புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

இருப்பது கனவு 3

இருப்பது கனவு 3
இரண்டு மலையாளப்படங்கள்


நேற்றைக்கு ஒரு மலையாளப் படம் பார்த்தேன்.அயோபிண்டே புஸ்தகம் என்ற பெயரில் அமல் நீரத் ஒளிப்பதிவு செய்து இயக்கியது.பீரியட் படங்கள் என்ற பெயரில் சமீபத்தில் பல பார்வைச் சித்ர வதை களைத் தாங்கிய பின் பெரும் ஆறுதல் இந்தப் படம்.1900 ஆவது ஆண்டில் துவங்கி 1975வாக்கில் நிறையும் படம்.கேரளத்தின் மூணார் பகுதியில் டீ எஸ்டேட் ஒன்று தான் கதைக்களம்.மலைச் செல்வந்தத்தை வெள்ளைக் காரர்கள் டீ என்னும் தேவபானத்துக்காகக் கைவைத்ததும் அதன் பின்னே அயோப் என்னும் மனிதனும் அவனது மூன்று மகன்களும் வாழும் வாழ்வின் ஒளிவிவரணை. ஷேக்ஸ்பியரின் கிங் லியர் கதையின் அடிமுடிச்சை மலையாள நிலத்துக்கு மாற்றி அபாரப் படுத்தி இருக்கிறார்கள்.சமீபத்தில் உதித்த நட்சத்திரங்களில் ஃபகத் ஃபாஸில் கேரளத்தின் அடுத்த செல்லுலாய்ட் ராஜாக்களில் ஒருவராக வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.அவரது சமீபத்திய வெற்றி வரிசையில் முக்கியப் படம் அயோபிண்ட புஸ்தகம்.தொழில் நுட்ப ரீதியில் இந்தப் படத்தின் பின்புல உழைப்பு கண்விரியச் செய்கிறது ஒரு புறம் என்றால் ஃபகத் லால் ஜயசூர்யா வினாயகன் செம்பியன் லேனா ரீனு மாத்யூஸ் சரிதா சூர்ஜித் இஷா ஷர்வானி டீஜீ ரவி என இதில் நடித்திருக்கும் அனைவருமே கச்சிதாற்புதமாக தங்கள் பாத்திரங்களை வெளிப்படுத்தி இருப்பது இன்னும் சிறப்பு.எல்லாருக்கும் மேலே சின்னஞ்சிறு பாத்திரங்கள் போலத் தோன்றினாலும் ஜான் விஜயும் பத்மப்ரியாவும் மிரட்டுகின்றனர்.மறக்க முடியாத மூணாரின் அழகு இன்னொரு வரம்.அவசியம் காண வேண்டியது.

ன்னொரு மலையாளப் படம் பற்றி அப்புறம் பேசலாம்.முரசு டீவீயில் வரிசை கட்டி ஒளிபரப்பப் படும் பழைய பாடல்களைப் பார்க்கக் கொடுத்துவைக்காதவர்கள் பாவம்.சாப்பிடும் போதெல்லாம் முரசு டீவீயை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை சமீபத்திய ஆகமமாகக் கொண்டிருக்கிறேன்.இப்படித் தான் சில தினங்களுக்கு முன் டி.ஆர் பாப்பா இசையில் ஜெய்சங்கரின் முதல் படமான இரவும் பகலும் படத்திலிருந்து கூத்தாடும் கொண்டையிலே என்னும் பாடலைப் பார்க்க வாய்த்தது.சீர்காழி கோவிந்தராஜனும் சுசீலாவும் பாடிய அந்தப் பாடலை மறுபடி மறுபடி கேட்டேன்.அபூர்வமான ஜிப்ஸி வகைப் பாடல்.ஒவ்வொரு வரியின் இறுதியும் தனக்குள் சுருண்டு துவங்கும் இவ்வகைப் பாடல்கள் வெகு சொற்பமே.இத்தனைக்கும் இந்தப் படம் வெளியாவதற்கு ஏழெட்டு வருடங்கள் முன்னால் வெளியான மரகதம் படத்தின் பெருவெற்றிப் பாடலான குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே பாடலிசையின் சாயலை இப்பாடலில் உணரமுடிந்தாலும் இரண்டும் வெவ்வேறு என்பதற்கான சாட்சியமும் கூத்தாடும் கொண்டையிலே பாடலில் நிரம்பித் ததும்பும் ஜிப்ஸித்துவம் தான்.இன்னுமோர் வியப்பு சீர்காழியின் குரல் மேல் ஸ்தாயியில் சிலாக்கியமாக இயங்கக் கூடியது.மென் சோகம் குழையும் குரலல்ல அவருடையது.கனசாரீரம்.அந்தக் குரல் இந்தப் பாடலை நம் ஆன்மாவுக்கு அருகாமையில் ஒலிக்கச் செய்கிறது.வாழ்க சீர்காழி.
ந்த வாரம் பழைய புத்தகக் கடையில் பல பைண்டட் புஸ்தகங்கள் கிடைத்தன.பீவீ.ராமகிருஷ்ணன் என் பதின் வயதுகளில் நான் விரும்பிப் படித்த எழுத்தாளர். அவருடைய புகழ்காலத்தில் பல்லாயிரக்கணக்கான வாசக வாசகிகளை அவர் பெற்றிருந்தார்.அவரது புகழ்பெற்ற நாவல் டைவர்ஸ்.அப்புறம் புதருக்குப் பின்னே என்றொரு சின்னஞ்சிறிய நாவல் அப்போதைய மாலைமதி மாத நாவலில் வெளியானது.அ முதல் ப வரை என்றொரு கதை இன்னும் சுவையானது.மறக்க முடியாத பீவீ.ஆர் எழுதிய சில தொடர்கள் கிடைத்தன.எப்போதாவது பயணங்களில் படிக்கலாம் என்று ஒளித்து வைத்தேன்.எண்பதுகளில் வெளியான மிகச்சிறந்த சிறுகதைகளின் சேகரம் கிட்டத் தட்ட ஆறு பைண்டட் வால்யூம்கள் கிடைத்தன.யானைப்பசிக்கு காலப்பொறி.விக்ரமாதித்யன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு திரிபு அன்னம் வெளியீடாக வந்தது.அதை இப்போது யாராவது மறுபதிப்புச் செய்தால் நல்லது.தமிழின் மிக முக்கியமான சிறுகதைத் தொகுதி திரிபு..கல்யாண்ஜி அதற்கு எழுதியிருக்கும் முன்னுரை நானறிந்த சிறப்பான முன்னுரைகளில் ஒன்று.

ர்,சி.சக்தி காலமானார்.அவரது சிறை படம் தான் நான் பார்த்த அவரது முதல் படம்.மிகக் குறைவான படங்களே எடுத்திருந்தாலும் கூட வெகு நிறைவான பங்கேற்பு சக்தியினுடையது.அவருடைய களங்கள் வெகு நம்பகமானவை.அவரது மனிதர்கள் சாமான்யர்கள்.அவரது கதைகள் நிஜத்தோடு குழைந்தவை.அவரது தர்மயுத்தம் மனிதரில் இத்தனை நிறங்களா உணர்ச்சிகள் கூட்டுப்புழுக்கள் சிறை சந்தோஷக் கனவுகள் ஸ்பரிஸம் என எல்லாப் படங்களுமே மிக முக்கியமானவை.அதிலும் கூட்டுப் புழுக்கள் ரகுவரனின் வாழ்வில் மிக முக்கியமான வெகு அழகான படம்..கடைசிவரை சினிமாவை நேசிக்க வாய்த்த சில மனிதர்களுள் ஒருவர் சக்தி.இலக்கியத்தை-எழுதப்பட்ட கதைகளைப் படமாக்க வேண்டும் என்கிற ஆவலாதி வெகு சில சினிமாக் கலைஞர்களிடம் மட்டுமே இருக்கும் நற்குணம்.சக்தி அவர்களுள் ஒருவர்.நடிகர்களுக்காகக் கதை செய்வதில் சற்றும் நம்பிக்கையில்லாத மனிதர் சக்தி.சமரசமற்ற படைப்பாளி.குட்பை சக்தி.

ந்த அத்தியாயத்திற்கான பாடல் https://www.youtube.com/watch?v=ttVQA_yVoXg நிழல் தேடும் நெஞ்சங்கள் படத்திற்காக இளையராஜா இசையில் தீபன் சக்கரவர்த்தியும் எஸ்.ஜானகியும் பாடிய இந்தப் பாடலை ஒருதரம் கேளுங்கள்.எண்பதுகளின் துவக்கத்தில் இளையராஜாவின் பல பாடல்கள் இன்றைக்கு வேறொன்றாக மிளிர்வதை உணரலாம்.மென் சோகத்தில் துவங்கி என் பாதையில் ஒரு தேவதை வந்து நிரந்தர வரம் தரும் நேரம்...நீதானா நீதானா...இது நீதானா நீதானா என்று தீபனின் குரல் விளையாடுவதை உயிராழத்தில் உணரலாம்.இந்த வகையான டூயட்களை இளையராஜா தன்  உற்சாக காலத்தின் மாற்றுப் பாடல்வகைமையாகத் தொடர்ந்து முயன்றிருக்கிறார்.இந்தப் பாடலில் இன்னொரு அபூர்வம் என்னவென்றால் தீபனின் குரல் சோகம் ததும்பும்.ஜானகியின் குரல் சந்தோஷம் பிரவகிக்கும். இரண்டும் அடுத்தடுத்து கலந்து வருகையில் சொற்களிலடங்காத உப்பினிப்பு உள்ளே படரும்.இதே படத்தில் ஒரு கிளப் பாடல் அந்தக் காலத்தில் அனைவரின் விருப்பப் பாடலாக இருந்தது.எஸ்.பீ.பியும் ஜானகியும் பாடும் பூக்கள் சிந்துங்கள் கொஞ்சும் தேவ சொந்தங்கள் பாடல் தான் அது. https://www.youtube.com/watch?v=Kr6IKp5viq8 அத்தனை இளைய விஜயசாந்தி கட்சிகளுக்கு அப்பாற்பட்ட துவக்க காலப் பேரழகுடன் தூக்கம் கெடுப்பார்.கேட்டாலே இனிக்கும்.
ரி இப்போது இன்னுமோர் மலையாளப் படம்.சமீபத்தில் பார்த்த டமார் பதார் என்னும் படம்.திலீஷ் நாயர் இயக்கிய முதல் படம்.இது மூன்று மனிதர்களின் தனிக்கதைகளின் ஒட்டுப்பதாகை.மூவருடைய வாழ்வும் ஒருங்கிணையும் வரை முதற்பாகத்தில் தனித் தனியே மூன்று கதைகள் சொல்லப்படும்.அப்புறம் அவர்களின் கதைகள் கலக்கும்.பிறகு இரண்டாம் பாகத்தில் என்னவாகிறது என்ற மிச்சக்கதை.இரண்டு தெருக்கலைஞர் களின் கதையைப் பேசுவதாகத் தொடங்குகிறது படம்.ஒருவன் பெயர் ஜம்பர் தம்பி (பாபுராஜ்)தமிழக எல்லையில் எந்த விதமான அடையாளச் சான்றும் இல்லாத ஒரு குடும்பம் அவனுடையது.மனைவி ஒரு மகன்.ஒருசில மாதங்களுக்கு ஒருமுறை சர்க்கஸ் கம்பெனியில் விடுப்பெடுத்துக் கொண்டு வீடுமீள்பவன் தம்பி.மறுபடி சர்க்கஸ் சென்றால் திரும்ப மாதங்கள் ஆகும்.இது அவன் முன்வினை. சர்க்கஸில் கனமான இரும்புக் கம்பியைத் தன் உடலால் வளைப்பது அவன் வித்தை.இன்னொருவன் ட்யூப் லைட் மணி.அவனொரு தனிநபர்சேனை.தெருக்களில் துணி விரித்து ஃப்யூஸாய்ப் போன ட்யூப் லைட்டுக்களைத் தன் உடலில் வரிசையாக உடைத்து வியப்பை வரவழைப்பவன்.,அவனொரு அனாதை.இது அவன் கதை.ஒரு சூழலில் அவன் சந்திக்கிற விலைக்காதலி வலசம்மாவுடன் அவனுக்கு காதல் ஏற்படுகிறது.பௌரன் (ப்ருத்விராஜ்)(குடிமகன் -பிரஜை என்ற பொருள்) தன் தந்தையை ரவுடிகளின் குருதிப்பசிக்கு இரைகொடுத்தவன்.அவனொரு போலீஸ் அதிகாரி.தன்னை நிரூபிக்க எதாவது செய்தாக வேண்டும் என்ற ஆவலதிகத்தில் மேற்சொன்ன இருவரில் ஜம்பர் தம்பி ஒரு சர்வதேசத் தீவிரவாதி என்று தப்பாய் அடையாளப் படுத்துகிறான்.அவனது மேலதிகாரிகள் ஜம்பர் தம்பியையும் ட்யூப்லைட் மணியையும் கைதுசெய்கின்றனர்.இது வரை ஒரு பாகக் கதை.


ரண்டாம் பகுதி தான் மிக அனாயாசமானது.எந்த அடையாளங்களும் இல்லாத ஒருவன்.மனுப்போட யாருமற்ற இன்னொருவன்.தவறுதலாகக் கைது செய்யப்பட்டு இருக்கிறதை தாமதமாக உணர்ந்துகொள்ளும் பௌரன்.ஆனால் அரசாங்கம் என்னும் பயங்கர மிருகம் எத்தகையது என்பதை மிக அழகாக வெளிச்சொல்லும் படம் தமார் பதார்.கடைசி வரைக்கும் அப்பாவிகளைக் காப்பாற்றியாக வேண்டும் என்று போராடுகிறான் பௌரன்.அவர்கள் மீட்கப்படுகிறார்கள் என்பது படத்தில் காணக் கிடைக்கும் சுபமுடிவு.ஆனால் நாடு என்னும் நம்பிக்கையில் நாமெல்லாரும் எத்தனை அபாயகரமான மனிதர்களின் அதிகார வரம்பிற்குள் இருந்துகொண்டிருக்கிறோம் என்பதைப் பேசும் முக்கியமான திரைப்படம் தமார் பதார்.
ஐ படம் பார்த்தேன்.ஷங்கர் தன்னைப் புனரமைத்துக் கொள்ளவேண்டிய காலம் ஏற்கனவே வந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.இந்தப் படத்திற்கு இரண்டாம் சேது அல்லது இன்னுமொரு சேது என்று பெயர் வைத்திருக்கலாம்.பாவம் விக்ரம்.அக்ர(ம)ம்.80களுக்கு முந்தைய பாவ்பாஜி வில்லன்கள் எல்லாரின் பொதுப் பகையாளியாக விக்ரம் ஆகும் போதே படம் நூடுல்ஸ் ஆகிறது.அன்னியத்தனமான காட்சிகளை இன்னொரு தரம் நம்பியிருக்கிறது பெரும் பலவீனம்.படம் பார்க்கிறவர்களே டிஸ்கஷன் எல்லாம்  நடத்துகிற இந்தக் காலத்தில் ஐ பற்றாது.மெர்ஸலாயிட்டேன் பாடல் மட்டும் ரஹ்சுஹமான்.

NIHILISM வகையில் வரக் கூடிய தமிழ்ப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்..பூர்ண நீலிஸ்டிக் படமாக சமீபத்தில் வந்த பரதேசியை சுட்டலாம்.பாலாவுக்குள் ஒரு சூன்யவாதக் காதலன் இருப்பதை அவர் படங்களெங்கும் உணர்ந்திருக்கிறேன்.தனக்காக இல்லாத தத்துவத்தையும் பிறருக்காக ஒரு பாத்திரப் பிழைத்தோடுதலையும் கூட முயன்றிருக்கிறார்.அந்த வகையில் பாலா செமி நீலிஸ்டிக் எனலாம்.நீலிசத்திற்கான எளிமையான இலக்கணமாக பின்வருவதைச் சொல்வேன்.

நீலிசம்/ NIHILISM "சுத்த சூன்யவாதம்":

இருத்தல் என்பது அர்த்தமற்றது மேலும் எல்லா பூர்வாங்க(அ)பாரம்பரிய நம்பிக்கைகளும் மதிப்புக்களும் ஆதாரமற்றவை என உணர்த்தும் பார்வை சூன்யவாதம் எனப்படும்.
வாழ்க இசங்கள்.


இப்போதைய கவிதை:-

பால் சுரக்கும் வரை
காமதேனுதான்
பொங்கல்தான் பூஜைதான்
இல்லையெனிலோ
அடிமாடுதான்


அப்படியே நிற்கட்டும் அந்த மரம் தொகுப்பில்
ராஜமார்த்தாண்டன்

நினைத்தபோது
தொடரலாம்


ஆத்மார்த்தி

24.2.2015