புதிய பதிவுகள்

வணக்கம்

கவிதை, சிறுகதை, திரைக்கதை என பல்வேறு தளங்களில் இயங்கி வரும் ஆத்மார்த்தியின் பிரத்யேக இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

Visitors Counter

குறுஞ்செய்திகளும் குறுஞ்செய்திகள் சார்ந்த நிலமும்

குறுஞ்செய்திகளும்
குறுஞ்செய்திகள் சார்ந்த நிலமும்

1
"எப்படி இருக்கிறாய்..?"
என்ற கேள்வியில் தொடங்குகிறது
"என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
எனும்போது வலுப்படுகிறது
"உன்னை மிகவும் தேடுகிறேன்"
என்றபோது வேர்விடுகிறது
"உன்னை மிகவும் பிடித்திருக்கிறது"
என்றாகி நிமிர்கிறது.

2
"உனக்கு ஆயிரம் முத்தங்கள்"
எனச் சொல்கையில் தானும் நாணுகிறது
"நாளையும் சந்திக்கலாம்"
என்று ஏங்குகிறது
"இன்னுமா கிளம்பவில்லை"
என்று வலிமொழிகிறது
"வந்துகொண்டிருக்கிறேன்"
என்று பதில்பொழிகிறது
"என் உயிரின்
ரத்த அணுக்களின் மொத்த எஜமானி நீ"
என்று கவிதைசெய்கிறது
"உனக்காக எதுவும் செய்வேன்"
என்று காண்கையில் கண்கலங்குகிறது
"ஏன் இரவுவணக்கம் சொல்லவில்லை"
என்று சிணுங்குகிறது

3
"என் காலைகளை நீ தான் எழுப்புகிறாய்"
எனக் குழறுகிறது
"வாயேன்,உன்னைப் பார்க்க வேண்டும்போலிருக்கிறது"
என்று உருகுகிறது
"ம்ஹூம்..நீ கெட்டவன்"
என்று சொல்லிக் கண்பொத்துகிறது
"எனக்கு எப்போதும் உன் அடுத்த முத்தம் தான் பிடிக்கும்"
என்று சீண்டுகிறது
"ச்சீய் நீ ரொம்ப மோசம்"
என்ற உண்மையைப் பொய்போலாக்குகிறது

4
"நீ அழைக்கையில் தூங்கிவிட்டிருந்தேன்" என்று
விளக்கம் சொல்கிறது
"கழிப்பறையில் இருக்கிறேன்.பேசமுடியாது,"
என்று செய்தி வாசிக்கிறது.
"நாளை உனக்கு ஓய்விருக்குமா?"
என்று சபலம் காட்டுகிறது.
"ச்சும்மா தான்,விஷயம் ஒன்றுமில்லை"
என்று மிடறுவிழுங்குகிறது

5
"நீ என்னைத் தப்பாய் புரிந்துகொண்டிருக்கிறாய்"
என சமாதானம் சொல்கிறது.
"நான் உன்னை அப்படி நினைக்கவே இல்லை"
என விக்கித்துப் போகிறது.
"மன்னிப்புக் கேட்க வேண்டியது நீ தான்"
என முறுக்கிக் கொள்கிறது
"புரிந்துகொள்ளாமல் கோபப்படுகிறாய்" என
இறுக்கம் பகர்கிறது.
"இனி இதைப் பற்றிப் பேசவேண்டாம்"
என தீர்மானிக்கிறது
"இனி எதைப் பற்றியும் பேசவேண்டாம்"
என தீர்ப்பளிக்கிறது.

6
"அப்புறம் பார்க்கலாம்" என
நிராகரிக்கிறது.
"இப்போது வேலையாயிருக்கிறேன்"
என பொய் துவக்குகிறது
"சப்தமற்ற அழைப்பு;கவனிக்கவில்லை"
என போலிசெய்கிறது.
"என்னவிஷயம் சுருக்கமாய் சொல்"
என கறார் ஆகின்றது
"ஒன்றுமில்லை ச்சும்மா தான்"
என எச்சில் விழுங்குகிறது.
"வேறொன்றுமில்லையே,"
என கடுமைகாட்டுகிறது.

7
"ஒருமுறை பேசவேண்டும்"
என மனு அளிக்கிறது.
"வேண்டியதற்கில்லை"
என்று பதில்வருகின்றது
"இனி அவ்வளவு தானா?"
எனக் கண்ணீர் உகுக்கின்றது.
"எதுவுமேயில்லை" என
கல்மனம் காட்டுகிறது.

8
"எவ்வளவு நாளாயிற்று;எப்படி இருக்கிறாய்?"
என விதை தூவுகிறது.
"இருக்கிறேன்".என்று ஒருவார்த்தையில்
பதில் வருகின்றது.
"வேறென்ன..?"என
வெட்கம் தளர்த்துகிறது.
"நீ தான் சொல்லவேண்டும்"
என நாணம் நகர்த்துகிறது.
"பார்க்கணும் போலிருக்கு"
வேலி விலகுகின்றது.
"ஒன்றும் வேண்டாம்" என
கதவு அடைக்கின்றது.

9
"மறந்து விட்டாயா?"
என கன்னம் நனைகின்றது
"நீ செய்தது தவறில்லையா?"
என்று வெப்பம் பொழிகின்றது.
"மன்னிக்க மாட்டாயா?"
எனப் பிரார்த்திக்கின்றது.
"மறந்துவிடுகிறேன்,அது வசதி"யெனப்
பரிவு வருகின்றது.
"இனி எப்போதும் இப்படி நடக்காது"
என்று சத்தியம் செய்கின்றது.
"உன்னை நம்பலாமா?"
என சான்றிதழ் கேட்கின்றது.
"நம்பு கண்ணே..நீ என் உயிர்" என்று
சாட்சியம் சொல்கின்றது.
"சரி,"என்னும் வார்த்தை
ஒரு உலகத்தை மீண்டும் மலர்த்துகிறது

10
"நாளைக்குப் பார்ப்போமா"
என மீண்டும் துவங்குகிறது