறது.பெரிய மாற்றங்கள் பெரும் சொற்களுக்குப் பின்னால் நேர்ந்தாகவேண்டும் என எந்தக் கட்டாயமும் இல்லை.பெருங்கோலத்தைத் துவக்கச் சின்னதோர் புள்ளி போதும் தானே..?

னேகன் பார்த்தேன்.தனுஷ் துள்ளுவதோ இளமை படத்திலேயே எதோ ஒன்றை நிகழ்த்தப் போகும் அசரீரி கேட்டது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.காதல் கொண்டேன் புதுப்பேட்டை மயக்கம் என்ன 3 ஆடுகளம் பொல்லாதவன் என தனுஷ் ஏறிக்கொண்டிருக்கும் படிகள் பலமானவை.காற்றடிக்குச் சாயும் மூங்கில் அல்ல தனுஷ் என்பதை இன்னுமொரு முறை நிரூபித்திருக்கும் படம் அனேகன்.அதன் முதல் எபிசோடாக விரியும் பர்மியக் கனவு அழகான பதிவு.தமிழில் பதியப்பட்ட முன் கதைகளிலேயே அழகான ஆர்ப்பாட்டமில்லாத முன் கதை எனலாம்.இந்தப் படத்தில் பின்னணியில் உழைத்திருக்கும் அனைத்துக் கரங்களுமே முத்தங்களுக் குரியவை தான்.அதிகதிக அழகி அமிரா தஸ்தூர் பெரிசாக ஒரு ஆட்டம் வருவார் என நம்பலாம்.கார்த்திக் மறுபடியும் ஒரு நல்ல ஆரம்பம்.பார்க்கலாம்.நல்லதோர் மனமகிழ் சித்திரம்.

ரண்டு கன்னட சேதிகள்.லூசியா திரைப்படத்தை ஆறாவது முறையாகப் பார்த்தேன்.ஒவ்வொரு முறையும் இந்தப் படத்தின் மீதான பிரமிப்பு கூடிக் கொண்டே போவது ஆச்சர்யம்.ஒரு படத்தை மிக முழுவதுமாக ஒரே முறையில் பார்த்து அதிலிருந்து திரும்பி வந்துவிடுவதற்கான சாத்தியங்களையெலாம் தகர்க்கிறது லூசியா.இந்தப் படத்தின் உருவாக்கத்தில் துவங்குகிற வித்யாசம் படத்தின் எண்ட் கார்ட் வரை தொடர்வது சிறப்பு. சதீஷ் நினாசம் ஷ்ருதி ஹரிஹரன் மட்டுமல்ல.உப கதாபாத்திரங்களும் கூட மனதை நிறைக்கின்றன.உளவியல் சார்பான திரைப்பட வகைமைகள் பரீட்சார்த்தமாக அவ்வப்பொழுது உருவாக்கப் படுவது கலையின் செழுமைக்கு உதவும் என்பதைத் தாண்டி அலுப்பற்ற அனுபவத்தை நேர்த்தும் என்ற குறைந்த பட்சத் திருப்தி உறுதி.அந்த வகையில் கிம் கி டுக்கின் ட்ரீம்ஸ், இன்செப்ஷன் ஆகிய சர்வதேச முயல்வுகளின் வரிசையில் லூசியா ஒரு இந்திய காலர் தூக்கல்.இதனை இயக்கி இருப்பவர் பவன் குமார்.

ஹ்ருதயா ஹ்ருதயா என்றொரு கன்னடப் படம்.இது வெளியான ஆண்டு 1999.திடீரென்று ஒரு தினம் என் வீட்டு டீவீயில் இந்தப் படத்தின் ஒரு பாடல் காணொளியைக் காண நேர்ந்தது.மிக வித்யாசமான ஆண் குரலும் சித்ராவும் இணைந்து பாடிய டூயட் பாடல் அது.நடித்திருந்தவர் சிவராஜ்குமார் மற்றும் அனு பிரபாகர்.இசை அம்சலேகா.அந்தப் பாடலின் முதல்வரியைக் கஷ்டப்பட்டு மனனம் செய்து ஒருவழியாக பெங்களூரில் இருக்கும் நண்பனொருவனின் புண்ணியத்தில் அதன் சீடீயை வரவழைத்து அடிக்கடி கேட்டிருக்கிறேன்.பிறகு லௌகீக வாழ்வின் பேரற்ற அனர்த்தங்களில் ஒரு பகுதியாக அந்தப் பாடலுக்கும் எனக்குமான காந்தர்வ பந்தம் உடைபட்டுப் போனது.அதனை முற்றிலுமாக மறந்து போயிருந்தவன் திடீரென்று பத்து நாட்களுக்கு முன்னால் என் கனவில் அந்தப் பாடல் ஒலித்து எழுந்தேன்.மீண்டும் தீவிரமாய் இணையமுடுக்குகளில் தேடி அதே அந்தப் பாடலை மீண்டுமொரு தரம் தழுவிய பின்பே சரியானேன்.இதில் சொல்லவேண்டிய விசேஷா எதுவெனில் நடித்திருக்கும் தன் மகனுக்காக இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் கன்னட உலகின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரே ஒரு டாக்டர்.ராஜ்குமார்.மனமயக்கும் மந்திரக் குரல்.இந்தப் பாடலை நீங்களும் கேட்பதற்கு அல்லது பார்ப்பதற்கு இந்தச் சுட்டி உங்களுக்கு உதவும்.

https://www.youtube.com/watch?v=G8UI02ROvIg

ரு மாதத்துக்கும் மேலான காலத்தை விழுங்கிக் கொண்டது ஒரே ஒரு செயல்.என்னிடம் இருக்கும் புத்தகங்களை  கவிதை கட்டுரை நாவல் சிறுகதை சினிமா என்று பிரிவு வாரியாகத் தனித் தனியே அடுக்கியாயிற்று.கவிதைகளைப் பதிப்பக வாரியாக இருத்தியாயிற்று.இனி முழுவதுமாக பட்டியலிட்டு வெளியே நிற்கும் புத்தகங்களை கண்டுபிடித்து மீட்க வேண்டும்.சுகமான சுமை.இந்த முயல்வின் நடுவே எப்போதோ வாங்கிவைத்து மறந்து போன சில அபூர்வங்கள் கைக்குச் சிக்கியது நற்சேதி.அவற்றில் தலையாயது கி.வா.ஜ தொகுத்த தமிழ்ப்பழமொழிகள்.அத்தனை குண்டான புஸ்தகம் முழுமையும் பழமொழிகள்.21000க்கு மேல்.முன் பழைய காலத்தில் தினப்படி வாழ்வில் புழக்கத்தில் இருந்த இவற்றை இப்போது வாசிக்கையில் காலத்தின் நெடி அடிக்கிறது.வெறும் சொல்லாடல்கள் அல்ல.இவற்றின் பின்னே இருக்கக் கூடிய மறைபொருட்களைத் தேடிக் கோர்த்தோமேயானால் இவை பெரும் செல்வம்.

ந்தியா டுடே தமிழ் இதழின் கடைசி இதழை இப்போது தான் வாங்கினேன்.பல ஆண்டுகாலமாக இந்தியா டுடே தமிழில் ஏற்படுத்திய அதிர்வுகள் குறிப்பிடத் தக்கவை.குறிப்பாக அதன் இலக்கிய மலர்கள். மாலன் வாசந்தி போன்றோரின் ஆசிரியத்துவத்தில் மிகச் சிறப்பான இலக்கிய மலர்களை வருடந்தோறும் பதிப்பித்தது.தேசிய அளவிலான பல நிகழ்வுகளை தமிழில் ஆணித்தரமாகப் பதிவு செய்ததில் டுடேவின் பங்கு அளப்பறியது.கலை இலக்கியம் ரசனை சினிமா ஆகியவற்றில் இந்தியாடுடே ஒரு பாசாங்கற்ற நண்பனாகத் திகழ்ந்தது என்பேன்.ஒரு அந்தரங்கமான நட்பை இழந்துபோகிற தருணத்தின் அதே வலியை இங்கே உணர்ந்து பதிகிறேன்.

கநாழிகை பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் "வற்றாநதி" என்ற பெயரிலான சிறுகதைத் தொகுப்பை சமீபத்தில் படிக்க நேரிட்டது.நண்பர்கள் கூட்டத்தில் கைகுலுக்கிப் பெயரை சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டு ஷோல்டர் பேகில் இருந்து ஒரு புத்தகத்தை நீட்டினார் கார்த்திக் புகழேந்தி.நண்பர்கள் ட்ராக்டர் முருகனும் கடங்கநேரியானும் உடனிருந்தார்கள்.அவர்கள் மூன்று பேரும் பேசிக்கொண்டிருகையிலேயே சற்றுத் தள்ளினாற்போல் நின்று குத்துமதிப்பாக அந்தப் புத்தகத்தின் ஒரு பக்கத்தை பிரித்தேன். "வணக்கத்திற்குரிய.." என்ற தலைப்பிலான கதை.மிக நேரடியான எளிய கதை.என்றாலும் கார்த்திக் புகழேந்தி அந்தக் கதையைச் செலுத்திக் கொண்டு போகும் விதமும் கதை பூர்த்தியாகும் இடமும் அலாதியானவை.கார்த்திக் புகழேந்தி மிகவும் இளைஞர்.எழுத்து கை கூடி வருகிறது.முதல் தொகுப்பில் 22 சின்னஞ்சிறு கதைகளுடன் கண்களில் நிரம்பித் ததும்பும் நம்பிக்கையோடு தெரிந்தார்.இன்னும் நிறைவாக எழுதுவார் என்ற நம்பகம் முதல் தொகுப்பின் பல கதைகளில் தொனிக்கின்றன.இன்னமும் கதையியல் குறித்தும் எழுத்து மீதான கவனம் குறித்தும் பின் புல உழைப்பை விடாது செய்வாரே ஆனால் எதிர்காலத்தில் மாயவித்தைகள் புரியக்கூடும்.வெல்கம் கார்த்திக்.

பிரக்ஞை பதிப்பகத்தின் வெளியீடாக லதா ராமகிருஷ்ணன் எழுதிய சத்யஜித் ரே திரைமொழியும் கதைக் களமும் என்னும் கைக்கடக்கமான ஆனால் நேர்த்தியான புத்தகத்தை வாசித்தேன்.சினிமாக் காதலர்களுக்கும் ரே ரசிகர்களுக்கும் முக்கியமான புத்தகம்.கடும் உழைப்பின் பின்னதான உருவாக்கம் இந்த நூல்.தவறவிடக் கூடாதது.

டெல்லியில் கெஜ்ரிவால் கட்சி 67 இடங்களை வெற்றி பெற்றிருப்பது குறித்து நண்பர் செல்வத்துடன் பேசிக்கொண்டிருந்த போது சொன்னேன்.ஒரு வகையில் தொண்ணூறு சதவீதங்களைத் தாண்டிய மெஜாரிட்டி என்பது பெரும் சுமை போன்றது.மிக முக்கியமான தருணங்களில் அமானுஷ்யத்தை ஏற்படுத்தி விடும் ஒற்றைத் தன்மை கொண்டது" என்றேன்.வீட்டுக்குப் போன பிற்பாடு செல்வம் வாட்ஸப்பில் ஒரு சின்ன ஸ்மைலியுடன் பதிலனுப்பி இருந்தார்."ஆம் ஆத்மிக்கு மிக நீண்ட தேனிலவுக் காலத்தை வழங்கி இருக்கக் கூடாது.டெல்லி மக்கள்"என.எனக்கும் அது தான் தோன்றியது.

சமீபத்தில் பிடித்த கவிதை

எப்படி

மனசு தொடுகிறதா
விரல்கள் தொடுகிறதா
அறிந்துகொள்ளாமல்
நீங்கள் எப்படித் தொடமுடியும்
ஒரு பூவை

முத்துவேல்
முந்திரிக் காட்டு நட்சத்திரம்

பட்டாம்பூச்சி பதிப்பகம்
விலை ரூ 60


நினைத்தபோது
தொடரலாம்

ஆத்மார்த்தி


Last Updated (Sunday, 15 February 2015 12:35)